தலைப்பு

புதன், 29 டிசம்பர், 2021

ஆப்ரிக்க கானா தேசத்து திருமதி சுசன் கியாம்பியின் ஓயாத வலி நீக்கி ஓம்கார ஒளி ஊட்டிய சுவாமி!

எவ்வாறு திருமதி சுசுன் கியாம்பியின் ரோகங்களை நீக்கி சத்சங்க யோகமளித்து... அவரது குடும்பத்தையே சுவாமி தனதாக்கிக் கொண்டார் என்பவை சுவாரஸ்ய சுவாமி அனுபவமாய் இதோ...


கானா ஆப்ரிக்கா தேசங்களில் ஒன்று... ஆப்ரிக்கா கண்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது... அக்ரா அதன் தலைநகரம்... அங்கே வசிக்கும் குடும்பம் திருமதி சுசன் கியாம்பியுடையது.. அது சரியாக ஆகஸ்ட் 1990 ஆம் ஆண்டு. பாதி நேரம் மருத்துவமனை தான்... 

முகவரி எதுவென? கேட்டால் மருத்துவமனை முகவரியையே கொடுத்துவிடும் அளவிற்கு சுசனுக்கு ஆஸ்பிட்டல் வாசம்... Fibroids (tumer போன்று பெண்ணுறுப்பில் ஏற்படும் கட்டி) என்கிற நோயாம்... இங்கே எத்தனை கோடி மக்களோ.. அத்தனை கோடி கர்மாவும்.. அது சார்ந்த ரோகமும்... பாதாதி கேசம் முழுதும் வலி... உடல்நிலையோ பலவீனம்... அறுவை சிகிச்சையும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது... திடீரென ஒரு நாள் எண்ண உந்துதலில் தோழிக்கு கால் செய்கிறார் கால் வலியோடு... தோழியோ வீட்டிற்கு வரமுடியுமா ? என கேட்கிறார்.. கணவர் அலுவலகம் சென்ற பிறகு தன் உள்ளத்து நட்பு அழைத்துக் கொண்டு போகிறது... King cross வரை ரயிலில் சென்று பிறகு டாக்ஸி எடுத்து செல்கிறார்.. தோழி வீடு... இவ்வளவு சிரமப்பட்டு சுவாமி அந்த உடல்நிலை சரியில்லாத சுசனை ஏன் அழைத்துக் கொண்டு போக வேண்டும்? காரணம் இல்லாமல் எந்தக் காய்களையும் நகர்த்துவதில்லை சுவாமி... சுசனின் மிக மோசமான உடல்நிலையை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் தோழி.. கண் கலங்குகிறார்... பூஜையறை சென்று ஒரு திருப்படம் எடுத்துக் கொண்டு சுசனின் கைகளில் கொடுத்து... "இவர் எனக்கு தந்தையைப் போன்றவர்.. இவரை நான் வழிபடுகிறேன்!" என மனம் திறந்து பேசுகிறார்... அது சாட்சாத் சுவாமி படம் தான்... சுவாமி எவரை வைத்தும் எதுவும் செய்பவர்‌... நாம் தான் அந்தந்த சேவைக்கு உகந்தவர் என நினைத்துக் கொண்டிருந்தால்... அது நம் அறியாமையே! சுவாமி ஒரு காகத்தைக் கூட குயிலாக்கி தனக்கான பாடலை இசைக்க வைப்பவர்!! சுவாமியின் அற்புதங்களையும் அவதார மகிமைகளையும் பரவசப்பட்டுப் பகிர்கிறார் சுசன் தோழி.. சுசனுக்கே தெரியாமல் ஆரோக்கியத்திற்கான சிகிச்சை ஆரம்பித்துவிடுகிறது...! எவ்வளவு பெரிய சாயி சேவை சுசனின் தோழி செய்தது...! எவ்வளவு தூரம் சுவாமியை உணர்ந்திருந்தால் அவர் தனது தோழிக்கு நம்பிக்கை ஊட்டியிருப்பார்...! நம் வாழ்வே.. உரையாடலே... நடந்து கொள்ளும் விதமே சுவாமிக்கான வழிபாடாக அமைய வேண்டும் என சுசன் தோழியின் நடவடிக்கையை நினைத்து உணரமுடிகிறது!

இல்லம் சென்று சுவாமியின் திருப்படம் வைத்து கணவரிடம் நடந்தவற்றை தெரிவிக்கிறாள்.. அவருக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை... சிலருக்கு நம்பிக்கையால் அனுபவம் ஏற்படுகிறது... சிலருக்கு அனுபவத்தால் நம்பிக்கை ஏற்படுகிறது... ஊதுபத்தி எல்லாம் ஏற்றக்கூடாது என கணவர் சொல்லியும் அவர் அலுவலகம் சென்ற பிறகு நறுமணத்தால் சுவாமியின் திருப்படத்தை குளிப்பாட்டுகிறார்... அரண்மனையிலேயே இரு என்று சொன்ன கணவரின் பேச்சை கேட்காத பக்தமீரா போல்... Candle சகிதமாக சுசன் வழிபட ஆரம்பிக்கிறாள்... திருப்படம் தருவது திருப்ப(ட)ம் தான்!! தோழி தந்த சுவாமி விபூதியும் சுசன் தினசரி உட்கொள்கிறார்! இரண்டு நாட்கள் கடந்து சுசனின் மகன் இந்தத் திருப்படத்தில் உள்ளவரை தன் பள்ளி மைதானத்தில் கண்டதாகவும்... வீடுவரை பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரிவிக்கிறான்... தனக்கு உபயோகம் இல்லாமல் இருந்தால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை திரும்பிக் கூட பார்க்க மாட்டான்... ஆனால் இறைவனோ துளி சுயநலமே இல்லாமல் பின்னால் வந்து பரிவு காட்டுபவர்! அந்தப் பின்தொடர்தலை சுசனின் கணவர் ஆரம்பத்தில் நம்பாமல்‌.. இது தொடர்ந்து நிகழ... மெல்ல நம்பத் தொடங்குகிறார்...

தினமும் சுசன் உட்கொண்ட விபூதி மருந்தால் உடம்பு இழந்த பலத்தைப் பெற ஆரம்பித்தது... உடல் பலம் பெற்றதால் 28 நவம்பர் 1990 அன்று அறுவை சிகிச்சைக்கான தேதி குறிக்கின்றனர்... தலையணையில் சுவாமி திருப்படத்தோடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது.. பயாப்சியில் கேன்சரே இல்லை என வந்ததில் மருத்துவர்களே வியந்தனர்... மருத்துவமனையில் சுசன் இருந்த காலகட்டத்தில் வீடு அருகே பஜன் சென்டர் இருக்கிறதா ? என சுசனின் கணவர் தேடிப் பார்க்கும் அளவிற்கு அவருக்கு சுவாமி மேல் பக்தி வர ஆரம்பித்துவிட்டது! சுசன் discharge ஆன மாலையே Streatham மில் நடைபெறும் பஜனுக்கு கணவரால் அழைத்துச் செல்லப்பட...30 படிகள் ஏறி முன் செல்கிறார்... ஆரோக்கியமும் முன்னே முன்னேறிக் கொண்டிருந்தது!

March 1991ல் தைராயிட்... ஆப்ரேஷன்... வீக்கம் நீக்கி... கேன்சர் இல்லையென முடிவு செய்யப்பட்டது... இடது பாகம் முழுவதும் வலி இருந்தாலும் உடல் முழுதும் தெம்பு சுவாமி விபூதியால் நிரம்பி இருந்தது.. இதற்கிடையே சுவாமி சுசனின் கனவுகளில் வர ஆரம்பித்துவிடுகிறார்...!

சுவாமியை பிரசாந்தியில் தரிசித்து நன்றி செலுத்த வேண்டும் எனும் எண்ணம் மிக... சுசன் தனது 8 வயது மகனோடு இந்தியா வந்து.. பிரசாந்தி நுழைந்து.. தன் இறைவன் தரிசனத்திற்காக காத்திருக்கிறாள்... அணுக்க தரிசனம் கிடைக்காமல் போயினும் தூர தரிசனம் கிடைக்கிறது! இடையிடையே நோய்வாய்ப்பட்டு இருவரும் பிரசாந்தி தங்குமறையில் தங்கியதும் ஒரு காரணம்... *சுவாமி கனவில் தோன்றி "கணேஷ் கேட்' விநாயகரை 21 முறை சுற்றி வா... எல்லாம் சரியாகும்! " என்கிறார்...* ஒரு தோழியின் உதவியோடு சுசன் பிரதட்சணம் செய்ய... மூன்று நாட்களில் கடிதம் பெற்றுக் கொண்டு நேர்காணலுக்கு அழைக்கிறார்... நேர்காணலில் சுசன் குழந்தையை தன் மடியில் வைத்துக் கொண்டு "குட் பாய்" என்கிறார்...சுசனோ சுவாமியின் பாதத்தைப் பிடித்துக் கொண்டு அழுகிறாள்... "அழாதே பங்காரு! எனக்கு எல்லாம் தெரியும்! எப்போதும் வலி வலி வலி... கவலைப்படாதே!" என்கிறார்... சுசனின் கைப் பையில் கேமரா இருக்க ... அந்த கேமராவை எடு என சுவாமி கையசைக்க.. சுசன் வியக்க... சுவாமி மாணவர் ஒருவரை புகைப்படம் எடுக்கச் சொல்கிறார்... "உனக்கு மற்றுமொரு நேர்காணல் தருகிறேன்!" என சுவாமி உறுதியளிக்கிறார்! 

வெளியே வந்த சுசனிடம் ... சுவாமி சொல்லும் நேர்காணல் உடனேவா? தாமதமா? என உறுதியாகச் சொல்லமுடியாது என்கிறார்கள் சில பக்தர்கள்... "எல்லாம் சுவாமி சங்கல்பம்" என நாம் அடிக்கடி சொல்வதன் தாத்பர்யம் என்னவெனில் "நாம் எண்ணமற்ற நிலையில் இருக்கிறோம்! எல்லாம் சுவாமி பார்த்துக் கொள்வார்... எதைப் பற்றியும் எந்த எதிர்பார்ப்பும் , கவலையும் நமக்கு இல்லை என்பதை உணர்த்தவே!"

சுவாமி வாசகங்களின் உட்பொருளை வியாசரால் கூட வியாக்யானம் (விளக்கம்) செய்துவிட முடியாது! பக்தர்கள் எம்மாத்திரம்! 

ஆனால் பக்தர்கள் அப்படிச் சொல்ல பக் என ஆகிறது.. கடல் கடந்து வந்த பறவைக்குத் தான் கடலின் நீளமும்... பயணத்தின் வலியும் உணர்ந்து கொள்ள முடியும்!! அடுத்த நேர்காணல் தர கோரிக்கை விடுத்து சுவாமியை மனமுருகி வேண்டிக் கொள்கிறார்... ஒரே வாரத்தில் சுவாமி தரிசன வரிசையில் வலம் வந்து அவரைப் பார்த்து "கானா (Ghana --அவரின் தேசம்) உள்ளே போ!" என்கிறார் நேர்காணல் அறையை சுட்டிக் காட்டியபடி...

தன் உடல்நிலை குறித்து சுசன் சில கேள்விகள் கேட்கிறார்... "சில காலம் ஆகும்! ஆனால் கவலைப்படாதே!" என்கிறார் சுவாமி... இது இரண்டாவது நேர்காணல்... சுசனை நோக்கி "உனக்கு என்ன வேண்டும்?" என சுவாமி கேட்க... "உங்கள் அன்பும் அருளும் போதும் சுவாமி!" என கண்கலங்குகிறார்! சுவாமி உடனே தனது திருக்கரத்தை சுற்றியபடி மூன்று வைரக்கற்கள் பதித்த மோதிரத்தை தருகிறார்.. அது சுசனின் இடது கை மோதிர விரலில் சரியாகப் பொருந்துகிறது! அந்த சமயம்.. அதே நொடியில் இடது பக்கம் முழுதும் ஒரு சக்தி பரவுகிறது... ஏற்கனவே இடது பாகம் முழுவதும் வலியோடிருந்த சுசனுக்கு வலியும் இல்லை... அந்த சக்திப் பிரவாகம் 3 நாள் பாய்ந்தோடியதாக நூல் ஆசிரியரிடம் கடிதம் எழுதுகிறார்! 

 காரணம் இன்றி எந்த ஜீவராசிகளை மட்டுமல்ல எந்தப் பொருட்களையும் சுவாமி சிருஷ்டிப்பதில்லை என இந்த அனுபவம் வாயிலாக உணர முடிகிறது! மூன்றாம் நேர்காணலும் சுவாமி அளிக்கிறார்... "நீ ஓர் பஜன் மண்டலியை உன் பகுதியில் நடத்தப் போகிறாய்!" என்கிறார்.. "நான் உன் கூடவே இருக்கிறேன்...எதற்கும் கவலைப்படாதே... பத்திரமாக சென்று வா... இது உன் தாய் வீடு!" என்கிறார்.. சுசன் தேம்பித் தேம்பி அழுகிறார்... பெருந்தாகம் எடுத்து தண்ணீருக்கு அலையும் பாலைவனவாசி திடீரென அருவியைக் கண்டு அதனடியில் நின்றால் அழாமல் என்ன செய்வான்!?

 சுசன் தனது தேசம் செல்வதற்குள் அவரது கணவன்... சுசன் இல்லாத நாட்களில் சுவாமி பஜன் பாட உந்தப்பட்டு... பெரிய அறையையே புக் செய்து... அனைவரும் சூழ... சுசனும் வந்துவிட... பஜனை மண்டலி மணி ஒலிக்க ஆரம்பிக்கிறது! 

(ஆதாரம் - அற்புதமும் ஆன்மீகமும்-5 / பக்கம் : 96/ ஆசிரியர்: திருமதி சாய்சரஜ்) 


சுசன் தோழியின் பக்தியும் திட நம்பிக்கையும் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த தீபம் போன்றது... ஆகவே தான் சுவாமி சங்கல்பத்தோடு இன்னொரு எரியா தீபத்திற்கு ஒளி தந்தது... அதுபோல் பக்தர்கள் நமது வாழ்க்கையும்... நடந்து கொள்ளும் விதமும் பல புதிய பக்தர்களை சுவாமியின் பக்கம் அனிச்சை செயலாய் திருப்ப வேண்டுமே அன்றி இருக்கிற பழைய பக்தர்களையும் விலகும்படியாக நமது குணம் இருந்துவிடக் கூடாது என்பதை சுசன் தோழி வாயிலான அனுபவம் சுட்டிக் காட்டுகிறது... 

குண மாற்றமே சுவாமி பக்தர் நாம் என்பதற்கான ஒரே அடிப்படை அடையாளம்!! சாத்திரத்தை ஓதுவதைக் காட்டிலும் ஆத்திரத்தை விடுவதே ஆன்மீகம் என்பதெல்லாம்..! சுவாமி எனும் சர்வத்தை உணர கர்வத்தை விடுவதொன்றே உடனடித் தேவை!!


 பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக