தலைப்பு

செவ்வாய், 21 ஜனவரி, 2020

ஒரு பக்தனுக்கு ஒழுக்க கட்டுப்பாடு மிகவும் முக்கியம்!


மனிதனிடம் ஒழுக்கக் கட்டுப்பாடில்லாத(DISCIPLINE) பக்தி குடி கொண்டிருக்கலாம். ஒழுக்கக் கட்டுப்பாடில்லாதவனை, பக்தன் என்று கூற இயலாது. மனிதன் முதலில் கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

பிறகு பக்தியை வளர்த்துக் கொள்ளட்டும். அத்தகைய பக்திதான் அவனிடம் நிலைத்து நிற்கும். முதலில் பக்தியை வளர்த்துக் கொண்டு, பிறகு ஒழுங்கினைப் பெற முயற்சி செய்தால், பக்தி நிரந்தரமாக இராது. தண்ணீரிலிருந்துதான் பனிக்கட்டி(ice); தண்ணீரில்லாது, "ஐஸ்"இராது.ஐஸ் கட்டியிலிருந்து தண்ணீரைத் திரும்பவும் பெறலாம். தண்ணீரே ஐஸுக்கு அடிப்படை, ஆதாரம். அதேபோல ஒழுங்குக் கட்டுப்பாடு தான், பக்திக்கு அடிப்படை. கட்டுப்பாடு என்பதற்கு இட்ட கோட்டைத் தாண்டவில்லை என்பது கருத்தல்ல. அது பெரும்பாலும் செம்மறியாட்டுக் கூட்டத்தின் கட்டுப்பாடாகும். மற்றவர் உடைமைகளைப் பாதுகாக்கும் சிந்தனை, மற்றவரைப் பற்றி கெடுதலாக நினையாதிருத்தல், தமது வரையறையை மீறாதிருத்தல், பகுத்தறியும் ஆற்றலை நன்கு பயன்படுத்தல், இவைபோன்ற முறைகளால் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் இவையனைத்தும் உண்மையான ஒழுக்கக் கட்டுப்பாட்டில் அடங்கும்.

எந்த வேலையைத் தொடங்கும் முன்பும், நான் மனிதத்தன்மையுள்ள மனிதன் என்ற கருத்தை உறுதியாக பற்றிக் கொள். 'ஒரு பக்தன்' என்றால் என்ன பொருள்? நான் கடவுளை நேசிக்கிறேன், ஆகவே அவருக்கு பிடித்தமில்லாத எதையும் நான் செய்ய இயலாது என்றே பொருள். ஆகவே எனது மதி நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு செயலைச் செய்யலாமா கூடாதா என்ற முடிவுக்கு வரவேண்டும்.உனது ஒவ்வொரு செயலும் மனிதனுக்குரிய செயலாக இருக்கவேண்டும். அதாவது உனது செயல், காமக்ரோத,மோக, மத, மாச்சரியம் எனும் ஆறு தீய குணங்களின் சுவடில்லாது இருத்தல் வேண்டும். உனது விவேகத்தைப் பயன்படுத்தி  இத்தீய இயல்புகள் ஆறையும் அழிக்கவேண்டும்.நீ சினமடையும்போதெல்லாம், நீ மனிதன் தானா அல்லது நாய்ப்பிறவியா என்று உன்னையே கேட்டுக்கொள். நீ மனிதனாக இருந்தால் சினமடையலாகாது. நாய்தான் கோபத்தில் குலைக்கும். ஆகவே கோபம் வரும்போது, அந்த இடத்தை விட்டு விலகி, சிறிது தூரம் நடந்து செல். கோபம் தானாக தணிந்துவிடும்.

சில சமயங்களில் மனிதனுக்கு கெட்ட எண்ணங்கள் வருவதுண்டு. உன் மனம் அவற்றை பின்பற்றி செல்லலாகாது. நீ மனிதனா அல்லது குரங்குப்பிறவியா என்று உன்னையே கேட்டுக்கொள். "குரங்கிலிருந்து மனிதன் பிறந்திருக்கலாம். ஆனால் அதற்காக, என்னிடம் குரங்கு புத்தி இருக்கலாகாது. மனம்போன போக்கெல்லாம் திரியும். நான் அவ்விதமல்ல ஏனெனில் நான் மனிதன்" என்றிவ்வாறு தீவிரமாக எண்ண வேண்டும்.

சிலருக்கு மற்றவரின் புத்தகம், பேனா முதலியவற்றைத் திருடும் பழக்கம் உண்டு. நான் மனிதனா அல்லது பூனையா என்று உன்னையே கேட்டுக்கொள். "நான் மனிதன், நான் பூனை போல இருக்கலாகாது. பூனைதான் ஒருவருமில்லாது சத்தமில்லாமல் வந்து பாலை குடிக்கும்;கிடைத்ததைத் தின்னும். நான் அத்தகைய செயல் புரிய மாட்டேன்" என்று உறுதி கொள்ள வேண்டும்.

 சிலர் தம் வாழ்வில் நடந்த கெடுதல்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது சரியல்ல, தவறு. ஒருவனின் மகனுக்கு திடீரென காய்ச்சல் அதிகமாகி,அம்மகன் இறந்து விட்டான். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவனுக்கு இன்னொரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கும் திடீரென காய்ச்சல் கண்டு, அதிகமாகியது. தந்தை, தன் மூத்த மகன் காய்ச்சலால் இறந்ததால், அடுத்தவனும் இறந்து விடுவானோ என்று நடுநடுங்கினான். இந்த எண்ணம் மிகவும் முட்டாள்தனமானது. இது பக்தனுக்கு அழகல்ல. இது பலவீனத்தின் அடையாளம்.

ஆதாரம்:சாயி அருளமுதம் கொடை_1994
(தொகுக்கப்பட்ட அருளுரைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக