அடர்ந்த காட்டில் வசித்த காட்டு வாசியினருக்கு தன் நீள் கருணை நீட்டி... அபயமளித்து... அளவற்ற அன்பு செலுத்தி... அரவணைத்து எவ்வகையில் சுவாமி வழிகாட்டினார் என்பதை ஆச்சர்யமுடன் வாசிக்கப் போகிறீர்கள் இதோ...
அவர்கள் காட்டுவாசியினர்கள்... அடர்ந்த காட்டில் வசிப்பவர்கள்... சுவாமி ஸ்ரீ ராமராய் அவதரித்த போது கானக விஜயத்தில் மரஉரி தரித்தது போலவே இவர்களும் அவ்வுடை தரித்தவர்கள்... உலகத்தின் ஆகச் சிறந்த பிழையே ஏழை பணக்கார பேதமே! ஆனால் சுவாமியிடம் அது அறவே இல்லை... சமமான பேரன்பையே அவர் பகிர்ந்து கொள்கிறார்.. அதுவே ஆன்மீகம்.. எப்படி மனிதன் வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியபடி இப்படித் தான் என தன்னையே உதாரணமாக்கி வழிகாட்டுவதற்கே அவதாரம் மண்ணில் இறங்குவது... அப்படி இறங்கிய சுவாமி எவ்வகை பேதமும் பார்த்ததே இல்லை...! அது 1960கள்... ராஜமுந்திரி பக்கத்திலுள்ள அடர் காடுகளில் வசிப்பவர்கள்.. அக்காட்டு ராஜாக்கள் அவர்கள்... அவர் பெயர் ராமராஜு.. அவரின் தந்தையார் ராமமூர்த்தி ராஜு... அப்பகுதி காடுகளின் ராஜாவான அவர்களின் குடும்பம் 1964 வரை காட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை... அவர்களுக்கு சர்வமும் காடுகளே... காட்டுவாசியினருக்கும் நாட்டுவாசியினருக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் கள்ளம் கபடமற்றவர்கள்.. இவர்கள் அப்படி இல்லை... ஆனால் அவர்களுக்கு இருக்கும் நெஞ்சுரம் கூட இவர்களிடம் இல்லை...
அவர்களின் குலதெய்வம் துர்காதேவி.. இஷ்ட தெய்வம் ஸ்ரீ கிருஷ்ணர்.. பிறகு எப்படி சுவாமி அருள் புரியாமல் போவார்?!
1964ல் ஒருநாள் பெற்றோர் ராமராஜுவின் திருமணம் பற்றிப் பேசுகிறார்கள்... ராமராஜுவோ அதனை யோசித்தபடி உறங்கிவிடுகிறார்... சுவாமி அன்றிரவு கனவில் செல்கிறார்.. அந்த காட்டுவாசி குடும்பத்தினர்க்கு சுவாமி பற்றி எதுவுமே தெரியாது.. அவர் பெயர் கூட தெரியாது... அவசியமில்லை.. சுவாமியை எந்த நாமம் சொல்லி அழைத்தாலும் வந்துவிடுகிறார்..! அழைப்பது சுயநலமற்ற பக்தியோடு இருக்க வேண்டும்.. அவ்வளவே! இதயத்தை தவிர எதையும் பார்ப்பதில்லை இறைவன்... அந்தக் கனவில் ஆரஞ்சு உடையோடு புஸ் புஸ் தலையோடு சுவாமி தோன்றுகிறார்.. அதுவரை அப்படி ஒரு வித்தியாசமான ரூபத்தைக் கூட பார்த்ததில்லை ராமராஜு... "நீங்கள் யார்! எனக்கு தெரியவில்லையே!" எனக் கேட்கிறார் ராமராஜு... "உலகின் பாரதத்தில் ஒரு ஆள்" என்கிறார் சுவாமி சர்வ சாதாரணமாக... அவ்வளவு எளிமை சுவாமி..! அப்படிப்பட்ட சுவாமியை வழிபடுபவர்களும் எளிமையோடு இருக்க வேண்டும் என இக்கனவின் வழிப் புரிகிறது.. "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" என ஆச்சர்யமோடு கேட்கிறார்... "நீ எங்கு நினைக்கிறாயோ... அங்கு இருக்கிறேன்!" என்கிறார் சுவாமி.. சுவாமியின் சர்வ வியாபகப் பேராற்றல் அது!! கனவு மறைகிறது... உடனே விழித்து பெற்றோரை எழுப்பி ஆச்சர்யப்பட்டு சொல்கிறார் ராமராஜு... தந்தையோ இந்த சின்ன வயதில் இப்படித்தான் தெரியும்...அதுவெல்லாம் பொய்த் தோற்றம்... போய் தூங்கு!" எனப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தானும் தூங்கிவிடுகிறார்..
அன்று இரவே தந்தை ராமமூர்த்திராஜுவின் கனவில் செல்கிறார் சுவாமி... அதே ஆரஞ்சு உடை... அவர்களின் அடர் காடுகள் போல் அடர் கேச ரூபம்... அவரிடம் கன்னடத்தில் "ராமமூர்த்தி... நீ என்ன நினைத்து இந்தக் காட்டிலேயே இருக்கிறாய்... உன் பிள்ளை ராஜு சொன்னதை நீ கேட்காமல் விட்டாயே... நான் யார் ? என நினைக்கிறாய்... !?" எனக் கூறிக் கொண்டே தன் ஸ்ரீகிருஷ்ண ரூபம் காட்டுகிறார் சுவாமி... சுவாமி ரூபம் அவருக்கு பரிச்சயம் இல்லை என்றாலும்... ஸ்ரீகிருஷ்ண ரூபம் பரிச்சயம்... புல்லரித்துப் போய் சுவாமியின் பாதத்தில் விழுகிறார்...தனக்கு கன்னடம் தெரியும் என சுவாமிக்கு எப்படி தெரியும்!? என ஆச்சர்யப்படுகிறார்... கனவு கலைகிறது..
எப்பேர்ப்பட்ட பாக்கியம் அவர் பெற்றது!! காலை 8 மணிக்கு எழுந்ததும் பரபரப்பாகி முன்கனவு சொன்ன மகனிடம் தன் கனவையும் சொல்கிறார்...உன்னிடம் என்ன பேசினார் ? என கேட்ட மகனிடம் கனவில் நடந்ததைச் சொல்கிறார்... சுவாமியை பார்க்க வேண்டும் என அதே நாள் கிளம்புகிறார்கள்... போகிற வழியில் மைசூர் சாமுண்டேஷ்வரி தரிசனம் செய்யலாம் என நினைத்து.. அதுவரை தாங்கள் அணிந்த மரவுரியை துறந்து கடையில் சென்று கௌபீனம் (கோவணம்) வாங்கி கட்டிக் கொள்கிறார்கள்...தன் தந்தையை தேடி வந்து கௌபீனத்தோடு நின்ற பகவான் ஸ்ரீ ரமணராய் அந்த மைசூர் பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறார்கள் அவர்கள்...
அப்போது ஒரு திறந்த வெளி காரில் சுவாமியே அபயஹஸ்தம் காட்டியபடி பக்தர்களுக்கு தரிசனம் தந்தபடி செல்கிறார்... அதைக் கண்டு பரவசமடைந்த தந்தை "டேய்.. ராஜு இவர் தான் நம் கனவில் வந்தவர்... " என ஓடோடிச் சென்று தரிசனம் பெறுகிறார்கள்... இவர்களை பேருந்து நிறுத்தத்தில் காக்க வைத்ததே சுவாமி இப்படி ஒரு முதல் தரிசனத்தை அளிக்கத் தானே! எல்லாம் எதேர்ச்சையாக நடப்பது போல் மனிதன் நினைக்கிறான்.. இல்லை... ஒவ்வொரு நிகழ்வும் சுவாமி சங்கப்பத்தோடே நிகழ்கிறது என்பதற்கு இப்படிப்பட்ட பலகோடி உதாரணங்கள் சொல்லலாம்! உடனே பக்கத்து தேநீர் கடையில் விசாரிக்கிறார்கள்...
"இவர் தான் சாய்பாபா... இப்பொழுது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்... ஆந்திரா புட்டபர்த்தி என்னும் ஊர் சென்றால் பார்க்கலாம்" என்கிறார்... தேநீரில் சுடச்சுட ஆவி பறந்து கொண்டிருக்கிறது... இவர்களின் கால்களோ புட்டபர்த்திக்கு பறக்க துடிக்கிறது... அவர்களுடைய காட்டில் புழங்கியது வெள்ளி நாணயங்களே... அதில் 10 ரூபாய் கடையில் கொடுத்து 25 ரூபாய் வாங்கி... ரயிலில் டிக்கட் வாங்காமல் தர்மாபுரம் வரை சென்று ... அங்கிருந்து ஒரு ரிக்ஷாகாரர் உதவ பர்த்தி வருகிறார்கள் அந்த கௌபீன பால ரமணர்கள்...! சுவாமி வர 3 நாள் ஆகும் எனக் கேள்விப்பட்டு... வேப்பமரத்தடியிலே தங்குகிறார்கள்...காட்டிலேயே வாழ்ந்தவர்களுக்கு மரத்தடியில் வசிப்பதொன்றும் சிரமமில்லை தான்! ஒரு பக்தர் சாப்பாடும் போடுகிறார்... எப்படி தன் பிள்ளைகளின் பசி பொறுப்பாள் சாயித்தாய்!?
அது வியாழக் கிழமை... 1964ல் பெரிதாக கூட்டமில்லா ஒரு பொழுதில் வந்திருந்த பக்தர்கள் வரிசையோடு செல்ல... இவர்களும் சேர்ந்து கொள்கிறார்கள்... சுவாமி அருகே வருகையில்... கைகூப்பியபடி... "என்ன சாமி.. எங்க கனவுல வந்தாயே!" என்கிறார் தந்தை ராமமூர்த்தி ராஜு... அதற்கு சுவாமி சிரித்தபடி "பிச்சிவாடா (பைத்தியக்காரா) இன்னும் காட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்...? காடு வேண்டாம்... நாட்டில் வந்து இரு! இனி நான் எப்பொழுதும் உன் கூடவே இருக்கிறேன்! என்று கருணையோடு மொழிகிறார்..
தந்தையோ கண்ணீரில் வழிகிறார்... மலையருவியாய் விழியருவி மொழிகளைக் கடந்த பக்தியை மோனத்தில் பறைசாற்றியபடி சுவாமியின் கால்களில் விழுகிறது... சுவாமி அவர்களுக்கு சிருஷ்டி விபூதி தந்து வழியனுப்புகிறார்...
வீட்டிற்கு அதாவது காட்டிற்கு வரும் போது ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது..."நீங்கள் இருவரும் இங்கே இல்லாத போது...அந்த சாமி என் கனவில் வந்துச்சு" என்கிறார் ராமமூர்த்தி ராஜு மனைவி... "உன் கணவர் பிள்ளை இருவரும் என்னிடம் பத்திரமாக இருக்கிறார்கள்... இனிமேல் நான் உங்கள் வீட்டில் எப்போதும் இருப்பேன்!" என்கிறார் பரம தயாள சுவாமி... தனியாக இருக்கும் பெண்மணிக்கு தைரியம் அளித்து காவலாய் நிற்க கடவுளால் மட்டுமே முடியும்!! சுவாமி யார் என உணர்கிறார்கள் அவர்கள்... 6 நாட்கள் வராத தன் குடும்பத்தை நினைத்து அப்பெண்மணி அழுததால் சுவாமி கனவில் பறந்தோடி வந்திருக்கிறார்.. "இந்த சாமியா... ?" என தாங்கள் வாங்கி வந்த சுவாமியின் திருப்படத்தைக் காட்ட... "ஆமா ஆமா இதே சாமி தான்" என்கிறார் அவரது மனைவி...!
ராமராஜுவுக்கு திருமண பேச்சு மீண்டும் தொடங்கியபோது... சுவாமி மீண்டும் ராஜுவின் தந்தை கனவில் சென்று "நம் கோவில் வந்து என்னைப் பார்க்காமலா உன் மகனுக்கு திருமணம்?" எனக் கேட்கிறார்... உடனே பர்த்தி வருகிறார் ராமமூர்த்தி ராஜு.. சுவாமி சிருஷ்டி விபூதி அளித்தபடி "இது உன் மகனுக்கு.. வரப்போகும் மருமகளுக்கு..." என அள்ளி வழங்குகிறார்... கிள்ளி வழங்கியே அள்ளி வழங்கியதாக அலட்டிக் கொள்வது மனித சுபாவம்.. அள்ளி அள்ளி வழங்கியும் வழங்கியதை வெளியே சொல்லாமல் இருப்பது இறைவன் சுபாவம்! திருமணத்திற்குப் பின் ராஜமுந்திரி பக்கம் ஏலூர் வந்து சுவாமி சொன்னபடியே குடியேறுகிறார்கள்... அது தான் பக்தி.. சுவாமி சொல்லியவற்றை கடைபிடிப்பதே பக்தி என்பதை நாட்டுவாசியினர்க்கு அக்காட்டுவாசியினர் பாடம் எடுக்கிறார்கள்! பிறகு மருமகளோடு குடும்பத்தை அழைத்துப்போகிறார் ராமமூர்த்தி ராஜு... பெரிதாகக் கூட்டமே இல்லை... சுவாமியை நமஸ்கரிக்கிறார்கள்.. "உனக்கு என்ன வேண்டும்? குழந்தையா? 12 வேண்டாம்... 7 வைத்துக் கொள்ளுங்கள்!" என்கிறார் சுவாமி... ராஜுவோ "பெண் அதிகம் வேண்டாம்" எனச் சொல்லியவுடன் புதுமனைவி அவரிடம் அதே இடத்தில் சண்டைக்குப் போக... உடனே சுவாமியோ "கணவனிடம் சண்டை போடக் கூடாது ... ராஜு சொன்னபடி நடக்கட்டும்! ஷிர்டி போய்விட்டு மீண்டும் இங்கே வா" என்கிறார் சுவாமி!
சுவாமி சொன்னபடி பிறந்தது 5 ஆண் குழந்தையும்... 2 பெண் குழந்தையும்... ராஜுவுக்கும் மகிழ்ச்சியே! குழந்தைகள் பிறந்த உடன் தங்கள் நன்றிகளை தட்டில் வைத்திருந்த பூக்களின் நறுமணத்தால் பேச வைத்தது அக்காட்டுவாசியினர் குடும்பம்... சுவாமி பூவை எடுத்தபடி "இது பூவல்ல உனது மனது" என்று புன்னகை செய்கிறார்... சுவாமி ஒவ்வொரு முறை புன்னகை செய்யும் போதும் இவ்வுலகில் பூக்காத பூக்கள் எல்லாம் சுவாமியின் உதடுகளில் பூத்தபடி ஜென்ம சாபல்யம் அடைகின்றன!! மாலை தரிசனத்தில் சுவாமி அவர்களை உடனே அழைத்து தன்னுடைய 5 ஆரஞ்சு ஜிப்பாக்களை கொடுத்து... "ராமராஜு இனிமேல் வெளியே போகும்போது இதையே அணிந்து கொள்! மற்றவர்கள் உன்னைக் கேட்டால் சுவாமி கொடுத்தார் எனச் சொல்!" என்கிறார்... சுவாமி தன் உடை தந்து வழிபடச் சொல்லவில்லை.. அணிந்து கொள் என்கிறார்... எப்பேர்ப்பட்ட கருணை அது... எப்பேர்ப்பட்ட பாக்கியம் ராமமூர்த்தி ராஜு பெற்றது!! "இறைவனின் இரக்க சுபாவத்தை இதிகாசங்கள் கூட முழுதாக எடுத்தியம்பியது இல்லை!"
"என்னைப் பற்றி எங்கும் பிரச்சாரம் செய்யாதே! யாராவது கேட்டால் மட்டும் சொல்!" என்கிறார்..
அக்காட்டுவாசியினரிடம் நூலாசிரியர் சுவாமி யார் ? எனக்கேட்ட போது
"சிலர் மனிதன் என்கிறார்கள்.. சிலர் ஷிர்டி சாயி தான் பாபா என்கிறார்கள்... துவாபர யுகத்தில் கிருஷ்ணர் போல் இந்தக் கலியுகத்தில் சாமி தான் கிருஷ்ணர்...முகத்தை பார்த்தாலேயே அது தெரிகிறதே!! உண்மையான பக்தர் தானே அதை பார்க்க முடியும்!" என்று ஒரு போடு போடுகிறார் ராமமூர்த்திராஜூ...
சுவாமியிடம் சரணாகதி அடைந்துவிட்டால் காட்டுவாசியினர் கூட கீதை மொழியலாம் என கலியுகத்தில் உணரமுடிகிறது!!
(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 5/ பக்கம் : 30/ ஆசிரியர் திருமதி சாயிசரஜ்)
பெருங்கருணை என்பது யாதெனில் அது சுவாமியிடம் மட்டுமே உணரக்கூடியது!
தன்னையே இந்த மானுடத்திற்கு அளித்த சுவாமிக்கு தன் உடைகளை அளிப்பதொன்றும் அத்தனை கடினம் இல்லை தான்...! சுவாமியின் அருள்மொழிகளை நாம் கடைபிடிக்கும் போதே நாம் சுவாமியை நேசிப்பதற்கும்... சுவாமி பக்தர் என்பதற்கும் பொருளிருக்கிறது! என்பதை காட்டுவாசியினரே பாடம் எடுக்கிறார்கள்!
அவர்கள் வாழ்க்கை புனிதமானது!! காரணம் அவர்கள் இதயம் பரிசுத்தமானது!! எங்கே இதயப் பரிசுத்தம் இயங்குகிறதோ அங்கேயே புனிதம் புறப்பட்டு பூமியையே புனருத்தாரணம் புரிகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
ஓம் சாயிராம்
பதிலளிநீக்கு