சுவாமியின் சங்கல்பம் என்பது காற்றின் பயணம் போல... பறவையின் பாதையைப் போல மனிதனால் முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதை முன்கூட்டியே சுவாமி பகிர்ந்ததையும்... வெறும் உருவ உடல் அடையாள பக்தியை சுவாமியோடு வளர்க்காமல் அதையும் கடந்து பரிபக்குவ நிலையில் அருவ வெளியிலும் சுவாமியின் பேரிருப்பு நிலையை ஆராதிக்க வேண்டும் என சுவாமி வலியுறுத்திய சத்திய ஞான அனுபவம் இதோ...
ஜூலை 24, 2002 காலை குரு பூர்ணிமா அன்று இந்த அழகிய லைஃப் சைஸ் வெண்கல விக்ரஹம் சாய் குல்வந்த் மண்டபத்தில் ஸ்ரீ சத்யசாயி பகவானின் திருக்கரங்களால் திறக்கப்பட்டது. 160 கிலோ எடையுள்ள இந்த வெண்கல விக்ரஹம், இத்தாலியைச் சேர்ந்த பிரபல சிலை வடிவமைப்பாளரான திரு. மிம்மோ ஆல்பர்கோ என்ற பக்தரால் உருவாக்கப்பட்டது. இந்த விக்ரஹத்தை பகவானின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க அவர் தொடர்ந்து மூன்று வருடங்கள் கடுமையாக உழைத்து இருக்கிறார். முதலில் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் விக்ரஹம் வடிவமைக்கப்பட்டு பிரசாந்தி நிலையத்தில் உள்ள பூர்ண சந்திர ஆடிட்டோரியத்தில் வைக்கப்பட்டது. அப்போது சுவாமி, பிருந்தாவனத்தில் இருந்தார். சில நாட்கள் கழித்து அவர் திரும்பியபோது, விக்ரஹத்தை காண, ஆடிட்டோரியம் சென்றார். அங்கு தனக்கு சேவை செய்யும் மாணவர்களிடம் விக்ரஹம் எப்படி உள்ளது எனக் கேட்டபோது அவர்கள் பதில் சொல்ல தயங்கினர்.
ரத்தமும், சதையுமாய் நம்மிடையே இருக்கும் ஸ்ரீ சத்ய சாய்பாபாவை, விக்ரஹமாக காண அவர்களுக்கு மனம் வரவில்லை. இதனை உணர்ந்த பகவான், இப்போது இந்த உடல் இங்கு இருக்கிறது. அது இல்லாத போது நீங்கள் என்ன செய்வீர்கள்?' என கேள்வி எழுப்பினார். இதற்கு மாணவர்கள், 'சுவாமி.. நீங்கள் இப்போது இங்கு இருக்கிறீர்கள். நீங்கள் இல்லாத நாட்களை நாங்கள் சிந்திக்க விரும்பவில்லை' என்றனர்.
பின் அந்த சிறுவர்களிடம் பகவான், 'நான் எப்போது வர வேண்டும் என்பதை முடிவு செய்தது போல, எப்போது செல்ல வேண்டும் என்பதையும் நானே முடிவு செய்வேன். நான் 96 வயதுவரை இங்கு இருப்பேன் என நீங்கள் நினைக்கலாம், ஆனால் நான் விரும்பும் இடத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் என்னை உடலை தாண்டிய உண்மையான சுவாமியாக பாருங்கள். உண்மையான சுவாமியாக சிந்தியுங்கள்!' என்றார்.
இதனை தொடர்ந்து 2002ல் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் விக்ரஹம், சாய் குல்வந்த் ஹாலில் நிறுவப்பட்டு, சன்னதியில் வைத்து... விக்ரஹத்திற்கு அடியில் சுவாமியே அப்போது தெய்வீக சிருஷ்டி யந்திரத்தை வைத்தருளினார்!
பிறகு சில காலத்திற்கு சைதன்ய ஜோதியில் பார்வையிட வரும் பக்தர்களுக்காக அதன் தியான அறையில் வைக்கப்பட்டிருப்பதை அனைவரும் கண்டனர்! 20 ஆண்டுகளுக்கு முன்னர் பகவான் அவர்களால் அந்த விக்ரஹம் நிறுவப்பட்டது போலவே, இப்போதும் பூஜைகள் செய்யப்பட்டு, பஜனை ஹாலில் உள்ள சன்னதியில் விக்ரஹம் 05-03-2020 அன்று மீண்டும் நிறுவப்பட்டது.
ஆதாரம்: 5 மார்ச் 2020 அன்று வெளிவந்த தினமலர் நாளிதழ் செய்தி + https://www.srisathyasai.org/pages/sai-article-9.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக