தலைப்பு

சனி, 29 ஜனவரி, 2022

சிறிதளவே சமைத்த உணவு சாயி அன்னபூரணி கருணையால் 12 பேருக்கும் பெருகி நிரம்பி வழிந்தது!

கனவைப் பெருக்கி வாழும் மனிதனை பக்குவப்படுத்தி பக்தி வரவழைக்க உணவைப் பெருக்கி சுவாமி நிகழ்த்துகிற ஒன்றல்ல இரண்டல்ல... ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்பது போல சாதம் பெருக்கிய சுவாமியின் பிரசாத அமுதசுரபி மகிமை இதோ...


திரு ராமச்சந்திரன் என்பவர் சுவாமி பக்தர்...ஒரு சிறந்த சுவாமி பக்தர் வழியாக சுவாமி பக்தரானவர்... சுவாமி யாரையும் கருவியாகப் பயன்படுத்தி யாரையும் தன் பக்தராக வழிமாற்றி அருட்கவசம் இடுபவர்...! நண்பரோடு ராமச்சந்திரன் பர்த்திக்கு சுவாமி தரிசனம் பெற வருகிறார்! சுவாமி அவர் குடும்பத்திற்கே நேர்காணல் அளித்து அபயம் அருள்கிறார்..‌ தன் தேஜோமய திவ்ய சரீரம் சுமக்கும் மகாப் பேறு பெற்ற அங்கியை அவர் குடும்பத்திற்கு அளிக்கிறார்! எப்பேர்ப்பட்ட பாக்கியம் அது! எப்பேர்ப்பட்ட கருணை அது! 


அது முதல் அவர்கள் சுவாமி அங்கியை பூஜையறையில் வைத்து வழிபட்டு வருகிறார்கள்! சுவாமி அங்கியில் பின்னப்பட்டிருக்கிற நூல் எத்தனை விசேஷ மேன்மை வாய்ந்தது! அங்கியை தனியாக உற்றுப் பார்த்தால் அது சாதாரண காவி நிற அங்கியே... சுவாமி தினசரி தரிசனத்திற்கான அணிந்து கொண்டிருக்கும் அங்கியை தனியாக உற்றுப் பார்க்கிற போது அதில் எந்தவித ஒளியுமில்லை... ஆனால் தரிசனத்தில் சுவாமி அந்த காவி அங்கியை உடுத்திக் கொண்டு வந்தால் அத்தனை தேஜோமயமாக இருக்கும்... காரணம் திருவுடலெடுத்து வந்த சைதன்ய ஜோதியான சுவாமியே தவிர அந்த அங்கியால் அல்ல... எப்போது அந்த அங்கியை அணிந்து கொள்கிறாரோ சுவாமியின் சாந்நித்யம் அந்த அங்கிக்கும் நிரம்பி விடுகிறது! படாடோபம் அதாவது அலங்கார ஆடைகளையோ.. வசதியை காட்டிக் கொள்ளும் அளவிலான எந்த அங்கியையும் சுவாமி அணிந்து கொள்ளவில்லை... அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது போலவே சுவாமி எவ்வழி சுவாமியின் பக்தர்களும் அவ்வழியே என்கிற வகையில் அவரின் திருச்சங்கல்பம் மிக எளிமையாகவே தன்னை வாழவைத்துக் கொள்கிறது...! காரணம் நாமும் எளிமையாகவே வாழ வேண்டும் என்பதற்காகவே! "சிக்கன வாழ்வினை தந்தெமை காக்க" என்கிற வகையில் அது திகழ்கிறது!

ராமச்சந்திரன் அவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்... Premature Retirement பெற்று.. ஆம் விருப்பமாய் ஓய்வு பெற்று சொந்த ஊருக்கே திரும்பிவிடுகிறார்! அங்கு ஒரு சிறு வேலை கிடைக்கிறது! அவருக்கு 5 குழந்தைகள்... ஆக அந்த குறைந்த வருமானம் போதுமானதாக இல்லை.. அவர்களின் குழந்தைகள் யாரும் இன்னும் சம்பாதிக்க தலையெடுக்கவில்லை... பள்ளி- கல்லூரி என படித்துக் கொண்டு இருந்தனர்! அந்த நேரத்தில் குறைந்த பென்ஷனும்... குறைந்த ஊதியமும் 7 பேருக்கு போதுமானதாக இல்லை...ஒரு நாள் சமைக்க அரிசியே இல்லை.. எப்படியோ கடினப் பட்டு 1/2 கிலோ அரிசி வாங்கி வருகிறார்! வறுமையே எப்போதும் மனப்பக்குவத்தை அளிக்கும்... குசேலருக்கு வராத வறுமையா! அப்போதும் அவருக்கு பக்தி குறையவே இல்லை... நிலையாமையை எப்படி வருகிற செல்வம் சொல்லித்தர முடியும்? நம்மை விட்டுப் போகிற செல்வமே அந்த நிலையாமை ஞானத்தை அளிக்க முடியும்! படாத பாடுபட்டு வாங்கிய அரிசியை 4 மணிக்கு சமைக்கிறார்... 6 மணிக்குள் குழந்தைகளும் வந்து சேர தட்டில் எடுத்துப் பரிமாறலாம் எனப் பார்க்கிற போது கதவு தட்டும் ஓசை காதுகளில் கேட்கிறது! அவர்கள் யாரிடமும் கடன் வாங்கவில்லை என்பதால் கடன்காரன் கதவை தட்டுவதற்கான வாய்ப்பில்லை...யாராக இருக்கும்? கதவின் அருகே ராமச்சந்திரன் செல்கிறார்!

திறந்து பார்த்தால் 5 உறவினர்கள் ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள்... வறுமை கதவு திறந்தால் எதிர்நோக்குகிற மனிதர்களிடம் எதை தந்து உபசரிக்க முடியும்? "அதிதி தேவோ பவா" என்பது வறுமையின் பசி மயக்கக் காதுகளில் என்று விழுந்திருக்கிறது? ஆனால் அவர்கள் அதிசய உறவினர்கள்...இல்லாத வீட்டில் எலி கூட நுழையும்.. பூனை தூங்கும்... ஆனால் உறவினர்கள் மட்டும் எட்டிக் கூடப் பார்த்துவிட மாட்டார்கள்.. ஆனால் அவர்கள் அப்படி இல்லை... "என்ன சோதனை சுவாமி இது!" என்றவாறு கதவு திறந்து உபசரிக்கிறார்! பொருட்களால் அல்ல சிறு புன்னகையாலேயே சிறப்பான உபசரிப்பு அரங்கேறுகிறது!" மணியோ 8... இன்னும் யாரும் சாப்பிடவில்லை... பசியின் கூர்நக விரல்களோ ராமச்சந்திரன் குடும்பத்தின் வயிற்றை கிள்ளிக் கொண்டிருக்கின்றன... பூஜையறை சென்று சுவாமியிடம் ராமச்சந்திரன் தம்பதிகள் உருகி வேண்டுகிறார்கள்! "சுவாமி எங்களுக்கு உணவு இல்லை என்றாலும் பரவாயில்லை! அவர்களுக்கு இந்த உணவை போதும் என்ற அளவிற்கு நீங்கள் தான் செய்ய வேண்டும்!" என்பதில் தரித்திரத்திலும் அவர்களது இதய சரித்திரம் மிளிர்கிறது! வறுமைக்கு எப்போதும் வயிறும் பெரிது! இதயமும் பெரிது! நேராக சமையலறை வந்து சமைத்த உணவை அவ்வளவையும் எடுத்து வேறொரு பாத்திரத்தில் பரிமாறப் போக... "இரவு ஆகிவிட்டதே! நாம் சேர்ந்தே சாப்பிடலாமே...!" என உறவினர்கள் நிலைமை உணராமல் அழைக்கிறார்கள்... கானக துரௌபதி நிலைமை தான் திருமதி ராமச்சந்திரனுக்கு... அனைவரும் அமர்கிறார்கள்... 11 பேர்..

 


திருமதி ராமச்சந்திரன் பரிமாறுகிறார்... அவர் பரிமாற பரிமாற... அனைவரும் அறுசுவை உணவை ருசிப்பது உணவருந்தி விட்டு திருப்தியோடு இல்லம் விட்டு செல்கிறார்கள்... சாப்பிட்ட தட்டுகளை எல்லாம் ஒதுக்கி... சமையலறையில் வந்து பார்க்கிற போது.. "சாயிராம்" என திருமதி ராமச்சந்திரன் அலற... ஓடி வருகிறது அவரது குடும்பம்... அங்கே அவர்கள் வடித்தப் பாத்திரத்தில் ஏற்கனவே சமைத்திருந்த 1/2 கிலோ அரிசியிலான சாதம் அப்படியே இருந்தது!! 

 திருமதி அழுகிறார்.. திரு ராமச்சந்திரன் கண்கலங்குகிறார்... குழந்தைகள் வியந்து போகிறார்கள்... பூஜையறை சுவாமிக்கு நன்றி சொல்ல விரைகிறார்கள்... அங்கே திருப்படத்தில் ஸ்ரீ சத்ய சாயி அன்னபூரணி சிரித்த திருமுகத்தோடு அபய ஹஸ்தம் (கரம்) காட்டியபடி வீற்றிருக்கிறாள்!!

அவர்களுக்கு "ஞான வைராக்கியம் ஸித்தியாகி இருந்தது... ஆகவே தான் அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே ... ராமச்சந்திர ப்ராண வல்லபே"வாக மாறி இருக்கிறாள்!!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -1 / பக்கம் : 133 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


இதயம் அமுதசுரபியாக அன்பைப் பகிரும் போது உதயம் என சுவாமி தன் வெளிச்ச அருளை நிரப்புகிறார்! தவறுக்கு துணை போவதல்ல ஆன்மீகம்... சுவருக்கு துணை போகும் சித்திரமாய் இதயத்திற்கு இதம் அளிப்பதே ஆன்மீகம்!! அந்த இதமே ராமச்சந்திரன் குடும்பத்திற்கு நிரம்பி இருந்தது... அப்படி நிரம்ப... சமைத்த சாதத்தையும் சுவாமி நிரப்பி பிரசாதமாக்கியது அதிசயமில்லை! சுவாமியின் தூதர் ஏசுநாதர் கூட சுவாமியின் அருளினாலேயே ரொட்டியை ரெட்டிப்பாக்கினார்! யுக யுகமாய் சுவாமி நிகழ்த்தி வரும் அமுதசுரபி மகிமைகளுக்கான நீட்சியே இதுவும்!!

பூமியின் பூக்களையே நிரப்பும் செடிகளின் பக்தி மனித இதயத்தில் புகும் போது சுவாமியின் கருணை எதைத்தான் நிரப்பாது!!!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக