தலைப்பு

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

PART 4 - ஸ்ரீ நரநாராயண இமாலய குகை ரகசியமும்... சுவாமி அருளிய அட்சயப் பாத்திர அதிசயமும்!



"ஸ்தாவராணாம் ஹிமாலய :"

(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்) 

---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்


அந்த 12 ஆவது நபர் பதுக்கி வைத்த அட்சயப்பாத்திரத்தை ஏன்? எதற்காக? எப்போது? சுவாமி மறைய வைத்தார்... அந்த அட்சயப் பாத்திரத்தை மறைய வைத்தபின் சுவாமி என்ன செய்தார்? சுவாமியே கதி என இமயப் பயணம் மேற்கொண்ட அந்த 11 நபர்கள் என்ன ஆனார்கள்? சுவாரஸ்யப் பயணமாய் இதோ...


"அப்படித்தான் அவர்களோடு இமாலயம் போவேன்... என்ன ஆகிவிடும்?" என அந்த 12 ஆவது நபர் விறுவிறுவென சுவாமி தேர்ந்தெடுத்த அந்த 11 புண்ணிய நபர்களோடு பயணம் மேற்கொள்கிறார்... தானே அந்த குழுவின் தலைவர் என அறிவித்துக் கொள்கிறார்... அந்த நேபாள இளம் சாதகர் அந்த வார்த்தையை எதிர்த்து "சுவாமி தான் என்னை தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறார்... நீங்கள் யார் இடையே புகுந்து இடை மறிக்க" என ஒரு எதிர் வார்த்தை கூட அந்தத் தூய நேபாள துறவி கேட்கவில்லை... ஆன்ம சாதகர் எப்போதும் தன் ஆன்மாவிலேயே லயித்திருக்கிறார்... பறவைக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை வைத்து அது என்ன செய்ய முடியும்? சிறகுகளே அதற்கு முக்கியம்! வானர தலைவனான சுக்ரீவன் அல்ல அனுமனே சஞ்சீவி மலையை சுமந்து வந்தது! அடக்கம் - அமைதி - அன்பு - அரவணைப்பு இவையே தலைமைப் பண்பு!!தலைவனுக்கு தலை அல்ல இதயமே முக்கியம்! எனும் படி அந்த நேபாள இளம் துறவி முன்நோக்கி நடந்து போகிறார்... இடை புகுந்து அந்த 12வது நபர் தன்னை தலைவன் என்று சொல்லிக் கொண்டு அட்சயப் பாத்திரத்தையும் தன் பொறுப்பிலேயே வைத்துக் கொள்கிறார்! பயண உணவுக்குத் தேவையான அரசி,பருப்பு வகைகள், கோதுமை என எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிலேயே எடுத்துக் கொண்டு உடன் போகிறார்... சுவாமி ஏற்கனவே வழிகாட்டியிருக்கிறபடியால் அந்த 11 நபர்களுக்கே தாங்கள் செல்கின்ற இடத்திற்கான வழி தெரியும்... அதே சமயம் தன்னை விட்டுவிட்டும் போய்விடக்கூடாது எனும் பதைபதைப்பு அந்த 12 ஆவது நபருக்கு! எங்கே தனது தலைமை நாற்காலி காலியாகிவிடுமோ என்ற பயத்தில் தான் தலைவன் என நடிப்பவனால் அபத்தங்கள் அரங்கேற ஆரம்பிக்கின்றன... 12 ஆவது நபருக்கும் அதேவித பயம்... அதனால் மற்ற 11 பேர்களுக்கும் அவரின் நடவடிக்கை புதிராக இருக்கிறது...

சுவாமி சங்கல்பப்படி நிகழட்டும் என சாந்தப்படுகின்றனர்... 

ஹம்லா மாவட்டம், நேபாளம் 

அது இமாலயத்தில் உள்ள நேபாளம் செல்வதற்கான பயணம்... சாதாரண பயணமல்ல... குளிர் தோய்ந்த கடுமையான பயணம் அது... மனம் ஒரு லயத்தில் நிலைகொள்ளாதவர்க்கு கடும் ஆன்மீகப் பயணம் ஏற்றதல்ல... திபெத்துக்கும் நேபாளத்திற்கும் இடையே உள்ள பொது எல்லையில் ஹம்லா மாவட்டம் உள்ளது...அங்கே அவர்கள் ஒரு பெரிய குகையைத் தேர்ந்தெடுத்து... அதில் தங்கி தியானம் செய்கின்றனர்... குளிர் கடும் குளிர்...குளிரின் பற்களே நடுங்கும் அளவிற்கு குளிர்... கட்டிலிலும் மெத்தையிலும் படுத்த அந்த 12 ஆவது நபருக்கு குகை வாசம் எப்படி ஒத்துவரும்? மன எண்ணங்கள் தாவியபடி சுவாமி தன்னை "நீ அவர்களோடு போக வேண்டாம் என்று தானே சொன்னார் " என அவர்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிற சமயம் பார்த்து மீண்டும் பெங்களூருக்கே திரும்பிப் போகிறார்.. எதற்கு இவர்களோடு வருவானேன்... திரும்பி செல்வானேன்... சிலருக்கு மனமே விஷம்... சிலருக்கு மனமே அமுதம்...


அந்த 12ஆவது நபர் வெறுங்கையோடு திரும்பினால் பிரச்சனையில்லை.. அவர் தனது கைப் பைக்குள் அட்சயப் பாத்திரத்தை வேறு மறைத்து வைத்துக் கொண்டு திரும்புகிறார்... ஒயிட் ஃபீல்ட் பிருந்தாவன சாலையில் அவர் நடந்து வருகிற அதே சமயம்... சுவாமி த்ரயி ப்ருந்தாவன் உள்ளே ஒரு மாணவரிடம் "35 வயது மதிக்கத்தக்க ஒருவன் முதுகில் பை தொங்கவிட்டு வருகிறான்.. அவனை என்னிடம் அழைத்து வா!" என்கிறார். 

அவரும் சுவாமியிடம் வந்து சேர்கிறார்... சுவாமி அவரை பார்த்த மாத்திரத்தில் கேட்ட முதல் கேள்வி "ஏன் அட்சயப் பாத்திரத்தை உன்னோடு எடுத்துக் கொண்டு வந்தாய்?" என்பது தான்! 

"இல்லை சுவாமி... இனி அவர்களுக்கு அட்சயப்பாத்திரம் தேவையே இல்லை... அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் 6 மாதத்திற்கு வைத்துவிட்டுத் தான் வந்தேன்" என தான் செய்தது சரி என்பது போல் வாதிடுகிறார்... மனிதன் எப்போதும் தன் தவறுகளுக்காக தானே வக்கீலாக மாறி வாதாடுகிறான்... வாதாடி அது தான் சரி என அவனே நீதிபதியாகி தனக்குத் தானே தீர்ப்பும் அளித்துக் கொள்கிறான்! 

"6 மாதத்திற்கு சரி... அதற்குப் பிறகு... என்ன செய்வார்கள்? உணவிற்கு யாசிப்பதற்காக செலவழிக்கும் நேரத்தை அவர்கள் தங்களது ஆத்ம சாதனையில் பயன்படுத்தலாமே... அதைக் கொடு" என அட்சயப்பாத்திரத்தை சுவாமி கேட்கிறார்... கை நடுங்கியபடி ஏக்கத்தோடு திரும்பத் தருகிறார் அவர்... சில நொடிகளில் அதனை சுவாமி மறைய வைக்கிறார்...அது சரியாக காலை 11.05 மணி... விசேஷம் என்பது அந்தப் பாத்திரத்தில் இல்லை... சுவாமியின் சங்கல்பத்தில் தான் இருக்கிறது... எந்தப் பாத்திரத்தையும் சுவாமியால் அட்சயப் பாத்திரமாக மாற்ற முடியும்...!  இது புரியாமல் அந்த 12 ஆவது நபரும் பறித்தது இப்படி போய்விட்டதே என வருத்தப்படுகிறார்... பறித்தது எல்லாம் பரந்தாமனுக்கே! என்பதாக மாறிவிடுகிறது! 

அட்சயப் பாத்திரம் மேல் உள்ள மோகத்தால் மீண்டும் அந்த 12 ஆவது நபர் ஒயிட் ஃபீல்டை விட்டு இவர்கள் சென்ற இடத்திற்கே திரும்புகிறார்... அதே நேபாள ஹம்லா குகை... சுவாமி தேர்ந்தெடுத்த அந்த 11 நபர்களில் முதிர் துறவிகளான வாமதேவரும் விரஜாநந்தாவும் இருந்தனர்...வாமதேவ சுவாமிகளிடம் எப்போது உங்களுக்கு அட்சயப் பாத்திரம் வந்து சேர்ந்தது எனக் கேட்கிறார்... அன்று சரியாக 11.05 இருக்கும்.. சுவாமியின் படத்தை எதேர்ச்சையாக திரும்பிப் பார்த்த போது அங்கே இருந்தது... சுவாமியின் கருணையை நினைந்து ஆச்சர்யப்பட்டு கண் கலங்கினோம் என்றார்... அது சரியாக சுவாமி பிருந்தாவனத்தில் அட்சயப் பாத்திரத்தை மறைய வைத்த அதே நேரம்... அதே நொடி... திடுக்கிட்டபடி 12 ஆவது நபர் என்னை எல்லோரும் மன்னித்துவிடுங்கள்.. என்னிடம் அது இருப்பது கூட தெரியாமல் சுவாமியின் தரிசன ஆவல் ஏற்பட சென்றுவிட்டேன் என சமாளிக்கிறார்.... இனி நான் மிகுந்த கவனத்தோடு இருக்கிறேன்... என்னிடமே அந்த அட்சயப் பாத்திரம் இருக்கட்டும் என புன்னகை செய்கிறார்... அந்த புன்னகைக்குள் ஒரு பூகம்பம் ஒளிந்திருக்கிறது என அவர்கள் அறியவில்லை...அந்த 11 புண்ணியவான்களும் அந்த 12 ஆவது நபரை இன்னமும் நம்புகிறார்கள்... 

 நேபாள ஹம்லா குகையில் 6 மாதங்கள் தங்கிவிட்டு அந்த 11 ஆன்ம சாதகர்களும் வாரணாசிக்கு (காசிக்கு) திரும்புகிறார்கள்... அங்கே கூடி பத்ரிநாத்'திற்கு மேற்கொள்ள வேண்டிய பயணத்தை திட்டமிடுகின்றனர்... ஹம்லா வாசத்தில் பலர் அந்த 11 ஆன்மசாதகர்களை வணங்கி வழிபட ஆரம்பித்ததில் தங்களது தியான நேரங்கள் தடைபடவே காசிக்கு திரும்புகிறார்கள்...

தசஸ்வாமெதா காட், காசி

காசியில் உள்ள தசஸ்வாமெதாவில் ஒன்று கூடுகின்றனர்...அங்கே அவர்கள் சுவாமியை வழிபாடு செய்தபின் பத்ரிநாத் செல்வதற்கான தங்களது இறுதிகட்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள்! வாருங்கள் பத்ரிநாத் செல்வோம்!

அந்த 11 பேர்களும் நடக்கிறார்கள்... அந்த நடை சிங்கமும் கம்பீரம் கற்றுக் கொள்ள வேண்டிய பொங்குநடை... அந்த நடை பூமியை ஒளிரச் செய்கிற தங்க நடை... அந்த நடை இதயமே இலக்கணங்களை கற்றுக் கொள்ள வேண்டிய சங்கநடை...

அந்த 12 ஆவது நபர் வழி தெரியாததால் அவர்கள் செல்வதற்கு நடுவில் செல்கிறார்... சில சமயத்தில் அவர்கள் நடையோடு ஈடுகொடுக்க முடியாமல் பின்னால் அவர்களை தொடர்ந்தபடி கால்வலியோடு செல்கிறார்...குளிரோ அவரது கெண்டைக் கால்களைக் கவ்விப் பிடிக்கிறது!

"கொடுத்தது தான் சுவாமி கொடுத்தார்... அட்சயப்பாத்திரத்தோடு சேர்த்து ஒரு புஷ்பக விமானத்தையும் கொடுத்திருந்தால் எவ்வளவு சவுகரியமாக இருக்கும்!" என நினைக்கிறார்...

"ஷப்பா ... இந்த பத்ரிநாத் எப்போது தான் நெருங்குமோ? எல்லா இடமும் பனி மூடப்பட்டு ஒரே இடம் போலவே தெரிகிறதே... திசை நகர்கிறதா... இல்லை வெறும் கால் மட்டுமே நகர்கிறதா? இவ்வளவு கடினம் என தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேனே... நல்ல வேளை சுவாமி மறைய வைத்து அவர்களுக்கு சேர்ப்பித்த போதும்... அட்சயப் பாத்திரம் மீண்டும்  நம்மிடம் தான் பத்திரமாக இருக்கிறது!" என ஒருமுறை அதைப் பார்த்து பெருமூச்சு விடுகிறார்! "ஆ... ஆ...இவர்களின் உணவு ஆதாரமே நம்மிடம் தான் இருக்கிறது..." கிளைகள் எவ்வளவு உயர்ந்து வளைந்து நெளிந்தாலும் வேரை விட்டுவிட்டு மரம் வேறெங்கு போய்விடும்? எனும் ஒரு வித தைரியம் அந்த 12 ஆவது நபருக்கு...


(ஆதாரம் : சாயி லீலைகளும் நரநாராயண குகை ஆசிரமும் - 1&2  / மூலம் : மகேஸ்வரானந்தா/ தமிழில் விஜயராமன்) 


அந்த 11 ஆன்மசாதகர்கள் நடக்கிறார்கள்... அவர்களின் தலைக்குமேல் முக்தி தனது மொட்டுக்களை பூக்களாக்கி வைத்து தூவுவதற்காக காத்திருக்கிறது...

அந்த 12 ஆவது நபரும் நடக்கிறார் 

அவரின் தலைக்கு மேல் வெண்மேகம் அவரையே சிரித்தபடி வேடிக்கைப் பார்க்கிறது!


இமயப் பயணம் 

இன்னும் குளிரும்...


  பக்தியுடன் 

வைரபாரதி


ஸ்ரீ மகேஸ்வரானந்தா சுவாமிஜி எழுதிய அரிய அதி அற்புத புத்தகமான "சாயி லீலைகள் நரநாராயண குகை ஆசிரமம் - பாகம் 1,2&3" இவற்றை மொத்தமாக உள்வாங்கி... அதன் சாராம்சத்தை பயண சுவாரஸ்யமாய்... அதன் தெய்வீகத் திருச் சம்பவங்களை முறைமைப் படுத்தி...தெள்ளத் தெளிவான வரிசையில்... முதன்முறையாக உங்களுக்கு இமயம் நோக்கிய பயண அனுபவம் ஏற்படுத்தியபடி 9 பாகங்களாக வெளிவருகிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக