தலைப்பு

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

சத்ய சாயி சென்ட்ரல் ட்ரஸ்டின் டிரஸ்டி திரு. R.J. ரத்னாகர் அவர்களின் சாயி அனுபவங்கள்!


“பிரச்சினைகள் நாணல் போன்று லேசானது தான்!
மனதை அலைபாய, ஊசலாட விடாதீர்கள்!        
இதயத்தின் அன்பில்  பழுத்து, புன்முறுவல் பூக்கும்,
இறைவனிடத்தில் கவலைகளையும் சங்கடங்களையும் விட்டுவிடுங்கள்!!
-பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா 

பிரசாந்தி நிலையத்தில் ரத்னாகர் மிகவும் பிரபலமானவர். ஸ்வாமியின் தம்பியின் மகனான அவர் சத்ய ஸாயி சென்ட்ரல்  ட்ரஸ்டில் டிரஸ்டியாகவும் இருப்பவர்!

 2010 டிசம்பர் 27ல் அவர் அனந்தபூரில் இருந்து திரும்பும்போது நள்ளிரவு 1.30 க்கு பயங்கர கார் விபத்துக்கு உள்ளானார். அவர் உயிர் தப்பி விட்டார் ஆனால் வேதனைமிக்க காயங்களுக்கு உள்ளானார்.

எல்லா நாட்களும்  போல் அன்றும் பொழுது விடிந்தது. சொந்த வேலையாக அனந்தபூருக்கு அவர் போக  வேண்டியிருந்தது. புட்டபர்த்தியை விட்டு கிளம்பும் பொழுதெல்லாம் ஸ்வாமியின் ஆசி பெறாமல் கிளம்பியதே இல்லை. ஆனால் அன்று ஸ்வாமி தரிசனத்துக்கு வெளியே வராததால், அனுமதி வாங்க முடியவில்லை; விஷயம் வேறு அவசரமானது. 3 மணி நேரம் தான் அவர் வெளியே இருந்திருப்பார். புட்டபர்த்தி திரும்பும் வழியில் திடீரென டிரைவர் வேகமாக காரை ஓட்ட ஆரம்பிக்க, ரத்னாகர் அவர் எச்சரிக்கும் முன்பாகவே அது நடந்து விட்டது. வேகமாக கார் ஒரு மரத்தில் மோதியதில் பயங்கர சப்தத்தோடு கார் நசுங்கி விட்டது. முன்புறம் அமர்ந்திருந்தவர்கள் காயமடைந்து ரத்தப் பெருக்கு ஏற்பட்டு விட்டது.


 இவை ரத்னாகர் தானே விவரித்தவை :-

“இந்த பாதிப்பு நடந்த உடனேயே யாரோ என்னை அழுத்திப் பிடிப்பது போல் உணர்ந்தேன். அதனால் நான் சீட்டில் அழுத்தமாக உட்கார்ந்திருந்தேன். எனது வலது கால் மட்டும் கீழே தொங்க ஆரம்பித்து விட்டது.

 கால் உடைந்து விட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. நகரவே முடியவில்லை. ஸாயிராம் என்று ஜெபித்துக் கொண்டே இருந்தேன். இதற்கிடையில் சில பிரயாணிகள் எங்களை நோக்கி ஓடிவந்தனர். அவர்கள் என்னைக் கண்டு கொண்டு, எங்கள் அனைவரையும் ஸத்யஸாயி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். விஷயம் கேள்விப்பட்டு என் மனைவியும், உறவினர்களும் ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்து நாங்கள் ரத்தம் பெருக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் இத்யாதிகள் செய்யப்பட்டு, டாக்டர்கள்  கவலையில் இருந்தனர்.

வலது பக்கம் இடுப்பு எலும்பு முறிந்திருந்தது. தொடை எலும்பு இரண்டாகவே உடைந்திருந்தது. முழங்கால் தூள் தூளாகி விட்டது. தலையில் நிறைய கண்ணாடித் துண்டுகள் ஒட்டிக்கொண்டிருந்தன. வலதுகாலின் முக்கியமான எலும்புகள் உடைந்திருந்தன. சுமார் 2 லிட்டர் அளவு உள்  இரத்தப்போக்கு (Internal Bleeding) நடந்தது!.

இத்தகைய துயர நிலை ஸ்வாமியிடம் தெரிவிக்கப்பட்டது. தன் குழந்தையின் துன்பத்தைக் கேள்விப்பட்ட அன்னை சும்மா இருந்து விடுவாளா என்ன? ஸ்வாமி ஹாஸ்பிடலுக்கு வந்தார். அவர் வந்திருப்பதைக் கேள்விப்பட்டதும் மனதில் ஏதேதோ எண்ணங்கள் நிறைந்தன. தாங்க முடியாத வேதனை இருந்தும் ஸ்வாமியைப் பார்த்து புன்னகைக்க முயற்சித்தேன். ஸ்வாமி ICUவில் நுழைந்ததும், எனது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நின்றனர். ஆனால் நான் புன்னகையுடன் ஸ்வாமியைப் பார்த்தேன்.

“அனைவரும் கண்ணீர் விடும் போது நீ மட்டும் எப்படி புன்னகைக்கிறாய்"? என்று ஸ்வாமி கேட்டார். “ஸ்வாமி என்னுடன் இருக்கும்போது நான் ஏன் அழ வேண்டும்”? என்றேன்.

 ஸ்வாமி கருணையுடன் அனைவரையும் சமாதானப்படுத்தினார். என் மனைவி மிகவும் உடைந்து போயிருந்தாள். ஸ்வாமி தனியே அவளுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். “என்ன செய்வது? உன் கணவன் என்னிடம் சொல்லாமல் சென்று விட்டான். கவலைப்படாதே; எல்லாம் சரியாகி விடும் என்றார். நான் என்ன சொல்வது! ஸ்வாமி, நான் சொல்லிவிட்டுச் செல்ல எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நான் எந்த பதிலும் சொல்லாமல், ஸ்வாமி என்னுடன் இருப்பதே எனக்கு தைரியம் என முழு நம்பிக்கையோடு இருந்தேன். சுமார் 1 மணி நேரம் எங்களுடன் செலவிட்டார். மருத்துவர்களுடன் பேசி, செய்ய வேண்டியவற்றைக் கூறிவிட்டு கிளம்பினார்.

எனக்கு பெரிய சோதனை வைப்பது போல், “மறுநாள் அஷ்டமி, செவ்வாய் கிழமையாய் இருப்பதால் புதன்கிழமை ஆபரேஷனைத் தொடங்குங்கள்” என்றார். இன்னும் 48 மணி நேரம் நான் இவ்வளவு வேதனைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டும். டாக்டர்களுக்கு சங்கடம்! உறவினர்கள் அதிர்ச்சியில் பேச்சடைத்து நின்று விட்டனர். ஆனால் ஸ்வாமி சொன்னதுதான் மொத்தத்தில் இறுதி முடிவு! பயங்கரமான விபத்தில் இருந்து உயிர் தப்ப வைத்த என் நிலை ஸ்வாமிக்கு தெரியாதா என்ன?

ஸ்வாமியின் கண்காணிப்பில் வளர்ந்ததால் ரத்னாகருக்கு, துன்பத்திலும், இன்பத்திலும் நிலையான மனநிலை வாய்க்கப்பட்டிருந்தது.

திரு. ரத்னாகரின் உரை தொடர்கிறது:

அறுவை சிகிச்சைக்கு காலை 9 மணி என்று ஏற்பாடுகள் ஆயின. சுவாமியின் அறிவுரைப்படி புதன்கிழமை அன்று நடத்த உத்தேசித்தனர் சுமார் 8.30 மணி காலை நேரம் சுவாமி ஹாஸ்பிடலுக்கு வந்து எனக்கு தைரியமூட்டி ஆபரேஷன் அறைக்கு அனுப்பி வைத்தார், சுமார் 11 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது மறுநாள் காலை சுவாமி வந்து என் கால் முழுவதும் தன் புனிதக் கரங்களால் தடவிவிட்டு எல்லாம் சரியாகிவிடும் என என்னிடம் சொல்லிச் சென்றார். சுமார் 4 வாரங்கள் நான் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தேன், சுவாமி பலமுறை என்னை பார்க்க வந்தார் நான் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்லும் அன்றும் வந்தார் சுவாமியின் அறைக்கு அருகில் உள்ள அறைக்கு நான் செல்ல ஒரு கார் அனுப்பினார். கடவுளின் அன்புக்கு என்னதான் இலக்கணம் சொல்வது அன்பின் அவதாரமாகிய அவருக்கு எப்படித்தான் நன்றி செலுத்துவது என்மீது மிகுந்த கருணையை பொழிந்தவர் அவர். எது நடந்தாலும் நன்மைக்கே என்று ஒரு பழமொழி உண்டு. இந்த விபத்து இறைவனின் கருணையை உணர ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து ஆசிரம அறைக்கு என்னை மாற்றிய பிறகு தினமும் வேத கோஷம், பஜன் இவற்றை கேட்க முடிந்தது ஒரு நாள் பகவானை தரிசனம் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தேன். அப்போதே எப்படி இருக்கிறாய் என்று கேட்டவாறு உள்ளே நுழைந்தார். அந்த எல்லையில்லா ஆனந்தத்தை தாங்க ஒரு இதயம் போதாது. சீக்கிரம் குணமாகி எழுந்து நட நிறைய வேலைகள் செய்ய வேண்டி உள்ளது என்றார். என்னால் மறுபடி சகஜமாய் நடக்க முடியுமா என்று அவ்வப்போது என் மனதினுள் சந்தேகம் எழுந்தது ஆனால் அந்த சந்தேகம் சுவாமியின் வார்த்தைகளால் அவ்வப்போதே மறைந்துவிடும்.


தொடர்ந்து ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. ஆறுமாதம் சக்கர நாற்காலியிலேயே வளைய வந்த பிறகு நடக்க ஆரம்பித்துவிட்டார். முதலில் வாக்கர் வைத்துக்கொண்டும் பின்னர் தானாகவும் நடந்தார். இரண்டு வருடங்கள் கடந்தன இரண்டாவது அற்புதத்திற்கான சமயம் வந்தது, இதோ ரத்னாகரின் வார்த்தைகள்.

2012 நவம்பரில் நான் என் குடும்பத்தோடு சிலநாட்கள் ஹைதராபாத் போயிருந்தேன். ஒருநாள் கோல்கொண்டா கோட்டை செல்ல தீர்மானித்தோம், என் மகன் அங்கு நுழைவாயிலில் என்னை கீழே இருக்கும்படியும் அவர்கள் யாவரும் கோட்டை மேல் ஏறி பார்த்துவிட்டு வருவதாகவும் யோசனை சொன்னான். நானும் ஏன் ஏறக்கூடாது என்று ஒரு எண்ணம் என் மனதில் வந்தாலும் 2010ல் நடந்த விபத்தால் வலதுகால் பாதிக்கப்பட்டுள்ளது எப்படி முடியும் என்றும் தோன்றியது. ஆனால் அடிமனது முயற்சிக்கலாமே என்று கூறியது. எப்படியோ நான் என் மனைவி இரண்டு குழந்தைகள் இன்னும் இருவரும் ஏற ஆரம்பித்தோம், சுவாமி என் இதயத்தில் இருந்து உறுதுணை புரிகிறார் என்று உணர்ந்தேன். சுவாமியின் நாமத்தை ஜபித்துக் கொண்டே உச்சியை அடைந்து விட்டேன். உடனே எனது டாக்டருக்கு போன் பண்ணி சொன்னேன் அவர் ஆச்சரியத்தில் மகிழ்ந்தார். சற்று ஓய்வுக்குப் பின் கீழே இறங்க ஆரம்பித்தோம், இறங்குவதுதான் இன்னும் கடினமாக இருந்தது. சுவாமியின் அன்பில் அவர் நாமத்தை ஜெபித்து  அதை சுலபமாக்கினேன். எனது ஆரோக்கியத்தால் நான் ஏறி இறங்கினேன் என்பதைவிட சுவாமியின் அன்பும் நாமஸ்மரணையும் மட்டுமே என்னை திடமாக்குவதாக நான் உணர்கிறேன்.

மேலும்,  சுவாமி இதை கூறியிருக்கிறார், கடவுளின் அன்பு இருக்கும் வரை எதுவுமே கடினம் அல்ல என்றும், கலியுகத்தில் நாமஸ்மரணை மட்டுமே நம்மை காக்கும் என்றும் கூறுவார். இது எனக்கு ஒரு பெரிய அனுபவமாகவும் பெரிய பாடமாகவும் அமைந்தது. இவ்வாறு கூறினார் ரத்னாகர்.

மேலும் அவர் சுவாமியின் அன்பை வென்றார். மாறாத நம்பிக்கை வைத்தார், அதனால் அற்புதங்கள் நிகழ்ந்தது. அதுவே உண்மை.

ஆதாரம்:  Personal Narration by Sri Ratnakar

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக