தலைப்பு

வியாழன், 23 ஜனவரி, 2020

பின்னணி பாடகர் கௌஷிக் மேனன் அவர்களின் சாயி அனுபவங்கள்! -கவிஞர் வைரபாரதி


இன்று திரைப்பாடல் ஒலிப்பதிவு..
வேலை இடைவேளையிலும் தியான அமர்வுகள் இருமுறை.
ஸ்டூடியோவில் அருமையான அதிர்வலைகள். ஆச்சர்யமே அடைந்தேன்..

கீழ் நுழைவாயிலில் பூஜையறையில் அமர்ந்த கோலத்தில் சிவன் சிலை. அதன் அருகிலும் ஒருநாள் தியானத்தில் அமர்ந்திருக்கிறேன்.

தேநீர் இடைவேளையில் கீழ் இறங்கி வர.. என் எதிரே திடுமென தென்பட்டார் அந்த ஸ்டூடியோ உரிமையாளர். அவர் ஒரு பிரபல பாடகரும் கூட...
ஏற்கனவே வேறொரு பாடல் ஒலிப்பதிவுக்காக சந்தித்திருக்கிறேன். ஸ்டூடியோவுக்கும் வந்திருக்கிறேன். சிறு பழைய அனுபவப் பகிர்தல்.
மீண்டும் ஒலிப்பதிவு . மதிய உணவு இடைவேளை...

அனைவரும் சென்றனர். அடியேன் ஏகாதசி விரதம். மீண்டும் பாடல் பதிவாகும் கருவிகள் தவமிருக்கும் அறைக்கு பழச்சாறு அருந்தி நுழைந்தவுடன் அந்த உரிமையாளர் தன் ஒலிப்பதிவுப் பொறியாளருடன் பேசிக் கொண்டிருந்தார்.

இருவரின் பேச்சு கலைந்தவுடன்.

நானும் அவரும் தனியாய்.

தியானிக்கலாம் என அமர்ந்தேன். சுவாமி அப்போது தான் அக தியானத்திலிருந்து அனுபவப் பகிர்வெனும் புறதியானம் நிகழ்த்தினார்.

தியானம் நன்றாக வருகிறது இந்த அறையில் என்றேன். உரிமையாளர் இது அப்படி ஒரு இடம். பாடகர் எஸ்.பி.பி அவர்களும் இங்கே நேர்மறை அதிர்வலைகள் நிரம்ப இருக்கிறது என்றிருக்கிறார் என்றார் என்னிடம்.

உரையாடல் சிவன் சிலைக்கு சென்றது.

இந்த உரிமையாளருக்கு சிலை கிடைத்ததே ஒரு சிவ லீலை...

காரில் இவர் சென்று கொண்டிருக்க.. லாரியில் ஒரு சூலம் விழ.. அதை எடுத்து அந்த லாரியில் சேர்க்க இவர் பின்தொடர.. கடைசியில் சிவனே வந்து சேர்ந்திருக்கிறார் இவரிடம் 2015 ல் வெள்ளப்பெருக்கான சென்னையில் உள்ளப் பெருக்கு ஏற்பட நம்பூதிரியால் பூஜையும் அதிர்வலைகளும் இன்று வரை உணரப்படுகிறது.


சுவாமி சங்கல்பம். சாய்ராம் என்றேன்.

என்ன "சாய்ராமா?" என்று வினா திரிசூலத்தை என் கைப்பற்றுமாறு வீசினார்.

ஆம் நான் சுவாமி பக்தன்.. புட்டபர்த்தி சுவாமி பக்தன். ஷிர்டி சுவாமிக்கும் தான். இருவரும் ஒருவர் தானே என்றேன்.

ஓ.. சாய்ராம் .. இது அதிருத்ர மகா யக்ஞத்தில் எனக்கு சுவாமி வரவழைத்து அணிவித்த சுவாமி மிராக்கிள் சங்கிலி என்று அனுமன் இதயம் திறந்து காண்பிப்பதாய் சட்டை திறந்து காண்பித்தார்.


அடியேனுக்கும் ஒரு டாலர் சுவாமி யக்ஞத்தின் போதே வரவழைத்து அருளினார் என்றேன்.

அந்த சிவன் டாலரை தொட்டு வணங்க அருகில் அவரோடு அமர்ந்தேன்.

அவர் பெயர் கார்த்திக். சிவன் சிலை வந்தபிறகு தபஸ் ஸ்டூடியோ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதன் உரிமையாளர். இசையமைப்பாளர் இளையராஜா கார்த்திக் எனும் இவரின் இயற் பெயரை கௌஷிக் மேனன் என மாற்றி இருக்கிறார்..

சுவாமி லீலையை உணவு இடைவேளையில் பகிர ஆரம்பித்தார்.

உணவு இடைவேளை வைகுண்ட கனவு வேளையாய் மாறிப்போனது.

சுவாமி அதிருத்ர மகா யக்ஞத்திற்கு வரும் சென்னை விஜயத்தில் பாடகர் மலேஷியா வாசுதேவன் பாடுவதாக இருந்தது ...
அவர் இதைப் பற்றிப் பேச .. நான் சத்திய சாயி பாபாவைப் பார்த்ததே இல்லை.. அழைத்துப் போங்கள் என்றிருக்கிறார் கௌஷிக்.

அது அவ்வளவு சுலபமான காரியமல்ல.. அவரைப் பார்ப்பது அவ்வளவு கடினம் என்றிருக்கிறார்..

மனம் நொந்து போய்.. காரை பார்க் செய்து சாலையை கடந்து போக எத்தனித்த இவர்..

 டிராஃபிக் சரிசெய்து யாரோ வருவதற்காய் மற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்ட சாலையை ஏதும் அறியாத இவர் கடக்க..

 அந்த கார் இவர் எதிரே வர .. மோதுவதற்கு ஒரு அடியில் பிரேக் அடிக்க.. காவலர்கள் இவரை மறித்து இழுக்க.. அந்தக் காரையே பார்த்து கண்ணீர் வடிக்கிறார்.. அந்தக் காரின் அருகே செல்லே இவர் முந்த... இவரைப் பின்னுக்குத்  தள்ளும் காவலர்களையும் மீற.. அந்தக் காரின் முன் கதவு திறக்கப்படுகிறது ..

 வெள்ளுடை அணிந்த ஒரு பெரியவர் கையில் விசிட்டிங் கார்ட் கொடுத்து வரச் சொல்லி மீண்டும் காருக்குள் போய்விடுகிறார்..

கௌஷிக்'கின் புறக் கண்களும் அகக் கண்களும் காரின் பின் இருக்கையையேப் பார்த்தபடி கண்ணீரை நன்றியாய் எழுதிக் கொண்டிருக்கிறது.

பின் இருக்கையில் கடவுள் சத்திய சாயி புன்னகை உகுக்கிறார்.. அது பதினைந்து வயதான கௌஷிக்'கின் இதயம் சென்று நேரடியாகத் தாக்குகிறது..

ஆம் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது

அந்த விசிட்டிங் கார்ட் வாங்கிய கௌஷிக் நேரடியாக பெரியவர் வரச் சொன்ன சுந்தரத்திற்கு உடனே பறக்கிறார்..

மூச்சு வாங்குகிறது பக்தி.. அருளோ மூச்சுக்கான தாராளக் காற்றை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

சுந்தரத்தில் காலடி வைக்கிறான் கௌஷிக் எனும் பக்திச் சிறுவன்.

சில விசாரணைக்குப் பிறகு. உள்ளே ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கே கடவுள் சத்ய சாயி அமர்ந்திருக்கிறார்.. கௌஷிக்'கின் தரிசன ஏக்கத்தைச் சுமந்திருக்கிறார்...

கௌஷிக்கை சுவாமி  ஒரு பாடல் பாடச் சொல்ல.. சுவாமிக்கு இவன் ஒரு பாடகன் என கௌஷிக்கே சொல்லியா தெரிய வேண்டும்..

வனமாலி ராதா ரமணா கிரிதாரி கோவிந்தா பாடுகிறான்...
சுவாமி சிவன் டாலர் தாங்கிய தங்கச் சங்கிலியை சிருஷ்டி செய்து அணிவித்து ஆசி வழங்கி இருக்கிறார்.

ஊடகம் சுற்றிக் கொண்டு நேர்காணல் கேட்க.. கௌஷிக் தர .. அப்போதே (2007ல்) அது பல ஆங்கிலப் பத்திரிகையில் வலம் வந்திருக்கிறது.

சுவாமி கருணையே.

 நல்ல பாடல் அது . எப்படி உங்களுக்கு சுவாமி பஜன் தெரியும் என விசாரித்தேன்.

தன் குடும்பமே சுவாமி பக்தர் என்றார். பாலக்காடு சொந்த ஊர்.
இவர் வீட்டின் ஒருபுறம் தான் சுவாமி சமிதியும்...

கௌஷிக் அசாதாரண பக்தர்.. சுவாமியின் படம் முன்பு பேசுவார்..

அவரைப் பொறுத்தவரை அது படமல்ல... சுவாமி...

மிக மிக வெளிப்படையான மனசுக்காரர்..

உள்ளத் தூய்மை அதிகம் கொண்டவர்..

இரக்க குணமே இவர் இதயத்திற்குள் இறங்கி குடி இருக்கிறது..

அவரிடமிருந்து புறப்பட்ட அதிர்வலைகளால் அவர் சொல்கின்ற அத்தனையும் சத்தியம் என உணர்ந்து கொண்டேன்..

விலங்குகள் சோகமாக இருந்தாலும் .. தன் கார் பயணத்தை நிறுத்தி அதோடு அன்பொழுக பேசுவார்.. என்ன குறை என விசாரிப்பார்... பிஸ்கட் வகைகளை வழங்கி அதன் முகம் மாறிய பின்னே தன் பயணத்தைத் தொடர்வார்..

பார் இது தான் பக்தி என சுவாமி அடியேனுக்கு பாடம் எடுத்தார்.

சுந்தர அனுபவத்திற்குப் பிறகு இவர் இல்லத்தில் விபூதி வர ஆரம்பித்திருக்கிறது...

ஒருமுறை மருத்துவ செக்அப் செய்வதற்கு ஒரு மருத்துவமனை செல்ல.. இவருக்கு கேன்சர் என உறுதி செய்து சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.

குடும்பத்தினர் இதை எப்படித் தாங்குவர்?

நேராக தன் தனி அறைக்குச் சென்று சுவாமி படத்திற்கு முன்பு பேசுகிறார்..

"நான் சாவதற்கு கவலைப்படவில்லை.. ஆனால் இந்த பூமியில் உலக மக்களுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.. ஏன் அதற்குள் நான் அஸ்தமனமாக வேண்டும்?" என அழுதிருக்கிறார்..

கௌஷிக் ஒரு சத்திய சந்தர். அவர் கண்களின் தீட்சண்யத்தில் துளி கூட பொய்யே இல்லை..
தற்பெருமை இல்லை...

இதற்கு முன் அவர் என் நண்பரும் இல்லை..

இவரை ஏற்றிச் சொல்வதால் அடியேனுக்கு ஆகப் போவதொன்றுமில்லை...

சத்தியம் பகர்கிறேன்...

அழுத கௌஷிக் தூங்கிவிடுகிறார்..

அந்த ரிப்போட்டை எடுத்து வேறொரு மருத்துவமனை வருகிறார்..

அவர்கள் இவரை செக்அப் செய்ததில் கேன்சர் என்ற தடயம் கூட இல்லை...

எந்தக் குழந்தை அழுவதை சாயித் தாய் பார்த்துக் கொண்டிருப்பாள்?

சத்ய சாய் ஒருவரே சத்ய தாய்..

அடியேன் அன்றாடம் இதை அணு அணுவாய் அனுபவிக்கிறேன்...

இவருக்கு ஒரே ஆச்சர்யம்..
பிறகே இந்த சுவாமி அனுபவத்தை வீட்டில் பகிர்ந்திருக்கிறார்..

கர்மாவை மாற்றி அமைப்பதென்பது சுவாமிக்கு சர்வ சாதாரணமான செயல்..

அதுவும் உத்தமமான .. நிர்மலமான பக்தனுக்கு மாற்றாமல்.. வேறு யாருக்கு மாற்றி அமைக்கப் போகிறார்..

சுவாமி கருணா மூர்த்தி...

கௌஷிக் பளிங்கு மனம் கொண்டவர்..
உள்ளொன்று  புறமொன்று இல்லாதவர்..

பொறாமை அறவே படாதவர்...

ஆனால் இவரிடம் நட்பு பாராட்டி ஏமாற்றிய கூட்டமே அதிகம் இருந்திருக்கிறது..

நல்லவர்களை இந்தக் கலியுகம் அவ்வளவு சீக்கிரம் இதயத்தில் தாங்கிக் கொண்டாடுவதில்லை...

போலி கௌரவம்.. திமிர் மற்றும் தான்தோன்றித்தனத்தில் நல்லவர்களை வலிக்கச் செய்யும் உலகில் ...

கௌஷிக் சுயநல உலகில் கண்ட பாராமுகங்கள் .. துரோகங்கள் .. இவரை களைப்புக்கும் சலிப்பிற்கும் உள்ளாக்கி இருக்கிறது..

தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்..

அதிர்ந்து போனேன்..

என்ன சாய்ராம் இது.. நீங்களுமா.. உங்களையும் இந்த உலகம் விட்டுவைக்கவில்லையா.. தற்கொலைக்கு தள்ளி இருக்கிறதா என கவலைப்பட்டுக் கேட்டேன்..

அவர் இதன் பிறகு சொன்னது தான் கண் கலங்க வைத்தது..

தற்கொலைக்கான மாத்திரைகளை எல்லாம் வாங்கி..
தற்கொலைக்கு நாள் குறிக்கிறார்..
எமனை அடுத்த நாளைக்கு வரச் சொல்கிறார்...

கடைசி இரவு இதுதானென
தூங்குகிறார்..

அடுத்த நாள் விழிக்கிறார்.. படுக்கையை விட்டு நகர்ந்து போக.. சற்று நடந்து போக அடி எடுத்து வைக்கிறார்..

தரையில் ஒரே விபூதிக் குவியில்.. சுவாமியின் உருவம் போல இருக்கிறது


அம்மாவை அழைத்து வந்து காட்டுவதற்குள்
விபூதிக் குவியலில் சுவாமி ஓவியம் மிக மிகத் தெளிவாய்த் தெரிந்திருக்கிறது...


அதிர்ந்து போகிறார்...
ஆச்சர்யம் அடைகிறார்..

இதைச் சொன்னால் யார் சாய்ராம் நம்புவார்கள் என்று படத்தைக் காட்டினார்..

அடியேன் உடம்பு அதிர்வலைகளால் நடுங்கியது...

சுவாமி ...சுவாமி நீ கடவுள் ...சுவாமி நீ மட்டுமே கடவுள் சுவாமி... என உள்ளம் நிறைந்துபோனது எனக்கு...

சாய்ராம் சுவாமி கருணை சாய்ராம்..

இப்படி விபூதிக் குவியலில் சுவாமி சாந்நித்யப்பட்டிருப்பது மனிதனால் நினைத்துக் கூட பார்க்க முடியாத கடவுள் லீலை..

அலகிலா விளையாட்டு...

சுவாமி சங்கல்பம்.

 இந்தப் படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் ஃபிரேம் செய்து தியானத்தில் வைக்கப் போகிறேன் என்றேன்..

அந்த நாளில்
அவரின் தற்கொலை எண்ணம் சுவடே இல்லாமல் காணாமல் போயிருக்கிறது.....
எமன் பயந்து கொல்லைப்புறம் வழியாகக் குதித்துத் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிப் போயிருக்கிறான்..

இந்த விபூதி சுவாமி... அவரின் மந்தஹாசம்.. அதை தரிசிப்பவர்கள் புனிதம் அடைந்தவர்கள்....

சுவாமி அதன் பிறகு ஓரே வாரத்தில் இவருக்கு திருமணம் நிகழ்த்தி இருக்கிறார்..

பெண் குடும்பம் எல்லோரும் சுவாமி பக்தர்கள். பெண் பைலட்..

பெயர் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள் என்றார்...என்ன பெயர் என்றேன் ..

அவரின் மனைவி பெயர் பிரசாந்தி.. பெண் வீட்டார் இல்லத்தின் பெயர் பிரசாந்தி நிலையம்..

சுவாமியே மாமனாராகி இருக்கிறார் எனத் தோன்றியது..

சாய்ராம்.. சுவாமி உங்களுக்கு பிரசாந்தியை சுவாமி விபூதி ஓவியத் திருநாள் அன்றே வழங்கி விட்டார். இது போனஸான பிரசாந்தி என்றேன்...

ஏன் அதற்குப் பிறகு சுவாமியை நீங்கள் தரிசிக்கச் செல்லவில்லை எனக் கேள்வி எழுப்பினேன்...

அந்த ஒரு தரிசனமே வாழ்நாள் திருப்தி சாய்ராம்.. பிற பக்தர்க்கான வாய்ப்பை நாம் ஏன் குறுக்கே புகுந்து இடைமறிக்க வேண்டும் என்றாரே பார்க்கலாம்..

என்ன ஒரு பக்தி...

சுயநலம் என்பது ஒரு மருந்துக்குக் கூட இல்லை..

காய்ச்சல் போன்ற எது வந்தாலும் சுவாமி விபூதி தான்.. ஷிர்டி சுவாமி துனி தான்...

சுவாமி அவரின் அனுபவம் சொல்லி எனக்கு மதிய உணவு இடைவேளையில் பக்திப் பாடத்தைத் தலையைக் குட்டிக் குட்டிச் சொல்லிக் கொடுத்தார்..

இவரோடு யார் பேசினாலும் .. பழகினாலும்.. மனசு லேசாகிப் போகிறது.. பிரச்சனை தூசாகிப் போகிறது என்கிறார்களாம்..

இருக்காதா ..

தூய உள்ளத்தின் அதிர்வலைகளே சுவாமி தான்...

அது தான் இப்படி செய்விக்கிறது.

டேப்ரிக்காடரில் மந்திரம் போட்டு கேட்பது பிடிக்காது சாய்ராம்.. நாமே ஓத வேண்டும் அப்போதே வைப்ரேஷன் என்றார்..


செல் ஃபோனை அதிகமாக பயன்படுத்தக் கூடாதென்றார்...
நான் என் செல் ஃபோனை மறைத்துக் கொண்டேன்..

பார் .. எப்படி இருக்கிறான் பார் என இந்தி வாத்தியார் ஒரு படத்தில் அடித்து அடித்து  ரகுதாத்தாவை ரஹதாதா வாக்க முயற்சிப்பது போல் சுவாமி எனக்கு பக்தியை மிரள வைத்து போதித்தார்...

இவர் முருக பக்தரும் கூட.. முருகனும் சுவாமியின் ஒரு அம்சம் தானே...

கௌஷிக் சுவாமிக்கு ஒரு கோவில் கட்டிக் கொண்டிருக்கிறார்...
அதில் ஷிர்டி சுவாமி விக்ரஹமும் .. நம் சுவாமி படமும் வைத்து வழிபடுவதான சுவாமி சங்கல்பம்...

யாரிடமும் பணம் வாங்குவதே இல்லை என்ற முடிவிலிருக்கிறார்..

இவர் கொடுப்பவர்.. எப்படி வாங்குவார்...

ஒரு ஆன்மீக மகான் சொல்லியபிறகு பணமாக வாங்காதே.. கோவில் கட்ட பொருளாகத் தந்தால் வாங்கிக் கொள்.. கோவில் என்பது உன் ஒருவனுக்கான உரிமை அல்ல.. அதில் பிற பக்தரின் புண்ய பலனும் சேர வேண்டுமெனச் சொல்ல...

கோவிலுக்கான பொருள் தந்தால் இப்போது ஏற்கிறார்..

கடவுளுக்காக எது தந்தாலும் ... எதைச் செய்தாலும் நம் கர்மா கழிகிறது என்பதே சத்தியம்..

நாமும் பொருளைத் தந்து அருளைப் பெறுவோம்...

சில கஞ்சர்களையும் நெஞ்சர்களாய் சுவாமி மாற்றட்டும்.

பண வசதியற்ற வயதான முதியவர்களுக்காக இலவசமாக கோவில் யாத்திரைக் கூட்டிச் செல்ல வேண்டுமென்பது இவரின் சேவைத் திட்டம்...

இதைக் கேள்விப்பட்ட பிரபல நடிகர் ஒருவர் தனது நீண்ட காலம் பயன்படுத்திய வேன் ஒன்றையே இவருக்கு இலவசமாக வழங்கி இருக்கிறார்..

இவரிடம் பேசப் பேசப் பக்தி வரும்.. நேர்மறை சிந்தனையில் நெஞ்சம் நிறையும்...

250 பாடல்களுக்கு மேல் திரைப்பாடல்கள் பாடிக் கொண்டும்.. தனது சொந்த ஸ்டூடியோவில் பிறப் புதுப் பாடகர்கள் பாடுவதில் ஆனந்தமடைந்தும் வருகிறார்.

இவரின் நட்பு கிடைத்தது சுவாமி வரம்..

நானும் சுவாமி புதிதாய் தந்த நட்பு கங்கையில் அழுக்கைக் கழுவி பக்தியை ஆன்மாவில் வழிய வழியத் தேக்கிக் கொண்டேன்..

சாய்ராம்

பக்தியுடன் வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக