"ஸ்தாவராணாம் ஹிமாலய :"
(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்)
---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்
அட்சயப் பாத்திரமே தன் குறியாக இருந்த அந்த 12 ஆவது நபருக்கு அந்த 11 தவசிகளோடு சென்ற போது ஏற்பட்ட அனுபவம் என்ன? அது என்ன நரநாராயண குகை? அப்படி என்ன அதில் சிறப்பு? அங்கே ஏன் சுவாமி அவர்களை அனுப்ப வேண்டும்? எனும் பல உள்ளார்ந்த கேள்விகளுக்கு... சுவாரஸ்ய திருப்புமுனை பதில்கள் விறு விறு சம்பவமாய் இதோ... வாருங்கள் தொடர்ந்து அவர்களோடு பயணிப்போம்...
"இன்னும் எவ்வளவு தூரமோ?" எனும்படி 12 ஆவது நபரும்... "நிகழ்வது அனைத்தும் சுவாமி சங்கல்பம்!" என அந்த 11 நபர்களும் பத்ரிநாத் நோக்கி நகர்கிறார்கள். புராண தொன்மை வாய்ந்த தலம் அது! இந்த தலத்தின் மேன்மையை புகழாத புராணங்களே இல்லை! இப்போது நாம் பத்ரிநாத்தில் இருக்கிறோம்!
அந்த 12 பேர்களும் பத்ரிநாராயண மூர்த்தியை கோவிலில் தரிசித்துவிட்டு ரிஷிகங்கா எனும் இடத்தை கடந்து ஊர்வசி குண்டம் நோக்கி நகர்கின்றனர்... இவர்களோடு சேர்ந்து கடுங் குளிரும் துணைக்குப் போகிறது! அடுத்த நொடி என்ன நிகழும் என அறியா வண்ணம் அமைதியோடு அடி எடுத்து வைப்பதே ஆன்மீகப் பயணம்! அடுத்த நொடி என்ன நிகழும் என அறியா வண்ணம் அமைதியின்றி பலவித யோசனை எதிர்பார்ப்பு ஆசைகளோடு அடி எடுத்து வைப்பது லௌகீகப் பயணம்... இரண்டு பயணத்திற்கும் இவ்வளவு தான் வித்தியாசம்! அந்த 11 ஆன்மீகத்துடன் 12 ஆவது லௌகீகமும் பயணிக்கிறது... ஊர்வசி குண்டம் பத்ரிநாத்தின் மேற்கு திசையில் அமைந்திருக்கிறது! பயணிக்கிற வழியில் பனியால் சூழப்பட்ட ஒரு பெரிய பாறையின் அடியில் அவர்கள் தங்கிப் போவதாக தீர்மானிக்கிறார்கள்.
அட்சயப்பாத்திரமும்... சுவாமியின் அருள் வெப்பமும் அவர்களை சூழ்ந்து கொள்ள நிம்மதியான வாசம்... அடுத்த நாள் காலை 10 மணி...அவர்கள் ஊர்வசி குண்டத்தை அடைகிறார்கள்... அது 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம்... அங்குள்ள ஏரியில் குளித்துவிட்டு அந்த அருந்தவக் குழுவை சார்ந்த 11 பேர்களும் பத்மாசனத்தில் நிஷ்டையில் அமர்ந்து விடுகிறார்கள்..."
நிஷ்டை எனில் நிலைத்தல் எனும் பொருள்! அந்த நிலைத்தலில் பிரபஞ்சத்தோடு கலந்து விரிதல் எனும் சமாதி ஏற்படுகிறது... முதலில் தியானம் பழக வேண்டும்... பிறகு நிஷ்டை கைகூடும்... தியான லயம் கைகூடிவிடுகிற போது... சுவாமி சமாதி நிலையை அருள்கிறார்...!
அவர்கள் ஏதோ தரை மட்டத்தில் சமாதி நிலையில் இருப்பதாக நினைக்க வேண்டாம்... சுமார் 18,000 அடி உயரமுள்ள இடத்தில் தன்னை மறந்த ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்து விடுகிறார்கள்...
அவர்கள் இன்னமும் நகர்ந்து நரநாராயண குகைக்கு செல்ல வேண்டும்... அதற்குள் அங்கேயே சமாதி நிலை ஸித்திக்கிறது (கை கூடுகிறது).
18,000 அடி என்பது மனித நடமாட்டமே இல்லாத உயர்ந்த பகுதி... புரிகிறது... உயர் நிலை அடைவதற்காக அந்த உயர் நிலையை மிக மிக உயர்ந்த இடத்திலேயே சுவாமி அருளியிருக்கிறார் என்பது...
ஆன்மீக வாழ்வில் தான் உயர் நிலை ஏற்படுகிறது... லௌகீக வாழ்வில் ஒரே நிலை தான்.. வெறும் கற்பனை எனும் நிலை!
பனிமூடிய இமய மலையே அந்த 11 தவசிகளுக்கும் துணை...மேகங்கள் தெரிந்தும் தெரியாமலும்... நகர்ந்தும் நகராமலும் கண் கொண்டு பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது! அவர்கள் அப்படியே சமாதியில் லயித்திருக்கட்டும்...
எதற்காக சுவாமி அந்த இடத்திற்கு செல்லுமாறு தேர்ந்தெடுத்தார் என்பதை கொஞ்சம் கவனிப்போம்!! அந்த 12 ஆவது நபர் தானே...! அவர் மெது மெதுவாய் நகர்ந்து மேலேறிச் செல்கிறார்... செல்லட்டும்! வழி இது தான் எனத் தெரிந்துவிட்டபடியால் அவர்களை முன் போக விட்டுவிட்டு தனக்காக இல்லாவிட்டாலும் தான் வைத்திருக்கும் அட்சயப் பாத்திரத்திற்காக அவர்கள் காத்திருந்தே ஆக வேண்டும் எனும் எண்ணம்... ஆமையாய் நகர்கிறார்... அவர்களோ ஊமையாய் உள்நிறைந்து போயிருப்பதை அறியாமல்...
அங்கேயே அவர்கள் தவத்தில் உறைந்திருக்கக் கூடாதா? ஏன் நரநாராயண குகையில் வசிக்கச் சொல்லியிருக்கிறார் சுவாமி... ? அந்த குகை சாதாரண குகையே அல்ல... சுவாமி எடுத்த 24 அவதாரங்களில் (தசாவதாரங்களையும் சேர்த்து) பத்ரிபதி என்பவரும் ஒரு அவதாரம்... தன்வந்த்ரி (சுவாமியின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி முகப்பில் இருக்கும் மூர்த்தி) தத்தர், புத்தர், கல்கி(ஸ்ரீ ஷிர்டி சாயி- ஸ்ரீ சத்யசாயி- ஸ்ரீ பிரேம சாயி) இவர்களும் அந்த 24 அவதாரங்களில் அடங்குவர்.
சன்யாமணிபுரியை ஆண்ட அரசர் தர்மராஜாவுக்கும், அரசி மர்திக்கும் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் பத்ரிபதி...நரன் என அழைப்பர். அவர்கள் (அந்த இரட்டையர்கள்) பூமியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் பிறந்த 11 1/2 மணி நேரத்திற்குள்ளாகவே 12 ஆவது வயதை அடைகின்றனர்... ஆச்சர்யமாக இருக்கலாம்... தெய்வீகம் - தியானம்- சமாதி எல்லாமே ஆச்சர்யமயமானது தான்! எப்படி சுவாமி கால்களில் சங்கு சக்கர ரேகையோடு பிறந்தாரோ ... அவர்களுக்கு அன்ன ரேகை கைகளில்... பாதத்தில் சக்கர ரேகைகளும் இருந்தன...
மனித குலத்திற்கு தவத்தின் மேன்மையை உணர வைப்பதற்காகவே பத்ரபதியை பரப்பிரம்ம சுவாமி அவதரிக்க வைக்கிறார்... தாய் தந்தையிடம் அனுமதி பெற்று தவம் இயற்றச் செல்கின்றனர்... நைமிசாரண்யத்தில் உள்ள புனித தீர்த்தத்தில் பத்ரபதி எனும் நரநாராயணர் தவத்தை புராணங்கள் விரிவாக விளக்குகின்றன...
ஒருமுறை பிரகலாத மகாராஜா இரட்டையர்கள் தவம் செய்த இடம் நோக்கி வருகிறபோது பக்கத்தில் அம்பு வில்லோடு அவர்களின் தன்னை மறந்த தவ நிலையை கண்டு...தவசிகளுக்கு எதற்கு அம்பு வில்? என சந்தேகப்பட்டு...தீங்கானவர்கள் என நினைத்து அவர்களோடு போர் புரிகிறார்...
1000 வருடங்கள் அந்தப் போர் நிகழ்கிறது! பிறகு சுவாமி நாராயணராக தரிசனம் அளித்து "பிரகலாதா! பத்ரபதி என் அவதாரமே... ஆகையில் நீ அவனை வெற்றி பெற முடியாது!" என கூறிய அடுத்த நொடி பிரகலாதர் அடி பணிகிறார்...இவர்களின் தவம் தொடர்கிறது... பத்ரபதியோ பக்தி யோக தவம் புரிகிறார்... இன்னொரு இரட்டையர் ராஜயோக தவம் புரிகிறார்... அதனைக் கண்டு தனது தலைமைக்கு பங்கம் வந்துவிடுமோ என அஞ்சி... வழக்கம் போல் தவசியரின் தவம் கலைக்க தனது அப்சரஸ்களை அனுப்புகிறான்... வேறு யார்? இந்திரன் தான்! அவர்கள் எதற்கும் மசியவில்லை... அதனால் இந்திரனே கீழிறங்கி வருகிறான்... இந்திரனை வரவேற்கும் விதமாய் அவனுக்கு ஜலத்திலிருந்து ஒரு பேரழகு தேவதையை சிருஷ்டித்து... இவள் தான் ஊர்வசி... திரும்பிச் செல்கையில் அழைத்துச் செல் என்கிறார் நரன்... அவளின் அழகைக் கண்டு மற்ற தேவலோக மங்கைகள் தலை குனிகிறார்கள்... அகந்தை அழிகிறது! பிறகு ஊர்வசி தேவலோக கன்னிகளின் தலைமை பொறுப்பை ஏற்கிறார்! நரனால் ஊர்வசி சிருஷ்டியான அந்த குண்டமே ஊர்வசி குண்டம்...
இரட்டையர் தவம் தொடர்கிறது... பத்ரபதியின் (நரன்) பக்தி யோக தவத்தை மெச்சி சுவாமி நாராயணர் வடிவில் காட்சி அளித்து .. "நரனே ... உன் பக்தி யோக தவத்தை மெச்சுகிறேன்.. இனி உன் பெயரோடு என் பெயரும் இணைந்து கொள்ளும்! உன்னால் தவ மேன்மையை பூலோகத்தினர் உணர்வர்!" என்கிறார்.. அதுமுதல் பத்ரபதிக்கு நாராயணர் காட்சி கொடுத்த தலம் பத்ரிநாத் ஆனது...சுவாமி பத்ரி நாராயணர் ஆனார்.. நரன் நர நாராயணர் ஆனார்! சத்ய யுகத்தில் அந்த நரநாராயண இரட்டையர் தங்கி தவம் செய்த குகையே ஸ்ரீ நரநாராயண குகை! அங்கு தான் பிற்காலத்தில் வியாச மகரிஷி வேதம் தொகுத்ததும்... பாகவதம் எழுதியதும்... தனது பூர்வ அவதாரத்தில் சுவாமி தவயோக முறையில் லயித்ததும் அதே குகையில் தான்!
நரநாராயண குகை பற்றி நீங்கள் வாசித்து முடிப்பதற்குள்... நம் 12 ஆவது நபரும் ஆழ்நிலை தவத்தில் இருப்பவர்களை நெருங்கிவிடுகிறார்! ஒன்றல்ல இரண்டல்ல 18 நாட்கள் அந்த 11 பேர்களின் தவம் நீடிக்கிறது! இவரோ அவர்களின் அருகே வந்து ... "அய்யய்யோ... இப்படியா பனியில் உறைந்து பரலோகம் போவீர்கள்! அன்ன ஆகாரம் இல்லாமல் பட்டினி கிடந்து போய்விட்டீர்களே! இதற்கு நான் ஏன் இவ்வளவு தூரம் வர வேண்டும்?" என புலம்புகிறார்... எப்படி எல்லாமோ அவர் எழுப்பியும் அவர்கள் எழவே இல்லை...! சுவாமி என்னவோ தியானம்.. தவம்.. முக்தி என்றெல்லாம் சொன்னாரே!! எல்லாம் பொய்யா? பரம பொய்!! அந்த சுவாமியை நம்பி இருக்கவே கூடாது... அவர் சுவாமியே இல்லை...நாம் இங்கே வந்திருக்கவும் கூடாது... இங்கே 11 பேர்கள் தவிர மனிதர்கள் யாரும் இல்லை... இருந்திருந்தால் நான் தான் இவர்களை சாகடித்தேன் என குற்றம் வேறு சுமத்தியிருப்பார்கள்...நல்ல வேளை... இங்கிருந்து நாம் சென்றே ஆக வேண்டும்!" என விறுவிறுவென திரும்பி நடக்கிறார்...
முதுகில் பை வேறு சுமந்தபடி... "இதில் இந்த அட்சயப் பாத்திரம் தான் எனக்கு குறைச்சல்... அட்சயமாவது... பாத்திரமாவது!! எல்லாம் பொய்... ! இதை நான் ஏன் வைத்திருக்க வேண்டும்?" என பைக்குள் இருந்து அட்சயப் பாத்திரத்தை எடுத்து ஓடுகிற கங்கையில் வீசி எறிகிறார்.. அந்த அட்சயப் பாத்திரம் பளிங்காய் பெருகி ஓடும் கங்கைக்குள் புறக்கண்களுக்கு தெரியும் அளவிற்கு அப்படியே மூழ்கியபடி உள்ளே போகிறது!
(ஆதாரம் : சாயி லீலைகளும் நரநாராயண குகை ஆசிரமும் - 1&3 / மூலம் : மகேஸ்வரானந்தா/ தமிழில் விஜயராமன்)
ஏமாற்றத்தோடும் விரக்தியோடும் அந்த 12 ஆவது நபர் பத்ரிநாத் விட்டு புறப்படுகிறார் அருள்மிகு அட்சயப் பாத்திரத்தை மூழ்கடித்தபடி... வெகு தூரம் அவர்களை விட்டு பிரிந்து செல்கிறார்...
அந்த நேரத்தில் 18,000 அடிக்கு மேல் தவம் செய்கிற அந்த 11 தவசியர்களில் ஒருவரின் இரண்டு கண்களும் சடார் என திறந்து கொள்கின்றன...
இமயப் பயணம்
இன்னும் குளிரும்...
பக்தியுடன்
வைரபாரதி
ஸ்ரீ மகேஸ்வரானந்தா சுவாமிஜி எழுதிய அரிய அதி அற்புத புத்தகமான "சாயி லீலைகள் நரநாராயண குகை ஆசிரமம் - பாகம் 1,2&3" இவற்றை மொத்தமாக உள்வாங்கி... அதன் சாராம்சத்தை பயண சுவாரஸ்யமாய்... அதன் தெய்வீகத் திருச் சம்பவங்களை முறைமைப் படுத்தி...தெள்ளத் தெளிவான வரிசையில்... முதன்முறையாக உங்களுக்கு இமயம் நோக்கிய பயண அனுபவம் ஏற்படுத்தியபடி 9 பாகங்களாக வெளிவருகிறது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக