தலைப்பு

வெள்ளி, 21 ஜனவரி, 2022

மாரியம்மன் கோவில் பூசாரி முகம் என நகைத்த ஒரு இராணுவ வீரருக்கு தன்னை உணர வைத்த கருணை மாரி சுவாமி!



மனிதர்கள் பல்வேறு வகையானவர்கள்... பல்வேறு தொழில்கள் அதைச் சார்ந்தும் சாரா குணமுமாய் வாழ்க்கையும்... இதில் லட்சோப லட்சம் பேர்கள் சுவாமியை தரிசித்திருக்கிறார்கள்...அதில் எவ்வாறெல்லாம் அவரவர்கள் தங்கள் அறியாமையில் இருந்து வெளியே வந்து சுவாமியை உணர்ந்திருக்கிறார்கள் என்பதோ சுவாரஸ்யமானவை... அதில் ஒன்று இராணுவ வீரருக்கு நிகழ்ந்த அனுபவம் இதோ...


அது 1956 ஆம் ஆண்டு. தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கா எழில் நுட்ப காலகட்டம் அது! சுப்ரமண்யம் அவர் பெயர். இராணுவத்தில் பணியாற்றுபவர்! டில்லியில் வேலை. அடிக்கடி பணிமாற்றம் என்பதால் அவரது குடும்பம் திருப்பதியிலேயே இருந்தது. அவர்... அந்தப் பெரும் பாக்கியசாலி பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி முதல் ரிஷிகேஷ் மகானாகிய ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி மகராஜ் வரை பல மகான்களை தரிசித்திருப்பவர். ஆனாலும் அவர் சுவாமியை பற்றி அறிந்திருக்கவில்லை... 

மனிதன் மகான்கள் பற்றி அறிந்திருப்பதே பூர்வ புண்ணியம் தான்! கள்ளமில்லா உள்ளங்களில் மட்டுமே முதல் தரிசனத்திலேயே மகான்கள் தங்களை உணர்த்திவிடுவார்கள்... அது நேரடி தரிசனமாக இன்றி புத்தக தரிசனமாக இருந்தாலும் கூட... ஆனால் பேரவதாரத்தை உணர வேண்டும் எனில் ஒரு காலகட்டம் தேவைப்படுகிறது! அந்த காலகட்டம் அவரின் நண்பர் அனந்தகிருஷ்ணன் வழி ஏற்படுகிறது! அவர் சுவாமி பக்தர். அடிக்கடி அவரிடம் சுவாமியை பற்றிப் பேசுவார். "பட்டாள வாழ்க்கையில் ஒழுக்கமும் பக்தியும் கடைபிடிக்கும் நீ.. ஏன் ஒருமுறை சுவாமியை தரிசனம் செய்ய என்னுடன் வரக்கூடாது" என்பார்... அடியேன் 1950களிலேயே பிறந்து இப்படி யாராவது அழைத்திருந்தால்... அவர் வீட்டு வாசலிலேயே நாயாய் நின்று கதியாய் கிடந்திருப்பேன். மனிதர்கள் பலருக்கு சந்தேகம். நேர்மையான சந்தேகம் என்பது யார் மீது எழுகிறதோ அவர்களிடமே நேரடியாக கேட்டு அதை தெளிவுப்படுத்த வேண்டும்... அந்த தன்முனைப்பு இல்லை‌.. பல சந்தேகங்கள் வெறும் கற்பனை மூட்டைகளே...! மனிதன் சந்தேகப்படுவதில் கூட நேர்மையில்லாமல் இருக்கிறான்...!

மேலும் "நீ லீவில் 2 மாதம் திருப்பதி வரும் போது சுவாமியை பார்க்க போகலாம்!" என்கிறார் நண்பர். "அவர் எப்படி இருப்பார்?" எனக் கேட்க... சுவாமியின் புகைப்படம் நீட்டுகிறார் நண்பர் அனந்த கிருஷ்ணன்... படத்தை வாங்கிப் பார்த்து நகைத்தபடி... "இவரா சாமி.. ஹா ஹா... இவர் என்ன மாரியம்மன் கோவில் பூசாரி மாதிரி இருக்கிறார்!" என்கிறார்... நண்பரின் முகம் சுண்டிப் போகிறது! 


பிறகு லீவுக்கு வருகிறார்... சுவாமியை நண்பர் சொல்லியது போல் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது! பக்தியினால் இல்லை...ஒரு வித ஆர்வத்தினால்... அப்போது அவர் புதுவீடு கட்டிக் கொண்டிருக்க...கிரஹப்பிரவேசமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது...அதையும் பொருட்படுத்தாமல் நண்பரோடு புட்டபர்த்தி கிளம்பிவிடுகிறார்... கிரஹப்பிரவேச திட்டங்கள் எல்லாம் அவரது குடும்பமே பார்த்துக் கொள்கிறது! அப்போது அதிக கூட்டம் இல்லை.. 50'கள் அல்லவா... 25 பேர்களே இருப்பர். கொடுத்த வைத்த இராணுவ சுப்ரமண்யம் நண்பரோடு சுவாமி தரிசனத்தில் அமர்ந்திருக்கிறார்! சுவாமி அப்போது எல்லோரிடமும் பேசுவார்... இது 60'கள் வரை தொடர்ந்திருக்கிறது! எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் 50'களில் சுவாமியை தரிசித்தவர்கள்... சீக்கிரம் பிறந்து தொலைத்திருக்கலாம் என்ற எண்ணத்தை 50'களின் பக்த புண்ணியவான்களே அவ்வப்போது அடியேனுக்கும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்! சிலபேர் சுவாமியிடம் ஊருக்கு கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டுச் செல்வர்... சுவாமி நண்பராய் இரங்கிப் பேசி பரிவு காட்டி... பலருக்கு டாட்டாவும் காட்டுவார்... சிலர் சுவாமியைப் பிரிகிறோமே என அழுவர்... சுவாமி பங்காரு பங்காரு என கண்ணீரைத் துடைத்துவிடுவார்... அந்தக் கண்கொள்ளா காட்சியை எல்லாம் புத்தகங்களில் படித்தே பாதியாய் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது! 


அனைவரிடமும் அப்போது பேசிய சுவாமி சுப்ரமண்யத்திடம் பேசவில்லை... தனது நண்பரிடம் அவர் "நான் நாளை கிளம்பப் போகிறேன்" என்கிறார். மறுநாளும் சுவாமி எதுவும் பேசவில்லை...அவருக்கு உடனே செல்ல ஏதோ மனம் வரவில்லை... எப்படி வரும்? சுவாமியின் பேரதிர்வலைகள் அப்படி! 4 ஆவது நாள் யாருமே அதிகமில்லை... சுவாமி அவரிடம் நேராக வந்து... உற்று நோக்கி... "நான் நாளைக் கிளம்பப் போகிறேன்" என்று உன் நண்பரிடம் சொன்னாயே... "ஏன் போகவில்லை?" எனக் கேட்டு புன்னகை செய்கிறார்! அவருக்கு தலை சுற்றுகிறது.. நாம் தனியாக நண்பரிடம் பேசியது எப்படி இவருக்குத் தெரியும்? என ஆச்சர்யப்படுகிறார்... அந்த இராணுவம் சுவாமியின் காலடியில் பூனையாய் அடங்கி விடுகிறது... அடுத்து சுவாமி சொல்லியது தான்...அந்தத் திருவாய்மொழி... உறைந்து உட்கலந்து கால்களில் விழுந்து கதறி அழுகிறது இராணுவம்...


ஆம் அது தான்.. அதே தான் "நான் மாரியம்மன் கோவில் பூசாரி இல்லை... பகவானே (இறைவனே)" என்கிறார் சிரித்தபடி சுவாமி.... 

நாடி நரம்பு கலகலக்க... இதயம் இமயப் பனியாய் உறைந்து போக... அந்த இராணுவ மெழுகுவர்த்தி சுவாமியின் பாதத்தில் உருகி ஓடுகிறது! 

"ஏன் அவசரப்படுகிறாய்...? எதற்காக உடனே போக வேண்டும்...? உன் வீட்டு கிரகப்பிரவேசத்தை ஞாயிற்றுக்கிழமை தான் குறித்திருக்கிறார்கள்... இன்று நீ புறப்பட்டால் சரியாக இருக்கும்!" என்கிறார் சுவாமி... அதற்குப் பிறகு இராணுவம் என்ன பேசும்... சுவாமி கொடுத்த அவரது புகைப்படத்தை எடுத்துக் கொண்டு பவ்யமாய்...பக்தனாய் ஊருக்குத் திரும்புகிறது...!

புட்டபர்த்தி பெருமாளை தரிசித்துவிட்டு திருப்பதி வந்து சேர்கிறார் அவர்! வந்ததும் வராததுமாக மனைவியிடம் மாட்டிக் கொள்கிறார்...மாட்டி விடுவதற்காகத் தானே மாலை மாற்றி விடுகிறார்கள்! "என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்... கிரகப்பிரவேசம் பரபரப்பில் எங்களுக்கு உதவி புரியாமல் எங்கேயோ சென்றுவிட்டு... சரி கிரகப்பிரவேசம் எப்போது என்றாவது தெரியுமா? " என மனைவி இராணுவ கமாண்டராய் கேள்வி மேல் கேள்வி... "தெரியும் மா... சுவாமி சொன்னார்... ஞாயிற்றுக் கிழமை தானே!" (சுவாமி சொல்லி இருக்காவிட்டால் பாவம் அதோ கதிதான் அவர்) என பர்த்தி அனுபவம், விபூதி பிரசாதம், சுவாமி அளித்த படம் என ஒவ்வொன்றாக அன்போடு நீட்டுகிறார்... உறவினர் சுவாமியின் திருப்படம் வாங்கிப் பார்த்து "ஏதோ சின்ன பையனாக இருக்கிறாரே!" என விமர்சிக்க... இராணுவ காமண்டரோ (மனைவி) அது என்ன ஒரே ஒரு படம்... நீங்கள் டெல்லியில் மாட்டிக் கொள்வீர்கள்.. புதுவீட்டுக்கு வேண்டாமா? " எனக் கேள்விக் கொக்கியை வீசி மடக்கிப் பேசுகிறார்... தீவிரவாதிகளின் மறைமுக தாக்குதலுக்குக் கூட அஞ்சாத இராணுவ சுப்ரமண்யம் மனைவியின் நேரடி தாக்குதலுக்கு முன் அசைவற்றத் தூணாக நிற்கிறார்...

சரி ஃபிரேம் போட்டு எடுத்துக் கொண்டு வருகிறேன் என அவர் அபௌட்டர்ன் (about turn) போட்டு திரும்ப... "நில்லுங்கள்...! இந்தப் படம் இங்கே புதுவீட்டில் தான் இருக்கும்!" என படத்தை வேகமாய்ப் பறிக்க.. படம் இரண்டாக கிழிகிறது... மனைவி கையில் ஒன்று... கணவர் கையில் ஒன்று ‌... "அய்யோ...சாயி ராம்" என சுப்ரமண்யம் அலற‌... நடந்த விசித்திரத்தில் உறவினர்களே வாயடைத்துப் போகிறார்கள்... கை எடுத்துக் கும்பிடுகிறார்கள்.. இராணுவம் கண் கலங்குகிறது... மனைவி விடுக்கென பறித்ததில் அந்த ஒரு படம் கிழிவது போல் கிழிந்து ஆளுக்கு ஒரு படமாக இரண்டாக சிருஷ்டியாகி இருந்தது... இப்போது ஒரு சுவாமி படம் அந்த இராணுவ வீரரிடம்... இன்னொரு படம் வீட்டு இராணுவ கமாண்டரிடம் (மனைவி)....

கொஞ்ச நேரத்திற்கு பேச்சே எழவில்லை...! 

தன் பக்தரையும் மனைவியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்...அதே நேரத்தில் அவரின் மனைவிக்கும் தன்னை உணர்த்தியாக வேண்டும்!! சுவாமிக்குத் தான் இப்படி எத்தனை வகையான பொறுப்புகள்!!!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -1 / பக்கம் : 39 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


சுவாமி ஒருவரை ஆட்கொண்டுவிட்டால்... அவரின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளித்து விடுகிறார்!! சுவாமிக்கு முதலில் மனிதர் நல்லவராக இருக்க வேண்டும் அதையே பார்க்கிறார்! பிறகே தன் மேல் பக்தி இருக்கிறதா? எனப் பார்க்கிறார்! அடிப்படையில் நல்லவராக இருந்தால் சுவாமி அவரை முக்திக்கே தகுதி உடையவராய் மாற்றுகிறார்! நல்லவரான அந்த இராணுவ அதிகாரி போல்...ஆக நமது பாசாங்குத்தனங்கள் மறைந்து நன்மை நிறைந்து சுவாமி மேலான பக்தியில் திகழ வேண்டும்... "வாழ்க்கை என்பது 'மனிதா நீ எப்படி காட்டிக் கொண்டாய் என்பதை வைத்து அல்ல... உண்மையில் நீ எப்படி இருந்தாய் என்பதை வைத்துத் தான்'!" ஆம் வாழ்க்கை என்பது வெளியே இல்லை உள்ளே தான்!"


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக