கடந்த ஒரு வருடமாகவே ஆந்திர அரசு ஆலோசனை செய்து... இப்போது இறுதிகட்ட அமைச்சரவை ஒப்புதலுடன் வருகின்ற தெலுங்குப் புத்தாண்டு தினமான(ஏப்ரல் 2) யுகாதி அன்று சுவாமி சங்கல்பத்தோடு உதயமாக இருக்கிறது ஸ்ரீ சத்யசாயி மாவட்டம்! ஒரு பேரவதாரத்தின் பெயரில் தனி மாவட்டம் ஒன்று உருவாக இருப்பது இதுவரை இல்லாத, ஒரு முதல் முயற்சியாகும்...
தற்போதைய 13 மாவட்டங்கள் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தை, நிர்வாக மேம்பாட்டுக்காக, 26 மாவட்டங்களாக
பிரிக்க, திரு. ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு இந்த முடிவை 42 ஆண்டுகளுக்கு பிறகு எடுத்துள்ளது. 27/01/2022 செவ்வாயன்று அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, இந்தப் புதிய மாவட்டங்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஆந்திர மாவட்டங்கள் உருவாக்கும் சட்டம், பிரிவு 3(5)ன் கீழ் இந்தப் புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இது இவ்வாண்டு ஏப்ரல் 2ம் (யுகாதி) நாளன்று செயலாக்கம் செய்யப்படுகிறது.1979 விசாகப்பட்டினம் தனி மாவட்டமாக பிரிந்ததற்குப் பிறகான விரிவாக்கம் இது!!
🌹ஸ்ரீ சத்யசாயி மாவட்டம் -புட்டபர்த்தி:
அன்னையின் ஆணை ஏற்று,
மண்ணில் தம் அவதார கேந்திரமாக
சுவாமி தேர்ந்தெடுத்த, விண் நிகர் புட்டபர்த்தி இப்போது ஒரு தனி மாவட்டமாக உதயமாகப் போகிறது. இதற்காக அனந்தபூர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அனந்தபூரை தலைநகராகக் கொண்டு அனந்தபூர் மாவட்டமும், புட்டபர்த்தியைத் தலை
நகராகக் கொண்டு, ஸ்ரீ சத்ய சாயி மாவட்டமும் உருவாகின்றன. அதேபோல் திருமலை வாசன், திருமகள் நேசன்திருப்பதி பாலாஜியின் பெயர் சொல்லும் 'ஸ்ரீ பாலாஜி மாவட்டம்' என்ற மாவட்டமும் உருவாகின்றன.
ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் பிரிப்பதற்கான - ஆந்திரப் பிரதேச அரசிதழ்
17.22 லட்சம் மக்கள் தொகை கொண்டு, 7, 721 கிலோமீட்டர் பரப்பளவில் உருவாகும் ஸ்ரீசத்யசாயி- புட்டபர்த்தி மாவட்டம், பர்த்தியின் புது விலாசம் அல்ல. பரந்த நெடும் புகழுடைய பகவானின் புகழோடு தம்மையும் அடையாளம் சேர்க்கும் அரசின் நல் முயற்சியே இது!
ஆந்திரப் பிரதேச அரசு புட்டபர்த்தியை தலைமையிடமாகக் கொண்டு, 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் (மடகாசிரா, இந்துப்பூர், பெனுகொண்டா, தர்மாவரம், புட்டபர்த்தி மற்றும் கதிரி) அடங்கிய மறுசீரமைப்பில் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தை உருவாக்கியுள்ளது. புட்டபர்த்தி, பெனுகொண்டா மற்றும் கதிரி ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் இருக்கும் 29 வருவாய் மண்டலங்கள் (பெனுகொண்டாவில் 13, கதிரியில் 8 மற்றும் புட்டபர்த்தியில் 8) இந்த புதிய மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும்.
'ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம்' வருகின்ற உகாதி நன்னாள் ஏப்ரல் 2, 2022 முதல் செயல்படும்!!
தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டான உகாதி நன்நாளான வருகின்ற ஏப்ரல் 2, 2022 முதல் அதிகாரப்பூர்வமாக 'ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம்' செயல்படும் என்பதை ஆந்திர அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைக்கு மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் தற்காலிக கட்டிடங்களில் செயல்படும். 100 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடத் தொகுதியை ஓராண்டுக்குள் அரசு கட்டி முடிக்கவுள்ளது. இந்த இடமானது சுவாமியின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சிறிது தூரத்திலும், புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயி ரயில் நிலையத்திற்கு அருகிலும் அமைந்திருக்கிறது.
அதேபோல் சுவாமியின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் தொடங்கி பிரசாந்தி நிலையம் வரை முன்பிருந்தபடி முழுவதும் 🛕Temple Zone (கோவில் மண்டலம்) ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் அரசியல் கூட்டங்கள், சாலை முற்றுகைப் போராட்டம், அசைவ உணவு விற்பனை, அரசியல் தலைவர்களின் சிலைகள் அமைப்பது, மது விற்பனை மற்றும் சினிமா போன்றவை கண்டிப்பாக தடை செய்யப்படும்.
தொகுத்தளித்தவர்: திரு, குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக