தலைப்பு

திங்கள், 17 ஜனவரி, 2022

விதவையான ஒரு ரமண மகரிஷி பக்தையை சுமங்கலியாக்கிய மறுமலர்ச்சி சுவாமி!


இலங்கையைச் சேர்ந்த ஒரு பக்தை திடீரென விதவையாகிவிடுகிறார்... எவ்வாறு சுவாமி அவரை தேற்றி மங்களம் அருளினார் என்பதோடு... அது எப்பேர்ப்பட சமூக சீர்திருத்தம் என்பதையும் பரவசத்தோடு வாசிக்கப் போகிறோம் இதோ...


சகுந்தலா இலங்கைவாசி. சிறுவயதிலேயே ஸ்ரீ கிருஷ்ணர் அடிக்கடி கனவில் தோன்றுவார்! திருவண்ணாமலை ஜோதி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியை அறிந்து அவரின் பக்தராகிறார்! அன்றுமுதல் எல்லாமே அவருக்கு ஸ்ரீ ரமண மயம் தான்! துறவு நிலையில் கூட பற்றில்லாத ஒரு மகோன்னத நிலையை பகவான் ஸ்ரீ ரமணருக்கு பிறகு யாரும் அடைந்ததாக தெரியவில்லை! சகுந்தலா தனக்கு திருமணமே வேண்டாம் என்கிறார்...பெற்றோர் மறுக்கிறார்கள்... யாம் சிக்கிய கர்ம சுழலில் நீயும் சம்சார சாகரத்தில் சிக்கித் தவிப்பாயாக என்கிற  நோக்கில் அவளுக்கு திருமணம் நிகழ்கிறது. நல்லவேளை கணவர் மிக நல்லவர்! இவர்கள் ஒரு தெய்வப் பொழுதில் பக்தியின் பலனாக சுவாமியை தரிசிக்க வருகிறார்கள் கையில் முதல் குழந்தையோடு... நேர்காணலில் விபூதி தருகிறார்.. பிறகு அடுத்தடுத்து என மூன்று குழந்தைகள்! மூன்றாவது குழந்தையோடு சுவாமி நேர்காணலுக்கு அவர்கள் வருகிற போது... சுவாமி சகுந்தலா கணவரோடு நெடுநேரம் உரையாடியபடி‌...அணைத்துக் கொண்டு முதுகு தடவுகிறார்... சுவாமி சகுந்தலாவைப் பார்த்து "உன்னுடைய எல்லா பொறுப்புகளும் என்னுடையது.. நீ எதற்கும் கவலைப்படக்கூடாது... உனக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன்!" என்கிறார்! 

ஒரு சமயம் கணவர் இலங்கையில் எதிர்பாராவிதமாக நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார்... இடி மொத்தமாய் தலையில் இறங்குகிறது... நிலையில்லா மனித வாழ்வில் எதுவும் நித்தியமில்லா சம்சார சாகரத்தில் இப்போது சகுந்தலா செய்வதறியாது ஸ்தம்பித்துப் போகிறாள்... தனக்கு திருமணமே வேண்டாம் என்றவள்... இப்போது கணவரற்ற நிலையில் மூன்று குழந்தைகள்... கர்மா எப்படி எல்லாம் ஒருவர் வாழ்வில் விளையாடுகிறது! தமிழகம் திரும்புகிறார்... திருவண்ணாமலையில் பகவான் ஸ்ரீ ரமண ஆசிரம மடியில் தலைசாய்கிறாள்... ஸ்ரீ ரமண பக்தர்கள் தியானிப்பவர்கள்... தியானம் பற்றி அறிந்து அதை பயிற்சி செய்ய முற்படுபவர்கள்... அவர்களில் பெரும்பாலானவர்களிடம் அகந்தைச் சுவடே காணமுடியாது.... பலர் அங்கே தவணை முறையில் தியானம் செய்து கொண்டுதான் இருப்பர்... எப்போதும் யாராவது குறைந்தபட்சம் ஐந்து பேராவது ஆசிரம தியான அறையில் அமர்ந்து தியானித்துக் கொண்டே இருப்பார்கள்...

 அப்படிப்பட்டவர்களிடம் அடைக்கலம் புகுகிறாள் சகுந்தலா. அப்போது வலியப் போய் சுவாமி ஒருநாள் சகுந்தலா கனவில் சென்று... "நீ எதற்கு வருத்தப்படுகிறாய்? உன்னுடைய விதவைக் கோலத்தை நான் எடுத்துக் கொண்டுவிட்டேன்! இனிமேல் நீ மஞ்சள் புடவை அணிந்து நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.. தலையில் கனகாம்பரம் சூட்டிக் கொள்ள வேண்டும்... இன்றிலிருந்து நீ சுமங்கலி...உன் பெயர் நித்ய கல்யாணி!" என்கிறார்! ஏதோ கனவென்று விட்டுவிட்டார் சகுந்தலா... ஏதோ கனவல்ல... சாதாரண நிகழ்வல்ல... பெரும் சீர்திருத்தம் அது... தாலி மட்டுமே கணவன் சூட்டுவது... பூவோ பொட்டோ சிறுவயதிலிருந்தே பெண்கள் சூடிக் கொள்வது... குழந்தை விவாகம் புரிய வைத்து...கணவன் தவற... கதறி அழும் படி சிறுமிகளை மொட்டை அடிக்க வைத்த சமூக அவலங்கள் எல்லாம் கடந்து வந்திருக்கிற பூமியில்... சுவாமி அந்தக் கனவில் அறிவுறுத்தியது மாபெரும் மறுமலர்ச்சி மொழிகள்! அதே கனவு சகுந்தலாவின் தாய்க்கும் நிகழ்கிறது... தாயே சொல்ல.. தனக்கும் வந்ததாக சகுந்தலா காட்டிக்கொள்ளவில்லை... அதைக் கண்டு கொள்ளவுமில்லை... "இனிமேல் என்ன இருக்கிறது வாழ்வில்...!" எனும் அங்கலாய்ப்பு! சகுந்தலாவின் மகளுக்கும் அதே கனவு.."என்ன உன் அம்மா.. நான் சொல்வதையே கேட்க மாட்டேன் என்கிறாளே!" என சுவாமி பகர.. சுவாமியிடமே விளக்கம் கேட்டு விடுவோம் என புட்டபர்த்தி விரைகிறார் சகுந்தலா... தரிசன வரிசையில் காத்திருக்கிறார்...

 ஆரஞ்சு சூரியனாய் கனியக்கனிய சுவாமி நடந்துவர... சகுந்தலாவின் கைக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டு.. அவளையே உற்று நோக்கியபடி "நீ நித்ய கல்யாணி" என்கிறார் சுவாமி... அப்படியே உறைந்து பேரன்பில் கரைந்து கடிகார காலங்கள் உறைய மெய்மறந்து போகிறார்... பிறகு கடைக்குச் சென்று மஞ்சள் புடவை / கனகாம்பரப் பூ சகிதமாக மாலை தரிசனத்தில் விதவையான சகுந்தலா சுமங்கலியாக மாறிவிடுகிறார்..

சுவாமி அவளைப் பார்த்து ஒரு புன்னகை புரிகிறார்... அந்தப் புன்னகையில் மங்களம் ததும்பத் ததும்பப் பொங்கி வழிகிறது!


(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -1 / பக்கம் 17 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


சுவாமி இப்படி பல்வேறு மறுமலர்ச்சியை ஆன்மீகத்திலும் - லௌகீகத்திலும் புரிந்திருக்கிறார்! அக மலர்ச்சியையே புரியும் சுவாமிக்கு சமூக மறுமலர்ச்சியை புரிவதொன்றும் அத்தனை சிரமமில்லை தான்! பெரும் மகானான ஸ்ரீ ரமண மகரிஷி பக்தர்களே தியான சாதனை பழகுகிற போது பரப்பிரம்ம சுவாமியின் பக்தர்கள் நாம் அதை அன்றாடம் கடைபிடிக்கவே வேண்டும்! பறவைகள் மட்டுமல்ல வடவிருட்ச அடிவாரத்தில் பக்தர்களும் திரள் திரளாய் வந்து குவிந்து ஆத்ம சாதனை பழக வேண்டும்! காரணம் அதால் மட்டுமே அக மலர்ச்சியை நமக்குள் ஏற்படுத்த முடியும்... அக மலர்ச்சி ஏற்படும் போதே சமூக மறுமலர்ச்சி தானாக மலரும்!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக