"ஸ்தாவராணாம் ஹிமாலய :"
(அசையாப் பொருட்களுள் இமய மலையாக இருக்கிறேன்)
---ஸ்லோகம்- 25: அத் 10 - விபூதி யோகம் / ஸ்ரீமத் பகவத் கீதை - ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்
எவ்வாறு எம்.எஸ்.சி பட்டதாரியான அந்த நாத்திக நேபாள இளைஞன் சுவாமியிடம் வந்து சேர்கிறான்? எவ்வாறு சுவாமியை இறைவன் என உணர்ந்து கொள்கிறான்? அதற்கு அவன் செய்த சோதனை என்ன?அவன் தனது முதல் ஆன்மீக அகப்பயணத்தை எவ்வாறு ஆரம்பிக்கிறான்? என்பவைப் பற்றி இந்த இரண்டாம் பாகத்தில் சுவாரஸ்யமாய் அனுபவிக்கப் போகிறோம் இதோ...
மனம் சரியாகவே இல்லை அந்த எம்.எஸ்.சி இளைஞனுக்கு... தந்தையும் தாயும் தன்னை தத்து கொடுத்துவிட்டார்கள் எனும் அதிர்ச்சி... நேரம் வரும்...அப்போது ஏற்றுக் கொள்கிறேன் என சொல்லிவிட்டார் முன்பின் தெரியாத அந்த துறவி... மனம் கிடந்து அல்லாடுகிறது...அப்போது சென்னையிலிருந்து ஒரு மடல்... வகுப்பு தோழர்கள் சுற்றுலாவுக்கு அழைக்கிறார்கள்... தத்து நிகழ்வு மனதை கொத்தித் தின்கிறது என்பதால் உடனே தாய் தந்தையிடம் சொல்லிவிட்டு சென்னைக்கு கிளம்புகிறான் அந்த இளைஞன்... விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்காக புட்டபர்த்திக்கு அவனையும் அழைத்துக் கொண்டு 12 நண்பர்கள் போகிறார்கள்...
காவி உடையில் சுவாமி அகத்தை கவ்வுகிறபடி பேரன்புப் பேரொளியாய் மிதந்து வருகிறார்... அனைவருக்கும் பாத நமஸ்காரம்... ஒருவருக்கு சிருஷ்டி விபூதி... அதை அனைவரும் பகிர்கிறார்கள்... சிற்றுண்டி முடித்து 10 மணி அளவில் தங்கி இருந்த அறைக்கு அந்த 12 பேர் வருகிறார்கள்... ஒவ்வொருவரும் சுவாமியை புகழ்ந்து பேசுகிறார்கள்.. சுவாமிக்கு அதீத சக்தி இருப்பதாகவும்...அவரை தரிசிப்பதே மெய்மறக்கும் பேரனுபவம்... அவர் இறைவனே!" இப்படி ஒவ்வொருவரும் உள்ளத்து வார்த்தையைப் பரிமாற... ஏற்கனவே காவித்துறவியால் மன அதிர்ச்சியில் இருக்கும் அந்த எம்.எஸ்.சி நேபாள இளைஞனுக்கு காவி உடை சுவாமியை பார்த்து கடுங்கோபம்...
"நல்ல எண்ணம் கெட்ட எண்ணம் கொண்ட மனிதர் இருக்கிறார்கள்... ஆனால் தான் தான் கடவுள் என்ற எண்ணம் கொண்டவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்... உங்களைப் போன்ற பைத்தியக்காரர்கள் தான் அதை எல்லாம் நம்புவர்... இப்படித்தான் ஒரு காவித் துறவி..." என தனக்கு நடந்த அந்த பகீர் தத்து சம்பவம் பகிர்ந்து... " எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கையே இல்லை... என்ன பெரிய கடவுள்...? நன்மை செய்தால் நன்மை வரும்.. தீமை எனில் தீமை வரும் அவ்வளவே...!" என தன் தடித்த வாதத்தை முன்வைக்கிறான். அவர்கள் அவனை சமாதானம் செய்ய... அடுத்தநாள் காலை... சுவாமி தரிசனத்தில் அந்த நாத்திக நேபாள இளைஞனை மட்டும் நேர்காணலுக்கு அழைக்கிறார்... அது நேர்காணல் அறை... சுவாமியும் அந்த இளைஞனும் தனியாக... "என்ன நீ... நீங்கள் தங்கி இருக்கும் அறையில் நேற்று அப்படி எல்லாமா பேசுவாய்... ?" என ஆரம்பிக்கிறார்... 1000 வாட்ஸ் மின்சாரம் இதயத்தில் தாக்கியதான அதிர்ச்சி அந்த இளைஞனுக்கு... "உன் குடும்பம் எவ்வளவு தெய்வீகமானது...! நல்லது ... இப்போது நீ வெளிநாடு சென்றுவிட்டு வா!... நீ திரும்பி வரும் பயணச் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்கிறார் பேரன்போடு சுவாமி... "என்ன... இவருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே! வெளிநாடு போகச் சொல்கிறார்... அது எப்படி சாத்தியம்? அதற்கு வசதி வேண்டும்... விசா வேண்டும்... நமக்கு வெளிநாட்டில் யாரை தெரியும்?!" என யோசித்தபடி வெளியேறுகிறான்...
ஆன்மீக சுற்றுலா முடித்து... 12 நண்பர்களும் அவரவர் இடம் செல்ல.. அவனோ சென்னையில் தங்கி பிறகு தேர்வு முடிவுக்காக பெங்களூருக்கே திரும்புகிறான்... முதல் வகுப்பில் எம்.எஸ்.சி'யில் தேர்ச்சி பெறுகிறான்...அவனின் பேராசிரியர் கல்லூரி முதல்வரிடம் சான்றிதழ் பெற அழைத்துப் போகிறார்... அப்போது முதல்வர் "கல்லூரிக்காக நீ ஒரு உதவி செய்ய வேண்டும்!" "சொல்லுங்கள் ... நிச்சயமாக" என்கிறான். "உன் பேச்சாற்றல் எங்களுக்கு தெரியும்... வேதங்கள் முந்தியவையா? நிரந்தரமானவையா? எனும் ஒரு சொற்போர் நடக்கிறது... முதுகலை மாணவனாகிய நீ நம் கல்லூரி சார்பாக செல்ல வேண்டும்.. செல்வாயா?" "செல்கிறேன்!" "எங்கே என நீ கேட்கவே இல்லையே... அமெரிக்க கலிஃபோர்னியா சதர்ன் பல்கலைக் கழகத்திற்கு..." என்கிறார் முதல்வர்... "என்ன அமெரிக்காவுக்கா" ஆச்சர்யம் தாளவில்லை...சுவாமியின் திருமுகமும் திருக்குரலும் முன்னே வந்து ஞாபக முத்தம் தருகிறது". "என்ன.. அவர் சொல்வது போலவே நடக்கிறதே!!" என ஆச்சர்யப்படுகிறான்...!
அது அமெரிக்கா... கலிஃபோர்னியா சதர்ன் பல்கலைக்கழகம்... சொற்போர் ஆரம்பம்.. இரண்டு அணிகள்.. வேதம் வியாசருக்கு முன்னமே இருப்பது என ஒரு அணி.. "இல்லை துவாபர யுகத்தில் தான் வேதம் வியாசருக்குப் பின் வந்தது" என இன்னொரு அணி.. இவன் முதலாவது அணியை தலைமை ஏற்கிறான்... மனதில் ஒரு எண்ணம்... நண்பர்கள் சொன்னது போல் பாபா தான் கடவுள் என்றால்... எனக்கு இந்த சொற்போரில் அவர் வெற்றி தரட்டும்... அப்படித் தந்தால் பாபா தான் இறைவன் என நம்புகிறேன்" என மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான்...
"துவாபர யுக முடிவில் வியாசர் காலத்தின் கோலம் கருதி வேதத்தை வரிவடிவமாக தொகுத்திருந்தாலும்... அது ஒலி வடிவமாக பல ரிஷிகளின் நாவில் உச்சாடனம் செய்யப்பட்டவாறே இருந்திருக்கிறது... ரிஷிகளில் வியாசரும் இருக்கிறாரே தவிர வியாசருக்கும் குரு .. வியாசரின் குருவுக்கும் குரு.. என ஆதி சனகாதி ரிஷிகள் வரை அவன் பெயர் சொல்லிப் பேசுகிறான்.. தன் குறிப்பேட்டில் இல்லாத பல ரகசிய விஷயங்கள் அவனது வாய்வழி பிரவாகமாக வெளியே வர... திக்குமுக்காடிப் போகிறான்... சுவாமியை நினைத்து கண் கலங்குகிறான்... அரங்கமே அதிர்கிறது... மூன்று நாட்கள் வாதப் பிரதிவாதம் என நிகழ்ந்து...அவன் தலைமை வகித்த அணியே இறுதியில் வெற்றி பெறுகிறது... உடனே புட்டபர்த்திக்கு பறந்தோடுகிறான்... சுவாமி உடனே நேர்காணல் தருகிறார்!
"நான் தான் அமெரிக்காவில் உன்னைக் கருவியாக வைத்துப் பேசினேன்! இங்கே கவனி! வளமான நல்ல குடும்பத்தில் நான் உன்னைப் பிறக்க வைத்தேன்! எனவே இனிமேல் நிலையற்ற பொருட்கள் மீது நீ பற்று வைக்காதே! ஆன்மீக முயற்சியிலேயே ஈடுபடு பங்காரு! புறப்படு.. பெற்றோரை சந்தித்துவிட்டு மீண்டும் வா!" என்கிறார் தோளை தட்டிக் கொடுத்தபடி...
அவரவர் பூர்வ கர்ம வினைக்கேற்ப பிறப்பு இறப்பு மட்டும் மனிதரின் தனிவகை வாழ்க்கையை நிர்ணயிக்கும் இறைவன் சுவாமியே! என உணர்ந்து கொண்டு ஊருக்கு திரும்பி... நாத்திகத்திலிருந்து ஆன்மீக நறுமணமாய் அவன் மாறி வீச... பெற்றோரும் திருப்தி அடைகின்றனர்...ஒரு வருடம் பெற்றோரோடு தங்கிவிட்டு... புட்டபர்த்தி திரும்புகிறான்... சுவாமி அவனிடம் பிராணாயாம முறைகளை எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்துவிட்டு... "இனிமேல் நீ வீட்டுக்குப் போக வேண்டாம்... எங்கு தியானம் செய்கிறாயோ...அது தான் உன் வீடு...நானே உன் தாய் தந்தை குரு! நீ சம்பூரான் வனத்திற்கு சென்று தியானம் செய்... உனக்கு நினைவிருக்கிறதா? உன் வீட்டுக்கு யாசகம் கேட்டு வந்த துறவி நானே தான்! அன்றிலிருந்து ஒவ்வொரு நொடியும் உன்னுடனேயே நான் இருக்கிறேன்... வருங்காலத்திலும் உன்னோடு இருப்பேன்... சம்பூரான் வனத்தில் தான் நீ தியான ஸித்தி அடையப் போகிறாய்!" என ஆசி வழங்கி அனுப்புகிறார்... பக்தன் முக்தனாவது பெரிய விஷயமல்ல... நாத்திகனையே தெய்வீகமாக்கி முக்தனாக்க இறைவனால் மட்டுமே முடியும்! ரத்னாகரன் வால்மீகி ஆனது போல்!!
சம்பூரான் வனமா? எப்படி அங்கே தன்னந்தனியாக? சாப்பாடு யார் தருவார்? வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு? சரி! சுவாமி சொல்லியபடியால் அனைத்துமே அவர் பார்த்துக் கொள்வார் என... அடுத்த நொடி என்ன நடக்கும் ? என்பதை எண்ணி துளியும் கவலைப்படாமல்... அச்சப்படாமல் .. சுவாமி மேல் பாரத்தைப் போட்டு... சர்வம் சுவாமி சங்கல்பம் என நடக்கிறான்..
(ஆதாரம் : சாயி லீலைகளும் நரநாராயண குகை ஆசிரமும் - பாகம் 2 / மூலம் : மகேஸ்வரானந்தா / தமிழில் : விஜயராமன்)
அவன் அவராவதற்கும்... மகன் ஞானக்கால் முளைத்து மகானாவதற்குமான பயணமிது!! அப்போது குழம்பிப் போன அவன் தலைமேல் மின்விசிறியே சுற்றிக் கொண்டிருந்தது... இப்போது தெளிந்த அவன் தலைமேல் பிரபஞ்சமே சுற்றிக் கொண்டிருக்கிறது!!
வாருங்கள் சம்பூரான் வனத்திற்கு நாமும் பயணிப்போம்!
இமயப் பயணம்
இன்னும் குளிரும்...
பக்தியுடன்
வைரபாரதி
ஸ்ரீ மகேஸ்வரானந்தா சுவாமிஜி எழுதிய அரிய அதி அற்புத புத்தகமான "சாயி லீலைகள் நரநாராயண குகை ஆசிரமம் - பாகம் 1,2&3" இவற்றை மொத்தமாக உள்வாங்கி... அதன் சாராம்சத்தை பயண சுவாரஸ்யமாய்... அதன் தெய்வீகத் திருச் சம்பவங்களை முறைமைப் படுத்தி...தெள்ளத் தெளிவான வரிசையில்... முதன்முறையாக உங்களுக்கு இமயம் நோக்கிய பயண அனுபவம் ஏற்படுத்தியபடி 9 பாகங்களாக வெளிவருகிறது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக