தலைப்பு

திங்கள், 24 ஜனவரி, 2022

1967ல் சுவாமியால் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்திடப்பட்ட ஸ்ரீ சத்ய சாயி அவதார உயில் சாசனம்!


மிக முக்கியமான பத்திரம் அது! இன்றளவும் பத்திரமாக இருக்கும் பத்திரம் அது! சுவாமியே கையெழுத்திட்ட பத்திரம் அது!! அப்படி என்ன அதி முக்கியமான பத்திரம் ? அது வெறும் பத்திரம் அல்ல...சுவாமியின் சாசன உயில்... கோப்புகளில் விழிப்போடிருக்கும் சுவாமியின் அதிமனசாட்சி அது.. அதன் விளக்கமும்.. அதை கண்டெடுத்த விதமும் சுவாரஸ்யமாய் இதோ...


சுவாமி எதற்காக இந்த அவதாரம் நிகழ்த்தி இருக்கிறார்? சுவாமி தான் ஆரம்பித்த நிறுவனத்தின் அஸ்திவாரமாகவே ஒன்றை பிரகடனப்படுத்தி பதிவு செய்திருக்கிறார்! மிகப் பொக்கிஷமான பத்திரம் அது! ஆம்..! சுவாமியின் சாசன உயில் அது! சுவாமி எனும் பேரவதாரம் எதனை தன் சொத்தாக பாவிக்கிறது என்பதனை எடுத்தியம்பும் திருச்சான்றிதழ் அது! எப்படி நானே "சாயிபாபா" என சுவாமி மலர்களால் தன் சிறுவயதில் எழுத்துக்களை தரையில் சிருஷ்டித்தாரோ அப்படிப்பட்ட எழுத்துக்கள் பொதிந்த சுவாமியின் பிரகடனம் அது!! முப்பது ஆண்டுகளுக்குப் பிறகே அது மீண்டும் தன் உயிர்ப்பைப் பெறுகிறது!

திரு சத்யஜித் தன் தெய்வத்துடன்... 

1998 ஆம் ஆண்டு பூர்ணசந்திர ஆடிட்டோரியத்தில் கிரீன் ரூமில் சில கோப்புகளை ஒழிக்கிற போது.. ஒரு அரிய கோப்பு ஒன்று கையில் கிடைக்கிறது... அது 1967ஆம் ஆண்டின் கோப்பு... அதில் சுவாமியே தன் கைப்பட கையெழுத்திட்டிருக்கிறார்... அதைப் பிரித்துப் படித்துப் பார்த்து ஓடிப் போய் சுவாமியிடம் "சுவாமி இது அரிய கோப்பாக இருக்கிறது!" என திரு சத்யஜித் சொல்கிற போது.. "நீயே அதை பத்திரமாக வைத்துக் கொள்...! பிற்காலத்தில் பயன்படும்!" என தீர்க்கமாகப் பேசுகிறார் சுவாமி... அந்த கோப்பின் ஸ்டாம்ப் ஒட்டிய பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாவது... 


"நான் ஸ்ரீ சத்யசாயி , பிரசாந்தி நிலையம் (அஞ்சல்) இந்தியாவை குடியுரிமையாகக் கொண்டவன் இங்கே பிரகடனப்படுத்திக் கொள்வது என்னவெனில்...

நான் புட்டபர்த்தி கிராமத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் பிறந்தவன்... எனக்கு தற்போது வயது 44. சேர்க்கப்பட்ட பள்ளியிலிருந்து நான் விடுபட்டு சனாதன தர்மத்தைப் பரப்பவே என் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறேன்! நான் திருமணமாகாதவன். என்னுடைய 12 ஆவது வயதில் என் பெற்றோர் வீட்டை துறந்து ஆன்மீக நெறிப்படி காவி உடுத்தியிருக்கிறேன்... ஆகவே எனக்கு உலகப் பற்றோ அல்லது குடும்பப் பற்றோ அறவே இல்லை! எப்போது நான் என் பெற்றோரை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து தெய்வீக நெறியை ஸ்வீகரித்தேனோ அப்போதிருந்தே மீண்டும் அவர்களோடு இணைவதற்கான எந்த உள்நோக்கமும் என்னிடம் துளிகூட இல்லை! ஆகையால் எனக்கான உரிமை... குடும்பத்தினரால் எனக்கு சேர வேண்டிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்... தனிப்பட்ட உடமைகள் என அனைத்தையும் முழுவதுமாக துறக்கிறேன்!

என் பக்தர்களால் எவை எல்லாம் எனக்கு வழங்கப்படுகிறதோ அவற்றை ஒரு டிரஸ்டியாக எனது கட்டுப்பாட்டில் நிர்வகித்தும் கவனித்தும் கண்காணித்தும் இயக்கியும் வருவதில் பொதுத் தொண்டுகளுக்கு அவை முழுவதும் பயன்படுத்தப்படும்...! அதனை குடும்ப சொத்துக்களாக உரிமை கோர என் வழியேயும்... மறைமுகமாகவும் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பதை மிக தீர்க்கமாக பிரகடனப்படுத்துகிறேன்!"


23 மார்ச் 1967 


  கையொப்பம் 

ஸ்ரீ சத்ய சாயி


 என தன் மிஷனையும் விஷனையும் தெளிவாகக் குறிப்பிட்டு சுவாமியே தனது திருக்கையெழுத்திட்டிருக்கிறார்! ஸ்ரீ சத்ய சாயி நிறுவனத்தை ஆரம்பிக்கும் முன்பே இதனை தெள்ளத் தெளிவாய் பதிவு செய்திருக்கிறார்... இதன் சாசனப் பத்திர அஸ்திவாரத்தில் இருந்தே சுவாமி நிறுவனம் எழுகிறது...! இந்த நிறுவனத்திற்காக சுவாமி தன்னையே அர்ப்பணித்திருக்கிறார்...! அவரது அவதாரம் நிகழ்ந்த பௌதீகக் குடும்பத்திற்கும் நிறுவனத்திற்கும் எந்த சம்மந்தமுமில்லை என ஸ்ரீ சத்யஜித் ஆதாரத்தோடு அந்த திருப்பத்திரத்தின் வழி உறுதிப்படுத்துகிறார்...! 

பிறகு 2011 ஆம் ஆண்டு அந்த அரிய பழம்பெரும் பத்திரத்திற்கு அப்போதே சாட்சியாக இருந்த திரு ஹிந்துலால் ஷா அவர்களால் (attested) (21 நவம்பர் 2011) சான்றளிக்கப்படுகிறது!


 1968 ல் வழங்கப்பட்ட சுவாமியின் எப்பேர்ப்பட்ட சாசனம் அது.. சுவாமிக்கு பக்தர்களே குடும்பம்....! சுவாமி ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த போது தேவகியையும் யசோதாவையும் கூட்டிக் கொண்டா தன் துவாரகா அரண்மனையை நிறுவினார்...? "நீயும் வா காட்டுக்கு செல்வோம்..."என கோசலையிடம் சொன்னாரா?... சீதை தானாகவே தான் இராமன் இருக்கும் இடமே அயோத்தி எனப் பின்னால் சென்றார்... இது தான் அவதார சுபாவம்! எதற்காக அவதாரங்கள் மண்ணில் இறங்குகிறதோ அது ஒன்றே அவர்களுக்கு குறியும்.. நெறியும்! எந்த அவதாரங்களுக்கும் அவர்களது எந்த குடும்பத்திற்கும் இம்மி அளவு சம்பந்தம் கூட இல்லை எப்போதும்!! அப்படிப்பட்ட அந்தக் கோப்பை 30 ஆண்டுகளுக்குப் பிறகு கையில் ஏந்திய சத்யஜித் கொடுத்து வைத்தவர்! சுவாமியின் சத்ய சாசனத்தை பல்லாண்டுகளுக்குப் பிறகு அவருக்கே முதன்முதலாக வாசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது! சுவாமியின் உடல் அளவிலான திருச்சமாதிக்குப் பிறகு நிறுவனத்தின் வாரிசு யார்? எனக் கேள்வி எழுகிற போது.. இந்த சாசனப் பத்திரமே பெரிதும் வழிகாட்டுகிறது! 


ஆம்...! சுவாமி எனும் பேரற்புத பேரவதாரத்திற்கு சொந்த பந்த உறவுகள் ஏதுமில்லை... உலகமே சுவாமியின் திருக்குடும்பம்... பக்தர்கள் மட்டுமே சுவாமியின் திருஉறவுகள்! எப்படி "Of the people - By the People - for the People" மக்களால் - மக்களுக்காக - மக்களின் ஜனநாயகம் என ஆப்ரஹாம் லிங்கன் முதன்முதலில் பகிர்ந்தாரோ அப்படி...

"Of the Devotee - By the Devotee - For the Devotee" பக்தர்களால் பக்தர்களுக்காக பக்தர்களின் ஸ்ரீ சத்ய சாயி நிறுவனம் என சுவாமியே தன் உன்னத திருஉயிலின் வழி உணர்த்தி இருப்பதை நாமும் உணர்ந்து கொள்ள முடிகிறது! இப்பேர்ப்பட்ட பெருந் தியாக அவதாரமே சுவாமி!! பக்தியால் மட்டுமே சுவாமியை நாம் உறவு கொண்டாட முடியும்! வேறெதனாலும் அல்ல...இதயத்தால் மட்டுமே சுவாமியை நாம் உரிமை கொண்டாட முடியும்! வேறெதுவும் வழக்கொழிந்து போகும்!! மனிதர்களுக்கே முக்தி அளிக்கிற சுவாமிக்கேது மரணம்? ஜீவாத்மாக்களை சாந்தி படுத்தும் பரமாத்மாவான சுவாமியின் பேராத்மாவை எந்த சடங்கு சம்பிரதாயம் சாந்திப்படுத்த முடியும்!!? பலூன்களின் பிரதேசங்களுக்குள் மட்டும் சுற்றி வருகிற சுவாசக் காற்றல்ல சுவாமி.... துளை உள்ள புல்லாங்குழலில் புகுந்து வெளி வரும் சுவாசக் காற்றே சுவாமி! சுவாமியை எதுவாலும் எவராலும் ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைக்கவே முடியாது! 

"காற்று பொது - சுவாசம் பொது - சுவாமி பொது!"


  பக்தியுடன் 

வைரபாரதி




1 கருத்து: