தலைப்பு

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

பாகவத வாஹினி - அர்ஜுனனுக்கு பசுபதாஸ்திரம் கிடைத்த நிகழ்வு!


பாண்டவர்கள் கானகத்தில் உள்ளனர். ஒரு நாள் தர்மன் பதட்டத்தில் உள்ளார். தனது நாட்டில் இருந்து வெளியேற்றப் பட்ட காலம் முடிந்தாலும் கௌரவர்கள்  தங்களை  அமைதியாக இருக்க விடுவார்களா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.  ராஜ்யத்தில் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கு கிடைக்குமா என்று  அவருக்கு சந்தேகமாக இருந்தது. போர் தவிர்க்க முடியாததாக போய் விடும் என்று  அவர் கருதினார். பீஷ்மர், துரோணர்,
கர்ணன், அஸ்வத்தாமன் போன்ற வில்  வித்தையில் சிறந்தவர்கள் கௌரவர்களின் பக்கத்தில் இருப்பார்கள். இது போன்ற பலம்வாய்ந்த ஒரு படையை வெல்வது கடினம் என அவர் நினைத்தார். போரின் முடிவில்  பாண்டவர்களுக்கு தோல்வியே கிடைக்கும். பாண்டவர்கள் மீதம் உள்ள தங்கள் வாழ்நாட்களை கானகத்தில் கழிக்க வேண்டி வரும் என பயப்பட்டார்.

அர்ஜுனன் தர்மரின் வருத்தம் கண்டு, அவரது ஆசியை வேண்டினார். அர்ஜுனன்  தவம் இருந்து கடவுள்களிடமிருந்து எதிரிகளை வெல்ல ஆயுதங்கள் பெற்று வருவதாக கூறி புறப்பட்டார்.

அர்ஜுனன் கடும் தவம் புரியும் எவராலும் கூட சுலபமாக நுழைய முடியாத கந்தமாதன பகுதிக்கு வந்தார். தேவர்களின் தலைவரான இந்திரனை நோக்கி அர்ஜுனன் தவம்  இருந்தார். அர்ஜுனரின் தொடர்ந்து இருந்த கடும் தவம் கண்டு தேவலோகம் வியந்தது. தேவேந்திரன் அர்ஜுனன் முன் தோன்றி, “மகனே, உனது தவம் கண்டு மிக மகிழ்ச்சி  அடைந்தேன். ஆனால் நீ விரும்பியது கிடைக்க சிவ பெருமானின் கருணை வேண்டும்” என்றார்.

அர்ஜுனன் மீண்டும் தவமிருக்க ஆரம்பித்தவுடன், ஒரு காட்டுப் பன்றி மிக ஆவேசத்துடன்  அர்ஜுனனை நோக்கி ஓடி வந்தது. தவம் இருக்கும் நேரத்தில், உயிருள்ள எதையும் கொல்லக் கூடாது. இருப்பினும் காட்டுப் பன்றி தன் மீது விழும் தருவாயில், அர்ஜுனன் வில் எடுத்து  அம்பு எய்தினான்.

அப்போது, வில்லும் அம்பும் ஏந்திய ஒரு வேட்டைக்காரர் அவருடைய மனைவியுடன்  அர்ஜுனன் முன் வந்தார். அடர்ந்த காட்டிற்குள், சாதாரண மக்கள் பாதுகாப்பாக நடமாட  முடியாத பகுதியில் வேட்டைக்காரனுடன் ஒரு பெண் வந்திருப்பது அர்ஜுனனுக்கு  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த இருவருக்கு பின்புறம், பயங்கரமான உருவத்துடன்  பெருங்குரலில் கூச்சல் போட்டுக் கொண்டு பலர் வந்தனர். அர்ஜுனன் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தான்.


முதலில் வந்த வேட்டைக்காரன் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சிவந்த  கண்களுடன் அர்ஜுனனிடம் பேசினான்.

யார் நீ? இந்த இடத்திற்கு எதற்கு வந்தாய்? தப்பித் தவறி கூட அந்த பன்றியின் மீது நீ அம்பு  விடக் கூடாது. உன்னை எச்சரிக்கிறேன். நான் அதை விரட்டி வந்து, அது இங்கிருந்து  ஓடுகிறது. அதன் மீது வில் எடுத்து அம்பு விட உனக்கு என்ன உரிமை உள்ள்து?
இந்த வார்த்தைகள் அர்ஜுனனின் இதயத்தை அம்புகளால் துளைத்தது போல் இருந்தது. ஒரு சாதாரண வேட்டைக்காரன் தன்னை அவமதித்தது அர்ஜுனனை மிகுந்த வேதனைக்கு  உட்படுத்தியது. எனது பெயரும் புகழும் தெரிந்திருத்தால் என்னுடன் சவால் விட்டிருக்க  மாட்டான் என அர்ஜுனன் எண்ணினான். பன்றியின் மீது தனது வில்லை உயர்த்தி அம்பை  விட்டான். அதே சமயம் வேட்டைக்காரனும் பன்றியின் மீது அம்பு எய்தான்.

காட்டுப் பன்றி தரையில் உருண்டு விழுந்து இறந்தது. வேட்டைக்காரன் அர்ஜுனனை நோக்கி,  “உனக்கு வேட்டையாடுதலின் சட்டம் தெரியாதா? நான் தேர்வு செய்து வேட்டையாட  விரட்டி வந்த ஒரு விலங்கை நீ எப்படி அம்பு விட்டு கொல்லலாம்? நீ பேராசை பிடித்த காட்டுமிராண்டி.” எனச் சொல்லி  அர்ஜுனனை தவறாக பேசினான். வேட்டைகாரனின் கண்கள் மிகுந்த கோபத்துடன் அர்ஜுனனை பார்த்தன.
அர்ஜுனன் மிகுந்த கோபம் அடைந்தான். அவன் வேட்டைக்காரனை நோக்கி, “போக்கிரி வேட்டைக்காரா, உனக்கு மரணம் சம்பவிப்பேன், உன்னைக் காப்பாற்றிக்  கொள்ள உனது நாவை அடக்கு. வந்த வழியே திரும்பி போ” என்றான். வேட்டைகாரன் ஒரு அடி கூட நகரவில்லை. அர்ஜுனனைப் பார்த்து, “நீ யாராக இருந்தாலும் எனக்கு பயம் இல்லை. உன் பக்கம் முன்னூற்று ஐம்பது  கடவுள்கள் இருக்கலாம். ஆனால் நான் அடிபணிய மாட்டேன். ஒழுங்காக இரு. இந்த  இடத்திற்கு ஆதாயம் தேடி வந்தவன். இங்கே வர உனக்கு யார் அனுமதி கொடுத்தது?  என்னை வெளியே போகச் சொல்ல உனக்கு என்ன அதிகாரம் உள்ளது? இந்த காடு  எங்களுடையது. நீ இங்கே நுழைந்திருக்கும் திருடன். எங்களை வெளியே போகச்  சொல்லும் தைரியம் உனக்கு எப்படி வந்தது" எனக் கேட்டான்.
அர்ஜுனன் இந்த தருணத்தில் தன்னிடம் இவ்வளவு தைரியமாக பேசியவன் சாதாரண ஆளாக இருக்க முடியாது என எண்ணினான். கோபப்படாமல் இயல்பான குரலில்,  வேட்டைகாரனை பார்த்து “கானகம் அனைவருக்கும் பொதுவானது. நீ வேட்டையாட  வந்திருக்கிறாய். நான் சிவனை நோக்கி தவம் புரிய வந்துள்ளேன். பன்றியின் ஆவேச  தாக்குதலில் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் அம்பு எய்த வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டது.” என கூறினான்.

வேட்டைக்காரனின் கோபம் குறைவதாக இல்லை. “நீ யாரை வேண்டி தவம் இருந்தாய் என்பதோ, யாரை திருப்திப் படுத்த வந்தாய்  என்பதோ எனக்கு முக்கியம் இல்லை. நான் வேட்டையாடி வந்த விலங்கின் மீது நீ ஏன் அம்பு எய்தாய்? தவறை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேள்” என்றான்.

அர்ஜுனனுக்கு பொறுமை போய் விட்டது. பன்றியை கொன்றது போல் இவனையும்  கொல்ல வேண்டும் என தனக்குள் சொல்லிக் கொண்டான். நல்ல வார்த்தைகளால்  இவனை திருத்த முடியாது. கூர்மையான ஒரு அம்பை எடுத்து, வேட்டைக்காரன் மீது  அர்ஜுனன் எய்தான். ஒரு பெரிய பாறாங்கல்லின் மீது, மோதியது போல் அந்த அம்பு  வளைந்து கீழே விழுந்தது,  பிறை வடிவான அம்பை வேட்டைக்காரனை கழுத்தை  நோக்கி அர்ஜுனன் எய்தான். வேட்டைக்காரன் புல்லை பிடிப்பது போல் அதை பிடித்து தூக்கி எறிந்தான்.


அர்ஜுனன் தன்னுடைய தோள் பையில் இருந்த அம்புகள் அனைத்தையும் எய்தாலும் வேட்டைக்காரன் மீது ஒரு விளைவையும் ஏற்படுத்தவில்லை. அர்ஜுனன் தொடர்ந்து  தனது கைகளாலும் சண்டையிட்டு பார்த்தான். கடைசியில் ஸ்ரீ விஷ்ணுவிடம் தன்னைக் காப்பாறுமாறு வேண்டினான். வேட்டைக்காரனாக வந்தது சிவப் பெருமான் என்றும்,    கூடவந்த பெண்மணி  கௌரி தேவி என்றும்  தெரிந்து கொண்டு அர்ஜுனன் அவர்களை  நமஸ்கரித்து, சிவனிடம் பாசுபதாஸ்திரம் பெற்றான்.
               
மூலம்: Bhagavatha Vahini, Chapter 22
 தமிழில் : Prof. N.P. ஹரிஹரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக