தலைப்பு

வியாழன், 13 ஜனவரி, 2022

ஸ்ரீ பிரேம சாயியின் அவதாரப் பிரகடனம் எப்போது நிகழும் வாய்ப்பு இருக்கிறது?


எப்போது ஸ்ரீ பிரேம சாயி அவதாரப் பிரகடனம் நிகழும்? வரப்போகிற பிரேம சுவாமி எவ்வகையான சவால்களை எதிர்கொள்வார் ? அவரின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும்? என்பவை ஒரு சராசரி பக்தனின் அகப்பார்வையிலிருந்து மிக ஆழமாய்... தெள்ளத் தெளிவாய் இதோ...


"இது வேர்க்கடலை போல் இல்லையே.. ஏதோ மரத்துண்டு போல் அல்லவா இருக்கிறது சுவாமி..!?" என தனக்கு சுவாமி வேர்க்கடலைக்கு இடையே அளித்த ஒன்றை உற்று நோக்கிப் பேசுகிறார் பேராசிரியர் ஜி.வெங்கட்ராமன்..."அதில் என்ன இருக்கிறது என்று பார்!" என சுவாமி சொல்ல... அவர் கண்ணாடி அணியாததால் தடுமாற... சுவாமி நகைக்க...அதில் ஷிர்டி சுவாமி திருவுருவரும் நம் சுவாமி திருவுருவமும் பதிந்திருக்கிறது... "சுவாமி அதில் ஒரு சிறு வெற்றிடம் இருக்கிறதே அது பிரேம சுவாமிக்கா? என பேராசிரியர் கேட்க... "ஆம்.." என சுவாமி மறு மொழி பேச.. "எப்போது அவரை இதில் பதிப்பீர்கள்?" என்ற கேள்விக்கு "இப்போதே ... அவரை பதித்துவிட்டேன் என்றால்... நீங்கள் என்னை விட்டுவிட்டு அவரை நோக்கி ஓடிவிடுவீர்கள்!" என சிரிக்கிறார்... அனைவரும் கோரஸாக சிரிப்பை பரிமாறுகிறார்கள்...

      ஆம் பேராசிரியர் கேட்ட அந்தக் கேள்வி... "சுவாமி அதில் ஒரு சிறு வெற்றிடம் இருக்கிறதே...!" என்பதே.. அந்த வெற்றிடம் இப்போது இருக்கிறது... அது தெய்வீக வெற்றிடம் அல்ல... பௌதீக வெற்றிடம்! அந்த இறை பௌதீகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய காலக்கட்டம் நெருங்குகிறது என்றே தோன்றுகிறது...! காரணம் புற சூழ்நிலை... புயலுக்குப் பின் அமைதி என்பார்கள்... அப்படியே இந்தப் பேரிடர் சூழலுக்குப் பின் பிரேம மயம் என உணர முடிகிறது! சுவாமி ஏன் வேர்க்கடலை பரிமாறும் இடைவெளியில் அதைத் தர வேண்டும்? முந்திரிப்பருப்புகளின் இடைவெளியில் அதை தந்திருக்கலாமே...? வேர்க்கடலை என்பதே எளிமையின் அடையாளம்... இரண்டு அவதாரங்களுமே எளிமையின் பீடத்தில் ஏறியே விஸ்வரூபம் எடுத்தவர்கள்... அப்படியேத்தான் இருக்க வேண்டும் மூன்றாவது சாயி அவதாரமும்... வேர்க்கடலையின் முரட்டுத் தோலை நீக்கியே சாப்பிடுவோம்... அப்படிப்பட்ட சூட்சுமத் தோலை பிரித்து பிரேம ரகசியங்களை கண்டறிய முற்படும் ஒரு சிறு அகப்பார்வையே இந்தப் பதிவும்...!

6/07/1963 ல் தான் முதன் முதலாக தனது சிவ/சிவசக்தி/சக்தி அம்ச சூட்சுமங்களை பகிர்வதோடு ஸ்ரீ பிரேம சுவாமியை பற்றி முதன்முறையாக சுவாமி உலகப் பார்வைக்கு பிரேம வெளிச்சத்தை பரப்புகிறார்.. அது 1963. நமக்கு அடுத்த வருடம் 2023. 60 வருடங்களை நெருங்கப் போகிறது அந்தப் பழம்பெரும் சத்தியச் செய்தி! ஆனாலும் அந்தச் செய்தி நமது இதயத்தோடு நெருங்கி ஆழமாய்ப் பதிந்து விட்டதா? என்பதை முதலில் தீவிரமாய் நாம் உற்று நோக்க வேண்டிய காலகட்டம் இது! கலியின் சூழ்நிலை கருதியே மூன்றாக கல்கி அவதாரம் பிரிந்தது... கலியில் மனிதனின் ஆயுளே குறைவு... நூறு வருடங்கள் தாண்டுவதே அபூர்வம். ஆக அவதாரம் கலியில் ஸ்தாபிக்க (நிறுவ) வேண்டிய தனது தர்மத்தை நூறு வருடங்களில் முடிப்பது சுலபம் அல்ல... காரணம் அதர்மத்தின் அடர்த்தி... அவதாரம் இறங்கி வருகையிலேயே சில விதிகளைப் பின்பற்றியே வருகிறது.. ஆதலால் தான் சுவாமி ஸ்ரீராமராக அவதரித்திருக்கையில் சீதா மாதாவை மீட்க பறந்து போகாமல் பாலத்தில் நடந்து போனார்... அது போல் அது அதற்கு கால அவகாசங்கள் தேவை...

 அப்படியே கல்கி அவதாரம் மூன்று சாயி ஆவதாரங்களாக பிரிந்ததே அன்றி மூன்றும் ஒன்றே!! சென்ற (வார) பதிவில் "என்னை இறைவன் என வருங்காலத்தில் உலகமே உணரும்!" என சுவாமி சொன்னது... ஸ்ரீ சத்ய சாயி ரூபத்தை மட்டும் வைத்து அல்ல... மூன்று திருரூபங்களில் அதுவும் ஒரு திருரூபமே... சுவாமி "நான் - என்னை- எனது" என்று சொல்வதெல்லாம் மூன்று சாயி அவதாரங்களையும் சேர்த்தே...ஆக ஸ்ரீ பிரேம சுவாமியே மூன்று சாயி அவதாரமும் இறைவன் என உலகத்தை உணர வைப்பார் என்பது தெள்ளத் தெளிவாகிறது! இது தான் அந்த சூட்சுமம்...! பக்தர்கள் நாம் தான் சுவாமியை மூன்றாகப் பிரித்து.. இது அவர்.. இது இவர்... இன்னொருவர் வரப் போகிறார் எனப் பிரிக்கிறோம்... சுவாமிக்கு ஜீவராசிகளின் மேலேயே பிரிவினை இல்லாத போது... தான் எடுத்து வரும் சாயி அவதாரங்களின் மேல் பிரிவினை இருக்குமா? யோசிக்க வேண்டும்! நம்மைப் பார்த்தே "உங்களின் "நானே" மூன்று வடிவங்கள்... பிறர் உங்களை என்ன நினைக்கிறார்களோ அந்த 'நான்'.. நீங்கள் உங்களையே என்ன நினைக்கிறீர்களோ அந்த 'நான்' .. உண்மையில் உங்களின் 'நான்' (ஆன்ம வாழ்வியல்)!" என்று சொல்லி இருக்கிறார்... அந்த மூன்றும் தனித்துவமானது! எப்படி? 

உடல் (நம்மை நாமே நினைப்பது) - மனம் (பிறர் நினைப்பது) - ஆன்மா (உண்மையான நான்). இந்த ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது!! அப்படியே மூன்று சாயி அவதாரங்களுக்கும் தனித்துவம் இருக்கிறது! ஒரு அவதாரம் செய்தது போலவே இன்னொரு அவதாரம் செய்ததில்லை... ஒன்று உதி தந்தது... இன்னொன்று விபூதி தந்தது... மூன்றாவது? உதியா? விபூதியா? இல்லை நேரடியாக அனுபூதியா?

ஷிர்டி சுவாமி 16 ஆம் வயதில் தான் முதன் முதலில் ஷிர்டி கிராமத்திற்கு வருகிறார்... ஆனால் நம் சுவாமி 14 ஆம் வயதிலேயே தான் 'சாயிபாபா' என திருஅறிவிப்பு நிகழ்த்துகிறார்... இரண்டு வருடம் முன்பே! அப்போது ஷிர்டி கிராம நுழைவே... அந்தத் திரு நிகழ்வே அவதாரப் பிரகடனமாக இருக்கிறது... இரண்டாவது அவதாரத்தில் செயலோடு சேர்த்த திருவுரையாடல்... மலர்களை தரையில் வீசுகிறார் சுவாமி... முக இதழாலும் மலர் இதழாலும் தான் அவதாரம் என உறுதி மொழி பேசி உணர்த்துகிறார்...ஆக ஒவ்வொரு அவதாரமும் தனித்துவம் வாய்ந்தது... முன்னவர் செய்தது போலவே ஸ்ரீ சத்ய சாயி மன்னவர் செய்யவில்லை! 

உதி கொடுத்தாலும் விபூதி கொடுத்தாலும் கருணை கரைபுரண்டு ஓடியது... ஆனாலும் பரம்பொருள் ஒன்றாக இருப்பினும் பாடுபொருள் வேறு வேறு தான்...!அப்படியே தான் ஸ்ரீ பிரேம சுவாமியும் திகழ்வார் என்பது இரு அவதார திருவாழ்வியலை வைத்து நாம் உணர்ந்து கொள்ளலாம்! அணுகுமுறை ஒன்றாக இருக்கலாம்.. ஆனால் செயல்முறை நிச்சயம் வேறே! 12 ஆம் வகுப்பில் இருக்கும் ஆசிரியரே கல்லூரியில் வருவதில்லை...12 ஆம் வகுப்பு கல்வியே கல்லூரியில் இல்லை...ஆனால் படிப்பினை என்பது ஒன்றே!! அப்படி! 


ஸ்ரீ பிரேம சாயி பி.எச்டி கற்றுத்தருபவர்...! ஷிர்டி சுவாமி பள்ளி - நம் சுவாமி கல்லூரி - பிரேம சுவாமி பல்கலைக்கழக பி.எச்டி. 

ஷிர்டி சுவாமி படிக்கட்டு- நம் சுவாமி லிஃப்ட் - பிரேம சுவாமி ஜெட். அண்ட சராசர உயரம். காரணம் சுவாமிக்கு இது தான் இறுதி அவதாரம்! ஆம்... ஷிர்டி சுவாமி மாட்டு வண்டியில் பயணித்தார்.. நம் சுவாமி காரில்... பிரேம சுவாமி ஃபிலைட்டில்... பிரேம சுவாமி அவதாரம் தான் இறுதி இலக்கு... Final Destination! பரப்பிரம்மமே இப்படி மூன்று சாயியாக இனி எந்த கலியுகத்திலும் அவதாரம் எடுக்கப் போவதில்லை என சுவாமியே முன்பு தனது திருச்சபையில் பதிவு செய்திருக்கிறார்! ஆக பிரேம சுவாமியே அதி முக்கிய யுக மீட்புக்கும்... ஆன்ம இணைவுக்கும் ஒரே கதி! இரு அவதாரங்களும் படிப்படியாக செய்ததை ஓரே Stroke'கில் செய்து முடிப்பார் பிரேம சுவாமி... காரணம் இது தொழில்நுட்ப யுகம்...!


ஷிர்டி சுவாமிக்கும் நம் சுவாமி அவதாரத்திற்கும் 8 வருட இடைவெளி இருந்தது.. சென்ற (வார) பதிவில் ஆதாரத்தோடு சொல்லியபடி நம் சுவாமிக்கும் பிரேம சுவாமி அவதாரத்திற்கும் 1 வருடமே இடைவெளி! 8 எப்படி ஒன்றாக குறைந்துவிடுகிறது...!!! ஐ.சி.யூவில் அட்மிட் ஆகக் கூடிய நோயாளிகளை ஆற அமரவா தேரை இழுப்பது போல் மெதுவாக மருத்துவர் எடுத்துக் கொண்டு போவார்? சக்கரப் படுக்கையில் வைத்து விரைவார்!

டூர் வேனுக்கும் ஆம்புலன்ஸ் 'க்கும் உள்ள வித்தியாசமே அந்த எட்டு வருடம் ஒரு வருடமாய் குறைந்த சூட்சும காரணம்!!

சுவாமி உங்கள் அடுத்த அவதாரத்திற்கு ஏன் பிரேம சாயி என பெயர் வைக்கக்கூடாது? என எந்த பக்தர் ஐடியா கொடுத்தும்... இப்படியே தாடி வைத்திருந்தால் நன்றாக இருக்கும் சுவாமி என எவர் சொல்லியும்..

 எவரிடமும் கலந்து ஆலோசித்தும் சுவாமி தனது அடுத்த அவதாரத்தின் பெயரையும் உருவத்தையும் வழங்கவில்லை... "சுவாமி.. நீங்கள் சிங்கமாகவே வாருங்கள்... அப்போது தான் என் தந்தை பயப்படுவார்!" என ஆகச் சிறந்த பக்தனான பிரகலாதனே எந்த ஆலோசனையும் சுவாமிக்கு வழங்கவில்லை...அது போல்... அதே போல் சுவாமியே தனது அவதாரப் பிரகடனத்தை அறிவிப்பார்... அடியேன் மட்டும் அல்ல எவரும்... எந்த மனிதக் கூட்டமும் அந்த பிரகடன திருஅறிவிப்பை உரிமை கொண்டாட முடியாது! அந்தக் காப்புரிமை கத்திரிக்காய்கள் எல்லாம் சுவாமி யாருக்குமே வழங்கவில்லை... சுவாமி இறைவன்! மனிதனைக் கேட்டு முடிவெடுப்பவன் மனிதனே...இறைவன் அல்ல! அப்படி எடுப்பவர் இறைவனே அல்ல... எவரும் சுவாமியை தனக்கு மட்டுமே சொந்தம் என உரிமை கொண்டாட முடியாது என்பதை நாம் முதலில் புரிந்துணர வேண்டும்! விடுகின்ற சுவாசத்திற்கான வரியை நாம் எவரிடமும் செலுத்துவதில்லை! ஆகையால் சுவாமியே அந்தப் பேரற்புதப் பிரகடனம் எல்லாம் தானே சுயமாய் தீர்க்கமாய் அறிவிப்பார்... எப்படி 8 வருடம் 1 வருடமானதோ...16 ஆம் வயது ஷிர்டி பிரவேசம் 14 ஆவது வருடமாக சுவாமியின் அவதாரப் பிரகடனம் நிகழ்ந்ததோ... அப்படி  விரைவிலேயே நிகழலாம் என ஏன் தோன்றுகிறது எனில்... புற சூழ்நிலை எதுவும் சரியில்லை என்பதற்காகவே!!

மற்றபடி காலநேரம் கூட்டுவதும் குறைப்பதும் சுவாமியின் சங்கல்பத்திலேயே இருக்கிறது! சுவாமி சங்கல்பத்தை ஒரு கோடி ஜோதிடர் ஒன்றுகூடி தலையைப் பிய்த்துக் கொண்டாலும் துல்லியமாக கணித்து விடவே முடியாது! இல்லை எனில் நமக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம்?!

தானே ஷிர்டி சாயி என நம் சுவாமி ஷிர்டி சுவாமியோடு பழகிய பக்தர்களுக்கு உணர்த்திய தெய்வீகப் பொறுப்புணர்வை விட ஸ்ரீ பிரேம சுவாமிக்கு அந்தப் பொறுப்புணர்வு 1000 மடங்கு அதிகம். அவ்வளவு சீக்கிரம் இவர் தான் ஸ்ரீ பிரேம சுவாமி என நம் சுவாமி பக்தர்கள் எளிதாக நம்பிவிடுவார்களா? அதற்கு அவர் பேரற்புதங்களை நிகழ்த்தியே ஆக வேண்டும்...; சிதறிப் போன தனது திருக்குடும்பத்தை ஒன்றிணைக்க வேண்டும்... இது தான் முதலில்... பிறகே மூன்று மதங்களையும் இணைப்பது... உலகத்திற்கு தான் இறைவன் என உணர்த்துவதெல்லாம்! நிச்சயம் செய்வார்... காரணம் இது தான் உச்சபட்ச அவதாரம்... ஒரு திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும்... உலகம் எனும் திரையரங்கில் நிகழப்போகிற க்ளைமாக்ஸ் அவதாரமே பிரேம சுவாமி! விறு விறு என்று இருக்கப் போகிறது... ஆழிப்பேரலை முன் நீர்க்குமிழிகள் என்ன செய்யும்! இப்போது பிரேம சுவாமி எங்கே இருப்பார்? என நீங்கள் யோசிக்கலாம்!


ஏற்கவே பிரேம சுவாமி அவதாரத்தை  நம் சுவாமி கர்நாடகா - மாண்டியா என தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.. ஆகவே மாண்டியாவின் பிரதான சாலையில் ஒரு போர்ட் வைத்து நான் தான் பிரேம சாயி என்றெல்லாம் இறைவன் சொல்வாரா? சிந்திக்க வேண்டும்! தனது அவதாரப் பிரகடனம் வரை தன்னை அவர் மறைத்தே வைத்திருப்பார்... இது தான் அவதார லட்சணம்! உனக்கெப்படி தெரியும்? எனக் கேட்டால்... இறைவன் ஐந்தொழில் புரிகிறார்! "ஆக்கல்- காத்தல்- அழித்தல்- மறைத்தல் - அருளல்" இது வெறும் மனிதனுக்காக இறைவன் புரிவது மட்டும் என மனிதன் நினைக்கிறான்... இல்லை! அந்த சூட்சுமம் இதுதான்...தன்னைத் தானே படைக்கும் இறைவன் தன்னைத் தானே காத்து.. தன்னைத் தானே மறைத்தும் கொள்கிறார்... அப்படித் தான் முதன்முதலாக ஷிர்டியில் பிரவேசித்த சுவாமி அதற்குப் பிறகு மறைந்து போகிறார்... நம் சுவாமி 14 ஆவது வயதிற்குப் பிறகே வெளிப்படுகிறார்! ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு தனித்தன்மையோடே பூமியோடு வருகிற திருவிதி அது! பிரேம சுவாமி மாண்டியா பகுதிகளின் மறைவான உள்தள்ளிய இடத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது... அவர் பள்ளிக்கூடமே செல்லும் வாய்ப்பும் இருக்கிறது நம் சுவாமி சென்றது போல்... சுற்றி இருப்பவர்கள் அவரின் அவதாரத்தை உணர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது எப்படி முதலிலேயே தாத்தா ஸ்ரீ கொண்டம ராஜு உணர்ந்தாரோ அப்படி! அதற்காகவே அடியேன் ஆரம்பத்திலேயே வேர்க்கடலை உதாரணம் சொன்னது... சுவாமி வேர்க்கடலை தான் முந்திரிப் பருப்பு இல்லை...! மனிதனே ஆர்வக்கோளாறே தவிர இறைவன் அல்ல!! 


அதற்கு முன் சில இளம் முந்திரிப்பருப்புகள் நான் தான் பிரேம சுவாமி என யூடியூப் உலகில் வலம் வருகின்றன... அதையும் ஒருசில சுவாமி பக்தர்கள் "ஒரு வேளை அப்படி  இருக்குமோ!" என நினைக்கிறார்கள்... இதெல்லாம் என்னவகையான பக்தி என்று தான் புரியவில்லை!! பிரேம சுவாமி மனிதக் குழந்தை அல்ல... சாதாரண குடும்பத்திலேயே அவர் பிறந்திருந்தாலும் அவரின் சுபாவங்கள் நீங்கள் பார்க்கும் யூடியூப் சிறுவர்களைப் போலவா இருக்கும்? யோசிக்க வேண்டாமா? காவி உடுத்தி விபூதி கொடுத்தால் சுவாமியா? ஏமாற்றுபவர்களை விட ஏமாறுபவர்களே முதல் குற்றவாளி என்கிறார் சின்மயானந்தர். பள்ளிக்கூடப் படிப்பிற்கு பயந்து போய் தானே பிரேம சாயி என்று சொல்பரெல்லாம் பிரேம சுவாமியா? அந்தப் பொடிப் பசங்களால் நம் உள்ளத்தில் நினைப்பதை எல்லாம் சொல்லிவிட முடியுமா? "உத்தவ கீதையின் 8 ஆவது ஸ்லோகத்திற்கு என்ன பொருள் ? என்று கேட்டால் தெரியுமா? ரிபு கீதை? குறைந்த பட்சம் பகவத் கீதையின் "தர்ம வ்ருத்தோ" எனும் வார்த்தைக்கான அர்த்தம்? நான் கையில் ஒன்றை மறைத்து வைத்திருக்கிறேன் என்னவென்று சொல் என்றால் சொல்லிவிடுவார்களா? இதை எல்லாம் அவர்களிடம் சோதிக்காமலேயே அவர்களை நம்பி விடுவீர்களா? இதனால் தான் நாத்திகமே ஆன்மீகத்தைப் பார்த்து கை கொட்டி சிரிக்கிறது! அதில் தவறொன்றுமில்லை. நம் அகந்தையும், பேராசையும், அறியாமையும் அழிய வேண்டும்! அது வரை அந்த ஏளனச் சிரிப்பு அவசியம்தான்!  இன்னும் அந்த சிறுவர்களைப் போல் போலிகளை எல்லாம் நம்பும் கூட்டத்திற்கு இத்தனை ஆண்டுகாலம் சுவாமி மேல் எவ்வகை பக்தி இருந்தது? ஸ்ரீ பிரேம சாயி அவதாரத்தை புறக்கணிக்க நினைப்பது எவ்வளவு பெரிய பாவச் செயலோ...அதே பாவச் செயல்தான் பொய்யானவர்களை பிரேம சாயி என நம்புவதும்! உண்மையான பக்தி இருந்தால் பாவம் செய்யத் தூண்டுமா?  


ரஷியாவில் இருந்து கொண்டும் வெவ்வேறு வெளிநாட்டில் இருந்து கொண்டும் இவர் தான்.. அவர் தான் பிரேம சுவாமி என எவர் சொன்னாலும் வாயை அகலத் திறந்து கொண்டு வெளிநாட்டு மோகத்தில் கண்மூடித்தனமாய் நம்புவதா?

கர்வ அதிகாரத்திற்கு மட்டுமல்ல மூட பொய் நம்பிக்கைகளுக்கும் சுவாமி எதிரானவர் என்பதை உணர வேண்டும்!

சிலர் சொல்கிறார்கள்... எனக்கு சத்யசாயியே போதும் பிரேம சாயி தேவையில்லை என... அவர்களின் அறியாமையைப் பார்த்து சிரிப்பு தான் வருகிறது! யார் யார் தன் மிஷனில்- விஷனில் இருப்பது என்பதை இறைவன் முடிவு செய்கிறாரா? இல்லை மனிதன் முடிவு செய்கிறானா? நாம் திட்டமிட்டா சுவாமி பக்தரானோம்?? யோசிக்க வேண்டும்! அகந்தையை அனுபவ உளி அடிக்க அடிக்கத்தான் ஞானச்சிலை உருவாகிறது! "அய்யோ ஏமாந்துவிட்டோமா...? ச்சே! எவ்வளவு அகந்தையோடு முட்டாள்தனமாக இதுவரை வாழ்ந்திருக்கிறோம்!" என நாம் பழகுகிற ஆன்ம சாதனை நமக்கே உணர்த்துகிற போது வலிக்கவே செய்யும்... வலிக்கட்டும்! வலி நல்லது... வலிக்கு பிறகே ஒளி! அவ்வளவு சீக்கிரம் ஒரு சில மகான்களுக்கு கூட ஞானம் வந்துவிடவில்லை! உண்மையை உள்ளம் திறந்து உணர வேண்டும்! தவறு செய்வது மனித அறியாமை... அதை நியாயப்படுத்துவதே பாவம்! பக்தி துன்பத்தை பொறுத்துக் கொள்கிறதே தவிர பிறரை மனதளவில் கூட துன்புறுத்துவதில்லை...!! பக்தி இறைவனுக்காக காத்திருக்கிறதே தவிர தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் இறைவன் வரவேண்டும் என நினைப்பதில்லை!

ஆக...ஸ்ரீ பிரேம சாயி அவதாரப் பிரகடனம் நிச்சயம் நிகழும்... அது சீக்கிரமாக நிகழ வேண்டும் என பிரார்த்தனை மட்டுமே செய்து கொள்ள நம் போல் சராசரி மனிதரால் இயல்கிற காரியம்! காரணம் வெளிசூழ்நிலை ஆரோக்கியமாக இல்லை... ஆக "சுவாமி நீ விரைவாக உன்னை வெளிப்படுத்து!" என கதறி அழுவது கூட தவறில்லை... நமது அழுகை இறைவனை நோக்கிப் பாய்கிற போது அதுவே ஆராதனையாகிறது! எனவே ஸ்ரீ பிரேம சாயி அவதாரத்தை எந்த மனிதராலும் மறைத்து ஒதுக்கிவிட முடியாது! சூரியனை மட்டுமல்ல சூர்யோதயத்தை கூட மனிதன் தனது கையால் மறைத்துவிட முடியாது என்பது போல்!! அப்படி மறைத்து ஒதுக்கிவிடலாம் என நினைப்பது வயிறு குலுங்கிச் சிரிக்க வைக்கிற 2022 ன் சிறந்த நகைச்சுவையாக திகழும்! இறைவனை மனிதனால் ஒன்றும் செய்துவிட முடியாது! இறைவனாக ஏதாவது செய்தால் தான் மனிதனே வாழவே முடியும்! அவதாரப் பிரகடனம் நிகழும் வரை... நமக்கான பேருந்து வரும் வரை நாம் பக்திப் பூர்வ பிரார்த்தனை உணர்வோடு காத்திருக்க வேண்டும்!! அதற்குள் ஆர்வக் கோளாறில் அவசரப்பட்டு மீன்பாடி வண்டியில் ஏறி... மூக்கடைப்பு சரியான பிறகு துர்நாற்றம் வீசுகிறதே என்றால்... வீசத்தான் செய்யும்! ஸ்ரீ பிரேம அவதாரப் பிரகடனம் வரை பக்தி ஆவலோடு காத்திருப்போமே... காலாகாலத்திற்கும் நம்மையே காத்திருக்கும் பிரேம கடவுளுக்காக நாம் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாமே!


"அவர் எப்போது வந்தால் எனக்கென்ன?" என்று பக்தன் அலட்சியமாக இருந்தால்... "நீ எக்கேடு கெட்டால் எனக்கென்ன?" என பக்தனோடு சுவாமியும்  இருக்கலாமே! தவறொன்றுமில்லையே! நாம் இறைவனை கண்டு கொள்ளவே மாட்டோம்... ஆனால் இறைவன் மட்டும் நம்மையே கண்ணிமை போல் காப்பாற்ற வேண்டும் என நினைப்பது எந்தவகை நியாய தர்மம்? 

ஆக...! ஸ்ரீ பிரேம அவதாரம் எழுந்து அதர்மத்தை  சவரம் செய்யப் போகிறது! யாராவது முகச்சவரத்தில் ஒரு பாதி தாடியை மழித்த உடனே... இதுவே போதும் என எழுந்து போவார்களா? முழுதாய் சுத்தமாக்கும் வரை காத்திருக்கிறோம்!! அதே காத்திருப்பு தான்! முழுதாய் எதுவும் நிறைய வேண்டும்! சமையலுக்கே காத்திருக்க வேண்டியிருக்கிறது...! சாப்பிட வேண்டாமா? எது கிடைத்தாலும் நாம் வாயில் போட்டுக் கொள்வதுமில்லை... அலட்சியமாக அறுசுவை உணவை எட்டி உதைப்பதுமில்லை!! அப்படி உதைப்பவர் ஒன்று பைத்தியமாகவோ இல்லை முட்டாளாகவோ இருப்பர் அல்லவா! பசியில்லாதவர் கூட உணவை எட்டி உதைப்பதில்லை... ஆக அகப் பசியை பக்தியே ஏற்படுத்துகிறது! அடுத்த அவதார மேன்மையை அனுபவிக்க நாம் முதலில் அகப்பசியை வளர்த்துக் கொள்ள வேண்டும்!

 மொட்டாகவே எத்தனை நாள் கொடியிலேயே ஒற்றைக் காலில் நிற்க முடியும்?

ஆக...! அரிதாய் அரும்பான அந்தப் பிரேம குறிஞ்சிப்பூ அருகிலேயே மலரட்டும்... நம் மரக் கைகள் மலர்க் கைகளாகட்டும்!!

ஸ்ரீ பிரேம வெளிச்சம் பரவுவதற்கான ஈரவிழிகளோடு கைக்கூப்பி காத்திருந்தபடி...


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக