தலைப்பு

புதன், 19 ஜனவரி, 2022

சுவாமி இறைவனே என ஆமோதித்தபடி பூட்டியிருந்த கோவிலுக்குள் 'டிங் டாங்' என ஓம்கார சப்தங்கள் எழுப்பிய மணிஒலி!!


பூட்டியிருந்த கோவிலுக்குள் ஓசை எழுப்பிய மணி ஒலிகளோடு... சாயி இலக்கியங்களை வாசித்த ஒருவருக்கு நேர்ந்த மகத்துவ மகிமை என... குழந்தைகளுக்கு நேர்ந்த சுவாமி சிகிச்சை வரை பரவசம் ஏற்படுத்தக்கூடிய கதம்ப சுவாமி அனுபவமாய் இதோ...

உலக சம்பவங்களில் கர்மாவின் ஆளுமை இருந்தாலும் மனிதர்களுக்கு அனுபவம் ஏற்படுத்துவது சுவாமியே! அதிலும் சுவாமி கருணை இருந்தால் மட்டுமே அந்த அனுபவங்களை உள்வாங்கியபடி மனிதனால் உருப்பட முடிகிறது! ஒரு கிறிஸ்துமஸ் தின விடுமுறை... ராகவன் எனும் சுவாமி பக்தர் தன் கிராமத்தை விட்டுத் தள்ளி இருந்த ஸ்ரீ சத்ய நாராயணர் கோவிலுக்கு கையில் சனாதன சாரதியோடு செல்கிறார்...ஒரு சத்யநாராயணரின் புத்தகத்தோடு சத்யநாராயணரையே தரிசிக்கச் செல்வது மிகவும் பொருத்தம்! 

           கோவில் திறக்காததால் படியில் அமர்ந்து சனாதன சாரதியை வாசிக்கிறார்... அந்த சமயம் பார்த்து அவரின் நண்பரும் எதேர்ச்சையாக கோவிலுக்கு வருகிறார்! "என்ன வாசிக்கிறாய்?" எனக் கேட்க... சுவாமியின் சனாதன சாரதியை விவரிக்க... "பாபாவின் பல அற்புதங்களை கேள்விப்பட்டிருக்கிறேன்...ஆனால் பாபாவை நேரில் பார்த்து அனுபவம் ஏற்பட்ட பின்னரே அவரின் அற்புத ஆற்றலை நம்புவேன்" என்கிறார்...

ராகவனோ "நண்பா... சிருஷ்டி- ஸித்தி- சம்ஹாரம் எனும் கடவுளின் ஆற்றல் உருவம் பாபா...! எங்கும் நிறைந்தவர் - எல்லாம் வல்லவர்-- எல்லாம் அறிந்தவர் அதுவே பாபா!" என்கிறார்.. அதைச் சொல்லி முடிக்கும் அடுத்த நொடியே பூட்டியிருக்கும் கோவிலுக்குள் 'டிங் டாங்' என கோவில் மணி பலத்த சப்தங்களோடு ஒலிக்கிறது...! 

நடுநடுங்கிப் போகிறார் ராகவனின் நண்பர்.. ராகவனுக்கோ கண்களில் நீர்த்துளிகள்... "சாயிராம்" என கண்கலங்கி கை கூப்பி அதே இடத்தில் வணங்குகிறார்... நண்பருக்கு புல்லரிக்கிறது... "சத்தியம் ராகவா... பாபா எல்லா இடத்திலும் இருக்கார்... பாபா கடவுள் ராகவா... அதுல சந்தேகமே இல்ல!" "நாம சேர்ந்தே சுவாமிய தரிசனம் பண்ண போலாம்" என உருகி உருகிப் பேசுகிறார்! உடம்பு உறைந்து விடுகிறது... உணர்ச்சி வசப்படுகிறார்...! 

 சுவாமி தான் யார் என்பதை தன்னை நேரில் வந்து தரிசித்த பிறகு தான் ஒருவருக்கு உணர்த்த வேண்டும் என்பதில்லை... ஆனானப்பட்ட ரத்னாகர் எனும் திருடனையே வால்மீகி முனிவராய் மாற்ற முடிந்த சுவாமிக்கு ராகவனின் சந்தேக நண்பரை பக்தராக்க முடியாதா என்ன!!


சீனிவாசன் எனும் பக்தருக்கு கேட்ராக்ட் கண் சிகிச்சை இரண்டு கண்களிலும் மேற்கொள்ளப்பட்டது...இரண்டும் நன்றாகத் தெரிய 2 வருடத்தில் இடது கண் பார்வை குறைய ஆரம்பிக்கிறது... வலது கண்ணில் இரண்டாவது கேட்ராக்ட் வளர ஆரம்பிக்கிறது... ஆப்ரேஷன் தள்ளிக் கொண்டே போகிறது! சுவாமியை தரிசிக்கப் போகிறார்... சுவாமி தரிசனம் என்பது புறக் கண்களை மட்டுமா? அது அகக் கண்களையே ஒளியூட்ட வல்லது!! பிரேம சுவாமியின் தாயாகப் பிறக்கும் பரம பாக்கியம் பெற்ற தூய பக்தர் கஸ்தூரி அவர்கள் எழுதிய சுவாமியின் "சத்யம் சிவம் சுந்தரம்" எனும் நூலை வாசிக்க ஆரம்பிக்கிறார்.. மனைவிக்காக அதை தனது தாய் மொழியில் மொழி விளக்கம் சொல்லியடி வாசிக்கிறார்...300 பக்கங்களையும் மொழி பெயர்த்துச் சொல்கிறார்... பிறகு பிரேம வாஹினி வாசித்துக் காட்ட வேண்டும் என மனைவி கேட்க... அதற்கும் மொழி விளக்கம் தந்தி வாசிக்கிறார்... வாசிக்க வாசிக்க... கேட்ராக்ட் கண் கரெக்ட் கண்களாகி பார்வை வீசுகிறது... அவரால் அதை நம்பவே முடியவில்லை... பார்வை வீசுவதோடு அன்றி கண்ணீரும் பேசுகிறது!! சாயி இலக்கியங்களுக்கு இருக்கும் சக்தியும் , மகத்துவமும்,  சத்தியமும் , பரிபக்குவமும், ஆன்ம ஞானமும் சங்க இலக்கியங்களில் கூட இல்லை!!

ஒரு சமயம் 8 வயது குழந்தைக்கு டைஃபாய்ட் காய்ச்சல்... சுவாமி ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்படுகிறது. 3 வாரத்திற்குள் நார்மல் ஆகியும் காய்ச்சல் கூடி பேசா நிலைக்குப் போய் விடுகிறது! திடீரென அதிகாலை 3 மணிக்கு காய்ச்சல் குழந்தை குணக்குழந்தையாக மாறி "பாட்டி... பாட்டி.. பாபா வந்திருக்கார்... விபூதி வைக்கிறார்.. வாயில போடுறான்.. எந்திரி எந்திரி!" என எழுப்பி விடுகிறது! பாட்டி குழந்தையின் படுக்கை அருகே வருவதற்குள் சுவாமி மறைந்து விடுகிறார்... அந்தக் குழந்தையை உற்றுப் பார்க்க... குழந்தையின் நெற்றியிலும் உதட்டிலும் விபூதித் தடங்கள்... பரவசப்பட்டு கண்ட பாட்டியின் கண்களில் கண்ணீர்த் தடயங்கள்! தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாத இறைவன் சுவாமி... சூரியனுக்கு எதற்கு விளம்பரம் தேவை? அனுபவப் பகிர்வுகள் என்பவை இறைவனை மனிதன் உணர வழிவகை செய்யும் வாசல்களே தவிர விளம்பரப் பலகைகள் அல்ல...!

ஆகச் சிறந்த இறைவனே ஆகச் சிறந்த தொண்டரும்... சுவாமிக்கு மிஞ்சிய சேவையை எந்த சேவாதளரும் இதுவரை செய்ததில்லை!

ஒரு முறை 3 வயது குழந்தைக்கு மீஸல்ஸ் (விளையாட்டு அம்மை) நான்கு நாட்களில் வைரஸ் ஜுரம் அதிகமாகி மூளையை பாதிக்கிறது... பாவம் அந்தப் பிஞ்சுக்கு எப்படி இருக்கும்? டாக்டர் நம்பிக்கை இழந்தார்... பெரிய ஹாஸ்பிட்டலில் காட்டும் படி பரிந்துரைக்கிறார்.. வெளியே வண்டி பஞ்சர்... தடங்கலுக்கு மேல் தடங்கல்...  அப்போது தான் அபயக்கரம் தூக்கி வதனம் மலர்ந்து சிரித்தபடி இருக்கும் சுவாமிuயின் திருப்படத்தை எடுத்து கண்களில் ஒற்றியபடி "சுவாமி நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்!" என அதனை குழந்தையின் தலைமாட்டில் தலையை தொடும்படி வைத்து விடுகிறார்... சிறிது நேரத்திற்கு எல்லாம் குழந்தையின் முனகல் அடங்கிப் போகிறது... திணறிய மூச்சு நிதான கதியில் இயங்குகிறது... பாலுக்காக அந்தப் பச்சிளம் பிஞ்சு கைகளை அசைக்கிறது...தொட்டுப் பார்க்கிறார்... ஜுரம் தன் நிறம் மங்கி வரம் வாங்கிப் படுத்திருக்கும் குழந்தை முன் மண்டியிட்டு தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறது! 

டாக்டர் வந்து சோதித்துப் பார்க்க... ஸ்தம்பித்துப் போய்விடுகிறார் (உறைகிறார்)... வார்த்தை வரவே இல்லை... அந்தக் குழந்தையின் தந்தையோ சாயி ராம் என கண்ணீர் கசிந்தபடி காற்று வெளியிடை கலந்திருக்கும் சுவாமிக்கு கண்வழி நன்றிக்கடன் எனும் நீராபிஷேகம் புரிகிறார்!

(ஆதாரம்: அற்புதமும் ஆன்மீகமும் -5 / பக்கம் : 145/ ஆசிரியர் : திருமதி சாயி சரஜ்) 


இறைவனின் கருணை பரம விசித்திரமானது... அது புரிதலுக்கு அப்பாற்பட்டது... சுவாமியை இறைவா என்றோ பாபா என்றோ சுவாமி என்றோ அல்லா என்றோ கர்த்தாவே என்றோ எந்த பெயரில் அழைத்தாலும் ஒன்று தான்! எந்தப் பெயரில் ஒருவர் அழைக்கிறார் என்பதை அல்ல பக்தியோடு அழைக்கிறார்களா? என்பதையே சுவாமி பார்க்கிறார்... அந்த சரணாகத பக்தி தான் சுவாமியை கருணையோடு நம் கர்மங்களை கரைத்தபடி காப்பாற்ற வைக்கும் கடவுச் சொல் (Password) !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக