தலைப்பு

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

ஆச்சர்யப்பட வைக்கும் சுவாமி வழங்கிய பக்தர்களின் ஒரு பத்தி அனுபவத் தோரணங்கள்!

வெவ்வேறு பக்தர்களுக்கு/ மனிதர்களுக்கு வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வழிவகையில் சுவாமி வழங்கிய விசித்திரம் நிறைந்த அதிசய  அனுபவங்களின் ஒரு பத்தி முத்துத் தோரணங்கள் இதோ...


கம்பெனி மேனேஜர் ஒருவரை 13 லட்சம் கேட்டு ஒரு நக்சலைட் கும்பல் கடத்துகையில்... அதன் தலைவன் துப்பாக்கியை அவர் தலை மேல் வைக்க "சாயிராம்" என அவர் குரல் எழுப்புகையில் கண்கலங்கி துப்பாக்கியை  விடுவிக்கிற அவன் ஏற்கனவே சுவாமியை நேசிக்கிறவன் என்பது குறிப்பிடத்தக்கது!

கரம் புறம் சிரம் நீட்டாதீர் என பேருந்தில் எழுதி வைத்திருப்பதையும் மீறி தன் கையை வெளியே நீட்டியதில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் போடப்பட்ட கட்டோடு மருத்துவர் ஆலோசனையில் தலையணை வைத்தபடி புட்டபர்த்தி வருகிற அவரை சுவாமி உற்று நோக்கிய... அந்த அதே ஒரு நொடிப் பார்வை அவர் மேல் பட... வெளியே வந்து வலியில்லா உணர்வு ஏற்பட... கையை நீட்டி கட்டுகளையும் அவிழ்த்துவிடுகிறார்!

சுவாமி ஒரு பக்தரின் கனவில் தோன்றி சோஃபாவில் சாய்ந்து படுப்பதில் அந்த பக்தரின் அம்மா உடல்நலம் சரியில்லையா ? அமிர்தாஞ்சன்  எடுத்து வரவா? என சுவாமியிடமே கேட்கையில்... சுவாமி தனது வலது உள்ளங்கையை நீட்ட அதில் நவகிரகங்களும் காட்சி அளிக்க... எப்போதும் ஜோதிடம்- ஜாதகம்- பரிகாரம்- கண்டம் என பயந்திருக்கும் அந்த அம்மையார் கனவிலிருந்து எழுந்திருக்கையில் யாவும் சுவாமியின் கையிலேயே இருக்கிறது என்பதை உணர்ந்து தெளிவடைகிறார்!


Dr. Rajammal P. Devadas

கோவை அவினாசிலிங்கம் ஹோம்சயின்ஸ் கல்லூரி துணை வேந்தராக இருந்த டாக்டர் ராஜம்மாள் 1980 ல் ரோம் செல்ல... அங்கே ஐ.நா சபையை சார்ந்த ஒரு இத்தாலி தேசத்து பெண் விஞ்ஞானி சுவாமியைப் பற்றி ஆவலோடு விசாரிக்க... தனக்கு தெரியும் ... தான் தரிசித்திருக்கிறேன் எனச் சொல்கையில் அந்த ஐ.நா சபை விஞ்ஞானப் பெண்மணி கட்டி அணைத்து.. கண்கலங்கி "எவ்வளவு அதிர்ஷ்டம் உங்களுக்கு... அவர் கடவுளே!" என சொல்லியதில் அந்த துணை வேந்தர் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விடுகிறார்!

மகாத்மா காந்தியே தெய்வம் எனும் ஒரு சுதந்திரப்போராட்ட வீரரின் மகனான  கஸ்தூரி ராவ் பெங்களூர் மிலிட்டரி குவார்ட்டஸில் தங்கி இருக்கையில் நண்பர்கள் சாயி பஜனுக்கு அழைக்க... அவர் மறுக்க... அவரின் பக்கத்து வீட்டுக்கே சுவாமி விஜயம் புரிய...அப்போதவர் வேறு திசையில் போய்வர.. ஒரு பஞ்சாபி பெண்மணி கஸ்தூரி ராவை வலுக்கட்டாயமாக அவரை அழைத்துப் போக...அவரும் வேண்டா வெறுப்பாக செல்ல... சுவாமி தரிசனத்தில் நேராக கஸ்தூரி ராவ் முன் நின்று "பங்காரு... பங்காரு" என அழைக்க... கஸ்தூரி ராவின் 'ராவ்' எனும் மறுபாதி பெயர் மறைந்து போய்விட...அன்று சுவாமியின் திருப்பாதத்தைப் பிடித்தவர் தான்‌... கஸ்தூரி ராவ் சுவாமி பக்தியில் கஸ்தூரியாகிவிடுகிறார்!

அமெரிக்காவில் சுவாமி பஜனைக்கு சென்று இரவில் சுரங்கப்பாதை வழியாக ஒரு பக்தை நடந்து வர...திருடர்கள் அவரை மடக்க... கத்தியைக் காட்டி பொருட்களை கேட்டு மிரட்ட... அந்த பக்தையோ கண்களை மூடி சாயிராம் என கத்த... அந்த திருடரில் ஒருவன் "பின்னால் நிற்பது யார்... பரட்டைத்தலையோடு... உன் ஹஸ்பென்டா?" என கேட்க... கண்களை மூடியபடியே 'ஆம்!' எனச் சொல்ல...திருடர்கள் நகர...சுவாமி அவர் முன் தோன்றி..."நான் என்ன உன் ஹஸ்பெண்டா?" என சிரித்தபடி கேட்க... அந்தப் பெண்மணியும் கண்கலங்கி சுவாமியின் கால்களில் விழ... சுவாமி மறைந்து விடுகிறார்!


1991 ல் சிலோன் கலவரத்தில் நிறைய சொந்த வீட்டுவாசிகள் இடம் பெயர... குண்டு சப்தத்தோடு அந்த அவலங்கள் நிகழ...10 மைல் தள்ளிச் செல்ல... பிரியாவின் வவுனியா வீட்டைப் பூட்டி... சர்ச்'சில் அடைக்கலம் புக...அந்த நேரம் பார்த்து பூட்டி இருந்த வீட்டை கொள்ளை அடிக்கும் கும்பல் முற்றுகையிட... வீட்டை கொளுத்தலாமா என ஒரு கயவன் கேட்க... வாசலில் இருக்கும் சுவாமி திருப்படத்தைப் பார்த்து.. வந்துவிடு என இன்னொருவன் மற்றொருவனை இழுத்தபடி வந்துவிட.. சேதாரமின்றி வீடு தப்பிக்க... இதை வைக்கோல் பரப்பில் உயிருக்கு பயந்து மறைந்திருந்த வாட்ச்மேன்கள் தெரிவிக்க... சுவாமியின் கருணையை எண்ணி கண் கலங்குகின்றனர் பிரியா குடும்பத்தினர்!


விழுப்புரத்தில்...120 இஞ்சின்கள் பராமரிப்பு பணியில் 1000 தொழிலாளர்களை வேலை வாங்குவதில் இரவு பகலாக வேலை கண்ணன் எனும் ஒரு சுவாமி பக்தருக்கு என்பதால் சுவாமியிடம் அவர் பர்த்தியில் அடைக்கலம் புக...நேர்காணலில்... "உன்னை நான் அதிலிருந்து விடுவிக்கிறேன்!" என சுவாமி சொல்ல...2 வாரத்திலேயே அவருக்கு கயாவில் பயிற்சி முகாமுக்கு மாற்றலாகி 3 மாதங்கள் கயாவை குடும்பத்தோடு  சுற்றிப் பார்க்க... ஒரு மேலதிகாரி தனக்கு வேண்டியவருக்காக மீண்டும் இவரை மாற்ற முயற்சிக்க.. சுவாமியிடம் இருந்து ஒரு கடிதம் வர.. அதில் "உன்னை லீவு எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவார்கள்... எடுக்காதே! எடுத்தால் உனக்கும் உன் குடும்பத்திற்கும் கஷ்டம்!" என்று வர... அதன் படியே லீவு எடுக்க அவர்கள் பேசுவதில் கண்ணனோ இப்போது வேண்டாம் என மறுக்க... வேலை மாற்றலும்... வேலைப்பலு அதிகமில்லா வேலையும் அவர் குடும்பத்தை காப்பாற்றி.. அவரையும் அதிக வேலை எனும் மன உளைச்சலில் இருந்து சுவாமியின் கருணை மிகுந்த வழிகாட்டுதல்கள் காப்பாற்றுகிறது!


18 வருடமாக குழந்தை இல்லாத ஒரு அமெரிக்க தம்பதியரிடம் நேர்காணலில்... "நீ சிகரெட் புகைப்பதை நிறுத்தினால் தான் குழந்தை தருவேன்!" என சுவாமி தீர்க்கமாய்ச் சொல்லி.. கன்னத்தில் அறைவிட... அந்த கணவர் அந்த அறையின் அதிர்ச்சியில் இதுவரை புகைத்த எண்ணமில்லாமல் விட்டுப் போக.. அவரின் மனைவிக்கு தலைமேல் கைவைத்து சுவாமி தொட... அவளுக்கு இருந்த மார்பகப் புற்று நோயும் மறைந்து போக... சுவாமி திருப்படம் பார்த்தாலே கட்டிக் கொள்ளும் ஒரு அற்புதக் குழந்தையை சுவாமி வரமாய் அருள்கிறார்...!

(ஆதாரம் - அற்புதமும் ஆன்மீகமும் -5/ பக்கம் -153 - 167/ ஆசிரியர்: திருமதி சாயிசரஜ்)


மேலே தொகுக்கப்பட்ட பக்தர்களின் அனுபவங்கள் கடலளவில் ஒரு கடுகு கூட இல்லை... இப்போதும் சுவாமி தனது பக்தர்களோடு தொடர்பில் தான் இருக்கிறார்... ரேடியோவை டியூன் செய்தால் தான் அலைவரிசை எடுக்கும்.. அது போல் நிர்மல பக்தி இருந்தால் மட்டுமே சுவாமியோடு ஆன்மீகத் தொடர்பு ஏற்படுகிறது! சுவாமி தான் செய்கிறார் என்ற உணர்வு கூட ஏற்படாத அளவிலும் பல பக்தர்களுக்கு எதையும் எதிர்பாராமல் சுவாமியே அன்றாடம் அனுகிரகம் பொழிந்து வருகிறார்! எப்போதும் தன் பக்தர்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்...இதையே தனது திருச்சங்கல்பமாக்கி பேரிறைவனாக கணம்தோறும் சுவாமி கருணையோடு திகழ்கிறார்!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக