தலைப்பு

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

பிரபல மிஸ்டிக் நிபுணர் மேரிலின் பங்கேற்ற படபிடிப்பு தளத்தில் பாபா காட்சி அளித்த பரபரப்பு பொழுதுகள்!

Dr. Marilyn Rossner is the founder-president of the SSF, ... Dr. Marilyn has appeared on television in many nations, including the CBC's Beyond Reason show.

மேரிலின் ரோஸ்னர் ஒரு பிரபல சைக்கிக்(Psychic) நிபுணர்... கானடா தேசம் வாழ் ஆன்மீக அறிவியல் பெல்லோஷிப் கழகத்தின் தலைவர்.. உலகப் புகழ் பெற்றவர்... அவரின் கணவர் ரோஸ்னர் ஒரு பாதிரியார்... அவர்களின் திடுக்கிடும் அமானுஷ்ய சாயி அனுபவங்கள் இதோ...


நூலாசிரியர் பாதிரியார் தம்பதி அனுபவம் விளக்குவதற்கு முன்... சனாதன தர்ம சன்யாசி ஒருவரின் அனுபவத்தை விளக்குகிறார்... பலர் பாபா ஏன் லீலைகள் புரிகிறார்... சிருஷ்டிகள் நிகழ்த்துகிறார் ? எனக் கேட்கிறார்கள்... அது மனிதன் ஏன் சுவாசிக்கிறான் எனக் கேட்பது போல்‌... மனிதனுக்கு சுவாசம் எப்படி அனிச்சை செயலோ அப்படி இறைவன் பாபாவுக்கு லீலை அனிச்சை செயல்! பாபா தனது இயல்பான தெய்வீக சக்தியை முழுவதுமாக காட்டவே இல்லை என ஆச்சர்யம் பேசுகிறார் அந்த சனாதன சன்யாசி! தன்னை முற்றிலும் முழுதாக மட்டுப்படுத்தியே வைத்திருக்கிறார் பாபா என்கிறார்... அப்படிச் சொல்வது வேறு யாருமல்ல சுவாமிகள் காருண்யானந்தரே! 


சுவாமி காருண்யாநந்தா தனது தெய்வத்துடன்...

ஒருமுறை சுவாமிகள் தனது பூட்டிய அறையில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருக்கிறார்... திடீரென முதுகுத்தண்டில் குறு குறு எனும் உணர்வு ... அது மும்பை தர்ம ஷேத்திரம்... பாபா கோவில்...ஜன்னல் வழியே பக்தர்கள் வந்து போவதை ஒரு சாட்சியாக கட்டிலில் சாய்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறார் சுவாமிகள்! அப்போது ஒரு கிச்சு கிச்சு உணர்வு முதுகுத்தண்டில்... என்ன அது என திரும்பிப் பார்க்கிறார்... ஆ வென ஆச்சர்யப்படுகிறார்! பாபா அங்கே தோன்றி பின்னால் குறும்புத்தனமாகச் சிரித்தபடி அவரின் முதுகுத் தண்டில் அந்தக் கிச்சு கிச்சு உணர்வை ஏற்படுத்துகிறார்... அது வெறும் கிச்சு கிச்சு உணர்வல்ல.. குண்டலினி ஏற்றத்திற்காக அவ்வாறு செய்கிறார் பாபா! பாபாவின் ஒரு செயலும் வீணாவதில்லை... ஒரு சொல்லும் நடக்காமல் போவதில்லை... நமக்கு அது அப்போதைக்கு புரியாமல் இருக்கலாம்... அவ்வளவே!

"என்ன சுவாமி மீண்டும் கிருஷ்ண லீலையா?" எனக் கேட்கிறார் சுவாமிகள்! சுவாமிகளுக்கு பாபாவே சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணர் என நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்... அகந்தை அற்ற துறவிகளுக்கு கடவுள் தன்னை எளிதாக இனம் காண வைத்து விடுகிறார்! "எப்படி பூட்டிய அறையில் உள்ளே வந்தீர்கள்?" என குழந்தை போல் கேட்கிறார் சுவாமிகள் காருண்யானந்தா! அதற்கு பாபா "சுவாமி உள்ளே வரணம்னு நெனச்சுட்டா...அந்த சங்கல்பத்தை எது தடுக்க முடியும்?" என குறும்புப் புன்னகையோடு கேட்கிறார்! இதனை சுவாமிகள் ஆச்சர்யத்தோடு பதிவு செய்து சர்வ வல்லமை வாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணரே பாபா என அழுத்தம் திருத்தமாய்ப் பதிவு செய்கிறார்!


பெக்கி மேஸன்

புகழ்பெற்ற எழுத்தாளர் பெக்கி மேஸன் அம்மையாரோ "ஒருவரை எப்படி உச்சத்துக்கு ஒரே தூக்காக தூக்குவது என பாபா நன்கறிவார்... அதே போதில் ஒருவரை எப்படி பூமி மட்டத்துக்குக் கீழே கொண்டு வருவது எனவும் நன்கு அறிவார்!" என்கிறார்... ஆக மேல் நிலையும் கீழ் நிலையும் பாபா லீலையே!

"கீழெது மேலெது யாவிலும் உன் மயம்" எனும் சாயி கவச வரிகளை உணர்ந்து பக்குவம் அடைந்தால் எந்த நிலையும் பக்தரை பாதிப்பதில்லை!

ஒருமுறை  மேரிலின் ரோஸ்னர் எனும் சைக்கிக் பெண்மணி பாபாவை தரிசிக்கிறார்... முழுக்க முழுக்க பேரன்பு வடிவானவர் பாபா என நேர்காணல் அறையில் உணர்கிறார்.. அந்த அனுபவத்தை "அன்பின் ஸ்ப்ரே" என வர்ணிக்கிறார்!

மேலான ஆற்றல்களின் மீடியமாக செயல்படுபவர் அந்த மேரிலின்... அவரது கணவர் ஒரு பாதிரியார்... அவர் பெயர் ரோஸ்னர்! 

ஒருமுறை யோகி என்று சொல்லிக் கொண்ட ஒரு நபர் மேரிலின் அவர்களை சந்தித்து பாபா ஒரு போலி என்பதை நிரூபிக்கப் போகிறேன் எனப் பிதற்றுகிறார்! அதற்கு மேரிலின் உதவியை நாடுகிறார்.. அது 1977. அதுவரை பாபாவை தரிசித்தது கூட இல்லை மேரிலின்... அவரது உள்ளுணர்வோ பாபா போலியாக இருக்க வாய்ப்பில்லை...‌உங்களின் கூற்றில் உடன்பாடில்லை எனச் சொல்லி ஆதரவு தெரிவிக்க மறுத்து விடுகிறார்! அருகிலேயே அணுகாமல்...‌ அனுபவமும் நிகழாமல் தாமே கற்பனை செய்து கொண்டு இறைவன் பாபாவை போலி என சொல்வது நேர்மையற்ற செயல் என்பதை அப்போதே உணர்ந்திருக்கிறார் மேரிலின்!


2 வருடங்கள் கடந்து... கனடா தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி.. பெயர் Reason Beyond (காரணங்களுக்கும் அப்பால்) ... அதனை மேரிலினே முழுக்க முழுக்க நடத்த வேண்டும்... பங்கேற்பாளர்கள் ஒரு மறைவிடத்தில் இருப்பார்கள்... Reason Beyond என ஒரு சீட்டில் கையெழுத்திட்டு மேரிலினிடம் தருவார்கள்... அதை வைத்துக் கொண்டு ... அவர்கள் இன்னார் ,இன்ன பெயர், இன்ன ஊர், என ஒவ்வொன்றாக மேரிலின் சொல்ல வேண்டும்... சவாலான நிகழ்ச்சியே! மேரிலினின் மேலான ஆற்றலின் மீடியமாக இருக்கக் கூடிய நிலையை நிரூபிக்கும் நிகழ்வு... சரியாக வர வேண்டும்... ஓரிரு நாள் படபிடிப்பு... பிறகு அதை ஒருவருடம் ஒளிபரப்புவதாக திட்டம்... துல்லியமாக நிகழ்ச்சி வர வேண்டும்! சொதப்பல் இருக்கக் கூடாது! கரணம் தப்பினால் அவமானம் என்பதாகக் கூட முடிந்திடலாம் ஆக தனக்காக கணவரை பிரார்த்திக்கச் சொல்கிறார் மேரிலின்!

தனது வழிபாட்டு அறையில் ஜீசஸ் படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்கிறார் பாதிரியார் ரோஸ்னெர்... கர்த்தாவே என்கிறார்... அங்கே பாபாவின் படமும் இடம் பெறுகிறது... பாபாவின் படத்தை நோக்கி "ஆண்டவரே! அவள் செய்கிற நிகழ்ச்சிக்கு நீரே உறுதுணையாக இருக்க வேண்டும்... வல்லமை மிகுந்த பரமபிதாவே எங்களை கைவிடாதிரும்! எமது தொழுகையை ஏற்று ஜெயம் தாரும் எங்கள் கர்த்தரே!" என இறைவன் பாபா படத்தின் முன் ஜபிக்கிறார்! 


அதே நேரத்தில் படபிடிப்பு தளத்தில் ஒரு மெல்லிய வெண்ணொளியை அனுபவிக்கிறார் மேரிலின்... அந்த மெல்லொளியானது உறைய... பாபா மேரிலினுக்கு காட்சி அளிக்கிறார்... "ஓ மை லார்ட்!" (என் கர்த்தரே) என்கிறார் மேரிலின்... அதற்கு பாபா "டோன்ட் ஒர்ரி... ஐ வில் ஹெல்ப் யூ வித் த புரோகிராம்! " (கவலைப்படாதே! நான் உனது நிகழ்ச்சிக்கு உதவுகிறேன்!") என்கிறார்...  நிகழ்ச்சி ஆரம்பமாகிறது... சீட்டு ஒவ்வொன்றாக வருகிறது... பங்கேற்பாளர்கள் திரைமறைவில் இருக்கிறார்கள்... பாபா ஒவ்வொன்றாக மேரிலினுக்கு அது யார்? எவர்? அவரின் பின்னணி என ஒவ்வொன்றாக எடுத்துரைக்க... பாபாவின் திருவுருவமும் திருக்குரலும் மேரிலின் மட்டுமே  அனுபவிக்கிறார்... பாபா சொல்வதை அப்படியே மேரிலின் சொல்ல... அரங்கமே புல்லரிக்கிறது... பார்வையாளர்கள் உறைந்து போகிறார்கள்... நிகழ்ச்சி மாபெரும் இதிகாச வெற்றி அடைகிறது! நிகழ்ச்சி முடிந்ததும் தனியறையில் பாபாவை நினைத்து மனம்விட்டு அழுகிறார் மேரிலின்... அது நன்றிப் பெருக்கு... பாபா நம் ஒவ்வொருவருக்கும் செய்து வருகிற நன்மைக்கு நாம் அழ ஆரம்பித்தால் ஜென்ம ஜென்மமாக நாம் பாபாவின் காலடியில் கரைந்து அழுது கொண்டே இருக்க வேண்டி இருக்கும்!


பாதிரியார் தொழுகைக்குள்ளும் மேரிலின் அழுகைக்குள்ளும் பாபா மேலான மிகப் பெரிய பக்தி அடங்கி இருக்கிறது... ஒருமுறை பாபா மேரிலின் கணவரான பாதிரியார் ரோஸ்னரிடம் குழந்தை போல் "டூ யூ லைக் சுவாமி?" எனக் கேட்கிறார்! என்ன சொல்வார் அந்த பாதிரியார்?! பரமபிதாவே தன்னை உனக்குப் பிடித்திருக்கிறதா? எனக் கேட்கிற போது! கண்கலங்குகிறார் பாதிரியார்...! கண்ணீரால் கன்னத்தில் கவிதை எழுதுகிறார் அந்த பாதிரியார் எனும் பக்திப் பாரதியார்!

கடவுளே குழந்தையும் கடவுளே தாயும்... வித்தியாசமான கலவையே இறைவன் பாபா!


(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி / பக்கம் : 116 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


புல்லரிக்கும் படியான அனுபவங்களையும் பக்குவம் பூப்பூக்கும் படியான அனுபவங்களையும் பாபா இன்றளவும் நிறைய அரங்கேற்றிக் கொண்டே வருகிறார்! இறைவன் பாபா 24/7. பாபா நிகழ்த்தி வருகிற அனுபவங்களை விவரிக்க ஆரம்பித்தால் அது வார்த்தைக்கு அப்பாற்பட்டது... எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது... விஞ்ஞானத்தை தாண்டியது... மனவீதியை உறைய வைப்பது! அதற்குக் காரணம் கட்டுகளற்ற பாபாவின் தனிப்பெரும் கருணையே! சாட்சாத் பரமபிதாவே பாபா! தனது நீள் பிரேம கரங்களால் நம்மை மீட்கவே தன்னை வெளிப்படுத்தி நம்மையும் ஒளிப்படுத்தி தொடர்கிறார்... தொடர்வார்! இறைவன் பாபாவுக்கு இடைவேளையும் இல்லை... நமக்கும் பாபாவுக்குமான இடைவெளியும் எப்போதுமே இல்லை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக