தலைப்பு

திங்கள், 17 ஜனவரி, 2022

'அனைத்தும் என் செயலே' பகவான் பாபாவின் பிரகடனம்!


மாயையில் அகப்பட்ட மனிதன் எல்லாவற்றையும் தான் செய்வதாக நினைத்து தன் அகந்தையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்கிறான். ஆனால் பாபா கூறுகிறார் "உலகில் நிகழும் நல்லதோ , அல்லாததோ அவை யாவும் எனது சட்ட வரம்பிற்கு உட்பட்டு தான் நடக்கின்றன." பாபாவின் கலாசாலையில் பேராசிரியராகவும், தேர்வுக்குழுவின் கண்காணிப்பாளருமாக இருந்த பேராசிரியர் நஞ்சுண்டையாவிடம் இது பற்றி பாபா கூறியதென்ன... 

ஒருசமயம், பாபாவுடன் காரில் திரு. நஞ்சுண்டையா அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தார். 

"ஸ்வாமி எனக்கு ஒரு சந்தேகம். தாங்கள் விளக்கம் அருள வேண்டும்" என்றார்.

பேராசிரியர் நஞ்சுண்டையா தன் தெய்வத்துடன்... 

ஸ்வாமி புன்னகையுடன் அவரை பார்க்க, நஞ்சுண்டையா மேலும் கூறினார்.

"இவ்வுலகில் நிகழும் நற்செயல்கள் எல்லாம் தங்களது சங்கல்பத்தால் நடைபெறுகின்றன. ஆனால் நற் செயல்கள் அல்லாதவை அண்டங்களின் சட்டதிட்டப்படி நடக்கின்றன. அப்படித்தானே ஸ்வாமி"

இதற்கு பகவான் பாபா அளித்த விளக்கம், நம் அனைவருக்கும் பாபாவின் செயல் திட்டங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்ற தெளிவைத் தருகின்றன.

பகவான் கூறுகிறார்.... "உனது அனுமானம் தவறானது. உலகில் நிகழும் நல்லவைகளும், அல்லாதவைகளும் எனது ஆக்ஞைக்கு கட்டுப்பட்டே நடக்கின்றன. அவைகளைச் செயல்படுத்த, தெய்வங்கள் பலரை நான் நியமித்திருக்கிறேன். அவர்களின் செயல்பாடுகளில் நான் தலையிடுவது இல்லை. ஆனால் என் நேர்ப் பார்வையில் மூன்று விஷயங்களை  கவனித்து அதன் செயல்பாட்டை நானே நிர்வகிக்கிறேன்".


பாபா தாமே நிர்வகிக்கும் மூன்று முத்தான சத் விஷயங்கள்.... 


1. அன்பு:  யார் என்னிடம் அன்பு செலுத்துகிறார்களோ , அவர்களிடம் அந்த அன்பை திருப்பி செலுத்துகிறேன். அவ்வாறு அன்பு செலுத்தும் நபர்களின் பலவீனங்களை நான் பார்ப்பதில்லை.

2. தன்னலமற்ற சேவை: எந்த மனிதர் பயன் கருதா சேவையை மேற் கொள்கிறாரோ, அவரை என் பாதுகாப்பு வளையத்திற்குள் இருத்தி பாதுகாக்கிறேன்.

3. யார் ஆன்மீக சாதனைகளை மேற்கோண்டாலும், அவர் இல்லத்திலோ அல்லது இமயத்திலோ இருந்தாலும், எனது பாதுகாப்பில் வைத்து காக்கிறேன்.


சாயிராம்... தம்மிடம் அன்பு செலுத்துபவர்களின் பலவீனத்தை தாம் பார்ப்பதில்லை என பாபா கூறுவது ஏன்?

அம் மனிதர்களிடம் பாபா தமது அன்பை திரும்ப செலுத்தும் போது, அவர்களது பலவீனங்கள் அனைத்தும் , ஆதவன் ஒளி கண்ட பனிபோல் அகலுமல்லவா?

அன்பே அனைத்து பலம். அதுவே சிறந்த நலம் அல்லவா? தமது LOVE ALL SERVE ALL கோட்பாட்டை அனுஷ்டிப்பவர்களைத் தாமே நேரில் காப்பதாக பாபா அளிக்கும் இந்த உறுதிமொழியையே  நமக்கு வழிகாட்டியாகக் கொண்டு நல்வழி நடப்போமாக.


ஆதாரம்: Sai Vandana 1990

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக