தலைப்பு

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

கோடிக்கணக்கான பக்தர் குவிய இருக்கும் புனித புட்டபர்த்தியும்... சுவாமியின் தீர்க்க தரிசனப் பார்வையும்!


வருங்காலத்தில் பக்த வெள்ளம் எவ்வாறு திரளப்போகிறது... அதற்கு ஏற்றார் வகையில் சுவாமியின் திருச்சங்கல்பம் முன்கூட்டியே தனது தீர்க்க தரிசனத்தை செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறது என்பதை குறித்தும் ஒரு சராசரி பக்தனின் பார்வையில் இருந்து ஒரு சுவாரஸ்ய அலசல் இதோ...


"நான் உடம்பல்ல... உயிரல்ல... ஆண்களிடத்தில் ஆண்களாக... பெண்களிடத்தில் பெண்களாக...எப்போதும் பரப்பிரம்மமாகவே இருக்கிற பரப்பிரம்மம் நானே! வருங்காலத்தில் கண்ணிழந்தவரும் கூட... அறியாமையில் இருப்பவரும்... ஏன்.. ஒட்டு மொத்த உலகமுமே என்னை இறைவன் என உணர்ந்து கொண்டாடும்!" என சுவாமி 31 ஜூலை 1996 அன்று தனது தெய்வீக உரையாடலில் பிரகடனப்படுத்தியது நிகழவே போகிறது!! இதனை ஏற்கனவே ஸ்ரீ பிரேம சுவாமி அவதாரப் பிரகடனத்திற்கு பிறகான பூமி பெறப்போகும் புதிய விடியல் எனும் பதிவில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது!! (லிங்க் இணைக்கப்படுகிறது)

அப்படி விரைவில் சுவாமியே இறைவன் எனும் பரம சத்தியம் ஜனங்கள் உணர உணர புட்டபர்த்தி நோக்கிப் படையெடுப்பார்கள் அல்லவா!! அப்படி இருக்கையில் ஆசிரமத்து உள்கட்டமைப்பு வசதியாக இருந்த போதும்.. புட்டபர்த்தியின் வெளிக்கட்டமைப்பு வசதி விஸ்தாரமாக அமைய வேண்டும்... ஜனங்கள் பக்தர்களாக புனித ஷேத்திரமான புட்டபர்த்தியை தரிசித்து "இங்கே தான் சுவாமி அவதரித்தார்.. ஆஹா இங்கே தான் சிறுவயதில் சுவாமி விளையாடினார்.. இந்த அனுமன் கோவிலில் தான் சுவாமியை சுற்றி வரச் சொன்ன நண்பர்கள் மரக்கிளையிலிருந்து சுவாமியை சுற்ற வேண்டாம் என சொல்வதற்கு குதித்த அனுமனை தரிசித்தார்கள்.. தாத்தா கொண்டம ராஜு கனவில் வந்த சத்யபாமாவுக்கு இங்கே தான் அவர் கோவில் அமைத்தார்... இது தான் பேரவதாரத்தை வயிற்றில் சுமந்த புண்யவதி ஈஷ்வரம்மா சமாதி!" என ஒவ்வொன்றையும் பரவசமாக தரிசிக்க கோடிக்கணக்கான ஜனங்கள் திரள்வர்... அப்படி இருக்கையில் புட்டபர்த்தி என்கிற கிராமம் தனது கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்! 

இங்கே தான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார் என சிறைச்சாலை திருச்சாட்சியம் கூறும் மதுரா போல்... ஆஹா இங்கே தான் சுவாமி ஸ்ரீராமராய் அவதரித்தார் எனக் கூறும் அயோத்தி போல்... இங்கே தான் சுவாமி தன் திருப்பாதங்கள் பதிக்கப் பதிக்க இந்த மணல் வெளியில் தான் நடமாடினார்... அதோ அந்த கல்ப விருட்சத்தில் தான் சுவாமி ஆப்பிளையும் மாதுளையையும் கிளையோடு ஒடித்து சிருஷ்டித்தார்! என்பதான திவ்ய லீலா மகிமைகளையும் கண்குளிர தரிசிப்பார்கள்.. அப்படி பக்த ஜனங்கள் வருவதற்கான போதுமான பேருந்து வசதி/ ரயில் வசதி/ விமான வசதி என அனைத்தையும் விரிவாக்கம் செய்ய வேண்டி இருக்கும்! தங்கும் விடுதிகள்... சுற்றுலா வழிகாட்டிகள் கூட திரள்வார்கள்... கங்கா ஆரத்தி போல் புண்ணிய நதியான சித்ராவதிக்கும் ஆரத்தி வைபவம் நிகழும்...! அதைக் காண லட்சக்கணக்கில் பக்தர் குவிவர்! கங்கா ஆரத்தியிலேயே சுவாமி திருவுருவப் படத்தையும் சேர்த்து வைத்தே அக்னி வழிபாடுகள் காசியில் இன்றளவும் நிகழ்கிற போது.. சுவாமியின் ஜன்ம திருத்தலமான புட்டபர்த்தியில் அந்தப் பெரும் வைபவம் நிகழாமல் போய்விடுமா! அதற்காகவே சுவாமியின் திவ்ய திருச்சங்கல்பம் இப்போதே "ஸ்ரீ சத்ய சாயி மாவட்டம்" என அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான கட்டுமான விரிவாக்க வசதியின் அஸ்திவாரத்தை மேற்கொள்கிறது என்பதனை உணர முடிகிறது!! இதுவே கோடிக்கணக்கான பக்தர்கள் திரள்வதற்கான அகல வாசலை திறந்து விடுவதற்காக ஆவன செய்யும்!

சுவாமி தனது திருச்செயலை முன்கூட்டியே அங்குல அங்குலமாக நகர்த்தி தனது சங்கல்பத்தை விரிவுபடுத்துபவர்‌! உதாரணத்திற்கு "மானஸ பஜோரே குரு சரணம்!" என்ற பஜன்பாடல் சுவாமி தான் அவதாரம் எனப் பிரகடனப்படுத்தியதற்கு பிறகான முதல் திருப்பாடலே தவிர சுவாமி பாடிய முதல் பாடல் இல்லை... அதற்கு முன்னதாகவே பண்டரி பஜன் என தன் பக்தப் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு பாடலாக கற்றுக் கொடுத்து அதை பழக்கியவர் தான்! சுவாமி மலர்களை வீசி "சாயிபாபா" என தரையில் சுந்தரத் தெலுங்கில் எழுத வைத்தது அல்ல முதல் லீலை... சுவாமி அவதரித்திருக்கிற போதே இசைக்கருவிகள் தங்களை தாங்களே வாசித்துக் கொண்டன... ஆதிசேஷன் படுக்கையில் பஞ்சு மெத்தையானான்! சுவாமி பஜன் பாடும் தனது சகாக்களான பக்த பிள்ளைகளுக்கு காலிப் பையில் இனிப்புகள் வரவழைத்து பகிர்ந்தார்...இப்படி எல்லாமே முன்கூட்டியே சுவாமியால் அரங்கேற்றப்பட்டன... அது தான் இன்றளவும் தொடர்ந்து கொண்டு வருகிறது!! 

1979 ஆம் ஆண்டு விசாகப்பட்டிணம் தனி மாவட்டமாக அறிவித்த பிறகு 43 ஆண்டுகளுக்குப் பிறகான பிரிவாக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது...  உலகில் எதை எப்போது நிகழ்த்த வேண்டும் என்பதை சுவாமியே சங்கல்பிக்கிறார்.. சுவாமிக்கு மனிதர்கள் வெறும் கருவிகளே! நாளைய பரிட்சைக்கு முன்கூட்டியே படித்து தயாராக இருப்பது போல்... நாளைய குருஷேத்ர போருக்கு இன்றே அர்ஜுனர்கள் தங்களது பட்டறைக்குச் சென்று ஆயுதங்களை சோதனை இடுவதைப் போல்... நாளைக்கான கிரகப்பிரவேசத்திற்கு இன்றே நாம் அஸ்திவாரம் இடுவதைப் போல்... இந்த மூன்று சாயி அவதாரங்களும் சுவாமியால் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டவை என்பதாக சுவாமியின் திருச்சங்கல்பம் எப்போதுமே Divine PrePlanning நிறைந்தது! வருங்காலத்தில் கோடிக்கணக்கான ஜனங்கள் "சுவாமியே இறைவன்!" என்பதை உணர்ந்து புனித புட்டபர்த்தி நோக்கி படையெடுப்பதற்கான திருநிகழ்வுக்கு "ஸ்ரீ சத்ய சாயி மாவட்டம்" இப்போதே கட்டியம் கூறுகிறது!

மூன்று சாயி அவதாரங்களும் ஒன்றே என உணர்ந்து கொள்கிற போது ஜனங்கள் குவிவர்! ஷிர்டி சுவாமி பக்தர்களும் நம் சுவாமியே ஷிர்டி அவதாரம் என தீர்க்கமாய் உணர்வர்! அப்படி உணர்கையில் அவர்களும் புட்டபர்த்திக்கு தனது திவ்ய ஷேத்ராடன விஜயத்தில் திரள் திரளாக படையெடுப்பர்! இப்போதைய வசதிகள் போதாது என்ற காரணத்தினால் மேலும் சுவாமி சங்கல்பம் தனது திவ்ய ஷேத்திரத்தை விரிவடையச் செய்யும் என்பதை இப்போதே உணர முடிகிறது! தென்புறத்திலிருந்து வருபவர் புட்டபர்த்தியிலிருந்து குணபர்த்தி பிறகு ஷிர்டி செல்வர்.. வடப்புறத்திலிருந்து வருபவர் ஷிர்டியிலிருந்து ஆரம்பித்து புட்டபர்த்தி வந்து பின் குணபர்த்தி செல்வர்! இதற்காக தனி பேருந்து/ ரயில்/ விமானம் ஏற்படும்... எப்படி ஜோதிர்லிங்க தரிசனங்கள்.. 108 திவ்ய தரிசனங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ .. அப்படி கலியுகத்தின் கல்கி அவதாரமாகிய மூன்று சாயி அவதார திருத்தலத்திற்கு ஜனங்கள் நிச்சயம் கொத்து கொத்தாய் திரண்டு புனிதமடையப் போகிறார்கள் என்பதை ஒரு சராசரி பக்தனின் பார்வையிலிருந்து புரிந்துணர முடிகிறது!!

வருகிறவர்களுக்கு வசதியோடு சேர்த்து வரவேற்புத் தோரணமாய் நமது சேவையும்... வருகிறவர்களை அகமுகம் மலர்ந்து வரவேற்கும் படியான பரிபக்குவத்தையும் நாம் அடைந்திட வேண்டும் என்பதாகவே நெகிழ்ந்து கூறியபடி...


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக