தலைப்பு

வெள்ளி, 28 ஜனவரி, 2022

பூட்டியிருந்த பக்தர் வீட்டில் பசுவுக்குப் பிரசவம் பார்த்த ஸ்ரீ சத்ய சாயி கோபாலன்!

சுவாமி அனுதினம் ஆற்றிவரும் நூதன அற்புதங்கள் ஏராளம்... அதில் ஒரு பசு லீலை... அதனை ஆரக் கதம்பாய் தொடுத்து சுவாரஸ்ய மகிமையை சைதன்ய நறுமணத்தோடு அரங்கேற்றுகிறோம் இதோ...


அது ஒரு சுவாமி பக்தர் குடும்பம். பசு வளர்த்து பராமரிக்கிறார்கள். அப்படி ஒரு சமயத்தில் பசு கருவுற்றிருக்கிறது... பசுக்களே ஜீவன்களில் சாத்வீக குணம் மிகுந்த ஜீவன்... தியானம் செய்யும் இடங்களில் யோகிகள் பரிந்துரைப்பது பசுவின் தொழுவம்... யானை வசிக்கும் கோவில் இடம்... கடற்கரை... நீர் சுனை இருக்கும் மலை குகை... நிசப்தமான அடர் காடுகள்... இவை எல்லாம் நேர்மறை அதிர்வலைகள் நிரம்பிய இடங்கள்...இதில் தியானம் செய்கிற போது தியான லயம் உடனே கைகூடுகிறது! அப்பேர்ப்பட்ட புண்ய ஜீவன்கள் பசுக்கள்.. பசு என்றாலே தூய்மை என்று பொருள்... ஆகவே தான் பசுந்தங்கம் என்கிறோம்!! அப்பேர்ப்பட்ட பசுக்களை பராமரிப்பது கோடி புண்ணியம்! சாது ஜன ரட்சணம் போலவே பசு ரட்சணம்! பசுவின் அருகாமையில் கொஞ்ச நேரம் இருந்தாலே சத்சங்கத்தில் இருப்பது போல் அவ்வளவு தவ மேன்மை!

அந்தப் பசு கருவுற்றிருக்கிறது! ஆனால் அந்தக் குடும்பம் தனது தங்கை பெண் கல்யாணத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டியதான சூழல்... கன்றை பசு ஈன்றுவிடும் பொழுதுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன... கையைப் பிசைகிறார்கள்... அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... உடனே பூஜையறைக்கு சென்று... "சுவாமி ஒரே ஒருநாள் மட்டும் தான் திருமணத்திற்கு சென்றுவிட்டு ஓடி வந்து விடுகிறோம்!... நீங்கள் தான் கர்ப்பம் தரித்த பசுவை தாயாய் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்!" என்கிறார்கள்‌.. சுவாமியிடம் உளமாற பிரார்த்தனை செய்தபிறகு "ஹப்பாடா" என்ற உணர்வு வருகிறது.. அது வரவேண்டும்... அப்படி வந்தால் தான் அது உண்மையான பிரார்த்தனை! அவர்களும் திருமணத்திற்கு செல்கிறார்கள்!

ஒரு நாள் கடந்து போகிறது...

அவர்களும் திருமண வைபவம் முடிந்து மூச்சிறைக்க ஓடி வருகிறார்கள்... அவர்கள் வந்ததும்... வராததுமாக... "ஒரு காவி உடை உடுத்திய ஒருவர்.. சாமியார் போல் இருந்தார்...உங்களைப் பற்றி விசாரித்தார்!" என பக்கத்து வீட்டுக்காரப் பெண்மணி சொல்லிய உடன்!

"என்ன சொன்னார்? எங்களுக்கு அப்படி யாரையும் தெரியாதே!" என்கிறார்கள்..

"எங்கே சென்றிருக்கிறார்கள்? எப்போது வருவார்கள்...? அவர்கள் வந்தால் நான் வந்து சென்றதாகச் சொல்லிவிடுங்கள்!" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் என்கிறார் அந்தப் பெண்மணி...

"காவி உடையில்.. சாமியாரைப் போன்றா? எங்களுக்கு யாரையும் தெரியாதே!" எனக் குழம்பி.. பூட்டிய வீட்டைத் திறந்து நேரடியாக தொழுவத்திற்குள் ஓடுகிறார்கள்... அப்போது அவர்கள் கண்ட காட்சி.. பிரம்மிக்க வைக்கிறது.. அவர்களின் கண் முழுக்க நிறமற்ற சீம்பால் பெருகுகிறது.. தொழுவத்தை சுத்தமாக பெருக்கி.. மெழுகி.. அந்த சினைப் பசுவிற்கு பிரசவம் பார்த்து தேவையான இடத்தில் மஞ்சள் தடவி.. நறுமண திரவியங்கள் இட்டு... அந்த இடமே ரம்மியமாக தெய்வீக மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது! 


"யார் செய்தது? யார்?" என  செய்வதறியாது "சாயிராம்" என கத்தியபடி பூஜையறையில்  இருந்த சுவாமியின் திருப்படத்தை எடுத்தபடி பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் காட்டியபடி "இவர் தான் வந்தாரா?" என கேட்டபோது.. "ஆம் ஆம் இவர் தான்.. இவரே தான் ... யார் இவர்!" எனக் அந்தப் பெண்மணி கேட்டபோது அவர்களின் அழுகையே "சுவாமி எங்களின் ஆபத்பாந்தவன்!" எனும் சத்தியத்தை கன்னம் வழி ததும்பத் ததும்பப் பேசுகிறது!

(அற்புதமும் ஆன்மீகமும் -1 / பக்கம் : 155 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


பார் முழுவதும் பார் என்கிற அளவில் காப்பார் யார்? எனில் அது சுவாமியே! தன்னை சரணடைந்த பக்தர்களை சுவாமி என்றும் எப்போதும் கைவிடுவதே இல்லை!! பூட்டியிருக்கிற வீட்டிற்கு சாவியாலே நாம் உள்நுழைவது போல் சுவாமியின் திருக்காவலுக்குள் நுழைவதற்கான சாவியே பக்தியும்... பக்தியின் வழி சரணாகதியும்!! அப்போது பசுக்களோடு சேர்த்து கோபர்களை கவர்ந்து சென்ற பிரம்மாவிடம் இருந்து மீட்டதும் அதே கோபாலன் தான்... இப்போது பூட்டியிருந்த ஒரு பக்தர் வீட்டுப் பசுவிற்கு பிரசவம் பார்த்ததும் அதே கோபாலன் தான்!! மனித இனத்தின் ஒரே கோ'வும் (அரசன்)... மடி நிறைய முக்திப்பாலை சுமக்கும் ஒரே கோ'வும் (பசு) ஸ்ரீ சத்ய சாயி கோபாலனே!!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக