தலைப்பு

செவ்வாய், 11 ஜனவரி, 2022

PART 6 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!


"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்


பனியில் தவமாய் உறைந்த அந்த 11 பேர்களுக்கு என்ன ஆனது? கங்கைக்குள்  அந்த 12 ஆவது நபர் வீசிய அட்சயப்பாத்திரத்தை யார் மீட்டது? மீட்கையில் ஏற்பட்ட விபரீதம் என்ன? அந்த குகையில் அப்படி அவர்கள் என்னதான் செய்தார்கள்? அந்த அட்சயப்பாத்திரத்திற்கு உண்மையில் சக்தி இருந்ததா? என்பவை சுவாரஸ்யப் பயணமாய் இதோ...! வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்...


"-------" எந்தவித எண்ணமும் இல்லாமல் அவர்களின் கண்கள் திறந்து கொள்கின்றன‌... 18,000 அடிக்கு மேல் ஆக்சிஜன் குறைவாகத் தான் இருக்கும்...! ஆகவே தான் சுவாமி அவர்களை பிராணாயாம கலையில் தேர்ச்சி பெற வைத்திருக்கிறார் என்பது புரிகிறது... சமாதி நிலையை விட்டு ஒவ்வொருவராக விழிக்கின்றனர்... ஆதியோடு சமமாக இருப்பதே சமாதி நிலை... அதுவே பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் அடைய வேண்டிய உயர் நிலை... வேறெதிலும் உயர்வு இல்லை...! லௌகீக வாழ்வில் உயர்வு.. வளம்.. வசதி...உறவு... பதவி என மனிதன் கற்பனை செய்து கொள்வதெல்லாம் நிரந்தரமில்லை... நிரந்தரமில்லாத எதுவுமே உண்மையுமில்லை... அந்த 11 பேர்களும் வைரங்களை நம்பி வெளியே சென்று வெளி நிறைந்தவர்கள்... எது நீர்க்குமிழி? எது வைரம்? என கண்டுணர்ந்தால் தான் அந்த அகத்தவம் சாத்தியப்படும்! அந்த சமாதி நிலையே அதுவே உயிர்களுக்கான உண்மையான ஊதியம்... ஜோசிய கிளிகளுக்கும் கிளிரூப ரிஷியான சுகப்பிரம்மருக்கும் வித்தியாசம் இருப்பது போலவே தான் உலகத்தவர்க்கும்... தவசிகளுக்கும் உள்ள வித்தியாசம்...!


 ஆத்மாவோடு(தன்னோடு) நிரந்தர கலத்தல் எனும் சமாதி நிலை ஏற்படுகிற அதுவே உண்மையான திருமண வாழ்க்கை... அங்கே விவாகரத்து அச்சுறுத்தல் இல்லை... அங்கே நிர்பந்தம் இல்லை... சமாளிப்புகள் இல்லை... சகித்துக் கொள்ளுதல் இல்லை... ஆன்ம ஞானம் எனும் வாரிசுகளால் ஆன்ம அமைதியே தவிர பாகப்பிரிவினை தகராறுகள் இல்லை! ஏற்கனவே நேர்காணல் அறையில் சுவாமி சிருஷ்டி மோதிரம்... கைக்கடிகாரம் பரிசளித்து அறிவுறுத்திய போதும்...தன்னிலை உணரா அந்த 12 ஆவது நபருக்கு அதற்கு மேல் கொடுப்பினை இல்லை... தனது பக்குவமின்மையிலேயே அவர் தொலைந்து போகிறார்! 

18 நாட்களளையும் 18 நிமிடங்களாக அவர்கள் கடந்து போகிறார்கள்...18 ஆம் நாள் காலை 10 மணி... வெட்ட வெளியில் நிறைந்த அவர்கள்...தங்கள் உடலுக்கு திரும்புகிறார்கள்... தியான சமாதி நிலை கடிகாரங்களை சுக்குநூறாய் உடைத்துப் போட்டுவிடுகின்றன... சூர்யோதய சந்த்ரோதயங்களை விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்றன...! அவர்கள் அமைதியாகப் பார்க்கிறார்கள்... அந்த 12ஆவது நபரும் இல்லை... அவர் பொறுப்பிலிருந்த அட்சயப் பாத்திரமும் இல்லை...ஆயினும் அமைதியாகவே இருக்கிறார்கள்... சமாதிக்குப் பிறகு கை கால்கள் மறத்திருக்கும் என்பதால் சற்று எழுந்து கொண்டு நடக்கிறார்கள்... "சுவாமி சங்கல்பம்" என தங்குவதற்கு குகையை தேடுகிறார்கள்... அதாவது தேட வைக்கப்படுகிறார்கள்... சுவாமி அவர்களை அவர்களுள் இருந்தபடி வழிநடத்துகிறார்... கொஞ்ச தூரம் கூட இல்லை... அங்கேயே ஒரு குகையை கண்டடைகிறார்கள்... அதுவே ஸ்ரீ நரநாராயண குகை... வாருங்கள் குகையின் உள்ளே சுற்றிப் பார்ப்போம்! இளஞ்சூடு பரவி இதமேற்றும் குகை அது... காற்றோ ஓடித் திரியாமல் கர்ப்பிணிப் பெண்ணாய் நடந்து போகும் குகை அது! அவர்கள் அங்கே சிறிது இளைப்பாறுகிறார்கள்... திருவிழாவில் தொலைந்து போன தனது குழந்தையை தாய் பதறித் தேடுவது போல் எல்லாம் அவர்கள் அட்சயப் பாத்திரத்தை தேடவில்லை... அவர்கள் விருப்பு வெறுப்பை கடந்தவர்கள்... "சுவாமி தான் அனுப்பியது...சுவாமியே காப்பாற்றுவார்" என்ற ஆன்ம தைரியம் அவர்களுக்கு அதிகம்...! இது தான் ஆன்ம சாதகர்களுக்கும்... லௌகீக ஆஷாடபூதிகளுக்கும் உள்ள வித்தியாசம்!

முகம் அலம்ப நதிநீர் நிலை அருகே செல்கிறார்கள்... அப்போது ஊர்வசி குண்டத்தின் அடியில் அட்சயப் பாத்திரத்தை ஏதேர்ச்சையாகப் பார்க்கிறார்கள்... பளிங்கு போல் நதி என்பதால் பளிச் என அது கண்களில் பட்டு விடுகிறது...! அந்த ஏரி 350 அடி ஆழமுடையது! குதித்து எடுக்க வேண்டும்! அது நமக்கு அவசியமா? ஆம் அவசியம் தான் ! காரணம் நாமே கொண்டுவரவில்லை...சுவாமி சிருஷ்டித்து கொடுத்தது.. ஆகவே அது மிகவும் முக்கியமே! காரணமில்லாமல் சுவாமி எதையும் வாழ்வில் ஒருவருக்கும் தருவதில்லை!! ஆகவே... தானே குதித்து எடுக்கப் போவதாக தலைமை ஆன்ம சாதகரான அந்த நேபாள இளம் துறவி முடிவு செய்கிறார்.. 1 மணிநேரம் கூட சுவாசம் அடக்க முடியும் அவரால்... சுவாமி கற்றுத் தந்து அவர் பயின்று

கைவரப்பெற்ற சுவாசப் பயிற்சி அது! 'சாயிராம்' எனக் கண்களை மூடி சுவாமியை ஒருநொடி நினைந்து குதித்துவிடுகிறார்... 

ஜலக் என ஏரியில் சத்தம் கேட்கிறது...

அவர் நீரின் உள்ளே மூழ்கி மூச்சடிக்கிப் போவது 10 பேருக்கும் தெளிவாகத் தெரிகிறது! அட்சயப் பாத்திரத்தை வலது கையால் எடுத்தபடி... மேலே நீந்தி வருகிறார்... அவர் உள்ளே சென்று வெளியே எடுத்துவர 40 நிமிடங்களுக்கும் மேல் ஆகிறது! அந்த தண்ணீரை தொட்டாலே உடல் உறைந்துவிடும்... அதிகாலை மார்கழிமாத சில்லிப்புக் குளியலளை விட 1000 மடங்கு சில்லிப்பு அது! கரையோரம் தெரிகிறார்.. 10 பேர்களும் ஓடிப்போக... இருவர் அவரை கைத்தாங்கலாய் தூக்குகிறார்கள்...‌ உடல் எல்லாம் மறத்துப் போய்விடுகிறது! ஆம் சந்தேகமில்லாமல் இறந்துவிடுகிறார்... சுவாமியின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே "முக்தி அடைவதற்கான சாதனைக்குத் தானே இங்கே சுவாமி எங்களை அனுப்பியிருக்கிறார்... இவர் தனது இலக்கை இன்னும் எட்டவில்லையே...! 10 பேருக்காக ஒருவர் இறப்பதா... ? சுவாமி" என உருக்கமாக சுவாமி நாமம் ஜபித்து அவருக்கு சூடேற்ற மசாஜ் செய்கிறார்கள்...

          சிறிது நேரத்தில் அவர் சடார் என கண்களை திறந்து 'ஹா' என மூச்சை உள் இழுக்கிறார்! பிறகு நரநாராயண குகையில் ஓய்வெடுத்துக் கொள்கிறார். 

20 அடி தரைமட்டத்திலிருந்து உயர்வாக இருக்கிறது அந்த குகை. நல்ல நீர்ச்சுனை. வாருங்கள் குகைப் பகுதியை சுற்றிப் பார்ப்போம்!! இமயமலைச் சாரல்.. பனிப்போர்வை... நீர் நடமிடும் சப்தம்... ஓங்கார காற்றொலி... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித நடமாட்டமே இல்லை...! எங்கே மனிதர் யாரும் இல்லையோ அங்கே அந்த 11 பேர்களுக்கு சுவாமி தந்த இடம் அது! ஆஹா...ஒரே அமைதி...! அமைதியில் இரு வகையே.. மயான அமைதி, தியான அமைதி! அது தியான அமைதி... இப்படி ஒரு சூழல் கிடைத்தால் முக்தி உச்சந்தலையில் முத்தமிடாமல் என்ன செய்யும்!!

இப்போது குகை உள்ளே... அந்த குகையை 12 அறைகளாகப் பிரிக்கிறார்கள்... 11 அறை இவர்கள் தங்க... ஷேர் ஆட்டோ போல் அவர்கள் குவியலாக இல்லை.. ஆன்ம சாதனை என்பதே தனிநபருக்கானது தான்! அந்த 12 ஆவது அறை சுவாமியை வழிபட... வழிபடும் பொருட்களும் சேகரிக்கப்படுகின்றன...அதற்கு 2 வாரங்கள் ஆகின்றன... 

                 இரவு 9 மணிக்கு தூக்கம்... அதிகாலை 2.30 மணிக்கு எல்லாம் விழிப்பு... காலைக்கடனை முடித்து.. 4 மணிக்குள் குளியல்... 30 நிமிடம் சுவாமிக்கு 12 ஆவது அறையில் வழிபாடு... பிறகு 4.30 முதல் மாலை 4.30 வரை 12 மணிநேர ஆழ்நிலை தியானம்... அந்த 11 பேர்களில் 3 பேர் அக்னிஹோத்ரிகள்... ஹோம திரவியங்களுக்கு நெருப்பூட்டி காயத்ரி மந்திரம் ஜபித்து செய்கிற சிறு வேள்வி அது! அது அகத்தையும் புறத்தையும்(சுற்றுச்சூழல்) சுத்தீகரிக்கும்! ஆகையால் அவர்கள் 3 பேர் மட்டும் காலை 8 மணி அளவில் தியானத்திலிருந்து எழுந்து..‌அக்னி ஹோத்ரம் முடித்து... மீண்டும் ஆழ்நிலை தியானத்துள் செல்வர்.. பிறகு மாலை 4.30 மணி அளவில் 11 பேர்களும் கைகால் தளர்த்தி... சிறிது நடந்து... உடற்பயிற்சி செய்துவிட்டு... 12 ஆவது அறையான சுவாமி வழிபாட்டு அறைக்கு வந்து சுவாமியை வழிபட்டு வணங்கி.. அந்த அட்சயப் பாத்திர மூடியைத் திறக்கிறார்கள்... அதில் இவர்களின் உணவு நிரம்பி வழிந்தபடி இருக்கிறது...! 

அது 11 பேருக்கும் சரியாக இருக்கிறது.. சுடச்சுட இருக்கிறது... ஆன்ம சாதனைக்கு எது தேவையோ அவ்வுணவு அதில் சுவாமியால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது...பிறகு மாலை பஜனை... கலந்துரையாடல்... ஓய்வெடுப்பதற்கு முன் பசுவின் மடியாய் அட்சயப் பாத்திரத்தில் பால் நிரம்பி இருக்கிறது... பருகிவிட்டதும் படுக்கிறார்கள்... இதுவே அவர்களின் அன்றாட தவ வாழ்க்கை...! ஒருமுறை அவர்களின் ஆழ்நிலை தியானம் 3 நாட்களுக்கும் மேல் இடைவெளியே இன்றி தொடர்கிறது...கண்திறக்கையில் அந்த அட்சயப் பாத்திரத்தில் பழரசம் நிரம்பி வழிந்திருக்கிறது...!  3 நாள் சாப்பிடாமல் வயிறு ஒட்டி குடல் இறுகியிருக்கும்... பழரசமே அதை இளகவைத்து இதம் தரும் என்பதால் சுவாமியின் ஏற்பாடு அது!! சுவாமியின் அட்சயப் பாத்திர பிரசாதத்தை பாக்கியமாய் கருதி உட்கொள்ள இமயத்து யோகிகள் பலர் அந்த குகையில் தோன்றி.. அதை உட்கொண்டு மறைவார்கள்! அப்போது அந்த அட்சயப் பாத்திரப் பிரசாதம் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அவ்வளவு பேருக்கும் பெருகி அவர்கள் அனைவருக்கும் அனுகிரகம் செய்யும்! 

                 

(ஆதாரம் : சாயி லீலைகளும் நரநாராயண குகை ஆசிரமும் - 1  / மூலம் : மகேஸ்வரானந்தா/ தமிழில் விஜயராமன்) 


அப்படிப்பட்ட ஒரு அன்றாட தவப்பொழுதில்... அவர்கள் 11 பேரும் ஆழ்நிலை தியானம் முடித்து எழுந்த மாலை நேரம் அது... கண்களைக் கூசும் ஒரு பிரகாசமான ஒளி அவர்களின் முன் தோன்றுகிறது...அந்த ஒளிக்குள் ஒரு திவ்யரூபம் தெரிகிறது... மெதுமெதுவாய் அந்த தேஜோமய ஒளி குறைந்து.. அத்திவ்ய ரூபம் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறது‌... எதனையும் எதிர்பாராத அவர்கள் ஆ வென அந்த தெய்வத் திருக்கோலம் கண்டு  11 பேர்களும் ஆச்சர்யப்படுகிறார்கள் !! 


இமயப் பயணம் 

இன்னும் குளிரும்...


  பக்தியுடன்

வைரபாரதி


ஸ்ரீ மகேஸ்வரானந்தா சுவாமிஜி எழுதிய அரிய அதி அற்புத புத்தகமான "சாயி லீலைகள் நரநாராயண குகை ஆசிரமம் - பாகம் 1,2&3" இவற்றை மொத்தமாக உள்வாங்கி... அதன் சாராம்சத்தை பயண சுவாரஸ்யமாய்... அதன் தெய்வீகத் திருச் சம்பவங்களை முறைமைப் படுத்தி...தெள்ளத் தெளிவான வரிசையில்... முதன்முறையாக உங்களுக்கு இமயம் நோக்கிய பயண அனுபவம் ஏற்படுத்தியபடி 9 பாகங்களாக வெளிவருகிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக