தலைப்பு

வியாழன், 20 ஜனவரி, 2022

இப்படி ஒரு அற்புத புருஷரை கண்டதே இல்லை!" என சுவாமியை வியந்து போற்றிய விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள் பலர் சுவாமியை சோதிக்க வந்து அறிவியலே ஆச்சர்யப்படும் அளவுக்கு அசந்து போனவர்களின் அமானுஷ்ய அனுபவங்கள் சுவாரஸ்ய அடுக்குகளாய் இதோ...


ஏன் ஸ்ரீ ராமர் - ஸ்ரீ கிருஷ்ணர் - சுவாமி போன்ற அவதார புருஷர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்? எனில் காய்த்த மரம் கல்லடி படும் என்பதான மூதுரை தொடங்கி அவர்கள் ஏன் சோதிக்கப்படுகிறார்கள் எனில் கூழாங்கற்களை யாரும் உரசிப் பார்ப்பதில்லை... தங்கத்தையே உரசிப் பார்க்கிறோம் என்கிற வகையில்... ஆனால் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் நிகழ்ந்தும் அவதாரப் பிரவாகங்களை புரிந்து கொள்ள முடியுமா? எனில் பெர்முடா முக்கோணத்தையே தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் அறிவியலால் அதைப் படைத்தவரை எப்படி புரிந்து கொள்ள முடியும்? என்கிற சத்தியம் உணர்த்துகிற பதிவு தான் இதோ...! 


அறிவியல்  எப்படி ? என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது... எப்படி பூமி சுற்றுகிறது எனில் விடை தெரியும்! எதற்கு சுற்றுகிறது? எனில் விடையில்லை... பெருந்தொற்று எப்படி பரவுகிறது? என்றால் விடை தெரியும்! ஏன்? எதற்காக? பரவுகிறது என்றால்! மருந்தோடு சேர்த்து விடையையும் மனிதனால் கண்டுபிடிக்க முடியவே இல்லை...! சுவாமியை சோதிப்பதற்காக பல விஞ்ஞானிகள் புடை சூழ்ந்திருக்கிறார்கள்... சுவாமியை சோதிக்க சோதிக்க சுவாமி சோபித்துக் கொண்டே தான் இருந்தாரே அன்றி சோர்ந்து போகவே இல்லை! தாராளமாக சோதித்துக் கொள்ளுங்கள் என்று தான் தன் இதய வாசல்களையும் சேர்த்தே திறந்து வைத்தார்! 

        

Dr. கார்லிஸ் ஓஸிஸ்

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானியான கார்லிஸ் ஓஸிஸ் சுவாமியின் அற்புத சக்தியை கேள்விப்பட்டு சுவாமியை காண விளைகிறார்... சுவாமிக்கு பிரபஞ்சப் பேராற்றல் இறை சக்தி என்பது சுபாவம்... தவமோ யோகமோ செய்து அது எங்கேயும் இருந்து அடையப்பெற்றதல்ல... தன்னைப் போலவே மனிதன் சுவாமியை கற்பனை செய்வதால் ஏற்படுகிற குழப்பமிது!! சுவாமியின் உடல் விட்டு வெளி செல்கிற சூட்சுமத்தை உணர கார்லிஸ் ஓஸிஸ் வருகிறார்...அதற்கு OOBE (Out of Body Experience) என்று பெயர்! மனிதனால் உணர முடியாதது என்பதற்குத் தான் சூட்சுமம் எனும் பெயர்ப் பிரயோகமே... அந்த அனுபவம் என்பது அகண்ட சூட்சுமம்! சுவாமியை ஆராய அனுமதி கேட்கிறார்... வெளித் தொந்தரவுகள் இன்றி உங்களின் சோதனைச் சாலை முறைப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்! என சுவாமி அனுமதி தருகிறார்! 

Dr. ஹாரல்ஸ்டன்

கார்லிஸ் மற்றும் அவர் நண்பர் ஹாரல்ஸ்டன்... இராணுவ விஞ்ஞான நண்பர்களும் சக்தி மிகுந்த கேமராக்களோடு வருகிறார்கள்.. சுவாமி கொடுக்கும் விபூதியை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்... "கடவுள் -பக்தி இவை மனித அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயம்... அதை அப்படியே இரட்டை ருத்ராட்சம் போல் ஏற்றுக் கொள்ள வேண்டும்!" என்கிறார் சுவாமி...இவர்கள் இரட்டை ருத்ராட்சத்தையே பார்த்ததில்லை என சொல்ல.. கை அசைவில் வரவழைத்துக் காட்டுகிறார்... ஆச்சர்யப்படுகிறார்கள் இருவரும்! 

ஒருநாள் இருநாள் அல்ல பல நாட்கள் ஆராய்ச்சி தொடர்கிறது... ஒன்றல்ல இரண்டல்ல முப்பது வகையான சுவாமியின் திடீர் சிருஷ்டிப் பொருட்களை வைத்து சோதனை... இரண்டு பேரில் ஒருவருக்கு அளித்த சிருஷ்டி மோதிரத்தில் கல் காணாமல் போகிறது... கல் எங்கே எனக் கேட்கிறார் சுவாமி... சோதனை செய்ய வந்தவர்களை சுவாமியே சோதிக்கிறார்! உயிர்களைப் படைக்கும் பிரபஞ்ச விஞ்ஞானியான சுவாமி தான் படைத்தவற்றை சோதிக்காமல் வேறெதை சோதிப்பார்?!

முடிவாக தங்கள் அறிக்கையை அமெரிக்காவில் சமர்ப்பிக்கிறார்கள்... 

"தற்போதைய நிலையில் இவற்றை விஞ்ஞான ரீதியாக விளக்க போதுமான அடிப்படை இல்லை என்பது வெளிப்படை என்றாலும்...இவற்றில் மோசடி இருப்பதற்கான சான்று எதுவுமே இல்லை!" என்ற தன் விஞ்ஞான நிலையை எழுதி கை ஒப்பமிட்டுத் தருகிறார்கள்! 


ஏன் சுற்றி வளைத்து எழுத வேண்டும்? அவர்களால் அந்த சிருஷ்டிகள் எப்படி? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். இமய யோகி சுவாமிகள் ராமா போன்ற எத்தனையோ மகான்களின் உடலை பரிசோதனை செய்து அந்த யோக தியான ஆற்றலை விஞ்ஞானிகள் அளக்க முயற்சி செய்திருக்கிறார்களே அன்றி தெளிவான ஒரு விஞ்ஞான முடிவு இன்னும் வரவில்லை... பகவான் ரமணர் மயக்க மருந்தின்றி அறுவை சிகிச்சை மேற்கொண்டார்! எப்படி? தெரியாது! ஏன் தெரியுமா? விஞ்ஞானமே தெளிவில்லாதது... ஒரு ஆராய்ச்சி தீர்வை இன்னொரு ஆராய்ச்சி முறியடிக்கிறது... விஞ்ஞான தொழில் நுட்பமே மாறிக் கொண்டே இருப்பது... டயல் தொலைபேசி.. நீட்ட தொலைபேசி... ஸ்மார்ட் கைப்பேசி என்பது போல்.. இப்படி மாறிக் கொண்டே இருப்பது எதுவும் தெளிவான விடையை தருவதில்லை... ஓடும் நீரில் எழுதியதை வாசிக்க முடியுமா? அது போல்... மனம் மாறிக் கொண்டே இருப்பது.. அதனால் இறை ஆற்றலை கண்டுணர முடியாது!


Prof. ஃபிராங்க் பார்னோஸ்கி சுவாமியுடன்.. 

1978 மே மாதம் கோடை கால வகுப்பில் எட்டாவது நாள் அன்று பேசிய ஆரா புகழ் விஞ்ஞானி பார்னோஸ்கி ஆரா ஒளிவட்ட ஆராய்ச்சியில் புகழடைந்தவர்... அரிஜோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அவர் வெறும் கண்களாலேயே அதைக் காணும் அளவிற்கு நிபுணத்துவம் பெற்றார்... சுவாமியை அந்த ஆரா ஒளி கிர்லியன் கேமரா மூலம் பதிவு செய்கையில் நிகழ்ந்த அனுபவத்தை அவரே வியந்து அன்று பேசுகிறார்!

"சுவாமி தரிசனத்தில் நடந்து வருகையில் ஆச்சர்யகரமாய் இளஞ்சிவப்பு ஆரா பெருவெள்ளமாய் வானம் வரை பரவி இருக்கிறது...! இதற்கு விஞ்ஞானத்தில் கூட விடை இல்லை... இரண்டு கால் கொண்டு உயர் பேரன்பு பூமியில் நடந்து வருவதைப் போலவே நான் சுவாமியின் தரிசனத்தை உணர்கிறேன்!" என்கிறார் பரவசமோடு..

அது போல் சுவாமி உலகத்தில் யாராலும் அச்சிடமுடியாத சிறிய சைஸ் பகவத் கீதை புத்தகம்... பைபிள் போன்றவற்றை சிருஷ்டித்து அளித்திருக்கிறார்...

சோதனைக்கு இடுகையில் ராஜ திராவகத்தையே (உயர் ரக அமிலம்) உரிஞ்சுகிற சிருஷ்டி மோதிரத்தை வழங்கி இருக்கிறார்... 

உயிருள்ள குரங்கு ஜீவனை சிருஷ்டித்து சிறுகச் சிறுக அதைப் பெரிதாக்க நேர்காணல் அறையில் குதிக்க வைத்திருக்கிறார்...ஒரு வெளி நாட்டவரை நேர்காணல் அறையிலிருந்தே அவரின் நாட்டிற்கு அனுப்பி இருக்கிறார்... இப்படி ஏராளம்...ஏராளம்... சுவாமி சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணரே என்பது இதன்மூலம் நம்மால் உணர முடிகிறது! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என என்னன்னவோ மனிதன் செய்து கொண்டிருக்கிற போது... எதையும் எதிர்பார்க்காத தூய பரம்பொருளான சுவாமியை கண்டு கின்னஸ் புத்தகமே வியப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!

(ஆதாரம்: ஆன்மீக ரகசியங்கள் / பக்கம் : 34 / ஆசிரியர் : ச.நாகராஜன்) 


இறை ஐந்தொழிலை சுவாமியே ஆற்றுகிறார்... அந்த ஐந்தொழிலால் மட்டுமே பிரபஞ்சமே இன்னமும் உயிர்ப்போடு ஒரே லயத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது! நமக்கு அது பேரற்புதமாக தெரிகிறது... பேராச்சர்யமாக தோன்றுகிறதே அன்றி சுவாமிக்கு அது அவரின் நித்திய லீலா சுபாவமே... நமக்கு ஒரு நாள் என்பது சுவாமிக்கு ஒரு நொடி என்பது போல் அவரின் பேராற்றல் விஞ்ஞானத்தால் மட்டுமல்ல எதனாலும் ஆராய்ந்து விடை அறிய முடியாது...!

அமிர்த பாத்திரத்தை யாராவது உரசி அது என்னவகை உலோகம் என கண்டறிய முயற்சிப்பார்களா? பாத்திரத்தில் இருக்கும் பேரமுதத்தை துளித்துளியாகப் பருகி பேரானந்தம் அடைவோம்!! அமிர்த பாத்திரம் அதற்காகவே அமிர்தத்தோடு நிரம்பி வழிகிறதே தவிர வேறெதற்காகவும் அல்ல...!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக