"ஸ்தாவராணாம் ஹிமாலய :"
(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்)
---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்
பரவசத் திருப்பங்களோடும்... ஆச்சர்ய அனுபவங்களோடும் இமயப் பயணத்தில் இந்த பேரற்புதம் பொதிந்த பாகம் பொங்கி வழிந்து நெஞ்சில் நிறைகிறது இதோ... இன்னும் கொஞ்ச தூரம் தான்... வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம்!
தட தட என ஒலியெழுப்பி அவர்களின் தியான அமைதிக்குள் நுழைகிறது ஒரு ராட்சச உலோகப் பறவை... ஆம் அந்த ஹெலிகாப்டரில் இருந்தபடி ஒரு இராணுவ வீரர் இறங்கி வருகிறார்... அந்த நாள் அந்த நேர சூழ்நிலை சூரியனும் பனியும் சேர்ந்து அவரின் திசையைக் குழப்பியதில் 18,000 அடிக்கு மேல் இறங்கி விடுகிறார்...
அந்த 11 பேரையும் பார்த்து பிரம்மிக்கிறார்... குகையை உள்ளே சென்று பார்வையிடுகிறார்... சுவாமியை பற்றி தனக்கு ஒரு அவதாரமாக தெரியும் எனவும் அவர் இறைவன் என்பதை உங்களை கண்டபிறகே உணர்கிறேன்" எனவும் ஆச்சர்யத்தோடு சொல்லி.. 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் அந்த தவ நிலையை அறிந்து பிரம்மிப்பின் உச்சிக்கேப் போகிறார் இராணுவ வீரர்...! அவர் சொல்லி இன்னொரு முறை இராணுவ அதிகாரி வந்து இறங்கி விசாரித்து... எவ்வளவோ கண்காணித்தும் நீங்கள் இத்தனை காலம் இங்கே இருப்பதை எங்களால் அறிந்து கொள்ளவே இயலவில்லை என்பதை ஆற்றாமையால் சொல்லி... மாதம் ஒருமுறை மலைத்தொடர் பாதுகாப்புப் பணியில் இருக்கும் எங்களுக்கு தேவையான பொருட்கள் ஹெலிகாப்டரில் வரும்... உங்களுக்கு என்ன தேவையிருந்தாலும் தெரிவியுங்கள் என்கிறார்!! உலக வாழ்க்கையையே கனவாய் உதறித் தள்ளி அகவிழிப்பு ஏற்பட்ட அவர்களுக்கு சுவாமியை தவிர என்ன தேவை?! அதுதான் சரணாகதி... சரணாகதிக்கு 22 கால்களும் கைகளும் என அவர்களைப் பார்த்தே உணர முடிகிறது! சுவாமி என்னை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன் என சொல்லிவிட்டு மனதிற்குள் கவலையும் பயமும் கொண்டிருப்பதல்ல சரணாகதி! அந்த சரணாகதி நிலை தியானம் பழகினால் மட்டும் தான் சாத்தியம்!!
பத்ரிநாத் கோவிலைச் சுற்றி உள்ள கிராம இனத்தினரான மனா, வாமனி, முடா, சுகாரியா ஆகியோர் 11,000 அடிக்கு மேல் சென்றதே இல்லை! 10,000 அடிக்கு மேலே பிராணவாயுவும் ரேஷன் அரிசி போல் எடை குறைவாகவே இருக்கும்... 14,000 அடிக்கு மேல் மஹாகுணல் சிகரம் ஏறும் அமர்நாத் பக்தப் பயணிகள் ஆக்சிஜன் இல்லாமல் சிரமப்படுவார்... அங்கே தோள்களில் சிலிண்டர் பைகளும் வழங்கப்படுகிறது! ஆனால் நரநாராயண குகையின் இளம் ரிஷிகளுக்கு எதுவும் தேவைப்படவில்லை... 1 1/2 ஆண்டு காலம் உப்பில்லாத உணவே அட்சயப்பாத்திரத்திடமிருந்து உண்கிறார்கள்! உப்பை தவிர்த்தால் குறைந்த பிராணவாயு மலைதளத்திலும் கவலைப்பட வேண்டியதில்லை என தன் அனுபவங்களை மகேஸ்வரானந்தாவிடம் பகிர்ந்து கொள்கிறார் அந்த தலைமை நேபாள இளம் துறவி! உடம்பிற்கு சூரிய நாடி சூட்டையும் , சந்திர நாடி குளிர்ச்சியையும் அளிக்கிறது... அந்த 11 தவபுருஷர்களோ சூரிய நாடி பிராணாயாமத்தையும் , கும்பகத்தையும் (மூச்சை அடக்கி வைத்தல்) பயிற்சி செய்கிறார்கள்... அது கடும்குளிருக்கு சுவாசக் கம்பளியாய் செயல்படுகிறது!
பத்ரிநாத்திற்கும் நரநாராயண குகை ஆசிரமத்திற்கும் 5 மைல் தூரம் தான்... ஆனால் அது கடினமான மலையேற்றம்... பத்ரிகா ஆசிரமத்திலிருந்து சரணபாதுகா தீர்த்தம்... பிறகு நாராயண பர்வதம் அங்கேயே ஊர்வசி குண்டம் கண்களில் விரிகிறது! அங்கிருந்து 4 மைல் தொலைவு தான் நரநாராயண குகை... மூச்சைப் பிடித்து ஏற வேண்டும்!! முடியாதவர்களுக்கு இன்னொரு சுற்று வழி... பத்ரிநாத் - பமானி கிராமம்- ரிஷிகங்கா நதி- மேற்கில் உள்ள நீலகிரி மலை ஏற்றம் - பிறகு இறக்கம் -- பெரிய பாறை (11 பேர்கள் முன்பு தங்கியது) -- பிறகு ஊர்வசி குண்டம் .. மொத்தம் 11 முதல் 20 மைல் தூரம்! சுவாமி சங்கல்பம் இருப்பின் நேர்வழியோ சுற்றுவழியோ எதுவும் சுலபமே!! மனதைப் பிடித்துக் கொள்ளாமல் சரணாகதியை பிடித்து ஏற வேண்டிய புனிதத் தலம் அது! காரணம் மனம் வழுக்கும்... சரணாகதியே நம்மை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும்!! மனதை நாம் தான் பிடித்துக் கொள்கிறோம்!! ஆனால் சரணாகதி ஏற்பட்டுவிட்டால் அது நம்மை பிடித்துக் கொள்கிறது! அந்த இராணுவ அதிகாரியின் ஹெலிகாப்டர் உபயத்தில் தான் அந்த தலைமை நேபாள துறவி 18,000 அடியிலிருந்து பத்ரிநாத் இறங்கி சுவாமியை தரிசிக்க வருகிறார்! 1979 - 80 ல் ஒருமுறை... 1982 ல் ஒருமுறை...1983 ல் பத்து பேர் கொண்ட குழுவோடு .. 1986ல் ஒரு முறை என துறவு வாழ்க்கைக்கு முன்னும் பின்னும் மொத்தமாக அந்த நேபாள இளம் துறவி சுவாமியை நோக்கி தரிசிக்க வந்த இதிகாசப் பொழுதுகளும்... யோக தரிசனங்களும்...!
இது மகான்களின் பூமி... மனிதர்களின் பூமியல்ல... இது யோகிகளின் தேசம்... மனிதர்கள் வந்து போகும் வெறும் சுற்றுலாப் பயணிகளே!! பூமியோடு இன்றல்ல நேற்றல்ல நாளையல்ல எப்போதும் எந்த உரிமையும் மனிதர்களுக்கு இல்லை! பார்வையிட வந்தவர்களே மனிதர்கள்... அப்படி சுற்றிப் பார்க்க வந்தவர்கள் தான் கர்மச் சுழலில் மாட்டிக் கொள்கிறார்கள்... எப்படி ரயில் நிலையத்தில் வழியனுப்ப வருகிறவன் எதற்கு வந்தோமோ அதை மறந்து... ரயில் கூக்குரலிட பதறிப்போய் ரயிலில் ஏறிவிடுகிறானோ அப்படியே மனிதன் கடந்து வரும் தொடர் வண்டி ஜென்மங்கள்... அவன் வளர்த்து வளர்த்து விடுவதெல்லாம் வெறும் ரயில் உறவு சிநேகங்கள்!!
இதில் மகான்கள் மட்டுமே மெர்க்குரி போல் எதிலும் ஒட்டாதவர்கள்! அவர்களின் தாய்மடியே இமயம் தான்! இமய யோகிகள் இவர்களின் (11 பேர்களின்) தோழர்களாகிவிட்டபடியால்... அவர்களுக்குள் நிறைய சத்சங்கம் நிகழ்கிறது... அதில் அந்த இமய யோகிகள் சுவாமியை குறித்து தங்களது யோக மௌனம் உடைத்து பேசிய சத்தியப் பொக்கிஷங்கள்... வாருங்கள் அவர்களோடு சேர்ந்து நாமும் அதை கேட்போம்!!
"அர்ஜுனா !! என்னைப் பற்றி ரிஷிகளோ ஞானிகளோ அறியமுடியாது! அப்படி இருக்க சாதாரண மனிதர்கள் எப்படி அறிய முடியும்?" என ஒரு கீதை சுலோகம் சொல்லி... இப்படி அவரே சொல்லி இருக்க சாதாரண மனிதனான நான் அவரைப் பற்றி எவ்வாறு கூற முடியும்" என்கிறார் இமய மலையில் வாழும் ஸ்ரீ அவதூதர் காகா பூஷண்டி மகராஜ்..."அவரே சாதாரணமானவராம்" இப்போது தான் புரிகிறது... அசாதாரண யோகிகள் சாதாரணமாக இருப்பதும்... சாதாரண மனிதர்கள் தாங்கள் அசாதாரணம் என பாசாங்கு செய்வதும்!
"ஆம்... சிவபெருமான் தான் ஸ்ரீ சாயிபாபாவின் உருவில் இந்த உலகில் எழுந்தருளியிருக்கிறார்! ஆனால் அந்த அவதார புருஷரோ எங்களை அருகில் நெருங்கவிடுவதில்லை... இது எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது" என்கிறார் இமயத்தில் வாழும் பரிவ்ராஜ புருஷர்... அங்கே நம்மை போன்ற பெயர்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் இல்லை... பெயர் ஒரு அடையாளம்.. எந்தவித அடையாளமும் தியானத்திற்கு தடையே என்கிறபடி அவர்களின் நிலையை வைத்துத்தான் அவரவர்கள் அங்கே உணரப்படுகிறார்கள்!!
"அந்த அவதாரத்தை பற்றி முதன்முதலாக கேள்விப்பட்ட போது என்னால் நம்பவே முடியவில்லை...ஆனால் அந்த அவதார குணாதிசயங்களை ஆராயும் போது என் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கிறது...நான் அவ்வளவு தகுதியுடையவன் அல்ல... தன்னை முழுமையாக உணர்ந்தவரே அவரை கொஞ்சமாவது உணர முடியும்! எல்லையற்ற பரம்பொருளே மானுட உருக்கொண்டிருப்பது! நான் உங்கள் தொடர்பின் மூலமும்... ஜைமினி பாகவதம் மூலமும்... அவரே பரப்பிரம்மம் எனும் திடமான முடிவுக்கு வந்திருக்கிறேன்! அவரின் ஆசீக்காக காத்திருக்கிறேன்" இப்படிச் சொன்னவர் 125 மேல் வாழ்ந்தும் பிராணாயாம கலையில் முழுமைப் பெற்றும் ஆகாயத்தில் பறந்து காட்சியளிக்கும் இமய யோகி ஸ்ரீ பாபா சுந்தரதாஸ் நாத்...
"ஆம் பகவான் பாபா சிவபெருமானின் அவதாரமே... அவரே பரப்பிரம்மத்தின் மறு அவதாரம்.. இதில் எந்த சந்தேகமும் இல்லை" என தன் பக்த குடும்பத்திற்கு சொல்கிற போது... நாங்கள் உங்களை பலகாலமாய் வழிபடுகிறோம்.. ஏன் இதனை இவ்வளவு காலம் வெளிப்படுத்தவில்லை எனக் கேட்ட போது (கேட்டது நம் தலைமை குரு நேபாள இளம் துறவியே... அவரின் பூர்வ குடும்பம் இவரின் பக்தர்கள்)
"அந்த ரகசியங்களை எல்லாம் சர்வசாதாரணமாக வெளிப்படையாக சொல்லிவிட முடியாது... இத்தகைய விஷேச விஷயங்களை அவர் உத்தரவின்றி என்னால் பகிர்ந்து கொள்ள முடியாது!" என்கிறார் 450 வயதிற்கும் மேல் வாழ்ந்த இமய யோகி ஸ்ரீ தேவராஹ பாபா.
மேலும் தனது நூலான பிருகு சம்ஹிதாவில் பிருகு மகரிஷியோ கடவுளின் மறுஅவதாரமான ஸ்ரீ சத்ய சாயி பற்றி விளக்கமாக தகவல் தந்திருக்கிறார்... இப்போது புரிகிறது ஏன் சுவாமி தன் பகவத் கீதையில் விபூதி யோகத்தில் "ரிஷிகளிலேயே நான் பிருகு மகரிஷி" என சொன்னார் என்பது!
"சிவபெருமானின் மூன்று அவதாரங்களைப் பற்றியும் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு! நான் ஷிர்டி சாயிபாபாவின் தரிசனம் கிடைக்கப் பெற்றவன்... ஸ்ரீ சத்ய சாயியையும் தரிசித்து உள்ளேன்... அதே போல் வருங்காலத்தில் பிரேம சாயியாக அவதாரம் எடுக்கப் போகும் சிவபெருமானின் மற்றொரு அவதாரத்தையும் நான் நன்கு அறிவேன்!" எனச் சொன்னது வேறு யாருமல்ல...இமாலய கதாநாயகர்... 2000 வருடங்கள் மேல் இன்றளவும் உயிர் வாழ்ந்தும்... புராதன கிரியா யோகக் கலையை உயிர்ப்பித்தவருமான சாட்சாத் மகாவதார் பாபாஜியே! அவரை தரிசிக்க குகையின் தலைமை குருவான நேபாள இளம் துறவிக்கு பாக்கியம் கிடைக்கிறது.. அவர் கேட்கப் போனதோ சுவாமியை பற்றியே... மகாவதார் பாபாஜியோ மூன்று கால அவதாரங்களைப் பற்றியும் முன்மொழிந்து பேசியதை விட வேறு சத்தியப் பிரமாணம் எதுவும் எவரிடமிருந்தும் தேவையில்லை!!
சுவாமி சிவசக்தி அம்சம்.. இவர்கள் சிவபெருமான் என மட்டும் சொல்கிறார்களே ? என நீங்கள் நினைக்கலாம்... சிவன் மாதொரு பாகன்! ஜோதி சக்தி எனில் திருவிளக்கு சிவன்... ஒளியும் வெப்பமுமாய் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதவர்கள்! சுவாமியின் கைகள் சிவன் என்றால் அவர் சிருஷ்டித்து தரும் விபூதியே சக்தி!! ஆக மெய்யுணர்வு உணர்ந்த அந்த 11 இளம் மகான்களும் இறுதியில் முக்தி நிலை அடைகிறார்கள்! அவர்கள் என்ன ஆனார்கள்? என ரதன்லால் எழுப்பிய கேள்விக்கு சுவாமி அளித்த பதில் இது!! அந்த அட்சயப் பாத்திரம் ? "அது புனித கங்கைக்குள் சென்றுவிட்டது " என்கிறார் சுவாமி! நரநாராயண குகை ஆசிரம புத்தக ஆங்கில ஆசிரியர் மிஸ்ரா ரதன்லாலோடு பேசி சுவாமி சொல்லியதை உறுதிபடுத்திக் கொள்கிறார்!
சுவாமியின் கர கங்கையிலிருந்து தோன்றிய அந்த பேரற்புத அட்சயப் பாத்திரம் இடையிலும் கங்கையில் மூழ்கி... இறுதியிலும் கங்கையில் மூழ்கி விடுகிறது! எப்படி கடவுளுக்கு காப்புரிமை இல்லையோ அப்படியே அந்த அட்சயப்பாத்திரத்திற்கும் காப்புரிமை இல்லை! சுவாமியை சரணாகதி அடைந்து வாழும் உரிமை மட்டுமே மனிதர்களிடம் இருக்கிறதே தவிர... பிரபஞ்சக் காப்புரிமையே சுவாமி எனும் கடவுளின் கையில் தான் எப்போதும் இருக்கிறது!
(ஆதாரம் : சாயி லீலைகளும் நரநாராயண குகை ஆசிரமும் -1, 2 ,3 / மூலம் : மகேஸ்வரானந்தா/ தமிழில் விஜயராமன்)
தொடர்ந்து இதுவரை வரிவடிவ வாசிப்பில் இந்த இமயப் பயணம் மேற்கொண்ட அத்தனைப் பேருக்கும் தூல உடலில் இமயப் பயணம் செல்லும் பாக்கியத்தை சுவாமி அருளட்டும்!! நாம் சேர்த்து வைத்திருக்கிற அர்ப்ப செல்வங்கள் இந்த அற்புத இமயப் பயணத்திற்கே செலவிடப்படட்டும்!! மனம் இமயப் பனியாய்க் கரைந்து.. உடல் இமயச் சிகரமாய் உறைந்து... ஞான சூர்யோதயமாய் வாழ்க்கை பிரகாசிக்கட்டும்!! கர்ம ரீதியாய் வாழ்க்கைப் பயணம் எப்படி திசை திரும்பினும் சுவாமியின் கருணை ததும்பும் சங்கல்பம் அதை தடுத்தாட் கொண்டு நம் வாழ்க்கைப் பயணத்தை இமயப் பயணமாய் வழிநடத்தட்டும்!
தியானமே துணை!
சாயிராம்
பக்தியுடன்
வைரபாரதி
ஸ்ரீ மகேஸ்வரானந்தா சுவாமிஜி எழுதிய அரிய அதி அற்புத புத்தகமான "சாயி லீலைகள் நரநாராயண குகை ஆசிரமம் - பாகம் 1,2&3" இவற்றை மொத்தமாக உள்வாங்கி... அதன் சாராம்சத்தை பயண சுவாரஸ்யமாய்... அதன் தெய்வீகத் திருச் சம்பவங்களை முறைமைப் படுத்தி...தெள்ளத் தெளிவான வரிசையில்... முதன்முறையாக உங்களுக்கு இமயம் நோக்கிய பயண அனுபவம் ஏற்படுத்தியபடி 9 பாகங்களாக வெளிவருகிறது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக