தலைப்பு

சனி, 1 ஜனவரி, 2022

இரக்கப்படுங்கள்!! இரக்க சேவையே ஏற்றம் -இயம்புகிறார் பேரன்பு சுவாமி!

பேரன்பின் ரசவாதம் எத்தகையது? என்பதைப் பற்றியும்... அந்தப் பேரன்பு ஈன்றெடுக்கும் குழந்தையான தன்னலமில்லா சேவையைப் பற்றியும் விரிவான வகையில் ஆழப் பதிக்கிறார் 'அறஞ்செய அவனியில் அவதரித்த' சுவாமி இதோ...


பண்டிகை முடிந்து உங்களுடைய பணி இங்கு நிறைவடைந்த பின்னர் ,அந்த அடையாள வில்லையை உங்களது சட்டைப்பையில் வைத்துக்கொண்டு உங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் சென்ற பின்னர் , புறக்கணிக்கப்பட வேண்டிய வழக்கங்களையும் , பழைய வழக்குகளையும் மேற்கொள்ளாதீர்கள். இது மூன்று நாட்களுக்கான தமாஷா( நாடகம்) அல்ல. இது வாழ்நாளின் யாத்திரை குறித்த நடை அடையாளச் சின்னமானது. இதயத்தில் அழிக்க இயலாத வகையில் வாழ்க்கைக்கும் தடம் பதிக்கும் அளவிற்கு பதியப்படவேண்டும். ஒரு நோயாளியை , மனச்சோர்வுற்றவனை, ஆறுதலுக்காக ஏங்குபவனை, பலவீனமான வனை, நீங்கள் எங்கெல்லாம் காண்கிறீர்களோ அதுவே உங்களுடைய சேவைக்கான இடமாகின்றது. ஒவ்வொரு இரத்த நாடியும், ஒவ்வொரு நரம்பும் அன்பினால் துடிக்க வேண்டும்.அந்த அன்பினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தாபம் கொள்ளவேண்டும். அன்பு இதயத்தில் நிரம்புகின்றபொழுது அது உண்மையில் தெய்வீகமாக மாற்றம் கொள்கின்றது. ஏனெனில் அன்பே கடவுள், கடவுளே அன்பு. இந்த அன்பும் அதிலிருந்து வரும் காருண்யமுமே இந்தியாவிலும் , இதர நாடுகளிலும் உள்ள சிறந்த முனிவர்களை உருவாக்கியது. கபீர், துக்காராம், புனித பிரான்சிஸ், ஸ்ரீ இராமகிருஷ்ணர் போன்ற இறவாத்தன்மை கொண்டவர்கள் இதற்கான எடுத்துக்காட்டுகள்.

நிலையத்தில் 20,15,10 வருடங்கள் வரையிலிருந்தும் வாழ்ந்து வருகின்ற மக்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களுடைய உடல் மட்டுமே வளர்ந்துள்ளதே தவிர வேறு மாற்றம் எதுவுமில்லை. அவர்களின் சேவைக்கான தாகம் வளர்ந்திடவே இல்லை. பிரசாந்தி நிலையத்தில் உள்ள வாழ்வானது , நம்பிக்கையினை ஆழப்படுத்தி, சேவையின் பாதையிலிருந்து வீடுபேற்றிற்கான பாதையினை நோக்கி இட்டுச் சென்றிட வேண்டும். மனப்பாங்குதான் முக்கியமானது. அந்தக்  குறிப்பிட்ட சேவையின் செயல் சிறியதாக இருக்கலாம். கோடிக்கணக்கான மக்களுக்கு பலன் தருகின்ற பெரிய அளவிலான சேவைத் திட்டங்களில் நீங்கள் பங்காற்றிட வாய்ப்பு கிட்டாமல் போயிருக்கலாம். ஒரு கால் ஒடிந்த முடமான ஆட்டினை மேலே தூக்கிவிட்டு காப்பாற்றிடவோ அல்லது பார்வையற்ற குழந்தை ஒன்றினை பரபரப்பான சாலையினை கடந்திட உதவிடவோ செய்திருக்கலாம். அதுவும் கூட வழிபாட்டின் ஒரு செயலே.

கீதையின் பிரதி இருபத்தைந்து பைசாக்களுக்கு கிடைக்கலாம்.ஆனால் அற்பமான கதைப்புத்தகம் பத்து ரூபாய் விலை கொண்டதாக இருக்கலாம். இதில் எது அதிக மதிப்பு வாய்ந்தது? எவை அடிப்படையான உலோகத்தை தங்கமாக மாற்றுகின்றன? சேவையே பொதுவாக ஆன்மீக சாதகர்களுக்காக ஆலோசனையாக அளிக்கப்படும் ஜபம் , தியானம், யக்ஞம்,யாகம் ஆகியவற்றை விடவும் அதிக பலன் அளிப்பதாகும். ஏனெனில் அது இரண்டு நோக்கங்களுக்கு பலன் தருகின்றது. செருக்கினை அழிக்கின்றது.மற்றும் ஆனந்தத்தினை அடைந்திட வகை செய்கின்றது.

உங்களுக்கு அருகே அமர்ந்திருக்கும் ஒருவர் துயரம் அல்லது சோகத்தில் ஆழ்ந்திருந்தால் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க இயலுமா? இல்லை. இயலாது. மனிதனைக் கலங்கவைக்கும் அளவிற்கு ஒரு குழந்தை உங்கள் அருகே அழுது கொண்டிருந்தது என்றால் உங்களது கண்களில் இரக்கத்தினால் கண்ணீர் நிரம்புகின்றன. ஏன்? ஏனெனில் இருவருக்குமிடையே கண்களுக்குப் புலப்படாத தொடர்பு ஒன்று உள்ளது. மனிதனிடம் மட்டுமே இரக்கம் என்னும் குணம் உள்ளது. அவனால் மட்டுமே மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது மகிழவும், மற்றவர்கள் துயருறும்பொழுது துயருறவும் முடியும். இதன் காரணமாகவே அவன் படைப்பிலேயே மிகச் சிறந்தவனாகவும் மிருகங்களின் பரிணாம வளர்ச்சியின் உச்சகட்ட நிலையாகவும் கருதப்படுகிறான். மனிதனுக்கு மட்டுமே சேவை செய்யும் திறன் உள்ளது.அதுவே அவனது தனிச்சிறப்பும், தனிப்பட்ட திறனும் ஆகும்.


ஆதாரம்: பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் அருளமுதம். பாகம் 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக