தலைப்பு

புதன், 26 ஜனவரி, 2022

பரவசம் ஏற்படுத்தும் பரமதயாள பாபா பலருக்கும் நிகழ்த்திய பேரனுபவ கதம்ப மலர்கள்!

உலகின் பல்வேறு தரப்பட்ட பக்தர்களுக்கு சுவாமி ஏற்படுத்திய அனுபவக் கதம்பம் இது... வெவ்வேறு வகையான வாழ்வியலை கொண்ட வெவ்வேறு விதமான மனிதர்களையும் சுவாமி வேறுபாடின்றி வேரென சிக்கெனப் பிடித்து விருட்சமாக்கி தன்னை மலர வைத்ததன் அடிப்படை அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இதோ...


ஒரு ஆசிரியர். அவர் சுவாமி பக்தர். ஒரு முறை ஒரு மாணவரை புட்டபர்த்தி கல்லூரியில் சேர்ப்பதற்காக செல்கிற போது தலை சுற்றி மயங்கி விழுகிறார்.. தன் மாணவர் முன்னேற வேண்டும் என நினைப்பவர் தன்னலம் கருதா எத்தனை நல்ல ஆசிரியராக இருப்பார். ஆசிரியப் பணியை சரியாகச் செய்தால் அது ஒரு சேவை. வெறும் பாடம் போதிப்பது மட்டுமல்ல படிப்பினையாகவே வாழ்வது... அடிப்பதல்ல.. அடி எடுத்து வைக்கும் போதே வாழ்வின் அடிப்படையை உணர்த்துவது... அப்படி வாழ்கிறவர் அந்த ஆசிரியர். தலை மீது அறிவையும் இதயம் முழுக்க அன்பையும் கொண்ட அந்த ஆசிரியர்க்கு கண் இருண்டு தலை சுற்றி மயங்கி உடல் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கீழே விழுகிறார். தட்டுத்தடுமாறி எப்படியோ பாக்கெட்டிலிருந்த சுவாமி விபூதியை கை நடுங்கிப் பிரித்து தன் வாயில் போட்டுக் கொள்கிறார்! நேர்காணலுக்கு வந்த மாணவர்கள் அவரை ஒரு மேஜையில் கிடத்துகிறார்கள். உதடு மட்டும் சுவாமி நாமம் அசைக்கிறது... அதை வைத்தே உயிர் இருப்பதை உணர்கிறார்கள்.. அவர் மருத்துவர்கள் இல்லை.. என்ன செய்வார்கள் பாவம்...அந்த காலத்தில் கைப்பேசியும் இல்லை... கையைப் பிசைகிறார்கள்..

 அப்போது எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் ஜல் ஜல் ஜல் என ஜட்கா வண்டி வருகிறது... அவரை ஒரு வெள்ளைச் சீருடை அணிந்த ஒருவர் எடுத்துக் கொண்டு வேக வேகமாய் அவரது பழைய மாணவரிடம் விட்டு சடாரென மறைந்துவிடுகிறார்.. அந்த பழைய மாணவர் ஒரு மருத்துவர். உற்ற நேரத்தில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்படுகிறார்... பலரின் விழிகளை திறக்கச் செய்த அந்த ஆசிரியரின் விழிகள் திறந்த போது சுவாமியை நினைத்து கண்கலங்குகிறது... அது ஜட்கா வண்டி விரைந்ததும்... அவரின் உயிர் மீட்பு விரைந்ததும்.. எல்லாவற்றையும் கேள்விப்பட்டு இதயம் மேலும் தனது நன்றிப்பெருக்கை கண்களின் வழி கசிந்து கொண்டிருந்தது... நன்றிப்பெருக்கு ஆடிப்பெருக்கை விட விசேஷ புனிதமானது!! அந்த ஜட்கா வண்டி ஒன்றும் அதிசயமில்லை... சுவாமி ஏற்கனவே தனது பூர்வ அவதாரத்தில் ஜட்கா வண்டியில் பயணித்தவர் தானே!!

ஒரு முறை சுவாமியின் நேர்காணல் அறையில் சிலர் அமர்ந்து சுவாமியோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.. அப்போது சுவாமிக்கு ஒரு கடிதம் வருகிறது!! அதை மடியில் வைத்தபடி பிரித்து வாசிக்காமல் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்... அதை சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.. சுவாமியோடு அதில் ஒருவருக்கு மட்டும் அந்த மடிக்கடிதம் கண்களில் உறுத்துகிறது! அதையே பார்வையிடுகிறார்.. "என்ன என் மடியையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்! வந்து அமரப் போகிறாயா? என சிரிக்கிறார் சுவாமி. "இல்லை சுவாமி... ஒரு கடிதம் வந்தது.. அதை நீங்கள் பிரிக்கவே இல்லை.. ஏதாவது முக்கியமானதாக இருக்கலாம்.. அதனால்.." என தயங்கிய படி இழுக்கிறார்...

உடனே சுவாமி "அது ஒன்றுமில்லை... ஒரு தம்பதிகள் என்னை தரிசிக்க வந்திருந்தார்கள்... அவர்களுக்கு குழந்தை இல்லை என அழுதார்கள்... அப்போது இதே நேர்காணல் அறையில் ஒரு சிருஷ்டி ஆப்பிள் அளித்தேன்... அப்போது அதில் இரண்டு பல் பதிந்தது போல் அடையாளம் இருந்தது.. இதைக் குறித்து அவர்கள் விசாரிக்க.. உங்களுக்கு குழந்தை பிறக்கும் போதே அதற்கு இரண்டு பல் இருக்கும் எனச் சொல்லிவிட்டு சாப்பிட வைத்தேன்... அவர்களும் சாப்பிட்டார்கள்.. நான் சொன்னது போலவே இரண்டு பல்லோடு குழந்தை பிறந்திருக்கிறது...அதைத் தான் ஆச்சர்யப்பட்டு எழுதி இருக்கிறார்கள்!" என்று சுவாமி சொன்னவுடன்.. முகத்தில் எவருக்கும் ஈ ஆடவில்லை... "சந்தேகமிருந்தால் நீயே அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படி.." என சுவாமி அந்தக் கடிதத்தை நீட்ட.... வாசிக்கிற அந்த பக்தரின் இரண்டு கண்களிலும் திரவப் பல் (கண்ணீர்) உதிர்ந்தபடி கை நடுங்க சுவாமியையே பார்க்கிறார்...

"நீ என்ன நினைத்திருக்கிறாய்... எனக்கு எதுவும் தெரியாது என்றா...? என்ன கடிதம்.. யார் எதை எழுதியிருப்பது...? நீங்கள் எல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பது எல்லாம் எனக்கு தெரியும்! உங்களின் ஒரு எண்ணம் கூட என்னிடமிருந்து தப்பவே முடியாது! நான் நித்ய வஸ்து...எங்கும் நிறைந்திருப்பவன்... எல்லாம் அறிந்திருப்பவன்... எதுவும் புரிபவன்... இந்த என் உடல் இருந்தாலும் இல்லை என்றாலும் எனது இந்த இறைப் பேராற்றல் தொடரும்...நான் சொன்னவை எல்லாம் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்... அதை வருங்காலத்தில் நீங்களே உணர்வீர்கள்! என்றார்... கூடி இருந்தவர்கள் பரவசப்பட்டனர்... பரவசப்படுத்துவதற்காகவே பூமியின் கீழிறங்கிய பரப்பிரம்ம ரூபம் சுவாமி!


ஒயிட் ஃபீல்டில் ஒரு குடும்பம் சுவாமியை தரிசிக்க வந்தது.. அவர்களை அழைத்துக் கொண்டு வந்த டிரைவரும் சுவாமியை தரிசிக்கப் போகிறார். டிரைவர்கள் பெரும்பாலும் கதவிலேயே நின்றுவிடுவார்கள்... அவரின் செய்தவப் பயன் சுவாமியை தரிசிக்க இழுக்கிறது... சுவாமி சங்கல்பமே அது... சுவாமியோ தரிசனத்தில் "தரிசனம் முடித்துவிட்டு விரைவாக ஊருக்கு கிளம்பிவிடுங்கள்... ஊழிக்காற்றோடு பெரும் மழை வர இருக்கிறது!" என்றார் சுவாமி.. அப்போது வெய்யிலோ சுட்டுக் கொண்டிருக்கிறது.. "வெய்யில் தானே அடிக்கிறது சுவாமி" என சிரிக்கிறார்கள். சுவாமி அதற்கு எதுவும் பதில் சொல்லவில்லை... பலவற்றை அனுபவத்தின் வாயிலாகவே பக்தர்கள் உணர வேண்டும் என்பது சுவாமியின் ஆக்ஞை! அப்போது தான் அந்த உணர்தல் ஆழமானதாக இருக்கும்! நீ சேர்த்து வைத்த செல்வமோ... உன்னைச் சுற்றி உள்ள உறவோ நிலையே இல்லை என்பது சுவாமியும் அறிவுறித்திக் கொண்டே தான் இருக்கிறார்.. ஆனால் கலி மாயையில் ஞானம் அவ்வளவு எளிதாக வருவதில்லை தான்! அதற்கு அனுபவப் பட வேண்டும்...அப்போதே ஞானம் வாய்க்கிறது.. சேர்த்து வைத்த பொருளை இழக்க வேண்டும்.. அப்போது தான் அது நிலையில்லை எனப் புரிகிறது... பதிவியில் அமர்கிற நாற்காலி ஆட்டம் காண வேண்டும் அப்போது தான் அதன் அநித்யம் புரிகிறது.. உறவுகள் பிரிய வேண்டும்... மரிக்க வேண்டும்‌... ஞானம் அக்னித்தன்மையே...! அந்த அக்னித்தன்மை சிலருக்கு விளக்கு நெருப்பிலேயே கிடைத்துவிடுகிறது... பலருக்கு அது சிதை நெருப்பிலேயே சிந்தையைச் சுடுகிறது... சுட வேண்டும்.. 'சுட்டால் தான் நெருப்பு‌.. பட்டால் தான் ஞானம்'! என்கிற வகையில் சுவாமி மௌனமாய் நகர்கிறார்! 

அவர்களும் சுவாமி சொல்லியதை சட்டையே செய்யாமல் கடை வீதிக்குச் சென்று வேடிக்கைப் பார்க்கிறார்கள்... விரும்பியதை வாங்குகிறார்கள்.. ஒரு அழகிய தொப்பி அதை வாங்கி தலையில் அணிந்து கொள்கிற போது... திடீரென ஒரு பேய்க்காற்று தலையையே சீவும் அளவிற்கு பாய்ந்து வர தொப்பி பறக்கிறது... 

இடியின் சப்தமோ இரு செவியையும் செவிடாக்கும் அளவிற்கு கேட்கிறது... மழை கொட்டோ கொட்டு என கொட்டுகிறது.. நிலை குலைகிறார்கள்... சுவாமி சொன்னது உச்சந்தலையில் நச் என அப்போது தான் ஏறுகிறது! சுவாமியின் சொல்லை மீறினால் என்ன நிகழும் என்பதற்கு சிரித்த அந்த குடும்பமே சாட்சி... சுவாமி எவ்வளவு சத்தியமானவர் என்பதை உணர்கிறார்கள்...! தப்பித்தோம் பிழைத்தோம் என மிகுந்த கடினப்பட்டு ஊர் வந்து சேர்கிறார்கள்.. சுவாமியின் சொல் மேல் உள்ள பிடிமானம் இறுகிவிடுகிறது! 

சுவாமி அற்புதங்கள் நிகழும் வீட்டிலும் அற்புதங்கள் நிகழாத வீட்டிலும்...பொதுவாக சுவாமி பக்தர்கள் வீட்டில் சுவாமி பிரதாயட்சமாய் (தத்ரூபமாய்) வசிக்கிறார். பெரும்பாலும் அசைவப் பிரியர்கள் பக்தர்களாக இல்லை என்பதால் சுவாமி தன் பக்தர்கள் வீட்டில் வசிப்பது இயற்கையே! அசைவம் எங்கே புழங்குகிறதோ அங்கே சுவாமியின் பேரிருப்பு இல்லை... அற்புதங்களை தன் திருப்படங்களில் காட்டுவது தன் பேரிருப்பை உணர்த்துவதற்கான பலவகைகளில் ஒரு சிறு வகையே... அப்படி ஒரு வீட்டில் சுவாமி அற்புதங்கள் நிகழ்த்தி கொண்டிருக்கையில்.. அந்த வீட்டுப் பெண்மணி வெளியே சென்று வருகிற போது... டிரைவர் அவர்களுக்கு உதவ... பூட்டியிருக்கும் கதவை தடார் என திறக்க முற்படுகிற போது.."அமைதியாக திற... சுவாமி உள்ளே இருக்கிறார்!" என அந்தப் பெண்மணி சொல்கிற போது அவருக்கு சந்தேகம் வருகிறது... இருப்பினும் மெதுவாக திறந்து சோதனை இட உள்ளே அவர் செல்கிற போது.. ஜன்னல் கூட பூட்டியிருக்கப்பட்ட அறையில் ஊஞ்சல் மேலும் கீழுமாய் ஆடிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்கிறது.. திகில் அடைகிறார்... மெதுவாக அந்த அறைக்கு பூனை போல் செல்கிறார்... அந்த ஊஞ்சலை இவர் பார்க்கிற அதே சமயம் ஊஞ்சலின் ஆட்டம் குறைந்து போகிறது..

"அம்மா.."என வீட்டு எஜமானியை அழைத்துச் சொல்கிறார்...அவர்களோ பரவசமுடன் சுவாமி இங்கே இருக்கிறார் என அப்போதே சொன்னேனே...எனச் சொல்ல...அந்த இடத்திலேயே அவர் நெடுஞ்சாண்கிடையாய் நமஸ்காரம் புரிகிறார்.. ஊஞ்சலில் வைக்கப்பட்டிருக்கிற ஒரு பூ அவர் தலையில் விழுகிறது... அதே நொடி அவர் சுமந்த கண்ணீர்க் குடம் உடைந்து சுவாமி ஊஞ்சல் அறையை மெழுகி விடுகிறது!!

(ஆதாரம்: அற்புதமும் ஆன்மீகமும் -5 / பக்கம் : 147/ ஆசிரியர் : திருமதி சாயி சரஜ்) 


இப்படி லட்சோப லட்சம் பக்தர்களுக்கு தன் பேரிருப்பையும் கருணையையும் அள்ளி வழங்கியபடி உயிர்ப்போடு இருக்கிறார் சுவாமி. அது இன்றளவும் தொடர்கிறது... சுவாமி அருள்வதற்கான பல வாகனங்களில் ஒரு வாகனமே அவர் திருவுடம்பே தவிர சுவாமி உடம்பல்ல...! உடல் வெறும் அகலைப் போல... அகலை நம்பி எந்த ஜோதியும் இல்லை.. சுவாமியோ சாதாரண ஜோதி அல்ல... சைதன்ய ஜோதி! அக்னியால் எதிலும் எரிய முடியும்...எதையும் எரிக்க முடியும்... அப்படியே சுவாமியும்...!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக