தலைப்பு

புதன், 5 ஜனவரி, 2022

தீராத மனநோயை கனவிலேயே தீர்த்து வைத்த தெய்வ சுவாமி!

எவ்வாறு ஒரு பெண்மணியின் மகளுடைய மனநோயை சுவாமி நேரில் கடிதம் பெற்றும், கனவிலும் குணப்படுத்தினார் என்பது சுவாரஸ்யமாய் இதோ...


அந்தப் பெண்மணி பெயர் ஜே. அவரின் தாத்தா ஷிர்டி சுவாமி பக்தர்... அவரின் பெற்றோர் சுவாமி பக்தர்...ஆனால் இவரோ சுவாமியை தரிச்சித்ததில்லை... உபன்யாசங்களை விரும்பிக் கேட்பார்... மணம் முடிந்தபின் இராமநாதபுரத்தில் வேலை... ஆக வீடு மாற்றல்... அப்பகுதியில் திருடர் மயம் .. ஆகவே திருட்டு பயம்... எனவே தன் நகைகளை தாயிடம் கொடுத்து வைத்திருந்தார் ஜே. பிறகு மச்சினர் திருமணத்திற்காக நகை வேண்டி தாய்க்கு எழுத திருடர் பயத்தோடு தானே தனியாக கொண்டு ஸ்டேஷன் வருகிறார்... அப்போது ஒரு வயதான கிழவர் ஒருவர் அவர் அருகில் தோன்றி ஸ்ரீ சக்கரத்திற்குள் சுவாமி படம் இருக்கும்படியான ஒரு அபூர்வ திருப்படத்தை அளித்து ஆசி கூறுகிறார்... அந்தப் படத்தை ஒரு கணம் உற்றுப் பார்க்கையில் "யாமிருக்க பயமேன்?" என்ற மொழி கண் வழி நுழைந்து மனதை திடப்படுத்துகிறது!

அந்தத் திருப்படத்தை மகளுக்கு அளிக்கிறார் தாய்... கர்மா சும்மா விடுமா? வாங்கப் பயப்படுகிறார்... ஒரே சந்தேகம்.. சுவாமி பற்றிய ஏதோ ஒரு வதந்தியைக்  கேள்விப்பட்டதால் வாங்க தயங்குகிறார்... 

மனிதனின் தீயகர்மா சத்தியத்தை சந்தேகித்து வதந்தியை நம்புகிறது...! அங்கிருந்து ஊட்டிக்கு இடம் மாற்றம்.. அருகே படுகர் வீட்டில் சுவாமி விஜயம் செய்திருந்த போதும் சென்று பார்க்க முடியாமல் கர்மா தடுக்கிறது... சில காலத்திற்குப் பிறகு பட்டுக்கோட்டைக்கு மாற்றம்... பெண் 11 ஆம் வகுப்பு படிப்பவள். அம்மை நோய் தாக்கியதிலிருந்து பலவீனமாகி பள்ளி செல்வதையே நிறுத்திவிடுகிறாள்... பார்க்காத வைத்தியமே இல்லை... மந்திர தந்திரம் என எல்லா வகையான வைத்திய பிரயோகங்களையும் கையாண்டனர்...சென்னை வந்து மனநல மருத்துவரிடம் காட்டுகின்றனர்.. ஏராளமான செலவு...மகளின் எடை பெருத்ததே தவிர மனநோய் இளைக்கவில்லை.. எல்லோரையும் அடிக்க ஆரம்பிக்கிறாள்... அவளின் தந்தை சபரிமலை செல்கிறார்.. ஆனாலும் கர்ம வீரியம் குறையவில்லை... இறுதியில் ஜே தனது மகளை மனநல மருத்துவமனையிலேயே சேர்க்கிறார்.. லட்சக்கணக்கான பணம் செலவாகிறது! ஜே'வின் தந்தையோ... "நீ பாபாவிடம் செல்.. அவரால் மட்டுமே நோயை தீர்க்க முடியும்!" என்கிறார்...

உடனே பர்த்தி செல்கிறார்... அங்கேயே பட்டுப்புடவையைக் கிழித்து மகள் அட்டகாசம் செய்கிறாள்... செய்வதறியாது அழுதபடி பிரசாந்தி நிலையத்தையே 22 தடவை பிரதட்சணம் செய்கிறார்... மகளின் ஆவேசம் சற்று அடங்குகிறது.. ஒரு பக்தர் சுவாமிக்கு தந்தி கொடுக்கும்படி ஆலோசனை விடுக்கிறார்...பிறகு சுவாமியின் தரிசன வரிசையில் மகளை மடியில் வைத்து கண்கலங்கியபடி காத்திருக்கிறார்... சுவாமி கருணையே வடிவாக பூமிக்கே வலிக்காதவாறு மிதந்து வருகிறார்.. வந்து ஜே'விடம் இருந்து கடிதம் பெறுகிறார்... பிறகு ஜே'வின் கனவில் சுவாமி தோன்றியதில் சுவாமி பின்னால் ஓடுவதாக காட்சி விரிந்து மறைகிறது... அதே நேரத்தில் ஜே'வின் மகள் கனவில் சுவாமி சென்று பாத நமஸ்காரம் அளிக்கிறார்...ஒரு டாக்டர் அம்மா ஊசி போடுவதான காட்சி விரிந்து மறைகிறது!

ஜே'வோ அந்தக் கனவை அறிந்து தனது கணவரிடம் பெண் டாக்டரை பற்றி விசாரிக்க.. தனது நண்பரின் தங்கை இருப்பதாகச் சொல்ல... ஆச்சர்யப்படுகிறார்...

பாதை இப்போது மிகச் சரியாகப் பயணிக்க ஆரம்பிக்கிறது... ஒவ்வொரு வியாழனும் மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கனவில் சென்று பாத நமஸ்காரம் அருளி.. விபூதி சிருஷ்டித்து அளிக்கிறார்... அந்த லேடி டாக்டர் ஊசி போடும் கனவுக் காட்சியும் விரிந்து மறைகிறது... சரியாக 3 மாதங்களில் மனநோய் முற்றிலும் குணமாகிறது! பின் விட்டப்படிப்பை தொடர்கிறார்... மெட்ரிக் பாஸாகிறார்... திருமணம் நிகழுமா? நிகழாதா? என ஜே சுவாமிக்கு கடிதம் எழுத... 15 நாட்களில் சுவாமி சங்கல்பத்தால் திருமணமே நிகழ்ந்து முடிகிறது... 


ஒரு நாள் சுவாமியின் திருப்படம் துடைக்கும் போது குங்குமமாக கொட்டுகிறது... ஜே'மகளின் கணவர் ஒரு ஜீப் விபத்திலிருந்து சுவாமியால் காப்பாற்றப்படுகிறார்... என் மகளுக்கு வாழ்க்கையே சுவாமி கொடுத்தது...என உளமாற கண்ணீர் சொரிந்து பக்தி இதயத்தை இன்னமும் ஈரப்பதமாக்குகிறார்! 

(ஆதாரம்: அற்புதமும் ஆன்மீகமும் - 5 / பக்கம் : 28 / ஆசிரியர் : திருமதி சாயிசரஜ் ) 


சுவாமியிடம் சரணாகதி அடைந்தால் போதும்...மற்றது அனைத்தும் சுவாமி கவனித்துக் கொள்வார் என்பது இதன் வழியே உணர முடிகிறது.. அந்த சரணாகத நிலை வருவது தான் அவ்வளவு சுலபமில்லாமல் மனம் ஆப்பசைத்த மந்தியாய் அலைந்து கொண்டிருக்கிறது.. வெற்றுக் காரணமே... தனக்கு எல்லாம் தெரியும்... தானே எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறேன் என மனம் கற்பனை செய்து கொள்கிறது... அந்தப் பொய்யை நம்ப வைக்கிறது...அந்தக் கற்பனை சுக்குநூறாய் உடைகிற பொழுது சரணாகதி சாத்தியப்படுகிறது.. அப்போதே கவலையின்மையும் குணமடைதலும் சத்தியப்படுகிறது.. உலகத்தின் ஆகச் சிறந்த மனநோய் என்பது சுவாமியிடம் சரணாகதி அடைய முடியாமல் செய்யும் மனமே!! மனமே கற்பனைகளின் தாய்... தெளிவு பக்தி தரும் சரணாகதியால் மட்டுமே வருகிறது!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக