தலைப்பு

சனி, 4 ஜனவரி, 2020

இறப்பிற்குப்பின் என்ன நிகழும்?

பக்தர் கேட்டவை பாபா அருளியவை

ஹிஸ்லாப்: இறப்பிற்குப்பின் என்ன நிகழும் என்று பக்தர்கள் கேட்கிறார்கள். நான் பதிலளிக்கக் கூடியதெல்லாம், நான் சுவாமியிடமிருந்து புரிந்துகொண்டது, இறப்பிற்குப்பின் அனுபவம் எல்லோருக்கும் ஒரே விதமாக இருக்காது; ஒவ்வொருவருக்கும் அது ஒரே விதமாக இருக்காது என்பதே.

பாபா: அதுவே சரியான விடை. ஒவ்வொரு இறப்பிலும் ஒரு உடல் இருக்கிறது. அதுவே எல்லோர் விஷயத்திலும் பொதுவானது. அதற்குப் பின் நடப்பவை ஒரே மாதிரியானதல்ல.

ஹிஸ்லாப்: நன்று சுவாமி, எவராயினும் இறக்கத்தான் வேண்டும். இறப்பதில் ஏதேனும் சாமர்த்தியம் இருக்கிறதா? இறப்பின் மூலம் செல்லக்கூடிய சரியான பாதை ஏதாவது இருக்கிறதா? இதை ஒருவன் இறுகப்பற்றிக் கொண்டு, இறப்பென்னும் சம்பவத்தினால் அழியாமல் தப்ப முடியுமா?

பாபா: அச்சமயத்தில் இது உன் கையில் இல்லை. இறக்கும் சமயத்தில் உன் வாழ்க்கை முழுவதற்குமான பலனால் நீ பாதிக்கப்படுவாய்.

ஹிஸ்லாப்: தன்னுடைய பக்தர்களை 'மீட்க முடியாத சாவி'லிருந்து காப்பாற்ற கடவுள் செயல்படுவார் என்று சுவாமி சொல்கிறார். 'மீட்க முடியாத சாவு' என்றால் என்ன?

பாபா:   நீ அந்த சொல்லிலிருந்து என்ன புரிந்து கொள்கிறாய்?

ஹிஸ்லாப்: எனக்கு அது நரகத்தை குறிப்பதாகவே தோன்றுகிறது.

பாபா:  அது ஒரு எண்ணமே.

ஹிஸ்லாப்: ஆனால் புத்தர் நரகம் என்பது இருப்பது போல் பேசுகிறார்.

பாபா: அது ஒரு இடம். மனதின் ஒரு இடம். மிகுந்த மனக் கிலேசமும், மனது கஷ்டமும் உள்ள ஒரு மனநிலை. அது இறப்பிற்குப்பின் ஏற்படும் நிலை. தன்னுடைய பக்தர்கள், இம்மாதிரி நிலையில் விழுந்து விடாதிருக்க, அவர்களுக்கு வழிகாட்ட ஸாயி இங்கே  இருக்கிறார்.

ஹிஸ்லாப்: நம்முடைய தினசரி வாழ்வில் நமக்கு மிகச்சிறந்த ஒருமுக நிலையை இருப்பதாகவும், அதை உபயோகிப்பதாகவும் சுவாமி குறிப்பிடுகிறார். பின் எதனால் ஆன்மீக அப்பியாசங்களில் இந்த ஒரு முக நிலை இயல்பாக செயல்படுவதில்லை?

பாபா: ஒருமுக நிலையின்றி எதுவும் செய்ய முடியாது. இந்த ஒரு முகநிலையை நாம் நாள்முழுவதும் உபயோகிக்கிறோம். ஆன்மீக விஷயங்களில் ஏன் இந்த ஒருமுக நிலையை அப்யசிப்பது கடினமாக இருக்கிறது. ஏனென்றால் மனது எப்பொழுதும் வெளி காட்சிகளை நோக்கி எழுவதும், ஆசையின் காரணமாக பொருட்களைப் பற்றிக் கொள்வதுமான குணமுடையது. ஆனால் மனதை உள்நோக்கி ஒருமுகப்படுத்துவதற்கு பழக்கவும், இதயத்தை இறையன்புடன் வளர்க்க,பண்படச் செய்யவும் இயலும். எப்படி? ஸாதனா மூலமே. மிகச்சிறந்த ஸாதனா, ஒரு நாளில் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் இறைவனின் பூஜையாக செய்யப்படுவதாகும். கடவுள் மின்சக்தி போன்றவர். இதயம் ஒளி கொடுக்கும் விளக்கு. கட்டுப்பாடுகளுக்கு உட்படுவது இதற்கான கம்பிகள் பொருத்துவதாகும். அறிவே மின்பொறி. காலையிலும், பகலிலும், மாலையிலும் செய்யப்படும் தியானமே, இந்த மின் பொறியை பொருத்துவது போன்றதாகும். ஒருமுறை இந்த மின்பொறி, கம்பிகள் மற்றும் மின்விளக்கு இவற்றை பொருத்திவிட்டால், மேற்கொண்டு எதுவும் செய்யத் தேவையில்லை. மின் பொறியை அழுத்தினால் வெளிச்சம் கிடைத்துவிடும். ஒரு சிறு மரத்தைச் சுற்றி அதைக் காப்பதற்காக வேலி எழுப்பப்படுகிறது. தியானத்திலும் இதே ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும். எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். எங்கும் மின்ஓட்டங்கள் இருக்கின்றன; மனோபலம் என்பது இருக்கிறது. பூமிக்குள் செல்லும் சக்தி வாய்ந்த மின்சார ஓட்டம் ஒன்று இருக்கிறது. இதனால், பூமி மிகவும் பலமான ஈர்ப்பு சக்தியை வெளிவிடுகிறது. தியானத்தில் ஈடுபடுபவர்கள் இம்மாதிரி சக்திகளிலிருந்து தம்மை காத்துக்கொள்ள தங்களை தயார் செய்து கொள்வது விரும்பத்தக்கது. இந்த காரணத்திற்காகவே தியானம் செய்பவர்கள் ஒரு பலகையின் மீது அமர்கிறார்கள்; தங்களுடைய தோள்களை ஒரு கம்பளித் துணியினால் மூடிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவன், தன் தியானத்தில் நன்கு பழகிய உடன் எங்கும் உட்கார்ந்து தியானிக்கலாம். அதனால் பாதிப்பு எதுவும் நேராது.

ஆதாரம்: பகவானுடன் உரையாடல்... என்ற புத்தகத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக