தலைப்பு

சனி, 15 ஜனவரி, 2022

சபரிமலை சந்நதி ஐயப்ப விக்ரஹத்தில் சுவாமியின் திருமுகம் கண்டு வியந்த கிண்டி கோவில் லீலாம்மா!

கார்த்திகை விரதர்களின் வரதரான சுவாமி ஐயப்பனும்...கார்த்திகை அவதார வரதரான சுவாமி ஐயனும் ஒன்றே எனும் பரவச அனுபவப் பூர்வமான லீலா மகிமை இதோ...


லோகநாத முதலியாரை தெரியாதவர்கள் சாயி பக்தர்களாக இருக்க முடியாது... சுவாமி தனது அருட் கரங்களை அவதாரப் பிரகடனத்திற்குப் பிறகு சென்னைப் பட்டணம் நோக்கி நீட்டியதில் முதன்மையானவர் அந்த மகானுபாவர் லோகநாதர். அவருக்கிருந்த செய்வினையை நீக்கி கனவில் காட்சி அளித்து... அப்போது சுவாமிக்கு மிகச் சிறு வயதே... 20 வயதிருக்கும்... பிறகு அவர் இல்லம் வந்து தடுத்தாட் கொண்டார்... நன்றிக்கடனாக தனது நிலத்தில் சுவாமிக்கு கோவில் கட்ட வேண்டும் என பேருணர்வு எழுகையில்.. என் பூர்வ அவதாரமான ஷிர்டி சாயிக்கே கோவில் கட்டு என சுவாமி உத்தரவிட்டதில்... ஷிர்டி பாபா எப்படி இருப்பார் என்றே தெரியாதவர்க்கு  ஒவ்வொரு நகர்விலும் மகிமை அளித்து அகில உலகில் ஸ்ரீ ஷிர்டி சுவாமிக்கு சந்நதியோடு கொண்ட முதல் கோவில் அது கிண்டி என 1949 ல் இருந்து சுவாமி சங்கல்பத்தால் திகழ... இன்றளவும் அது இதிகாசமாகவும் திகழ்கிறது!

அந்த மகானுபாவர் லோகநாதரின் திருத்தவப் புதல்வி லீலா... தனது நிலத்தில் சுவாமிக்கு திருக்கோவில் கட்ட வேண்டும் எனும் திருச்சிந்தனை எத்தனைப் பேருக்கு வரும்? இருக்கிற ஒரு சதுர அடி நிலத்தைக் கூட வாடகைக்கு கொடுத்து பணத்தை அள்ளலாம் என்றே நினைக்கிற வியாபார மனிதர் மத்தியில் இப்படி எல்லாம் மகானுபாவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என உணரும் போது புல்லரிக்கிறது... அந்த அற்புதக் கோவில்.. அவருக்குப் பிறகு அவரது புதல்வி லீலாம்மா அதை  நடத்திக் கொண்டு வருகிறார்!

         

திரு. லோகநாத முதலியார்

லோகநாதர் வாழ்கிற வரை அவரது திருவல்லிக்கேணி வீட்டுரிமை ஒரு வழக்கில் சிக்கிக் கொள்கிறது... சில்லறைகள் இருக்கும் வரை உண்டியல் சப்தமிடும்.. அதுபோல் காசு இருக்கிற வரை தான் உறவுகள் சப்தமிடும்... ஆக அந்த இக்கட்டான சமயத்தில் சபரிமலை சந்நதிக்கு வருகிறேன் வழக்கு சுபமாய் முடிந்தால் என வேண்டிக் கொள்கிறார்... சுவாமி அவரது வாழ்வில் வந்தபிறகு இஷ்ட தெய்வமாகிவிடுகிறார்... ஐயப்பனோ அவரது ஆதி தெய்வம்...இருவரும் ஒருவரே என அவர் உணர்ந்ததால் அந்த வேண்டுதலையும் நிறைவேற்றவில்லை.. வழக்கும் ஐ.சி.யூ நோயாளி போல் இழுத்துக் கொண்டே இருந்தது...அவரும் தனது சபரிமலை வேண்டுதலை மகள் லீலாம்மாவிடம் சொல்லிவிட்டு சுவாமி பதம் சேர்ந்துவிடுகிறார்! 

வழக்கும் லோகநாதரின் பக்கமே சாதகமானது... ஆனால் லீலாம்மாவோ சபரிமலை வருவதற்கான வயதை எட்டவில்லை... பெண்மைக்குரிய பிரச்சனை...அது தீரவில்லை... காத்திருக்கிறார்...அந்த சமயத்தில் சுவாமி ஒருமுறை கிண்டி கோவிலுக்கு விஜயம் புரிகிறார்... சுவாமியிடம் லீலாம்மா "சுவாமி... நீங்கள் தான் எங்கள் குல தெய்வம்...ஆயினும் தந்தையாரின் வேண்டுதலை நான் நிறைவேற்றியே ஆக வேண்டுமா? இல்லை..." என தயங்கியபடி இழுக்கிறார்...


"எனக்கு தெரியும் அது... தயங்காதே! நானே எல்லா இறை ரூபமாக இருந்தாலும்...அவன் வாக்கு அளித்தது... அதை அவனால் நிறைவேற்ற முடியவில்லை... இப்போது அது உன் பொறுப்பு...நீ அதை நிறைவேற்றிவிடு! நானே என் பக்தர்க்கு ஒரு வாக்களித்தால்... அவர்களே என் வாக்கை மறந்து போனாலும் அதை தவறாமல் நிறைவேற்றுகிறேனே!! அதனால் உடனே செல்...! நான் கூடவே இருக்கிறேன்... எங்கு சென்றாலும் நீ என்னை உணர்வாய்!" என்கிறார் மிக தீர்க்கமாய் சுவாமி...! 

சுவாமி சொல்படி சபரிமலை செல்ல தீர்மானிக்கிறார். அவரது பெண்மைப் பிரச்சனையும் நீங்குகிறது! பக்கத்து தேநீர்க்கடை நாயர் ஒருவரின் உதவியோடு அவரது குழுவில் இணைந்து செல்ல திட்டமிடுகிறார்... பேருந்து புறப்படுகிறது.. ஒருவர் கூட தெரிந்தவர் இல்லை... சங்கோஜப்படுகிறார்... "சுவாமி நீ என் கூட வருகிறாய்.. உன்னை உணர்த்துவாய் என்றாயே !" எனும் சிந்தையோடே பயணிக்கிறார்.. பேருந்து உணவருந்த இறங்குகிறது.. பின்னால் வந்த ஐயப்ப சுவாமிமார் பேருந்தில் ஒருவர் இறங்கி.. லீலாம்மா என அழைக்கிறார்...திரும்பிப் பார்க்க...ஒரே ஆச்சர்யம்... அவர் சுவாமி பக்தர்...நன்கு பரிச்சயமானவர்... லீலாம்மா சமாதானப்படுகிறார்!

அது சபரி மலை... குளிரின் கொலுசணிந்து மரங்கள் காற்று நடனம் புரிகிற மலைப் பிரதேசத்தின் கலைப் பிரதேசம்... நீலச்சட்டைகளும் நீலமேகத்தோடு மோதும் அளவிற்கு பொதுவான கூட்டம்...ஆனால் லீலாம்மாவோ ஜோதி தரிசனத்திற்குச் செல்லாமல் பங்குனி பௌர்ணமிக்கே செல்கிறார். கூட்டம் சற்று குறைவு தான்! அது ஐயப்ப சந்நதி.. சுவாமியே சரணம் ஐயப்பா எனும் கோஷம் தேவலோகக் காதுகளுக்கே கேட்கிற அளவுக்கு மங்கள ஓசை... பக்தி வராதவர்களுக்கே ஐயப்ப சரண கோஷத்தில் பக்தி வந்துவிடும்! லீலாம்மா சந்நதி நோக்குகிறார்... நம்பவே முடியவில்லை... கண்களை கசக்கி மீண்டும் தரிசிக்கிறார்... புல்லரிக்கிறது...அது மாலை 4.30. ஒரே சரண கோஷம்‌... "சுவாமியே..... சரணம் ஐயப்பா!!" சுவாமி தான் தெரிகிறார் சரணம் ஐயப்பா தெரியவில்லை... லீலாம்மா பரவசப்படுகிறார்... ஆம்! திருமுகம் வரை ஸ்ரீ சத்ய சாயி ரூபம்... கழுத்துக்குக் கீழே ஐயப்ப தவக்கோலம்... தனக்குத்தான் பிரமையோ...கற்பனை செய்கிறோமோ என கண்களை மீண்டும் மீண்டும் கசக்கிப் பார்க்கிறார்... சுவாமி அதே சாயி ஐயப்பனாகவே திருக்காட்சி அளிக்கிறார்!

சரி மீண்டும் வந்து தரிசிப்போம் என தங்கும் அறை சென்று மீண்டும் சந்நதி வர... அதே சாயி ஐயப்பன்... இப்படியே இரவு 10.30 வரை ... அதே சாயி திருமுக ரூபம்... "சுவாமி.. நீ தான் சுவாமி ஐயப்பன்... ஒப்புக் கொள்கிறேன்.. ஏனெனில் அதை நீ உணர்த்தி விட்டாய்...ஆனால் இது தான் என் முதல் சபரிமலை யாத்திரை...மீண்டும் வருவேனா.. வரமாட்டேனா.. அது உன் சங்கல்பம்...ஒரே ஒரு முறையாவது ஐயப்ப திருமுகத்தைக் காட்டமாட்டாயா?" எனக் கேட்கிறார் அன்றிரவு தங்கும் அறையில் படுத்தபடி...ஹரிவராசனம் என ஏசுதாஸ் ஐயப்பனோடு சேர்ந்து ஐயப்பமார்களையும் தாலாட்ட... அப்படியே தூங்கிப் போய்விடுகிறார்! அடுத்த நாள் காலை சபரிமலை சந்நதி லீலாம்மா கைகூப்பி கண்முடி வணங்கி தனது கண்களைத் திறந்து பார்க்கிறார்.. நெய் அபிஷேகம் போல் தனது கண்களில் கண்ணீர் அபிஷேகம் துளித் துளித் துளியாக...

அங்கே இப்போது சாயி ஐயப்ப திருமுகத்திற்குப் பதிலாக சாஸ்தா ஐயப்ப முகமே திருக்காட்சியளிக்க....

"சுவாமியே...." என யாரோ ஒருவர் சரண கோஷமிட.... 

சரணம் ஐயப்பா என லீலாம்மாவின் பரவச உதடுகளும் சேர்ந்தே உச்சரிக்கின்றன...

(ஆதாரம்: அற்புதம் அறுபதி / பக்கம் : 190/ ஆசிரியர் : ஸ்ரீ ரா.கணபதி) 


லோகநாதரும் லீலாம்மாவும் சாயி பக்தரின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தது அவர்களது சுவாமி பக்தியால் மட்டுமல்ல சுவாமியின் திருச்சொல்லை கேட்டு நடந்து... சுவாமிக்காக எதையும் நிறைவேற்றும் சரணாகத இதயம் கொண்டதால் மட்டுமே! ஒரு கோவில் கட்டுவது என்பது ஆயிரம் அஸ்வமேத யாகம் புரிவதற்கு சமம்... திருக்கோவில் என்பது மக்களுக்காக... அப்படி பொதுநலனுக்காக எழுகிற திருக்கோவிலைக் கட்டுபவர்களின் ஆன்மாவை சுவாமி ஆன்மீகப்படுத்தி பேரானந்தம் அளித்து பிறவியை அறுத்து பரமபதம் அருள்கிறார்!


அந்த பக்தி... அப்படிப்பட்ட பக்தி... அவர்களின் அதே பக்தியை நாம் அனைவரும் அனுசரிப்போம்!


  பக்தியுடன்

வைரபாரதி


கிண்டி லீலாம்மா சுவாமியுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள்...

👇👇



1 கருத்து:

  1. சாய்ராம்🙏 ஆத்மார்த்தமாக சுவாமியிடம் வந்த பிறகு எமது தாயார் வேண்டுதலால் ஐயப்பனுக்கு மாலை மண்டல வழக்கங்கள் கடைபிடித்தோம். சாயி பக்தர் ஏன் இவ்வாறு ஐயப்பனை வணங்குகிறார் எனப் பல கேள்விகள் என்னை சுற்றி எழ பதில் கூற இயலாமல் எல்லா நாமமும் சாயியே எல்லா ரூபமும் சாயியே என எனக்குள்ளே கூறிக்கொண்டே புற உலகுக்கு பதில் கூற இயலாது உழன்ற அடியேனுக்கு இந்நிகழ்வுகள் சுவாமியின் மீதான நம்பிக்கையும் அன்பும் மேன் மேலும் அவர் என்னிலே இருக்கும் உணர்வை உணர்ந்திட இந்நிகழ்வு ஒர் வரப்பிரசாதமே. சாய்ராம்🙏 அதுமட்டுமல்லாமல் 2022 மகர ஜோதிக்கு சபரிகிரிவாசா எனப்பாடலையும் பகிர்ந்த ஆனந்த வாகினி Youtube நிகழ்வும் அற்புதத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்திட முடியவில்லை. சாய்ராம்🙏

    பதிலளிநீக்கு