தலைப்பு

புதன், 12 ஜனவரி, 2022

PART 8 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!


"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்


அந்த ஜைமினி பாகவதத்தில் அவர்கள் அப்படி என்ன வாசித்தார்கள்? சமாதி நிலைகள் எத்தனை? பிரம்மாவுக்கு கூட இல்லாத ஒரு சமாதி நிலை சுவாமிக்கு எப்படி வந்தது? உண்மையில் சுவாமி யார்? என்பவைப் பற்றிய மர்ம முடிச்சுகள் இதோ முதன்முதலாக அவிழ்க்கப்படுகின்றன... வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம்! 


சொட் சொட் என கண்ணீர்த் துளி அந்தப் புத்தகத்தில் விழுந்தது... 11 ஜோடி கண்கள்... 12 மணிநேரம் தியானத் தாழ் போட்டபடி லயித்த கண்கள் அவை... இமயப் பனி முகடுகளை தவிர எதையும் காணா கண்கள் அவை... விருப்பு வெறுப்பற்ற இதயத்தின் ஜன்னல்கள் அவை... துறவிகள் கண்கலங்குவார்களா? ஆம்... கருணை கரைபுரண்டு ஓடும்போது ஈர்க்கசிவு இருக்கத்தான் செய்யும்...! சுவாமியின் கருணை எனும் ஆழ்கடலை ஒரு ஆழமான கண்ணீர்த்துளி அளந்துவிட முயற்சி செய்கிறது! அது அளப்பதற்கு குதித்துவிழுகையில் அந்த ஆழ்கடலோடே கலந்து போகிறது...அது ஜைமினி பாரதம்.. அதை இயற்றியவர் ஜைமினி மகரிஷி.. வியாச மகரிஷியின் சீடர்... பூர்வ மீமாம்ஸ தர்சனம் பற்றி வெளிக்கொண்டு வருவதில் தவமுறையில் வெற்றி அடைந்தவர் அவர்... பூர்வ மீமாம்ஸம் என்பது வேதங்களின் ஒரு பகுதியான கர்மகாண்டத்தை போதிக்கிறது.. அறம், பொருள் , இன்பம் , வீடு(மோட்சம்) பற்றிய வழிகாட்டுதல்கள் அவை! இப்போது பொருளையும் இன்பத்தையும் மட்டும் இறுகப்பிடிக்க முயற்சிப்பதில் மனிதன் அறத்தையும்,  வீட்டையும் தொலைத்துவிடுகிறான்... நான்கு சக்கரம் இருந்தாலே அது தேர்! இல்லையெனில் குடைசாய்ந்துவிடும்! 

அவரது குருவான வியாசர் எழுதிய மகா பாரதத்தில் காணக் கிடைக்காத பலவித சம்பவங்கள் ஜைமினி பாகவதத்தில் உயிர்ப்போடு இருக்கிறது... இந்தியாவின் பல புராதன புராண புத்தகங்கள் அழிக்கப்பட்டன... பல தொன்ம பல்கலைக்கழகங்கள் படையெடுப்பில் கொளுத்தப்பட்டன... ஆம்.. குரங்கு கை பூமாலையானது பாரத பொக்கிஷங்கள்! வெளி உலகில் இதன் 18 பாகங்களில் அஸ்வமேத யாகம் பற்றிய ஒரே ஒரு பாகம் எஞ்சியிருக்கிறது... முழுமையான ஜைமினி பாகவதமோ பெட்டியில் பத்திரப்படுத்தப்பட்டு ஒரு மலை குகையில் வைக்கப்படுகிறது...! வழிபட்டு வந்த கோவில் சிலாரூப தெய்வங்களை கூட படையெடுப்பில் இப்படித்தான் நமது முன்னோர்கள் காப்பாற்றி வந்திருக்கின்றனர்... அந்தப் பெட்டி அந்த 11 தவபுருஷர்களுக்கும் கிடைக்கிறது... வருகிற சத்ய யுகத்தில் ஒரு உண்மையான மதத்தின் ஆரம்பம் பற்றி அந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது...

"இதையும் அறிந்து கொள்வதற்குத் தான் சுவாமி என் ஆயுளை நீட்டினீர்களா?" என அந்த தலைமை நேபாள துறவி கண்கலங்குகிறார்... ஆம்! அவர் அட்சயப்பாத்திரத்தை மீட்டு கரை ஒதுங்கும் போது இறந்து போகிறார் அல்லவா...! சுவாமி ஒரு முறை குகையில் தோன்றியபோது "ஆம்.. அந்த நொடியோடு உன் ஆயுள் முடிந்துவிட்டது... நான் தான் உனக்கு புனர்ஜென்மமும் , புதிய உடலும் அளித்தேன்... உண்மையில் உன் ஆயுள் 33 தான்! உன் ஆயுளை 120 வயதிற்கு அதிகப்படுத்தி இருக்கிறேன்... இந்த உடலை ஆன்ம சாதனைக்குப் பயன்படுத்தி முக்தி பெறுவாய்!" என சொன்னது அவரின் நினைவுக்கு வர விழிகள் கசிகின்றன...!

 குகை ஆசிரமத்திற்கு வருகை புரிந்த இமய யோகிகளும் , சித்தர்களும் அதை படித்துணர ஆச்சர்யமே அடைந்தனர்! ஜைமினி மகரிஷி 5000 ஆண்டுகளுக்கு முன்பே சுவாமியின் அவதாரம் பற்றி மிகச்சரியாக கணித்து குறிப்பிட்டிருக்கிறார்! அது தான் அவர்களின் ஆச்சர்யமே!! சாயி என்ற சொல்லோடு அது இடம்பெற்றிருப்பது தான் அந்த அற்புதமே! 

            "சிவபெருமானின் அவதாரமான இறைவன் ஸ்ரீ சத்யசாயிபாபாவை பற்றி மிக விரிவான , முழுமையான வர்ணனை அடங்கியுள்ளது ஜைமினி பாகவதத்தின் விசேஷம்! அவதார புருஷரின் பெயர், பரம்பரை, அற்புத லீலைகள் ஆகியவை விரிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது!"

அது எப்படி அந்த ஜைமினி மகரிஷிக்கு சாத்தியமெனில்... ஆம் சாத்தியம்! தியான சமாதியில் காலநேரம் நின்று போவதில்... மூன்று காலங்களும் ஒரே நேர்கோட்டில் நிற்கிறது... ஒரு புத்தக அலமாரியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற புத்தகங்கள் போல் மூன்று காலங்கள் நேர்வரிசையில் தம்மை அவை சமாதி நிலை அடைந்தவர்க்கு வெளிப்படுத்துகின்றன...!

மூன்றுவிதமான சமாதி நிலைகள் உள்ளன... அவை ஜடசமாதி, சேதன சமாதி , சின்மய சமாதி... சுருக்கமான விளக்கம்: ஜடசமாதியில் உடல் மாதக்கணக்கில் உறைந்துவிடும்...அடுத்த நிலையான சேதன சமாதியில் மனம் தேய்ந்து தேய்ந்து சூன்யமாகிவிடுகிறது... சின்மய சமாதியில் பரமாத்மாவின் நிலையான "எங்கும் நிறைதல் : எல்லாம் அறிதல்: எதுவும் செய்தல் (ஐந்தொழில்)" என்பவற்றில் ஒருவர் வந்துவிடுகிறார்...! உங்களுக்கு ஒன்று தெரியுமா? பெரிய பெரிய மகரிஷிகள் , சித்தர்கள் , இமய யோகிகள் கூட சேதன சமாதியை தாண்டியதில்லை! வியாச மகரிஷி இதே போல் தான்... ஏன் பிரம்மாவுக்கு கூட சின்மய சமாதி வாய்க்கவில்லை! சின்மய சமாதி நிலை அடைவது மிகமிகக் கடினம்...! அது பல ஜென்மத்து தொடர் தியான சமாதிகளால் மட்டுமே சாத்தியம்...! ஆனால் ஜென்ம மாற்றங்களில் அப்படி ஒரு தவ சூழ்நிலை வாய்க்குமா? என தெரியாது! 

இப்படி எந்த வித தியானங்களிலும் ஈடுபடாமல் அவதரிக்கும் போதே இயல்பாக சின்மய சமாதி உயர்நிலையை  கைவரப்பெற்றிருந்த இருவர்.. ஒருவர் ஸ்ரீ கிருஷ்ணர்... இன்னொருவர் ஸ்ரீ சத்ய சாயி... ஆகையால் தான் சுவாமியால் தான் அவதாரம் என உலகிற்கு வெளிப்படுத்துவதற்கு முன்னரே பல வித விநோத அற்புதங்களை நிகழ்த்த முடிந்திருக்கிறது...  மேலும் சுவாமி கொடுத்த விஸ்வரூப தரிசனங்கள்...ஒளிரூப தரிசனங்கள்...தசாவதார தரிசனங்கள்... தியான தரிசனங்கள்... கனவு தரிசனங்கள்... அதைப் பதிவு செய்த பக்தரின் அனுபவப் புத்தகங்கள் (அன்யதா சரணம் நாஸ்தி, சத்யசாயி ஆனந்ததாயி இத்யாதி) ஏராளம்...!

ஆனால் சுவாமியும் கிருஷ்ணரும் அவ்வளவு எளிமை... மேய்ச்சல் நிலத்தில் உணவு வேளையில் தனது தோழனின் எச்சில் உணவை கிருஷ்ணர் சாப்பிட்டதும்... சுவாமி தனது பக்தையின் சப்பாத்தியை சாம்பல் தொட்டு "சட்னிலாம் சிரமப்பட்டு அறைக்க வேண்டாம்‌... இதுவே ருசியாக இருக்கிறது!" என உண்டதும்... மண்ணையே உண்டவர்க்கு சாம்பல் ருசிக்காதா என்ன!? பிரம்மா கவர்ந்து போன கோபர்களுக்காக... மாய வெளியில் கிருஷ்ணர் பசுக்களோடு சேர்த்து கோபர்களையே சிருஷ்டித்து வீடு வந்து சேர்ந்ததும்... நேர்காணல் அறையில் சுவாமி வெட்ட வெளியில் ஒரு குரங்கையே சிருஷ்டித்து...‌அவர் கை உயர உயர அதுவும் உயர்ந்து... அதை குதிக்க வைத்து பிறகு மறைய வைத்ததும்... தங்களுடைய சின்மய சமாதியை வைத்துத் தான்! அது ஸ்ரீ கிருஷ்ணரின்... சுவாமியின் இறை இயல்பு.. பேரான்ம சுபாவம்!!  இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது! சுவாமி பரப்பிரம்மம்!! 

 ஏதுமற்ற மனிதன் தான் இறுமாந்திருக்கிறான்! எல்லாம் வல்ல இறைவன் எளியமையாகவே இருக்கிறார்! ஆகச் சிறந்த பிரபஞ்ச முரண் இவை!!


ஆக சுவாமி எந்த தவம் செய்தும் சின்மய சமாதியை அடையவில்லை... காற்றுக்கு யார் நடைபயிற்சி அளிப்பது? பூக்கள் சென்ட் அடித்துக் கொண்டா மணக்கிறது?  சுட்டால் தான் சூரியன்... குளிர்ந்தால் அது நிலா! "எதை / எந்த உயர் நிலையை யோகிகள் தவமியற்றி அடைய முற்படுகிறார்களோ அந்த உயர் நிலையே ஸ்ரீ கிருஷ்ணராக ஸ்ரீ சத்ய சாயியாக வடிவெடுத்து வந்தது! அருவி ஏன் குதிக்கிறது? நெருப்பு ஏன் சுடுகிறது? எனக் கேட்போமா? அதனுடைய சுபாவம் அது ... அதுபோல் இறைவனின் சுபாவம் சின்மய சமாதி! 

முன்பு ஒருமுறை நமது குகையின் தலைமை  நேபாள துறவி காத்மாண்டுவில் 40 நாள் ஜடசமாதியில் ஆழ்ந்து போகிறார்.. மக்கள் அவர் நிலை பார்த்து மாலை மரியாதையோடு வழிபட ஆரம்பித்து.. ஆன்மீகச் சொற்பொழிவை கேட்க ஆசைப்படுகிறார்கள்... அவரும் பேசுகிறார்... பிறகு சுவாமியை வந்து தரிசிக்கையில் "ஜட சமாதியில் இருந்து நீ சேதன சமாதிக்கே வரவில்லை அதற்குள் இந்த சொற்பொழிவுப் புகழ்...  வழிபாட்டுப் பெயர் எல்லாம் தேவையா? ஒழுங்காக தியானம் செய்து சேதன சமாதியை அடைய வேண்டும் நீ!" என அவரை ஆற்றுப்படுத்துகிறார்!! 

(ஆதாரம் : சாயி லீலைகளும் நரநாராயண குகை ஆசிரமும் - 2 / மூலம் : மகேஸ்வரானந்தா/ தமிழில் விஜயராமன்)


அது எப்படி பிரம்மாவும் சிருஷ்டிக்கிறார்? சுவாமியும் சிருஷ்டிக்கிறார்? இருவரும் ஒன்றுதானே என நீங்கள்  நினைக்கலாம்! இல்லை பிரம்மாவுக்கு சிருஷ்டிக்க ஒரு ஆதாரப் பொருள் தேவைப்படுகிறது... மலருக்கு மகரந்த சேர்க்கை நிகழ வேண்டும்... பாறையில் பனி உருகி நீரூற்றாக வேண்டும்.. இயற்கைப்படி ஒன்று நிகழ்ந்தால் தான் இன்னொன்று... என்பது போல்...! ஆனால் சுவாமிக்கோ எவ்வித ஆதாரப் பொருட்களும் தேவையில்லை... மலரில்லாமல் மணம் பரப்ப முடியும்! சூரியனில்லாமல் வெளிச்சம் நிரப்ப முடியும்! சுவாமி தன் பேரிருப்பை எத்தனையோ முறை மணத்தாலும் ஒளியாலும் நமக்கு உணர்த்தியிருக்கிறார்! ஆக... சூனியத்திலிருந்தே சுவாமியால் எதன் உதவியுமின்றியும் எதையும் சிருஷ்டிக்க முடியும்!! அதுதான் பிரம்மாவுக்கும் பரப்பிரம்மத்திற்கும் (சுவாமிக்கும்) உள்ள வித்தியாசம்!

      அந்த 11 நரநாராயண இளம் துறவிகளிடம் இமய யோகிகள் நட்புறவோடு இருந்தார்கள்... ஆக ஒரு கேள்வி எழுகிறது! இன்றளவும் பிரம்மிப்போடு திகழும் மகாவதார் பாபாஜியை அவர்கள் தரிசித்தார்களா? சரி ஒரு இடைவெளியில் தான் புட்டபர்த்தி வந்த அந்த தலைமை நேபாள துறவி மகேஸ்வரானந்தாவுக்கு நேர்காணல் வழங்குகிறார்? அது எப்படி? 18,000 அடியிலிருந்து பர்த்திக்கு குதித்து வந்தாரா? 

என நீங்கள் யோசிப்பதற்குள்... அங்கே பாருங்கள்!!

பனி மறைத்த இமய வெளியில் திடீரென சூரியன் உதித்துப் பெரிதாகிறது...அந்த 11 பேர்களும் ஆச்சர்யப்படுகின்றனர்... அப்போது அந்த கிழக்கு சூரியனையே கிழித்துக் கொண்டு சிகர உச்சியில் இவர்களை நோக்கி வருகிறது... தனது சிறகுகளை விரித்து சடசடவென ஒலியெழுப்பியபடியே ஒரு உலோகப் பறவை...! என்ன அது? என அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!! 


இமயப் பயணம் 

இன்னும் குளிரும்...! 


  பக்தியுடன்

வைரபாரதி


ஸ்ரீ மகேஸ்வரானந்தா சுவாமிஜி எழுதிய அரிய அதி அற்புத புத்தகமான "சாயி லீலைகள் நரநாராயண குகை ஆசிரமம் - பாகம் 1,2&3" இவற்றை மொத்தமாக உள்வாங்கி... அதன் சாராம்சத்தை பயண சுவாரஸ்யமாய்... அதன் தெய்வீகத் திருச் சம்பவங்களை முறைமைப் படுத்தி...தெள்ளத் தெளிவான வரிசையில்... முதன்முறையாக உங்களுக்கு இமயம் நோக்கிய பயண அனுபவம் ஏற்படுத்தியபடி 9 பாகங்களாக வெளிவருகிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக