தலைப்பு

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

மனநிம்மதி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

பக்தர் கேட்டவை பாபா அருளியவை

பக்தர்: ஸ்வாமியின் பரிசுகள் அழகானவை. ஆனால் மனநிம்மதி மட்டுமே வேண்டுவோருக்கு என்ன வழி?

பாபா:  இறைவனைப் பற்றிய எண்ணங்களும் இறைவனை நேசித்தலுமே மன அமைதியைக் கொடுக்கும். உலகைப் பற்றிய எண்ணங்கள் குறையும் பொழுது, இறைவனைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கின்றன.

சாதாரணமாக மனது எப்பொழுதும் இவ்வுலகைச் சார்ந்த பொருட்கள் மீதே விருப்பங் கொண்டிருக்கிறது. இவ்விருப்பங்களை ஒவ்வொன்றாக விலக்கி வந்தால், ஆழ்ந்த மன அமைதி கிட்டும். நூலை நீ நெய்வதனால், துணி உருவாகிறது. நூலைப் பிரித்தெடுத்துவிட்டால், துணி இல்லாது போய்விடும். தெய்வீக எண்ணங்கள் ஏற்பட்டால் மன அமைதி கிடைக்கும். ஸ்வாமியால் மன அமைதியைக் கொடுக்க முடியாது. நீ அதற்காக முயன்று செயல்பட வேண்டும். இந்த நிலையில்லாத உடலால், நாம் தியானமும், ஆன்மீக சாதனைகளும் செய்கிறோம். இந்த உடல் நிலையற்றதாயிருந்தாலும், இந்த நிலையற்ற பொருட்களைப் பயன்படுத்தித்தான் நித்யமான உண்மை எதுவோ அதைக் கண்டறிய வேண்டும்.

பக்தர்: நான் அமைதியைப் பற்றி கண்டறிய விரும்பினேன்.

பாபா: ஆம். ஆசைகளை ஒவ்வொன்றாக அறுத்தெறிந்தால், அமைதி பிறக்கும். விருப்பங்கள் ஒவ்வொன்றாக போய்விட்டால், மனது இறந்துவிடுகிறது(Die_mind) அப்பொழுது மன அமைதி கிட்டும். ஸ்வாமியால் மன அமைதியை கொடுக்க முடியாது. நீயே முயன்று அதை பெற வேண்டும். முதலில் தர்க்கவாதங்களை விடுத்து "நான் யார்?" என்ற கேள்வியை எழுப்பவும். இது என் உடல், என் மனது, என் அறிவு. ஆனால் "என்னுடைய" எனப்படும் இது என்ன? என்னுடையது என்று அறிவிக்கப்பட்டவற்றுக்கு சொந்தம் கொண்டாடும் நபர் யார்? 'எனது' என்பது உரிமையை குறிக்கும். அந்த 'என்' என்பதே உயிர். உடலில் உயிர் உள்ள அளவும், இந்த 'என்' என்பதற்கும் அறிவிற்கும் தொடர்பு இருந்து கொண்டுதான் இருக்கும். 'என்' உடல், 'என்' வீடு, 'என்' நிலம் என்று வெளிப்படும். ஆனால் உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன் இந்த 'என்' என்ற நினைவோ, சொந்தம் கொண்டாடும் நிலையோ இல்லாமல் போய்விடும். வாழ்க்கையே கடவுள். "நான் யார்?" இதற்கு விடை "நான் கடவுள்" உடல் உண்டாகிறது, அழிகிறது. ஆனால் ஆத்மா நிரந்தரமானது. உடலுக்கு பிறப்பும், இறப்பும் உண்டு. ஆனால் ஆத்மாவுக்கு இவை எதுவும் கிடையாது. உன் முன்னேற்றத்தின் உச்சநிலையில் "நான் கடவுள்" என்று சொல்வாய். ஆனால் அங்கேயும் கூட இரண்டு என்ற நிலை, கடவுளும் நானும் என்ற நிலை தொடர்கிறது. அது முழுமையான மெய்யறிவாகாது. நாம் சுவாசிக்கும் பொழுது சுவாசம் எழுப்பும் ஒலி "ஸோ_ ஹம்" "அவன் நான்தான்" என்பதாகும். அப்பொழுதும் கூட "நான்" என்ற உடல் உணர்வு இருக்கிறது. ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் "அவன்" "நான்" என்ற வெளிப்பாடுகள் கழன்று போய்  "ஓ" மற்றும் "ம்" என்பவையே நிலைக்கின்றன. "ஓம்" அது ஒன்றே இருக்கிறது.

ஹிஸ்லாப்:   சிலகாலம் நாம் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எப்பொழுது அறிவால் அறியப்படும் இந்த நிலை, உண்மைநிலையாக மாறுகிறது?

பாபா:  நீ கடுமையாக சாதகம் செய்வதன் மூலமே, அது உண்மை நிலையாக உணரப்படும். நீ பல நூல்களைப் படிக்கிறாய். நீ படித்தறிவதை எல்லாம் சாதகம் செய்ய வேண்டியதில்லை. ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை சாதகம் செய்தாலே, அவற்றின் உண்மையை கண்டறியலாம் நீ வைத்தியசாலைக்கு போனால் அங்கு அனேக வித மருந்துகள் இருக்கும். நீ அவை எல்லாவற்றையும் உட்கொள்ள வேண்டியதில்லை. உன்னுடைய உடல் கோளாறுக்கு தேவையான மருந்தே போதுமானது. நீ அங்கிருக்கும் எல்லா மருந்துகளையும் சாப்பிடத் தேவையில்லை. நீ எம்மாதிரி ஆன்மிக சாதனை செய்ய வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறாயோ, அந்த மருந்தை மட்டும் எடுத்துக்கொள். மற்ற எல்லா வகை மருந்துகளையும் கைக்கொள்ள தேவையில்லை. ஏனென்றால் மிக அதிகமான நூலறிவு நம்மை குழப்பத்திற்கும், சந்தேகத்திற்குமே இட்டுச்செல்லும். இது என்ன, அது என்ன என்ற கேள்விகள் எழுப்பி, நீ அனேக சந்தேகங்களுக்கு இலக்காகி, இந்த மோதலில் அதிக காலத்தை விரயம் செய்கிறாய்.

ஹிஸ்லாப்: தலைசிறந்த ஆன்மீக வைத்தியர் (தாங்கள்) எனக்கு தேவையான, சரியான மருந்து எதுவென்று சொல்கிறார்?

பாபா: தியானம். ஏனென்றால், தியானத்தினால் முதலில் உனக்கு புலனடக்கம் கிடைக்கிறது. மற்றும் யோகாசனம் உனது உடலுக்கு நன்மை பயக்கும். மனது சீராக இருக்கும் பொழுது, மனது சுலபமாக ஒருமுகப்படும். அம்மாதிரி மனது ஒருமுகப்பட்டால், மனச்சாந்தி கிட்டும்.

ஆதாரம்: பகவானுடன் உரையாடல் என்ற புத்தகத்திலிருந்து.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக