தலைப்பு

திங்கள், 17 ஜனவரி, 2022

தசாவதார தனித்துவமும்... ஸ்ரீ சாயி அவதார மகத்துவமும்!


முதன்முறையாக விஞ்ஞான மெய்ஞான பார்வையில் ஆழ அகலத்தோடு ஆராய்ந்து அனுபவிப்பதற்காக தெள்ளத்தெளிவான சுவாரஸ்ய பதிவாக தசாவதார தனித்துவமும்... கல்கி அவதாரம் மூன்றாக பிரிந்ததற்கான சூட்சும ரகசியமும் இதோ...!


இறைவன் இருக்கிறானா?

இறைவன் ஒருவன் இருக்கிறானா? அவனை ஏன் ஒருவன் என அழைக்க வேண்டும்? இறைவனும் இறைவியும் வேறு வேறா? என்பது அனைவருக்கும் எழும் சந்தேகம். பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பே ஒரே ஒரு பேராற்றல் அத்தனையும் படைத்தது.. ஒரே மின்சாரம் அனைத்து மின்சாதனங்களையும் இயக்குவது போல்...அந்த மாபெரும் பிரபஞ்ச இயக்கப் பேராற்றலே இறைவன்!  ஆரம்பத்தில் இறைவனுக்கு உருவமே இல்லை..  மனிதர்களோடு தம்மை தொடர்பு படுத்தவே இறைவனுக்கு உருவம் தேவைப்பட்டது. 

எப்படி விதையிலிருந்து எழும் கனி சுமக்கும் மரம் தனது கனிகளில் அதே விதையை சுமக்கிறதோ.. அப்படியே இறைவன் உலகைப் படைத்து தன்னையே அதில் விதையாக மறைத்து வைத்திருக்கிறான். ஆக இறை அம்சமே அனைத்தும்.


அவதாரம் எதற்காக?

மனிதனோடு இறைவன் தன்னை தொடர்பு படுத்த இறைவனுக்கு மனித உடல் தேவைப்படுகிறது. காரணத்தோடே அதிலும் இறை பூரணத்தோடே இறைவன் மண்ணில் இறங்குகிறான். இறங்குதல் என்பது அவதாரம். விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்குவது. இறங்குவது இயங்குவதால் நேர்கிறது.. அது இரங்குவதால் தான் மனித இதயத்தில் பெரிதும் சேர்கிறது. அப்படி இறைவன் எடுத்த பிரதான அவதாரம் பத்து. 

உலகம் தோன்றிய காலம் முதல் பரிணாம வளர்ச்சியை கணக்கிட்டு அதனுடைய படிநிலையை தசாவதாரம் பிரதிபலிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

தசாவதாரம் அதனுடைய தாத்பர்யம் என்னவென்று சுறுக்கமாக ஆராய்வோம்!!



1) ஸ்ரீ மச்சாவதாரம்

2) ஸ்ரீ கூர்மாவதாரம்

3) ஸ்ரீ வராக அவதாரம்

4) ஸ்ரீ நரசிம்ம அவதாரம்

5) ஸ்ரீ வாமன அவதாரம்

6) ஸ்ரீ பரசுராம அவதாரம்

7) ஸ்ரீ ராம அவதாரம்

8) ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்

9) ஸ்ரீ புத்தாவதாரம்

10) ஸ்ரீ கல்கி அவதாரம்



புராணங்களில் இது கிருத யுகத்தில் சம்பவித்ததாக கூறப்படுகிறது. குதிரை முகம் கொண்ட சோமுகாசுரன் வேதங்களை பிரம்மாவிடமிருந்து திருடி கடலுக்கடியில் வைத்து விடுகிறான். பிரளயம் ஏற்படுகிறது. அதை மீட்பதற்காக சுவாமி மீன் வடிவில் இறங்கி வந்து வேதங்களை மீட்கிறார். 


வேதநாராயண கோயில், நாகலாபுரம்

வேத நாராயணன் என்ற பேர் கொண்ட திருக்கோவிலும் (திருப்பதி தென்கிழக்கே 70 கிலோமீட்டர் தூரத்தில் நாகலாபுரத்தில்) இன்னமும் மச்சாவதாரத்தை நினைவுறுத்துகிறது. விஞ்ஞானிகள் உயிரினங்களின் முக்கிய துவக்கத்தை மீனிலிருந்து ஆரம்பிக்கிறார்கள். அமீபா என்பது நுண்ணுயிர் என்பதால் மீனே அவர்களுக்கு எடுத்துக் காட்டாகிறது. 

வேதங்களுக்கு ஆபத்து சுவாமி இறங்கி வருகிறார். பிறகு வேதங்கள் உணர்த்துகிற தர்மங்களுக்கு ஆபத்து சுவாமி மீண்டும் இறங்கி வருகிறார். மீனுக்கு அழுக்கு படிவதே இல்லை .. மிக சுத்தமாக இருக்கிறது. சுத்தமான இதயத்தை சுவாமி வாகனமாக தேர்த்தெடுக்கிறார் என்பதற்கான உருவகமாகவும் இதன் தாத்பர்யத்தை உணரலாம்! இதை விஞ்ஞானிகள் உயிர்ப் பரிணாமத்தின் துவக்கமாகவும் பார்க்கிறார்கள்!


இதுவும் கிருத யுகத்தில் சம்பவிக்கிறது. 

தேவர்களும் அசுரர்களும் அமுதத்திற்காக வாசுகி பாம்பை கயிறாக .. மந்தர மலையை மத்தாக பாற்கடலை கடைகிறார்கள். பாரம் தாங்காது அப்போது மலை சரிகிறது. அதை தாங்குவதற்காக சுவாமி ஆமையாக அதன் பலுவை தோளில் தாங்க கூர்வமாவதாரம் எடுக்கிறார். பக்தர்களை மட்டுமல்ல பக்தி சூழ்நிலையை சுவாமியே காப்பாற்றி வருகிறார்.. ஆமை அதிக ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய ஜீவன்... எப்படி ஆமையின் முதுகு ஓடு ஆமையைக் காப்பாற்றுகிறதோ அதே போல் சுவாமியின் கருணை இந்த பிரபஞ்சத்தையே ஒரே லய விசையில் காப்பாற்றுகிறது! குகைக்குள் ரிஷிகள் இருப்பது போல் ஆமை அந்த ஓடுகளுக்குள் தனது பாதுகாவலை உணர்கிறது... 


கூர்மநாதசுவாமி கோவில், ஸ்ரீகா குளம்

ஆந்திரா- ஸ்ரீகா குளம் - 20 கி.மீ அருகே ஸ்ரீ கூர்மநாதரின் கூர்மம் எனும் இடம் கூர்மாவதாரத்தின் திருசாட்சியாக திகழ்கிறது! மீனுக்குப் பிறகான உயிர்ப் பரிணாமம் இது என விஞ்ஞானிகள் பார்க்கிறார்கள்!



இது சுவாமியின் மூன்றாவது திருஅவதாரம். கிருத யுகம். இரண்யாட்சன் எனும் அசுரன் பிரம்ம தேவரிடமிருந்து பெற்ற வலிமையால் உலகங்களை அடக்கி ஆண்டு‌... ஆணவம் தலைக்கு ஏற பூமியை கடலுக்கடியில் மறைத்துவிடுகிறான்... தெய்வத்தின் கருணை வரத்தை அசுர குணம் இப்படியே தவறாக உபயோகப்படுத்தும்... அது இன்றளவும் தொடர்கிறது... பிரம்மா படைப்பாற்றலின் (creativity ) வடிவமானவர்... அந்த படைப்பாற்றலிடம் இருந்து பெற்ற கருணை வரத்தை எப்படி இன்றளவும் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள் என்பது இப்போதும் கண்கூடு! அது எப்படி பூமியை கடலுக்கடியில் மறைத்து வைக்க முடியும்? பூமிக்குள் தானே கடலே இருக்கிறது என சிலர் சாமர்த்தியமாக கேள்வி கேட்டு விட்டோம் என்பதாக நினைக்கிறார்கள்... கிணற்றுத் தவளைகளுக்கு கிணறே உலகம். பூமியை கடலுக்குள் மறைக்கிறான் என்றால் அது பூமிக்குள் இருக்கும் கடல் அல்ல.. பூமி மட்டுமே ஒரே ஒரு கிரகம் அல்ல என்பதை புரிந்துணர வேண்டும்! 1000 வருடம் போர் நிகழ்கிறது... போரில் வென்று சுவாமி பன்றியின் உருவத்தில் பூமியை தனது கொம்பால் மீட்டெடுத்து வருகிறார்...! இதிலிருந்து என்ன உணர முடிகிறது? என்ன ஒரு இன்னல் நேர்ந்தாலும் அதைக் களைய... சிக்கலை அவிழ்க்க...மீட்பதற்கு எந்த ஒரு வடிவத்தையும் சுவாமியால் எடுக்க முடியும் என்பதே... உயிரினங்களைப் படைக்கும் சுவாமி எனும் பேராற்றல் தனது உயிரின வடிவங்களையும் எடுக்க முடியும் என்பதை நாம் உணர வேண்டும்! அது தான் இறைப் பேராற்றல்!! 

அருள்மிகு ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி

திருநெல்வேலி - கல்லிடைக்குறிச்சி - லட்சுமி வராக பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீஆண்டாளின் ஸ்ரீவில்லிபுத்தூர் வராக ஷேத்ரமாக போற்றப்படுகிறது! மூன்றாவது உயிரின பரிணாமமாக விஞ்ஞானிகளும் பார்க்கிறார்கள்.. முதலில் நீர்.. பிறகு நீரும் நிலமும்...அடுத்து நிலம் வாழ் உயிரினமான வராகம்! 



மனித பரிமாணத்தில் ஒரு வகையாகவும் நரசிங்க ரூபத்தை பார்க்கிறார்கள் விஞ்ஞானிகள்! ரஜோ மற்றும் சத்வ குணத்தின் கலவையான அவதாரம்! 

இரண்யகசிபு முன்னே பார்த்த இரணாயாட்சன் சகோதரர் தான். பிரம்மா வரம். தானே கடவுள் எனும் அகந்தை. அவனின் மகன் பக்த பிரகலாதன். தந்தை அசுரன் மகன் பக்தன். எந்த தந்தையைப் போலவும் எந்த மகனும் இல்லை என்பதை முதலில் நிரூபித்த புராணமிது! தந்தையே மகனை சித்ரவதை செய்கிறார் தன்னை கடவுளாக வணங்கும் படி.. எந்தக் கடவுளாவது தன்னைத் தான் வணங்க வேண்டும் எனச் சொல்வாரா? அப்படி சொல்பவர் கடவுளா? அகந்தைக்குப் புரியவில்லை... அகந்தைக்கு எது தான் புரிந்திருக்கிறது? இது புரிய! "ஓம் நமோ நாராயணாய" இது தான் சத்தியம். இந்த சத்தியத்திலேயே நிலைக்கிறான் பிரகலாதன். அவன் போல் இறை பக்தியை இதுவரை எவரும் அடைந்ததில்லை... சித்ரவதையிலும் நிறம் மங்கா பக்திச் சித்திரமாய் ஜொலிக்கிறான் பிரகலாதன்.. நாம் சாதாரண துயரத்திற்கே கடவுளே உனக்கு கண்ணே இல்லையா எனப் புலம்புகிறோம்! தந்தை சொல் தவறாக இருந்தால் அது மந்திரமே இல்லை எனப் புரிய வைத்தவர் பிரகலாத மூர்த்தி. சுவாமி எல்லா இன்னலிலிருந்தும் தனது குழந்தை பிரகலாதனை மீட்கிறார்... விஷப்பால் அருந்துகிறான்... சுவாமி உயிரை மீட்கிறார்.

 தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என பிரகலாதன் சத்தியத்தை எதேர்ச்சையாக சொல்ல... இரண்யகசிபு தனது மரணத்தை தானே உடைத்து வெளியே வரவிடுகிறான்.. அவன் கேட்ட வரம் போலவே மனிதனும் இல்லை மிருகமும் இல்லை.. காலையும் இல்லை இரவும் இல்லை... ஆயுதங்கள் இல்லை... நரசிங்கம்- மாலை நேரம்- நகம் இது தான் இரண்யகசிபுவை கொன்ற மார்க்கம்! மனிதன் புத்திசாலி என தன்னை நினைத்துக் கொண்டால்... சுவாமி உண்மையிலேயே அதிபுத்திசாலி.. சுவாமியின் திருநகர்வை ஒரு மனிதன் கூட முன்கணிப்பு செய்ய இயலாது என்பது இரண்யகசிபு வாழ்க்கையே சாட்சி!

அது கிருத யுகம். அஹோபில மலை அந்த அவதார விஜயத்தை தனது சிகர முதுகில் சுமந்து கொண்டு வருகிறது! நரசிம்ம சுவாமிக்கு ஏராள ஷேத்ரங்கள். யோக நரசிம்மர்- லட்சுமி நரசிம்மர் என 9 திருவடிவ சுவாமியின் பிரத்யட்ச இறை ரூபம் ஸ்ரீ நரசிம்மர். சுவாமியை ஸ்ரீ நரசிம்ம வடிவமாக வழிபடுவதில் இதயத்தில் பாதுகாப்புப் பேருணர்வு பொங்கி வழிகிறது!


அது திரேதா யுகம். ஸ்ரீ நரசிங்க அவதாரத்தில் தானே கடவுள் என்ற மனிதனின் அகந்தையை அழிப்பது... ஸ்ரீ வாமன அவதாரத்தில் தானே உயர்ந்த அரசன் எனும் மனித அகந்தையை அழிப்பது‌... அந்த ராஜ அகந்தை மகாபலி சக்கரவர்த்திக்கு இருந்தது... தானம் செய்து கொண்டிருந்தான்... எப்படி மனிதனுக்கு சேவை செய்வது அறமோ அப்படி அரசனுக்கு தானம் செய்வது அறம்.. தன்னைப் போல் ஒருவனும் இல்லை சேவையாற்ற.. எத்தனை ஆண்டுகளாக எவ்வளவு சேவை செய்திருக்கிறேன் தெரியுமா? என எப்படி சேவையே மனிதனுக்கு அகந்தையையும் அளிக்கிறதோ அப்படி தானமும் அகந்தையை மகாபலிக்கு அளிக்கிறது...!  ஆகவே சுவாமி திருவிக்ரமனாக வாமன வடிவில் கையில் குடை வைத்துக் கொண்டு அந்தணர் தோற்றத்தில் வருகிறார்... அந்தணர்களுக்கு அரசன் தானம் அளிப்பது அறம்/ வரம். என்ன வேண்டும் என கேட்க? மூன்றடி எனக் கேட்கிறார் சுவாமி... ஆ ஆ ஆ வென சிரிக்கிறான் மகாபலி...ஆபத்து! வேண்டாம் என தடுக்கிறார் அவன் குருவான சுக்ராச்சார்யார். அகந்தைக்கு எப்போதும் கண்ணும் தெரியாது... காதும் கேட்காது...! மகாபலி தானம் அளிக்க உத்தரணி நீரை எடுக்க.. சுக்ராச்சார்யர் வண்டின் வடிவமாய் அந்த நிகழ்வை தடுக்க.. வாமன சுவாமி தர்ப்பைப் புல்லால் நீர் வடியும் துவாரத்தை குத்த.. சுக்ராச்சார்யார் தனது ஒரு கண்ணை இழக்கிறார்... அகந்தைக்கு ஆதரவாக இருந்து கூஜா சுமந்தால் இது தான் கதி! ஒரு அடிக்கு மண்ணும் மறு அடிக்கு விண்ணும் இன்னொரு அடி எங்கே வைப்பதென விஸ்வரூப வடிவத்தில் சுவாமி கேட்கிறார்...! அகந்தை சுக்கல் நூறாக உடைகிறது... நீ யார் என் பூமியை தானம் அளிப்பதில் திமிர் அடைய என்பதே சுவாமி வாமனனாய் வந்த தாத்பர்யம்..! இந்த உலகில் எதுவும் மனிதனுக்கு சொந்தமில்லை... எந்த ஒரு தூசியும் அவனால் காப்புரிமையாக கொண்டாட முடியாது... மனிதன் வெறும் பூமிக்கு வந்து போகும் சுற்றுலாப் பயணியே என்பதை உணர்கிறான் மகாபலி. மூன்றாவது அடிக்கு தனது தலையை தாழ்த்துகிறான்... சுவாமி அவனை பாதாள உலகம் அனுப்புகிறார். 

வருடம் ஒருமுறை தனது பிறந்தநாளுக்கு தனது ஜீவித பூமியான கேரளத்திற்கு வந்து போகிறார். அவரை வரவேற்க பூக்கோலம் ஓணமாகிறது! திரிக்காட்கரை வாமன ஷேத்ரம், கேரளா மற்றும் காஞ்சிபுரம் - வாமனர் கோவிலும் அவதார சாட்சியாகவும் திகழ்கிறது! மனித பரிமாணத்தின் குழந்தை வாமனர் என விஞ்ஞானிகள் பார்க்கிறார்கள்!



அது திரேதாயுகம். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாதேவிக்கும் மகனாக அவதரிக்கிறார் ஸ்ரீ பரசுராமர். கேரள ஷேத்திரத்தை சிருஷ்டித்தவர். வானில் உலவிய யௌவனர்களை கண்டு தாயின் சிந்தை பிறழ மண் குவித்து குடமாக மாற்றும் ஆற்றல் போய்விட... பூஜைக்கு வெறும் கையோடு வரும் மனைவியின் மனநிலை உணர்ந்து மகனையே தாயின் தலையை துண்டிக்கச் சொல்கிறார். அது வெளிப் பார்வையில் தவறாயினும் துறவற வாழ்வில் மனப் பிறழ்வு பாவமே! அதற்கான தண்டனை அளிக்கப்படுகிறது.. தந்தை சொல்லை தட்டாத பிள்ளையான சுவாமி தாயின் தலையையே துண்டிக்கிறார்... இதில் சுவாமிக்கு தாய் மீது கூட பற்றில்லா துறவறத்தை உணர முடிகிறது... தவறு யார் செய்தாலும் தவறுதான் எனும் நேர்மை ஊர்ஜிதப்படுகிறது! மனிதனுக்கு அவ்வளவு சீக்கிரம் பற்றற்ற இந்த மனநிலை வாய்ப்பதில்லை... காமதேனு எனும் அருட் பசுவை கவர்ந்து போய் தனது தந்தையை அவமானப்படுத்தியதில் சிவபிரான் அளித்த பரசுவால் (கோடரி) ஷத்ரிய வம்சங்களின் அகந்தையையே அழித்தவர் தான் வீரதீர ஸ்ரீ பரசுராம அவதாரம். 

அருள்மிகு ஸ்ரீ பரசுராமர் திருக்கோவில்,  கேரளம்

கேரள பரசுராம ஷேத்ரம் மிக விசேஷமானது... கன்னியாகுமரி கோவிலில் நீலநிறக் கல்லில் ஸ்ரீபரசுராம அவதாரம் மிளிர்கிறது! மனிதனின் சாந்த நிலைக்கு முந்திய ரஜோநிலையாக மெய்ஞானமும்... கோபம் மிகுந்த மனித பரிமாணமாக மனோ தத்துவமும் பார்க்கிறது!


அதே திரேதா யுகம்.. ஸ்ரீ ராமருக்கும் ஸ்ரீ பரசுராமருக்கும் ஒரு குண ஒற்றுமை உண்டு... அது தந்தை சொல்லை மதித்து அதன் படி செயல்பட்டதே!! மற்றபடி பரசுராம சுவாமி அதிக கோபக்காரர்... எள் என்றால் எண்ணையாகிவிடுவார். கனி வேண்டும் என்று கேட்டால் கிளையோடு ஒடித்துத் தந்துவிடுவார்.. ஆனால் ஸ்ரீ ராமரான சுவாமி சாந்த ஸ்வரூபி! எள் என்றால் எள்ளாகத் தான் இருப்பவர். கனி வேண்டும் என்றால் அந்த இனிக்கும் கனிக்கும் கிளைக்கும் வலிக்காதபடி தான் பறித்துத் தருபவர். ஆகையால் தான் இன்று போய் நாளை வா என அவரால் சொல்ல முடிந்தது. காட்டில் வெறுங்காலோடு எப்படி நடப்பது..? ராஜ்ஜியத்தை அவன் தாய் கேட்டாள்.. இருக்கிற ஒரே பாதுகையையும் படுபாவி அந்த பரதன் கேட்கிறானே என்றெல்லாம் நினைக்கவில்லை... மனிதனுக்கு தேவையான நேர்மறை சிந்தனையோடு கூடிய அன்பை உணர்ந்து அதையே தனது வாழ்வாய் உபதேசித்தவர் சுவாமி. சீதையைப் பிரிந்து ஒரு கணவராக அழுதார் அலைந்தார்... அது சீதா ராமன்... தன் மனைவி மேல் தனது பிரஜையான ஒரு துணி துவைப்பவர் பழி சுமத்த தனது பிரஜையை சிரச்சேதம் செய்யாமல் மனைவியையே காட்டுக்கு அனுப்பியதால் அவரே ராஜா ராமர். இப்படி ஒரு அரசர் இன்றளவும் இந்த மண்ணில் இல்லை...! ஒருவனுக்கு ஒருத்தி அது தமிழ் மரபு.. அதை கடைபிடித்த ஒரே அரசர் சுவாமி... தமிழ் மரபை கடைபிடித்தவர் தமிழரின் அவதாரமே என சூசகமாக தனது வாழ்வியலால் உணர்த்துகிறார். மனிதன் எப்படி வாழ வேண்டும்? ஒரு அரசன் எப்படி அரசாள வேண்டும்? என இன்றளவும் உயிர்ப்போடு இருக்கின்ற ஒரே அவதாரம் ஸ்ரீ ராமர். 


தனது பெயரையே முக்திக்கான மந்திரமாக்கியவர் பாயாசத்தில் உதித்த பரம்பொருள் சுவாமி. பாகற்காயில் உதிக்கவில்லை பாயாசத்தில் தான் உதித்தார் என்பதால் அவரின் குணம் முழுக்க இனிமை...! மேலும் விவரிக்க ஆரம்பித்தால் பக்தி உணர்வு கொப்பளிக்க சம்பூர்ண ராமாயணமே பதிவாகிடும் என்பதால் ஸ்ரீராம ஜெயம் என சொல்லி நிறைவு செய்கிறேன்! அயோத்தி முதல் ஸ்ரீ ராமர் பாலம் வரை பாரதம் முழுக்க ஸ்ரீ ராமரின் தேசமே... ஸ்ரீ ராமராஜ்யமே உலகை ஆளட்டும்!! சாயி ராம்!!

ஒரு முழு மனிதனின் வடிவமே ஸ்ரீ ராமசுவாமி! அதையே தான் ஆன்மீக விஞ்ஞானமும் பார்க்கிறது! 


அவதாரமும் எட்டு... அவதரித்த குழந்தையும் எட்டாவது... அஷ்டமி.. எட்டின் (8) வடிவத்தில் ஒரு சுவாரஸ்ய சூட்சுமம் இருக்கிறது.. அதை எப்படி சுழிக்க ஆரம்பிக்கிறோமோ அந்தப் புள்ளியிலேயே..அந்த சுழிக்கிற இடத்திலேயே அந்த வட்டம் நிறையும்! ஆம்...! எல்லாம் எங்கிருந்து தொடங்குகிறதோ அங்கேயே நிறைந்து போகிறது என்பதை உணர்த்துகிற எண் 8. 

முதன்முதலில் மேன்மனிதனை (Super Human) பற்றி உணரப்பட்ட யுகம் துவாபர யுகம். முழுக்க முழுக்க ஆனந்தத்தின் அவதாரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி. சிறையில் முகிழ்த்த அகவிடுதலைக்கான அவதாரம் சுவாமி! சிறையிலிருந்து தான் விடுதலை என்பதால் சிறையிலேயே அவதரித்தார் சுவாமி. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல் சூதை சூதால் வென்றவர் சுவாமி. இன்று போய் நாளை வா என்ற கணக்கெல்லாம் அவரிடம் இல்லை... நேற்றே வந்து நீ அறியாமலேயே இன்றை எனதாக்கி நாளைக்கு உன்னை மறுநாளாக்கிவிடுவேன் எனும் சூட்சுமம் தான் ஸ்ரீ கிருஷ்ணராகிய சுவாமி. இராவணனை அழிப்பது தான் அப்போது இறுதிகட்ட காட்சி.. ஆனால் கம்சனை அழிப்பது வெறும் துவக்க காட்சியே...

கீதை என்பது உச்சபட்சம்.. தனது அவதார பேருண்மையை கீதையில் தான் வெளிப்படுத்துகிறார்...அதாவது தான் யார் என்பதற்கு முதலில் செயல்பாடே பிறகே அந்த செயல்பாட்டிற்கான போதனை! மனித மனம் முரண்பாடுகள் நிறைந்தது என்பதால் சுவாமி முரண்பாடாக தெரிகிறார். மாயை எப்போது விலகுகிறதோ அப்போதே சுவாமியின் அணுகுமுறை புரியும். சரணாகதி அடைந்தால் மட்டுமே காப்பாற்றுவேன் எனும் பக்திக் கோட்பாட்டை மனிதனுக்கு உணர்த்திய அவதாரம் இது. அதுதான் சரியும் கூட...மனிதனுக்கு மீசைக்கும் ஆசை... கூழுக்கும் ஆசை! ஒன்றை இழந்தால் தான் ஒன்று கிடைக்கும். கீழானவற்றை இழந்தால் மட்டுமே மேலானவை கிடைக்கும்! அகந்தையை விலக்க... அகந்தையைப் பிடித்திருக்கும் மாயை விலக வேண்டும்...அதை விலக்கி பிறகு கீதையாக விளக்கிய சாமர்த்திய சமர்த்தர் சுவாமி! இரண்டு கையையும் விரித்து தனது மானம் போனாலும் பரவாயில்லை என உயர்த்தியதால் மட்டுமே சுவாமி வஸ்திராபரணம் (ஆடைப் பொழிவு) நிகழ்த்தினார். ஒரு கையால் தடுத்து இன்னொரு கையால் கேட்டபோது அமைதியாகத் தான் இருந்தார் சுவாமி... இரு கைவிரிப்பின் மகத்துவ மனநிலையே சரணாகதி! 

சுவாமிக்கு 16000 மனைவி எல்லாம் இல்லை. ருக்மணி சத்யபாமா என இருவர் தான்! அந்த 16,108 பெண்களை சுவாமி சிறையிலிருந்து மீட்டவர்.. மீட்டு நற்கதி அளித்தவர். ஆயிரம் தாமரைகள் (7 வது சக்கரம்) 16 குணங்கள் என ஒன்றிணைந்து 16,000 மனைவிகள் என சுவாமிக்கு உருவகப்படுத்துகின்றனர். இங்கே மனைவி என்பதை 'இணைவு' என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்! குழந்தை சுவாமி கொண்டாடிய ராசலீலை என்பது பிரேம குறும்புகளே! மனிதனுக்கு காதல் என்றால் உடல் இச்சையே...தனது கற்பனையை இறைவனோடு பொருத்திப் பார்க்க முயற்சிக்கும் அறியாமையால் தான் பல்வேறு அபத்தங்கள் மனித ஏடுகளிலும் அரங்கேறுகின்றன... 

கோபியர்கள் கொண்டாடியது தாஸ பக்தியை... பக்தி என்பது உடல் உணர்வுக்கு அப்பாற்பட்டது...! இதை பக்தியே இல்லாது உடல் இச்சை மட்டும் உள்ள மனிதனுக்கு.. ஆம் காய்ச்சல் உள்ளவனுக்கு இனிப்பையே தின்றாலும் கசப்பே! ஆக பரயோக பரிபூரண அவதாரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி. மதுரா - பிருந்தாவனம்- உடுப்பி- பத்ரிநாத்- ஜகந்நாத் - பண்டரிபுரம் என ஆயிரம் கோவில்கள் - ஆயிரம் நிறுவனங்கள்... காற்றை எப்படி கைக்குள்/ ஒரு வட்டத்திற்குள் அடைக்க முடியாதோ அப்படியே சுவாமியையும்...தனது எல்லா கோவில்களுக்கும் நிறுவனங்களுக்கும் பொதுவானவர்... அதே சமயம் எதோடும் சாராதவர் சுவாமி! அது தானே கீதை மொழியும்...!


ஸ்ரீ நரசிம்ம மற்றும் வாமன அவதாரத்திலிருந்தே மனிதனோடு நேரடி தொடர்புக்கு வருகிறார் சுவாமி. அதற்கு முன்னர் அசுரரை அழித்து வேதத்தை மற்றும் பூமியை மீட்பதோடு... தேவர்களுக்கு உதவுவதோடு சரி! ஸ்ரீ நரசிம்மரும் ஸ்ரீ வாமனரும் அகந்தை அழிப்பிற்கான பிரவாகமாக தோன்றி அந்த அவதாரத்தை நிகழ்த்தி மறைந்தனர். மனிதனோடு மனிதராக வாழ்ந்தது முதன்முதலில் ஸ்ரீ ராமாவதாரமே... பிறகு மனிதருள் இறைவனாக வாழ்ந்தது ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்... பிறகு கலியில் உதித்த முதல் அவதாரம்... ஞான மீட்புக்காக உதித்தது ஸ்ரீ புத்தாவதாரம்... வேதம் வெறும் உச்சாடனத்திற்கானது அல்ல அது வாழ்க்கைக்கானது என்பதை வேதம் பற்றியே பேசாமல் வேதம் காட்டிய வாழ்க்கை பற்றி பேசிய உன்னத அவதாரம் புத்தர். வைதீகத்திற்கு எதிரானவர் என சிலருக்கு புத்தரை பிடிப்பதில்லை... புத்தர் வைதீகத்திற்கு எதிரானவர் அல்ல... வைதீகம் என்ற பெயரில் நடக்கிற வியாபாரத்திற்கும் போலித்தனங்களுக்குமே எதிரானவர்! மனம் போனபடி வாழ்ந்து இது தான் ஆன்மீக வாழ்க்கை என்றால் புத்தரல்ல போதிமரமே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும்... போலித்தனங்களை முதன்முதலில் கிழித்தெறிந்தவர் புத்தர். அவற்றை ஞானத்தால் வீழ்த்தினார்.. ஞானாயுதம் அவருடையது!  சடங்கு வெறும் வாகனம் மட்டுமே ஆத்மார்த்தமே ஞானம் என்பதை உணர்த்தியவர் அவர். அவரால் தான் தியானம் என்ற வார்த்தையே தவத்திலிருந்து புத்துயிர் பெற்றது... "ஆசையை துற‌.. வலியை ஏற்றுக் கொள்" என்கிறார் புத்தர். ஏற்றுக் கொள்ளும் தன்மையே ஞானம் என்பதை அறியாத காரணத்தினால் மனிதன் துயரப்படுகிறான் என்பதை கண்டறிந்து போதித்த மெய்ஞான விஞ்ஞானி புத்தர். 

நான் இஷ்டம் போல்தான் வாழ்வேன்...இறைவா நீ தான் காப்பாற்ற வேண்டும் எனும் கண்மூடித்தனமான அறியாமைக்கு எதிரானவர் அவர். புத்தர் ஒரு நெருப்பு... அவரிடம் எது அண்டினாலும் அவராகிவிடும்!! அதனால் தான் அவர் ஒன்பதாவது அவதாரம்... ஒன்பதோடு எதைப் பெருக்கினாலும் கூட்டு எண் ஒன்பதாகிவிடுகிறது! ஒன்பதோடு எதை சேர்த்தாலும் எது சேர்கிறதோ அதுவே கூட்டு எண்ணாய் சுயமாகிவிடுகிறது! பேரவதார ஸ்ரீ சத்ய சாயி சுவாமி மட்டுமே தசாவதார வரிசையில் முதன்முறையாக புத்தரை இணைத்தவர். யாரார் தசாவதாரம் என அவதாரத்திற்கு தெரியுமா? இல்லை மனிதனுக்கு தெரியுமா? என்கிற பேருணர்வது! சிலர் பலராமனே தசாவதாரங்களில் ஒருவர் என்கின்றனர். இல்லை அவர் ஆதிசேஷனின் மறு பிறப்பே... பாகவதமே தெளிவுபடுத்துகிறது அதை! ஆதிசேஷன் திரேதா யுகத்தில் இலட்சுமணனாக.. துவாபரத்தில் பலராமனாக பிறக்கிறார்கள். ஆக தம்ம பதம் தந்த புத்தரின் மேன்மை அத்தகையது! "உனக்கு நீயே ஒளியாக இரு!" என்கிறார் புத்தர். ஆத்ம சாதனையாலேயே ஞானத்தை அடைய முடியும்... பற்றுகளை விடு! என்கிறார். பற்றா? புத்தரா? யார் வேண்டும் என கலியுக மனிதனை கேட்கிறபோது.. பற்றே முக்கியம் புத்தர் அல்ல எனப் பற்றை துறக்காமல் புத்தரை துறந்ததால் ஏற்பட்ட பூலோக அவலமே மண்ணில் இப்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது!

புத்தரை முழுமையான ஒரு ஞானமாக மனோதத்துவமும்...ஞான மனிதனாக விஞ்ஞானமும்... தியானத் தந்தையாக ஆத்ம சாதகமும்... தியானத்தில் ஏற்படும் உள்உறைதலே "புத்தா புத்தா" என்று தான் அவரை துதித்து கொண்டாடுகிறது! உலகில் கடைசி தியான சாதகர் இருக்கிற வரை புத்தர் வாழ்ந்து கொண்டே இருப்பார்! அறிவிலிகளால் ஞானத்தை எதுவும் செய்துவிட முடியாது!!



சுவாமியே The BLITZ Interview September 1976ல் ஆசிரியர் கரஞ்சியா அவர்களுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கல்கி அவதாரம் மூன்றாகப் பிரிந்திருக்கிறது.. மூன்று அவதார வைபவமாக நிகழ்ந்திருக்கிறது என தீர்க்கமாய்ப் பேசுகிறார்...

அது எப்படி சாத்தியம் என யோசிக்கலாம்? வாமன - பரசுராம - ஸ்ரீராம இவை மூன்றுமே திரேதா யுகமதில் நிகழ்ந்தவை தான்! அப்படியே கலி யுகத்திலும் கல்கி அவதாரமான சாயி அவதாரங்கள் மூன்றாக நிகழ்கின்றன... இது 5000 ஆண்டுகளுக்கு முன்பே சுவாமியால் சங்கல்பிக்கப்படுகிறது. ஸ்ரீ பரத்வாஜ ரிஷிக்கு சுவாமி சிவபார்வதியாக சேர்ந்து அளித்த வரமும்...! ஆக... சுவாமியே கல்கி அவதாரம் மூன்றாகப் பிரிந்திருக்கிறது எனச் சொல்கிறார்... "சுவாமி வாக்கு சத்திய வாக்கு" ஆகவே பக்தர்கள் நாம் இதில் குழப்பமடையாமல் இருத்தல் அவசியம்... காரணம் ஆயிரம் கைகளோடு தான் சுவாமி அவதரிப்பார் என நாம் எதிர்பார்த்தால் அது நம் அறியாமையே...! அது யுகத்திற்கு தகுந்தாற் போலவே அவதாரங்களும் தங்களின் திருச்செயல்களை மாற்றிக் கொள்கின்றன... ஏன் நரசிம்மர் நகத்தால் கிழித்தார்... ஸ்ரீராமர் அம்பால் அழித்தார்... நகத்தையே பயன்படுத்திருக்கலாமே! இல்லை...! யுகத்திற்கு தகுந்தாற் போலவே அவதாரங்களும்... நோய்கள் எப்படியோ அப்படியே சிகிச்சை முறைகளும் என்பது போல்... அவதாரம் கலியில் அனைவரையும் அழிக்கப் புறப்பட்டால் ஒருவர் கூட மிஞ்சப் போவதில்லை... ஆக கலியுகத்தில் அழித்தல் அல்ல... அக மாற்றமே அவதாரம் எடுத்து வந்திருக்கிற ஆயுதம் என்பதை புரிந்துணர வேண்டும்... மனிதனின் யூகத்திற்கு எல்லாம் இறைவன் அவதரித்து வருவதில்லை... ரிஷிகளும் யோகிகளும் வேண்டிக் கொண்டார்களே அன்றி அவர்களே இன்ன வடிவத்தில் தான் இன்ன பெயரில் தான் பரப்பிரம்மம் இறங்கி வரவேண்டும் என நிபந்தனை இட்டதில்லை.... மனித நிபந்தனைகளுக்கும், யூகங்களுக்கும் அப்பாற்பட்டவர் சுவாமி!

 ஆக... குத்துயிரும் கொலை உயிருமாய் இழுத்துக் கொண்டிருக்கும் கலியுகத்தில் மூன்றல்ல மூவாயிரம் அவதாரம் எடுத்தால் கூட போதாதே சுவாமி என்றே சுவாமியிடம் சொல்லக் கூடிய அளவிற்கு மனிதன் சீரழித்து வைத்திருக்கிறான் பூமியை...

லௌகீகம் தான் கெட்டு போய்விட்டது என பார்த்தால்.. ஆன்மீகமும் அதற்கு மேல்... ஆணவம் - அதிகாரம் - வியாபாரம் - வஞ்சகம் இதே தான் இன்றைய ஆன்மீக உலகமும்... கலியில் மனித உடம்பின் ஆயுள் குறைவு... மிக அடர்த்தியான அதர்மங்களை ஒரு நூறு வருடத்தில் மாற்றி அமைப்பது சாத்தியமில்லாதது... காரணம் கலியுகத்தின் விசேஷ குணமே மனதை பிடித்தாட்டும் மகா மாயையே... அதனால் ஏற்படும் அதர்மங்கள் கடைசியாக பூமியை நச்சாக்குவதில் நிரம்பி... மனித துர்செயல்களின் எதிர்விளைவுகளை மனித இனமே அனுபவிக்கும்படியாக நேர்கிறது! 

கிருமித்தொற்றே தொன்று தொற்று நிகழ்வது போல் தன்னை புதுப்பித்துக் கொண்டு மனிதனை மறைமுகமாகத் தாக்குகிறது...! இப்படி ஒரு அழிவெல்லாம் எந்த யுகத்திலும் நிகழவில்லை... காரணம் பிற யுகங்களில் அதர்மங்கள் தன் கால்களை மட்டுமே நனைத்தன... கலியுகத்திலோ அதர்மங்கள் ஆழ மூழ்கி அவலப் பற்களை எடுத்து முத்துக்கள் என நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றன.

ஆக சுவாமி தனது அவதாரத்தை சிவ அம்சமாக ஷிர்டியில் ஆரம்பித்து மெதுவாக வேர் விடுகிறார்...! பிறகு சிவசக்தியாக நம் சுவாமி... சக்தியாக பிரேம சுவாமி. பூமி எதை இழந்து தவிக்கிறதோ அந்த உயிரூட்ட சக்தியே பிரேம சுவாமி! எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது இறை அகராதியிலேயே இல்லை.. அப்படி செய்வது மனித சுபாவமே... மலருக்கே வலிக்காமல் தேனை எடுப்பது போல் தான் சுவாமியின் செயல்பாடு... கொசு கடிப்பது போல் இரத்தம் உறிஞ்சுவது அல்ல...! மனிதன் மாயையால் மூச்சர்யர்ந்தே போயிருக்கிறான்.. தூக்கத்தில் நடக்கும் வியாதி போல் மனிதனின் செயல்பாடுகள்... அவனை தட்டி எழுப்பியாக வேண்டும்... ஒரு முறை அழைத்தால் எல்லாம் அவன் விழிக்கப் போவதில்லை என அறிந்தே... சுவாமி மூன்று முறை அழைக்கிறார்.. அந்த மும்முறை அழைப்பே மூன்று சாயி அவதாரங்கள்...! அக விழிப்பு சுலபமே ஆனால் மனிதன் புற மயக்கத்தில் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறான்... இது வெறும் மாயை என உணர வைக்க வேண்டும்! 

மனிதனுக்கான அவதார தயாரிப்பு ஸ்ரீ ஷிர்டி அவதாரம்... அவதார உபசரிப்பு ஸ்ரீ சத்ய சாயி அவதாரம்... அவதார ஸ்வீகரிப்பு ஸ்ரீ பிரேம சாயி அவதாரம்! ஸ்ரீ பிரேம சுவாமி அவதாரம் பற்றி சுவாமி முதன்முதலாக 06/07/1963 ல் உலகறியப் பேசுகிறார்... வரிசையாக சிவ-சிவசக்தி- சக்தி அம்சங்கள் என பரத்வாஜ முனிவரின் நிகழ்வை எடுத்துரைக்கிறார்!

சுவாமி வேறல்ல அவரின் துவாபர யுக அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் வேறல்ல என்பதற்கு அவரின் திருச்செயல்பாடுகளே உதாரணம்! சுவாமி தான் அவதரித்த குடும்பத்தோடு மட்டுமல்ல எதனோடும் சாராதவர். மனிதன் தான் சார்பு ஜீவன். மனிதனால் தனிமையாகவே வாழ முடிவதில்லை... தன் சுயத்தில் தான் நிறைந்து சுகிக்க முடியவில்லை.. அவதாரம் அப்படி அல்ல... அதிலும் சுவாமி பரிபூரண அவதாரம்! கடமையே கடவுள் என்கிறார் ஷிரடி சுவாமி... எல்லோருக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்கிறார் நம் சுவாமி. நீயே கடவுள் என்கிறார் பிரேம சுவாமி...! (ஆதாரம்: The blitz Interview - Sep 1976) எல்லோருக்குள்ளும் கடவுள் என்பதும் நீயே கடவுள் என்பதும் அகம்- புறம் சார்ந்தவை ஆயினும் ஏக ஒற்றுமை இரண்டுக்கும்... ஆக சுவாமிக்கும் பிரேம சுவாமிக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதை உள்ளார்ந்து உணர்ந்து கொள்ள முடிகிறது!

பால் வழிய வேண்டுமானால் பொங்கித் தான் வழிய வேண்டும்... அதே போல் தான் கலி அவலமும்... பெரும்புயலில் சிக்கிடும் பவ்ய நாணல் சேதாரம் இன்றி தப்பித்துக் கொள்கிறது... இறுமாந்த மரம் வேரற்று வீதியில் வீசப்படுகிறது... இதுவே தான் கலிப் புயலில் அடக்கமானவர் உன்னதம் அடைவர்... ஆணவத்தின் அச்சாணி கழற்றப்படும்... இதுவே இறை நெறி! சுவாமியின் இறுதி அவதாரமான ஸ்ரீ பிரேம சுவாமியோடு தான் கல்கி அவதாரம் மட்டுமல்ல தசாவதாரமே நிறைவாகிறது... அதுவே நிறைவு... அந்த நிறைவு மேன்மையை அளிக்கும்... அந்த நிறைவே ஆன்மீக உன்னதம் வழங்கும்...அந்த பிரேமையே பூமிக்கு புதுசக்தி அளிக்கும். "எது நலமில்லையோ அது முடிவல்ல" என்பது ஆங்கிலப் பழமொழி...அந்த நலத்திற்கு இறுதி அவதாரமான ஸ்ரீ பிரேம சுவாமி பிரகடனப்பட வேண்டும்!! 

வெண்குதிரையில் வாளேந்தி கல்கி வருவார் என்பதில் வெண்குதிரையும், வாளும் ஓர் உருவகமே! வெண்குதிரை பிரேம சுவாமியின் உடையைக் குறிக்கிறது... நம் சுவாமி பக்தர்ப் படையைக் குறிக்கிறது...வாள் என்பது கலியின் அவலத்தைக் குறிக்கிறது... அது அழிவுக்கான ஆயுதமே! 

"அய்யய்யோ இப்படி ஒரு பெருந்தொற்றா... முடக்கமா?" என மனித குலமே பீதியில் ஈரக்குலை நடுங்குகிறது.. "நீ தானே அதற்கு காரணம்.." என சுவாமி மனசாட்சி மொழியில் பேசுவது இன்னும் மனிதர் காதுகளிலேயே விழவில்லை!! 

பிரேம புறப்பாடு ஏற்படுகிற நொடியிலிருந்து பூமி தனது யுக விடியலுக்கான முதல் கிரணத்தை பேரன்போடு முத்தமிடும்!

மனிதனிடமிருந்து பக்தரை காப்பாற்றுவது ஒரு பணி எனில்...மனிதனிடமிருந்து இந்தப் பூமியை காப்பாற்றுவதும் முக்கிய பணியே... பிணி பனியாக விலகட்டும்...! பணி தர்மமாய் பவனி வரட்டும்!! 

பிரேமம் - தர்மம் - புனருத்தாரணம்

அவதாரம் நிறையும்...!!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக