மூன்று சாயி அவதாரங்களுக்கான ஒப்பீடும்.. ஸ்ரீ பிரேம சாயி அவதாரப் பிரகடனத்திற்குப் பின் எவ்வாறெல்லாம் இந்த பூமி மாறுதல்கள் அடையும்...சுவாமி அதற்கான எவ்வகை சூட்சும சான்றுகளை வழங்கி இருக்கிறார்... அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முற்படும் ஒரு சராசரி பக்தனின் அகப்பார்வை இதோ...
"அவர் இப்போது தான் தயாராகிக் கொண்டிருக்கிறார்... ஆகவே முழுதாய் காட்ட இயலாது! இது தான் அவரை நான் முதன்முதலில் இந்த உலகத்திற்கே காட்டியிருக்கிறேன்!"
இப்படிச் சொன்னது வேறு யாருமல்ல சாட்சாத் சுவாமியே... கல்கி அவதாரங்களான மூவரில் இரண்டாவது பேரவதாரமான ஸ்ரீ சத்ய சாயியே!
ஸ்ரீ பிரேம சுவாமியை மோதிரமாக பெறக் கூடிய பாக்கியம் பெற்றவர் ஜான் ஹிஸ்லாப் (ஆதாரம் : My Baba and I - John hislop / page 54/55/56). ஹிஸ்லாப் மோதிர அனுபவம் அனைத்து பக்தர்களும் அறிந்ததே! இதில் ஒரு பெரிய சூட்சுமம் இருக்கிறது... கவனித்திருக்கிறீர்களா?
சுவாமி எந்த ஒரு திருச்செயலையும் மனிதனைப் போல் மனம் போன போக்கில் செய்வதில்லை... அதில் ஒரு "க்" வைத்திருப்பார். அந்த சூட்சும முடிச்சுகளை அவிழ்க்கும் சிறு முயற்சியே இந்தப் பதிவும்...! அது இன்னும் புரிதலை தெளிவாக்கவும் ஆழமாக்கவும் செய்யும்!
அந்த "க்" இது தான்...ஏன் அவர் அந்த பிரேம சுவாமி உருவம் பதித்த மோதிரத்தை ஹிஸ்லாப் அவர்களுக்கு வழங்க வேண்டும் ? என்பதே... எடுத்த எடுப்பில் சுவாமி அதை அவருக்கு வழங்கவும் இல்லை... முதலில் கல் பதித்த மோதிரமே தருகிறார்...அது உடைந்து போகிறது... "கல் சரியாகவே இல்லை அல்லவா!" என்று தான் பிரேம சுவாமி சிருஷ்டி மோதிரத்தை தனது மூச்சு காற்றில் ஊதவிட்டுத் தருகிறார்... கற்களுக்குப் பிறகே ஸ்ரீ பிரேம சுவாமி ரூபம்! ஆக கல் எனும் கடினமான காலங்களுக்குப் பிறகே ஸ்ரீ பிரேம சுவாமி விஜயம்! கல் என்பது அங்கே கடினமான காலங்களுக்கான சாட்சிப் படிமம்! இப்போது நாம் அந்த கடினமான காலத்தில் தான் வாழ்கிறோம்.. இதை அனைவருக்கும் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை!
ஏன் அந்த பிரேம சுவாமி மோதிரம் ஹிஸ்லாப்'பிற்கு? பிரேம சுவாமியின் தாயாராக கஸ்தூரி பிறந்திருக்கிறான் என சுவாமியே ஒருமுறை சொல்லி இருக்கிறார் அல்லவா! அந்த மகானுபாவரான ஸ்ரீ கஸ்தூரிக்கே அப்படி ஒரு மோதிரம் வழங்கி இருக்கலாமே! ஏன் சுவாமிக்கு ஜான் ஹிஸ்லாப் தேவைப்படுகிறார்? இதன் மூலம் எண்பதுகளிலேயே இந்த உலகத்திற்கு சுவாமி என்ன சொல்கிறார்? அதற்கான விடை அறிவதற்கு முன் சற்று பின்னோட்டம்!!
ஷிர்டியில் இருந்தே நம் சாயி அவதாரப் பயணம் தொடங்குகிறது... அதற்கு முன் எடுத்துக் கொண்டால் சுவாமி பிறந்த பத்ரி கிராமம். கோதாவரியை தீர்த்தமாகக் கொண்டு வேப்பரமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட இறைவனான ஷிர்டி சுவாமி! செய்வதையே திரும்பச் செய்கிற சலிப்பான உலக வாழ்க்கை கசப்பு தான் என்பதை உணர்த்தி அந்த வேப்ப மரத்தின் கசப்பையே தனது நிழலில் எடுத்துவிடுகிற மகத்துவம்.. இதுவே ஷிர்டி சுவாமி! எளிமையே ஆச்சர்யப்படும் அளவிற்கு எளிமை! கிழிந்த ஆடை... மசூதியே தனது வாசஸ்தலம்! மரப்பலகையில் வாசம்... செங்கல்லே தலையணை... அல்லா மாலிக் எனும் உச்சரிப்பு.. இவை மூலம் எதை உணர்த்த வருகிறார் சுவாமி? இஸ்லாமிய அடையாள ரூபத்தில் இருக்கிறார்...தலையை மறைத்துக் கொண்டும்...தாடையில் கேசம் வளர்த்தும் சூஃபி துறவி போல் வெளிப்படுத்திக் கொள்கிறார்!
ராமநவமியையும், இஸ்லாமிய பண்டிகையையும் ஒன்றாக நடத்த உத்தரவிடுகிறார்... இதன் மூலம் எதை உணர்த்துகிறார்? ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தவே அவரின் திருச்செயல்கள் பிரதிபலித்தன...இது அவதார வருகைக்கான ஆரம்பம்... ஆரம்பத்தில் முழுதாய் எதுவும் புரிந்துவிடாதே...! பிறந்த உடனேயே குழந்தை டாக்டர் ஆவானா? வக்கீல் ஆவானா? உறுதி பட சொல்ல முடியாது அல்லவா! அதைப் போலவே ஷிர்டி சுவாமி வெறும் துறவியா? யோகியா? இறைவனா? யார் என்பது அவரவர் புரிதலுக்கு ஏற்ப விடப்பட்டது! அவரின் திருவெளிப்பாடும் அப்படியே இருந்தது! ஒருசில பேர்களுக்கு மட்டுமே தன்னை முழுதாய் வெளிப்படுத்துகிறார் சுவாமி! ஆம்!! சுவாமி சமைக்கிறார்!! அந்த அணையா நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது!! ஆக மணக்கிறது!! குழம்பா...? கூட்டா? தெரியவில்லை!! அருகே போனால் கோபிக்கிறார்! இது தான் அவதாரத் தொடக்கம்...
இப்போது அவதார மையம்! ஸ்ரீ சத்ய சாயி. அவர் மசூதி வாசம்! இவர் திருக்கோவில் வாசம்! அவர் கோதாவரி தீரம்! இவர் சித்ராவதி தீரம்! அவர் வேப்ப மரம்! இவர் புளிய மரம்! வேப்ப மரத்தையும் புளிய மரத்தையும் தலவிருட்சமாக எல்லாம் யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்! ஏன் புளிய மரத்தை தேர்ந்தொடுத்தார்? அந்த சூட்சுமம்... ஆம்!! புளிய மரத்தில் தான் பேய்கள் இருப்பதான ஒரு புராதன நம்பிக்கை... சுவாமி மனப்பேயை ஓட்ட வந்தவர்... அதற்காகவே அந்தப் புளிய மரம்! அது தான் அக மாற்றமான Self transformation!
ஷிர்டி அவதாரத்தில் மறைத்து வைத்திருந்த கேசத்தை இப்போது வெளிப்படுத்துகிறார்(Bushy hair)... ஆம் அவதார வெளிப்பாடுக்கான மாற்றம்! அப்போது சாயிசத்சரிதம் என ஒரே ஒரு நூல் தான்... அதுவும் ஷிர்டி சுவாமியின் சமாதிக்கு பிறகே... இப்போது இதிகாசங்கள் போல் சத்யம் சிவம் சுந்தரம்- தபோவனம்- சுவாமி..என ஏராளம்! ஆம்...அவதாரத்தை விரிவுப்படுத்துகிறார்! ஷிர்டி சுவாமியாக சுவாமி அப்போது கங்கோத்ரி மட்டுமே! கங்கை உற்பத்தி போலவே அவதார உற்பத்தியும்... ஒரு சின்ன இடம் தான் கங்கோத்ரி... நம்பவே முடியாது...அதிலிருந்தா? பொங்கிப் பெருகுகிறது என ஆச்சர்யப்படுவோம்! அப்படியே கங்கையாக சுவாமி பர்த்தியில் பிரவாகம் எடுக்கிறார்... ஆடை வேறு.. தோற்றம் வேறு... ஆனால் சுபாவம் ஒன்று.. சைகைகள் ஒன்று... ஏன்? சுவாமி காற்றில் எழுதுவதும்... கையை அசைப்பதும்... ஆகாயத்தைப் பார்ப்பதும்... தன்னுள் லயிப்பதும்...இரு அவதார ஒற்றுமை!! ஆம் இப்போது சமைத்துவிட்டார்...! அது குழம்பும் அல்ல கூட்டும் அல்ல... அமிர்தம் என புட்டபர்த்தியில் சுவாமி அவதாரத்தின் போது தான் புரிகிறது... ஷிர்டியில் சுவாமி இருக்கிற வரை ஏதோ சமையல் என்பதாக அவரை துறவி/ யோகி என்பது போல் நினைத்துக் கொண்டிருந்தனர்! அருகே சமையலை காண வந்த நாம் இன்னும் ருசி பார்க்கவே இல்லை...! இது அமிர்தம் என்கிறார்.. ஆம் அப்போது தான் சுவாமி ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிறகான பூர்ணாவதாரம் எனப் புரிகிறது! இது தான் Equation னை Derive செய்வது அதாவது ரகசிய முடிச்சுகளை அவிழ்ப்பது!
2011 ல் இருந்தே ஷிர்டி சுவாமிக்கு ஏராளமான கோவில்கள்...பக்த வெள்ளங்கள்! அதற்கான முதல் கோவிலே ஷிர்டி சுவாமியின் அடுத்த அவதாரமே எழுப்பியது! அதுபோல் நமது சுவாமிக்கும் திருக்கோவில்களை நிறைவு அவதாரமே நிர்மாணிக்கும் என்பது இதன் மூலம் உணர முடிகிறது!
ஆம்.. அமிர்தம் தயார்! இப்போது அந்த அமிர்தத்தை ருசிப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது என்றே தோன்றுகிறது! எதை வைத்து? இப்போது ஹிஸ்லாப் அவர்களுக்கு ஒரு சாயி ராம் சொல்லிவிட்டு... அந்தக் கேள்விக்குள் புகுவோம்! ஏன் ஹிஸ்லாப்? ஏன் கஸ்தூரி இல்லை? ஏன் டாக்டர் காடியா இல்லை? ஏன் ஹிஸ்லாப்? சுவாமி அவருக்கு அளித்த அந்த சிருஷ்டி மோதிரத்தை உற்றுப் பார்த்தாலே புரிந்து கொண்டு விடலாம்...
ஸ்ரீ பிரேம சுவாமியின் தோற்றம் இயேசு கிறிஸ்துவை போன்றே இருக்கிறது... இளவயது இயேசுவாக அந்த மோதிரத்தில் காட்சி அளிக்கிறார்... ஆம் மூன்று சாயி அவதாரங்களையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்தால் மூன்று மதங்களும் ஒன்றாக இணைகின்றன... முன்னவர் மசூதி வாசம் பின்னவர் திருக்கோவில் வாசம்... பிரேம மன்னவர் இயேசுவின் தோற்றம்! எவ்வளவு அற்புதம் இவை!! ஆம் முதன்முதலாக ஏசுவின் இளமைத் தோற்றம் போல இருக்கக் கூடிய ஸ்ரீ பிரேம சுவாமியின் மோதிரத்தை ஹிந்துவான ஸ்ரீமான் கஸ்தூரிக்கு அளிக்காமல் கிறிஸ்துவரான ஜான் ஹிஸ்லாப் அவர்களுக்கு அளிக்கிறார்... அதற்கு முன்னர் அவருக்கு சிருஷ்டி சிலுவையை அளித்திருக்கிறார்! முதலில் சிருஷ்டி சிலுவையில் ஏசு... பிறகு பரமபிதாவான ஸ்ரீ பிரேம சுவாமி சிருஷ்டி மோதிரம்.. ஆம்! முதலில் ஏசு தான் வருகிறார்.. பிறகே பரமபிதா வருகிறார்!
மேத்திவ் 24.37 ல் கர்த்தரின் மறுவருகையை குறித்து அவர்கள் 2000 வருடங்களாக நம்பிக்கையோடு இருப்பது! ஆம்! அந்த நம்பிக்கை பலிக்கப் போகிறது என்பதை ஸ்ரீ பிரேம சுவாமியை வைத்தே உணர முடிகிறது!
டாக்டர் காடியாவுக்கு சுவாமி அளித்த சிருஷ்டி பதக்கத்திலும் பிரேம சுவாமியை காட்டுகிறார்...அதில் நான்கு அவதாரங்கள்... கிருஷ்ணர் ஆரம்பித்து பிரேம சுவாமி வரை... சாயி ஸ்மரண் புத்தக ஆவணமே சாட்சி! "எனக்கு மட்டுமல்ல... நீ பிரேம சாயிக்கும் சேவை ஆற்ற.. அவர் அவதரிக்கும் இடத்திலேயே அடுத்தபடியாகப் பிறப்பாய்!" என்கிறார் டாக்டர் காடியாவிடம்... எப்படி லட்சுமணரின் மறு பிறவியே பலராமரோ அப்படி! இறை அவதாரங்கள் மட்டுமல்ல அவர்களுக்கு சேவை ஆற்ற பக்தர்களும் தொடர்ந்து பிறக்கிறார்கள்! சுவாமியின் உடல் சமாதிக்கு அடுத்த வருடமே பிரேம சுவாமி அவதரிப்பார் என சுவாமியே சத்யசாயி ஆனந்ததாயி மற்றும் சத்ய சாயிபாபா பேரன்பின் வடிவம் (Sathya Sai Baba - embodiment of love - author Peggy Mason & Ron Laing) , (Glimpses of The Divine (author : Birgitte Rodriguez) என்ற புத்தகங்களிலும் தெளிவுப்படுத்தி இருக்கிறார்!
அது என்ன ஸ்ரீ சத்ய சாயி ? ஸ்ரீ பிரேம சாயி? தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே என்று தானே சுவாமி கிருஷ்ணராக இருக்கையில் கீதை மொழி பேசினார்... ஸ்ரீ தர்ம சாயி என்று தானே தனது அவதாரத்திற்கு சுவாமி பெயர் சூட்டியிருக்க வேண்டும்? இதில் ஒரு சூட்சூமம் இருக்கிறது... முதலில் வெறும் ஸ்ரீ சாயிபாபா... இது அவதாரத் தொடக்கம்...! பிறகு அந்த சாயிபாபா யார்? என்பதற்கான விளக்கமாக ஸ்ரீ சத்ய சாயி பாபா... இது அவதார மையம்! அத்தகைய சத்யமான சாயிபாபா எத்தன்மை வாய்ந்தவர் என்பதற்கான விளக்கமாக ஸ்ரீ பிரேம சாயிபாபா! இதுவே அவதார உச்சம்! சூரியன் உதிக்கிற போதே நற்பகல் ஆவதில்லை அல்லவா...! மெதுமெதுவாகத் தான் தனது கிரணங்களைப் பரவ விடுகிறது..
சூரியப் பிரவேசம் போலவே தான் அவதாரப் பிரவேசம்! தான் சொல்வதெல்லாம் , செய்ததெல்லாம் சத்தியம் என்பதை பெயரிலேயே சுவாமி கொண்டிருந்தார்...! ஸ்ரீ கிருஷ்ணரில் க்ருஷ் என்றால் கருப்பு நிறம் என்பது போலவே...! தானே சத்தியம் என சத்தியத்தை வெளிப்படுத்தவே ஸ்ரீ சத்ய சாயி அவதாரம்! இதில் யுகே யுகே என்பதற்கான இருமுறை கீதை மொழி.. ஒரு யுகே கலி யுகே.. இன்னொரு யுகே சத்ய யுகே என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்! சுவாமியே ஸ்ரீ கிருஷ்ணராக துவாபர யுக நடுவிலிருந்து கலியுக ஆரம்பம் வரை தனது அவதாரத்தை நிகழ வைத்திருப்பவர் தான்! அதுபோலவே ஸ்ரீ பிரேம சுவாமியாக மீண்டும் கலியுக முடிவிலிருந்து சத்யயுக ஆரம்பம் வரை தனது அவதார பிரவாகத்தை நிரப்புவார்.. எப்படி?
"நான் உடம்பல்ல... உயிரல்ல... ஆண்களிடத்தில் ஆண்களாக... பெண்களிடத்தில் பெண்களாக... எப்போதுமே பரப்பிரம்மமாகவே இருக்கிற பரம சத்தியம் நானே! வருங்காலத்தில் கண்ணிழந்தவரும் அறியாமையில் இருப்பவரும்...ஏன் ? ஒட்டு மொத்த இந்த உலகமுமே என்னை கடவுள் என உணர்ந்து கொண்டாடும்!" என்கிறார் சுவாமி (தெய்வீக உரையாடல்- 31 ஜூலை 1996)
இதன் ஆடியோ பதிவே இருக்கிறது! ஒட்டு மொத்த உலகமே என்கிறார்... அது நிகழவேப் போகிறது அவதார மையத்திலிருந்து சுவாமி அவதார உச்சத்திற்கு அரங்கேறுகிற போது என்பதை அணு அணுவாய் உணர்ந்து கொள்ள முடிகிறது! அது தான் உச்சம்.. அது தான் சரியான வார்த்தை...ஏனெனில்... மலை உச்சியில் நின்றாலே அனைத்தும் சமமாகத் தெரியும்!! அந்த ஒரு பேரற்புத உச்ச அவதாரமே ஸ்ரீ பிரேம சாயி... ஆம் சந்தேகமே இல்லாமல் ஸ்ரீ சத்ய சாயி உச்சமே ஸ்ரீ பிரேம சாயி! முழுக்க பிரேம மயம்... ஆகவே தான் சுவாமி அவரை சக்தி அம்சம் என்கிறார்!
சக்திக்கு இருபொருள்... ஒன்று தாய்மையை குறிக்கிறது இன்னொன்று பிரபஞ்ச இயக்கத்தையே குறிக்கிறது! அந்த சக்தியே ஜீவனை உயிரோட்டப்படுத்துகிறது! ஆக ஜீவ சக்தியை சுவாமியே உயர்த்துவார் என்றே தோன்றுகிறது! தனது அவதார தலத்தை குணபர்த்தி என்கிறார்... குணம் என்பது ஆன்மீக அடிப்படையான சத்வ குணம் மட்டுமல்ல அகத்தையும் புறத்தையும்... ஏன் அகிலத்தையே குணமாக்கும் பர்த்தி அது!! உலகமே தன்னை இறைவன் என உணரும் என்கிறார் சுவாமி! உலகத்தில் பெரும்பான்மையான மதம் கிறிஸ்துவமே ஆகவே தான் ஸ்ரீ பிரேம சுவாமி கிறிஸ்துவின் சாயலில் இருக்கிறார் என்பதை உணர முடிகிறது! அது எப்படி? அப்படி இருந்தால் அவர் பரமபிதாவா? ஏன் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறாய்? என நீங்கள் நினைக்கலாம்! அந்த இரண்டு பாகங்களுமே ஒரே உடம்பில் தானே இருக்கிறது! கிறிஸ்துவர்கள் வேற்றுகிரக வாசிகள் இல்லையே...ஒரு தனி மனிதரின் பார்வையில் உலகப் பெரும்பான்மையானவர்களையே சுவாமி தான் இறைவன் என உணர வைப்பது சர்வ சாதாரணமான காரியம் இல்லை தான்... நிச்சயம் ஒரு பேரற்புதம் நிகழலாம் என்றே தோன்றுகிறது...இது எதிர்பார்ப்பல்ல... சுவாமியின் மகனான இயேசுவே அப்படி அற்புதங்கள் செய்து தான் ஜெருசலேமியரை தான் இறை தூதர் என உணர வைத்தார்!
இறைவனின் சொற்களால் அவரை நம்புவதை விட அற்புதங்களால் அவரை நம்புவதே கலியுக லட்சணம்! ஆகவே சுவாமியின் பிரேம அவதாரப் பிரகடனம் நிகழும்!! அகில உலகமுமே சுவாமியை இறைவன் என உணரும்! எப்படி இயேசு நாதர் மீன்பிடிப்பவர்களின் குழுவிடமிருந்தே தனது இறை தூத மொழியை ஆரம்பித்தாரோ பரமபிதாவான பிரேம சுவாமியும் அப்படியே ஆரம்பிக்கலாம்... மூன்று மதங்களும் ஒன்றாகி சத்தியமான பிரேம சமத்துவம் சர்வ நிச்சயமாய் விரைவிலேயே நிகழ்வதற்கான சமதர்மம் வெளிப்படலாம்! சத்தியத்தின் ஊற்று சேவையே என்பதால் சேவை அகலப்படுத்தப்பட்டத்தைப் போல்... அன்பின் ஊற்று அகமே...
ஆகவே அதைக் கண்டுணர அகப் பயணம் ஆழமாக்கப்படலாம்... அக மாற்றமே ஆரோக்கியத்திற்கான ஆளுமை என்பதால் அந்த அகப் பயணத்தில் அக மாற்றம் நிகழலாம்! எல்லா மதங்களுமே ஒன்றாகிவிடும் போது.. மூன்று சாயி அவதார பக்தர்களும் நிச்சயம் ஒன்றாகிவிடுவார்கள்! "உலகமே என்னை இறைவன் என உணரும்!" என சுவாமி சொல்லியதற்கு அது தான்... அதே தான் அர்த்தம்!!
கணவரை இழந்து முதிர்வயது காலத்திலேயே சாரதா தேவி சுவாமியிடம் வந்தார்... அவரை ஏன் "பெத்த பொட்டு" என அழைத்தார் சுவாமி... ? காரணம் நான் உன்னை சின்னஞ்சிறு வயதிலிருந்தே அறிவேன் என்பதை அவர்களிடம் உணர்த்தவே...! அப்பேர்ப்பட்ட பெரும் பக்தை இரு அவதாரங்களையும் தரிசித்து- சம்பாஷனை செய்து- பாத சேவனம் செய்து பெரும் பாக்கியவதியானார்! அப்பேர்ப்பட்ட பாக்கியம் நமக்கும் நிகழப் போகிறது... இரு அவதாரங்களோடும் பயணிக்கப் போகிறோம்! இதற்கு நாம் தயாராகவே வேண்டும்...அதற்கான காத்திருப்பும்...பக்தியும்... மிகவும் அவசியம்! மனிதன் வா என அழைத்து எந்த அவதாரமும் கீழிறங்கியதில்லை... ஒவ்வொரு அவதார விஜயத்திற்கான அஸ்திவாரத்தில் உத்தமர்களின் தவிப்பும்... மகாத்மாக்களின் கண்ணீரும்... மகான்களின் தவமும் கலந்து பிசைந்த பீடமாகவே அவதாரங்கள் எழுந்திருக்கின்றன...! எடுப்பார் கைப்பிள்ளை இல்லை சுவாமி... சரணாகதி அடைந்தவரின் சகா சுவாமி!
அதைப் போல் இவர் தான் பிரேம சுவாமி என மனிதர் சொல்லி பிரேம சுவாமி அவதாரப் பிரகடனம் நிகழப் போவதில்லை. உனக்கெப்படி தெரியும்? என்றால்... அப்படி 1940 திலும் நிகழவில்லை... சுவாமியின் ஷிர்டி வருகையிலும் நிகழவில்லை...
சுவாமி தான் தன்னை பிரகடனப்படுத்த வேண்டும்! சூரியன் தான் உதிக்க வேண்டும்... மனிதன் வானத்தைக் கிழித்து வா என்றால் உடனே சூரியோதயம் நிகழாது! இது தான் சூரியன் என ஒரு வட்டம் வரைந்து ஆரஞ்சு நிறம் அடித்தால் சூரியனாகிவிடாது! உண்மையான பக்தர் உண்மையான இறைவன் உற்சவம் செய்கிற போது... அவரை தரிசிக்கும் மாத்திரத்திலேயே உணர்வர்... அது தான் இத்தனை கால பக்திக்கான Connectivity...அவதரித்திருக்கிற நமது சுவாமியே தான் பிரேம இறைவனாய் தன்னை பிரகடனப்படுத்த வேண்டும்! இது தான் அவதார நிறைவு!! நாம் அமிர்தத்தை பருகியே ஆக வேண்டும்... அதற்காகவே சுவாமிக்கான காத்திருப்பில் பக்தியோடு உருகியே ஆக வேண்டும்... ஆம்!! உருகுகிற மெழுகுவர்த்திகள் தான் ஒளிரும்!! மெழுகுவர்த்திகள் கூட பரமபிதாவின் வெளிப்பாட்டிற்கான ஒளித் தோரணங்களே! இது சராசரியான கடைக்கோடி சுவாமி பக்தனின் பார்வையே!! ஆம் அகப் பார்வையே!! சுவாமி சொல்லியது போல் ஒட்டு மொத்த உலகம் அனைத்துமே ஒருமித்து சுவாமியை இறைவன் என உணர வேண்டும்! அதை இந்தப் பூமியில் அடியேன் வாழ்வதற்குள் காண்பேனா? அது
முக்கியமில்லை... விதை நடப்படுகையில் ஒருபிடி மண்ணை தூவுவது போல் அகப் பார்வையைத் தூவி திருப்திபடுகிறேன்!
பிறருக்கு அது பழமாகி ரசமாகும் என்ற நம்பிக்கை அந்த விதையைப் போல் எனது இதயத்தில் பதிந்தபடி முளைக்கிறது...! வரப்போகிற ஸ்ரீ பிரேம சுவாமியின் பாதையில் என் ஊண் உடம்பையே ரத்தினக் கம்பளமாய் விரித்து... எனது சிரசையே காலடி பீடமாய் சுவாமி கேட்டாலும் கொடுக்க தயாராகவே தலை தாழ்ந்தபடி...
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக