தலைப்பு

சனி, 8 ஜனவரி, 2022

PART 3 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!

"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்


வனத்தில் ஆரம்பகட்டமாக தவமியற்றப் போன அந்த நேபாள பட்டதாரி இளைஞர் என்ன ஆனார்? தனியாக மாட்டிக் கொண்டாரா? அந்த அட்சயப் பாத்திரம் என்பது உண்மையா? ஏன்? எதற்காக? அளிக்கப்பட்டது... பெரும் சுவாரஸ்யமாய் இதோ...

"இனி என்ன ஆனால் என்ன...? சுவாமி பார்த்துக் கொள்வார்!" எனும் ஆழ்ந்த பக்தி உணர்வு அந்த நேபாள இளைஞருக்கு..! மனம் எண்ணங்களற்று நின்றுவிடும் தருணமே சரணாகதி... அந்த சரணாகதி பொழுதுகளில் ஆரம்பித்து நொடிக்கு நொடி சுவாமியே அந்த இளைஞரை வழிநடத்துகிறார்... சம்பூரான் வனத்தை அடைகிறார் அவர்... அந்த இடத்தில் ஏற்கனவே தங்கி தவமியற்றிடும் வாமதேவரை அந்த இளைஞர் சந்திக்கிறார்... 


104 வயதிற்கு மேலும் வாழ்ந்த ஸ்ரீ வாமதேவ மகராஜ் சுவாமிகளை தடுத்தாட் கொண்டு முக்தி தருவதற்காக சுவாமி தனது பக்தரான ஒரு இராணுவ அதிகாரி கனவில் சுவாமி தன் மடியில் வாமதேவரை தாங்குவது போல் திருக்காட்சி அளித்து... அந்த அதிகாரியை தேட வைத்து... வாமதேவரை கண்டடையச் செய்து... வாமதேவருக்கு தன் கனவு அனுபவத்தை விளக்கி சுவாமியின் திருப்படத்தை அந்த இராணுவ அதிகாரி  காட்டுகிறார்... வாமதேவர் மிகப்பெரும் துறவி... மடங்கள் / சிஷ்யர்கள் என்பதில் கூட பற்றில்லா துறவி...பற்று அற்ற நிலையே ஆன்மீகம் என்பதெல்லாம்... சன்யாசத்தில் ரிஷபதேவ முறையைப் பின்பற்றுபவர் வாமதேவர்.. தனித்திருந்து தவமியற்றி தனிப்பெரும் வெளியில் எவரும் அறியா வண்ணம் முக்தி பெறுபவர்கள் அவர்கள்! சுவாமியை திருப்பட ரூபமாக தரிசிக்கிற போது வாமதேவர் கண்கலங்குகிறார்.. 


தன் தியானத்தில் (தவத்தில்) பலமுறை சுவாமி தரிசனம் அளித்திருப்பதால் வந்த கண்ணீர் அது... கங்கா நதிக்கரையில் கண்மூடி தன்னை மறந்த நிலையில் வாமதேவர் அமர்ந்திருக்கையில் பெருவெள்ளம் அவரை அடித்துச் செல்ல.. எவ்வாறு ஒரு யோகியை ரிஷிகேசத்தில் காப்பாற்றினாரோ அப்படியே இவரையும் சுவாமி காப்பாற்றியது எல்லாம் அவர் நினைவுக்கு வந்து கசிகிற கண்ணீர் அது... ! பிறகு பர்த்தியில் சுவாமியை தரிசித்த வாமதேவரை முன்கூட்டியே சம்பூரான் வனத்தில் தவமியற்ற சொன்னது சுவாமியே! ஆகவே அந்த நேபாள எம்.எஸ்.சி இளம் தவசியை வரவேற்கிறார் பழுத்த தவசியான வாமதேவர்! தவம் என்ற சொல்லும் தியானம் என்ற சொல்லும் ஒன்றே! தவம் என்பது பொதுப் பெயர்.. தியானம் என்பது நவீன சிறப்புப் பெயர்!

அந்த நேபாள பட்டதாரி இளைஞனுக்கு எல்லாவித வழிகாட்டுதல்களையும் வாமதேவர் மூலம் சுவாமி அளிக்கிறார்! ஒவ்வொரு ஆன்மாவையும் கருவில் சுவாமி அனுப்பும் போதே தாய்ப்பால் முதல் அதன் வாழ்க்கைத் தேவைகள் ஒவ்வொன்றையும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து... அதனதன் கர்மக்கணக்குப்படி ஆற்றுப்படுத்துவது சுவாமியே என்பது எம்.எஸ்.சி நேபாள இளைஞர் வாழ்க்கை நமக்கு பாடம் எடுக்கிறது!

          6 ஆண்டுகாலம் அங்கே தவம் இயற்றுகிறார் அந்த இளம் ஆன்மசாதகர்... அது அடர்வனம்... வெளி மனிதர்கள் எவரும் வந்து தொந்தரவு செய்ய இயலா தூய தலம்... ஒற்றைக் கால் தவ மரங்களோடு இவர்கள் இருவரின் தவமும் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது! அதில் சுவாமி பயிற்சி அளித்த பிராணாயாமம் கைவரப்பெற்று ஒரு மணிநேரம் கூட மூச்சை அடக்கும் படியாக பிராணாயாம ஸித்தி பெறுகிறார் அந்த இளைஞர்! மெல்ல மெல்ல புலன்கள் அடங்கிப் போகிறது... தவத்தெய்வீகம் சூழ்கிறது... அங்கே தவத்தை நிறைவு செய்து 1983 ல் சுவாமியை தரிசிக்க பிருந்தாவனத்திற்கு 12 பக்தர்களோடு வந்து சேர்கிறார் பற்றுகள் அற்ற அந்த இளம் ஆன்மசாதகர். 

11 பேர்களில் அவரின் ரிஷிமூலம் மட்டுமே நம்மால் அறிய முடிகிறது... அதுவும் சுவாமி சங்கல்பத்தோடு மகேஸ்வரானந்த சுவாமிகள் நமக்கு அளித்த வரம் அது... அவரை மட்டும் தான் 1987ல் பர்த்தியில் சுவாமிகள் தரிசிக்கிறார்...அந்த தரிசனத்தில் நிகழ்ந்த நேர்காணலே அவரின் தவம்நிறை வரிவடிவ இந்தி புத்தக வரம் "நரநாராயண குகை ஆசிரமம்"!! 

வாருங்கள்... இப்போது சம்பூரான் வனத்திலிருந்து த்ரயி பிருந்தாவனம் செல்வோம்!!

அவரோடு வந்த அந்தக் குழுவில் 11 பக்தர்களும்... சுவாமி அருளை நாடிய ஒருவரும் இடம்பெறுகிறார்... அவர்கள் இரண்டு வாரங்கள் பிருந்தாவனத்தில் தங்குகிறார்கள்...அவர்களுக்கு சாதனா மார்க்கம் (ஆழ்நிலை தவமியற்றும் முறை) அனன்ய பக்தி போன்ற ஆன்மீக உயர் ஞானத்தைப் பற்றி அவர்களோடு உரையாடுகிறார்... பிறகு அந்த 12 பக்தர்களில் 2 பேரை தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கிறார்... அந்த நேர்காணல் அற்புதமானது... சுவாமி கையசைத்து ஒரு பாத்திரம் சிருஷ்டிக்கிறார்... 

அந்த நேபாள இளைஞரும்... இன்னொருவரும் அந்த அதிசயத்தை காண்கிறார்கள்... பூரித்துப் போகிறார்கள்... என்ன இது? எதற்கு இது? நமக்கா? நமக்கு எதற்கு? என நேபாள இளைஞர் நினைத்து முடிப்பதற்குள்... "இதோ...!  இது தான் அட்சயப் பாத்திரம்...நான் துரௌபதிக்கு அளித்ததை விட சிறப்பான அட்சயப் பாத்திரம் இது... அவள் அதில் ஏதாவது சமைத்து சிறிது இட்டால் தான் அது பெருகும்... ஆனால் இதில் நீங்கள் எதையும் இடத் தேவையில்லை... உங்கள் பசிக்கு ஏற்ப இதில் தானாகவே உங்கள் 11 பேருக்கும் தேவையான உணவை நான் அதில் சிருஷ்டிப்பேன்!" என சுவாமி அந்த அட்சயப்பாத்திரத்தை நேபாள பட்டதாரி இளம் ஆன்ம சாதகருக்கு அளிக்கிறார்... மேலும்


"நீங்கள் 11 பேரும் சென்ற பிறவிகளில் யோகிகளாக இருந்து தவமியற்றியும் உங்களால் அடைய முடியாத முக்தியை... இந்தப் பிறவியில் ஆழ்நிலை தியானத்தை இமாலயத்தில் நரநாராயண குகையில் புரிந்து வாருங்கள்... உங்கள் கூடவே நான் இருக்கிறேன்... உங்களுக்கான வழிகாட்டுதல்கள் என்னால் அவ்வப்பொழுது நிகழும்!  நீயே 11 பேர் தவக்குழுவிற்கு தலைமை தாங்கு!" என அந்த நேபாள இளம்சாதகருக்கு அட்சயப் பாத்திரம் அளித்து போய் வா என்கிறார் சுவாமி... நேர்காணலலிருந்து வெளியேறுகிறார் அவர்! 

பஞ்ச பாண்டவர்களை விடவும் மேன்மையானவர்களா அந்த 11 பூர்வ யோகிகளும்...? எனக் கேட்டால்.. ஆம்! பஞ்ச பாண்டவர்கள் தங்களது சூதாட்டம் எனும் தீய செயல் விளைவாலேயே வன யாத்திரை செய்தனர்... அது தண்டனை..‌. இவர்களின் இமய யாத்திரை என்பது முக்திக்கான சத்வப் புறப்பாடு... சரணாகதி கால் முளைத்து சுவாமி சொல்படி நெஞ்சம் நிமிர்த்தி நடந்து போவதற்கும்... துணைவியையே பணயம் வைக்கத் துணியத் தவறுகள் செய்து.. துகிலுறிகையில் தலை தாழ்த்தி.. தலை குனிந்து நடந்து போவதற்கும் வித்தியாசம் இருக்கவே செய்கிறது! 

"ஏய்... நில்! நீ எங்கே போகிறாய்...?" என அழைக்கிறார் சுவாமி...தன்னையும் சேர்த்துத் தான் 11 பேர் என நினைத்துக் கொண்டிருக்கிறார் நேர்காணலில் நேபாள இளைஞரோடு இருந்த இன்னொருவர். "நீ அந்த 11 பேர்களில் ஒருவன் அல்ல!" சுவாமி சொல் கேட்டு அதிர்கிறார் அவர்... "பங்காரு அதிர்ச்சி அடையாதே..‌. அவர்களை விட நான் உன்னையே அதிகம் நேசிக்கிறேன்.. அவர்களையோ இந்த உலக வாழ்வை ஒதுக்கி இமயத்திற்கு அனுப்புகிறேன்... உன் குணநலம் தெரிந்து உனக்கு இன்னொரு சாதனா வைத்திருக்கிறேன்! நான் சொல்வது படி செய்... லௌகீகம், ஆன்மீகம் இரண்டையும் உன்னை அனுபவிக்கச் செய்கிறேன்... நான் சொல்வதை கேள்! நீ அவர்களை வழி அனுப்பிவிட்டு என்னை வந்து பார்!" என்கிறார் சுவாமி. 

தான் நினைத்ததை சுவாமி நடத்தவில்லை எனும் அதிர்ச்சி ஒருபுறம்... "நான் மட்டும் என்ன சளைத்தவனா? அவர்கள் பெரிய இவர்களா?" எனும் மமதை மறுபுறம்... "முக்தி என்பதை எனக்கெல்லாம் சுவாமி தர மாட்டாரா?" எனும் கோபமும்.. "அது என்ன அட்சயப்பாத்திரம்...? எனக்குத் தந்திருக்க வேண்டியது தானே...!" எனும் பேராசையும்... "அவன் தான் தலைவனா...? நான் தான் தலைமைக்கு தகுதியானவன்! என்ன செய்துவிடுவார் சுவாமி? ஒரு கை பார்த்துவிடுவோம்!!" எனும் பொறாமையும்..."அவர்களோடு இமய மலை சென்று தவமியற்றி... அவர்களுக்கு முன்பாகவே முந்திக் கொண்டு முக்தியடையப் போகிறேன்...‌" எனும் பக்குவமின்மையும்..."அந்த அட்சயப் பாத்திரத்தை அந்த நேபாளியிடமிருந்து அபகரித்து விட்டுத் தான் மறுவேலை" எனும் வஞ்சகத்தோடும் நேர்காணல் அறைவிட்டு திரும்புகிறார் அவர். 

அவர் நினைத்தது நடந்ததா? 

சுவாமியின் சங்கல்பம் நடந்ததா? 

(ஆதாரம் : சாயி லீலைகள் : நரநாராயண குகை ஆசிரமம் - 1&2 / மூலம் - மகேஸ்வரானந்தா/ தமிழில் விஜயராமன்) 


அவர் நடந்து செல்கையில்... அவரின் தலைக்கு மேல்

மின்விசிறியும் அல்ல பிரபஞ்சமும் அல்ல... கழுகுகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன...!

புஹுஹாஹாஹாஹா என்ற சிரிப்பலையோடு இந்த பகுதியை நிறைவு செய்ய விரும்புகிறேன்! 


இமயப் பயணம் 

இன்னும் குளிரும்...


  பக்தியுடன்

வைரபாரதி


ஸ்ரீ மகேஸ்வரானந்தா சுவாமிஜி எழுதிய அரிய அதி அற்புத புத்தகமான "சாயி லீலைகள் நரநாராயண குகை ஆசிரமம் - பாகம் 1,2&3" இவற்றை மொத்தமாக உள்வாங்கி... அதன் சாராம்சத்தை பயண சுவாரஸ்யமாய்... அதன் தெய்வீகத் திருச் சம்பவங்களை முறைமைப் படுத்தி...தெள்ளத் தெளிவான வரிசையில்... முதன்முறையாக உங்களுக்கு இமயம் நோக்கிய பயண அனுபவம் ஏற்படுத்தியபடி 9 பாகங்களாக வெளிவருகிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக