தன்னைத் தானே சோதனை செய்து கொள்ளும் வழியின் மூலமாக, சாதகன் உள் உலகத்தை அடையலாம்;பணிவும் பக்தியும் கொண்ட சாதகனை, வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த, மிகவும் புனிதமான அந்தஸ்தைப் பெற உள் உலகத்தில் கதவு திறந்தே இருக்கும்.
தியானிப்பவர், ஆத்ம ஆனந்தத்தைப் பெறுவதை முக்கியமென்று கருதுகிறார். உலக நலத்தின் முன்னேற்றமும் அதேபோல முக்கியமானது. இந்த இலக்கை நிறைவேற்ற, உடலளவில், உள்ளத்தினளவில், மனத்தளவில் உள்ள சில பாவனைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். அத்தகைய பாவனைகளை, பத்துவிதத் தீமைகள் என்று கூறுவதுண்டு. மூன்று உடற்குற்றமும், நான்கு சொற்குற்றமும், மூன்று மனக்குற்றமும் ஆகும்.
மூன்று உடற்குற்றங்கள்:
உயிர்களுக்குச் சேதம் விளைவித்தல், பிறன்மனைவிழைதல், திருடுதல்.
நான்கு சொற்குற்றங்கள்:
பொய்யான எச்சரிக்கை, கொடுமையான பேச்சு, பொறாமையான வார்த்தை,பொய்.
மூன்று மனக்குற்றங்கள்:
பேராசை, பொறாமை, கடவுள் மறுத்தல்.
தியானத்தைக் கடைப்பிடிக்க விரும்பும் சாதகர் இந்தப் பத்து எதிரிகளும் தன்னை அணுகாவண்ணம் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இவற்றை முழுமையாக ஒதுக்கவேண்டும். தான் முன்னேற உதவி செய்யும் பாவனைகளே அவருக்கு தேவை; தன்னைப் பின்னுக்குத் தள்ளும் பாவனைகள் அவருக்கு தேவையல்ல.
அவன் சுபமே பேசி, சுபத்திலேயே நடக்கவேண்டும். சுபமே மங்களம். மங்களமே சிவம். இதையே சாஸ்திரங்கள் கூறுகின்றன. மங்களம், ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுகிறது. சிவத்தில் ஐக்கியமாக, சுபமே கருவியாகும். சுபத்தின் மூலமாக சாதகன் இவ்வுலகத்தையும், அவ்வுலகத்தையும் பெறலாம். தனது நலத்தையும், பிறர் நலத்தையும் அவன் விருத்தி செய்யலாம். ஷேமநலமே, நல்லறிவின் பயன்.ஷேமநலக்குறைவு, அறியாமையின் விளைவாகும். ஷேமநலத்தின் மூலமாகவே ஒருவர் அமைதி, மகிழ்ச்சி, முன்னேற்றம் இவற்றை அடைய முடியும். எல்லோரின் நலத்தையும் பேணி வளர்ப்பது மனிதனின் அடிப்படையான கடமை. அதை வளர்ப்பது, அதற்கு உதவுவது அவனுக்கு உரியகடமை. இக்கடமையை நிறைவேற்றுவதில் தனது வாழ்க்கையைச் செலவிடுவதே, அவனுக்கு விதிக்கப்பட்ட வழியாகும்.
நமக்குள் இருக்கும் புத்தி,இப்புறவுலகில் உள்ள எல்லாவற்றிற்கும் சாட்சி.புறவுலகு புத்தியைத் தன் அளவுக்குக் குறுக்கி, தன் வண்ணத்தை அதன் மேல் பூசுகிறது. அவ்வாறு மாற்றப்பட்டதே புறவுலகுணர்வான சைதன்யமாகும். மாயை என்பது ஒவ்வொன்றின் பதிவுகளாலும் வேறுபட்டுக் கோணலான புத்தியேயாகும்.புத்தி அல்லது சைதன்யத்தின் எந்த அம்சத்தில் உலகு எந்தப் பதிவையும் ஏற்படுத்த இயலவில்லையோ, மாயையால் பாதிக்கப்படாத சைதன்யம் எதுவோ அதுவே ஈஸ்வரன். ஆகவே ஈஸ்வரனை அடைய விரும்பும் ஒருவன், மாயையால் பாதிக்கப்படாமலும், உலகின் பதிவுகள் படாமலும் இருக்க வேண்டும். இதை எப்படி அடைவது?அலசிப்பார்த்தல், ஆராய்ச்சி செய்தல், பயமற்ற விசாரணை, தூயதான காரிய காரண விவாதம், இவற்றின் மூலமே சாத்தியமாகும். இத்தகைய மதிநுட்ப விவேகத்தைப் பெறுவதற்கு, இவ்வுலகிலுள்ள ஒவ்வொன்றின் ஷேமநலத்தையும் முன்னேற்றும் பணியில் பங்கு கொள்வது அவசியம்.
ஆதாரம்: தியான வாஹினி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக