தலைப்பு

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

பாபாவை நம்பாதவர் பின்னர் தந்தையாரையும் நம்ப வைத்தவர்

ஆந்திராவின் தலைமை Drug controller ஆக இருந்த காலம்சென்ற திரு. B. V. ரமணாராவ் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்.

பாகம் - 1

ஆந்திராவில் துணை Drug controller ஆக பணிபுரிந்துவந்தார் திரு. ரமணாராவ். அவருடைய நண்பர் தீட்சித் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவிடம் ஆழ்ந்த பக்தி உள்ளவர்அடிக்கடி பாபாவைப் பார்க்கவும்சேவைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளவும் புட்டபர்த்திக்கு சென்றுவிடுவார். அவர் திரும்பி வந்தவுடன் ரமணாராவ் அவரை கேலி செய்வார். ஏன் பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகிறாய் என்று கடிந்து கொள்வார். 

ஒரு முறை தீட்சித்திற்கு அதை பொருக்க முடியவில்லை. நீ விஞ்ஞானம் படித்தவன் தானேஒரு விஷயத்தைப் பற்றி படிக்காமல் அல்லது நேரடியாக தெரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது சரியாநீ புட்டபர்த்திக்கு வந்து பார். பார்க்காமல் இஷ்டப்படி கேலி செய்வது சரியாஎன்றார். சரி அடுத்த முறை போகும் பொழுது நானும் உன்னுடன் வருகிறேன். மூன்று நாட்கள் தங்கி இருப்பேன் அதற்குள் உன்னுடைய பாபாவின் தெய்வீக தன்மையை வெளிப்படும்படியாக ஏதாவது சம்பவம் நிகழ்ந்தால் சந்தோசம். இல்லாவிட்டால் நீயும் அவரை வணங்குவதை விட்டுவிட வேண்டும் என்றார். அதையே சவாலாக ஏற்றுக் கொண்டு தீட்சித் ரமணாராவை அழைத்துக் கொண்டு புட்டபர்த்திக்கு சென்றார்.

சென்ற வேலைநேரம் கிட்டதட்ட நடுஇரவு. ரமணாராவிற்கு தூக்கம் வரவில்லை எழுந்து அந்த ஆசிரமத்தின் முகப்பிற்கு நடந்து வந்தார். அப்போது ஒரு ஆச்சரியம் நடந்தது. கேரளாவிலிருந்துஒரு பஸ் நிறைய பக்தர்கள் அப்போது தான் அங்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு எதிரே ஒரு விநாயகர் சிலை இருந்தது. யாரோ அதற்கு முன்னால் நிறைய ஊதுபத்திகளை கொளுத்த வைத்திருந்தார்கள். அவற்றிலிருந்து ஊதிபத்தி சாம்பல் கீழே கொட்டியிருந்தது. அதையே விபூதியாக மதித்து எல்லோரும் பூசிக் கொண்டார்கள். பின்பு அங்கிருப்பவரை கேட்டு அவரவர் இடத்திற்கு சென்று படுத்து விட்டார்கள். இதைக் கண்ட ரமணாராவிற்கு கேலிச்சிரிப்பு பொங்கியது. ஊதிபத்தி சாம்பலைப் போய் பூசிக் கொள்கிறார்களேஎன்ன மூடத்தனம் என்று மனதில் அவர்களை திட்டினார். அப்போது அவருக்கு தலைவலி ஆரம்பமாகிவிட்டது அந்த ஆத்திரத்தில் மேலும் மேலும் மனதில் திட்ட ஆரம்பித்தார். எத்தனைக்கு எத்தனை அவர் கேலி செய்து திட்ட ஆரம்பித்தாரோ அத்தனைக்கு அத்தனை தலைவலி அதிகமாகியது. சிறிது நேரம் அவருக்கு ஒன்றும் புரியவில்லைதலைவலி மிகவும் அதிகமாகவே தான் பக்தர்களை கேலிசெய்வதற்கும் இந்த தலைவலிக்கும் சம்மந்தம் ஏதாவது இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. உடனே அவர் மனதில் பாபா உங்களுடைய பக்தர்களை கேலி செய்வதற்கும் இந்த தலைவலிக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமானால் என்னை மன்னித்துவிடுங்கள். அதற்காக நான் இந்த ஆசிரம கோவிலை பிரதட்சணம் செய்து கொண்டே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு கோவிலை பிரதட்சணம் செய்து கொண்டே வந்தார். வர வர தலைவலி குறைந்து கொண்டே வந்து நின்றுவிட்டது. ஆச்சரியத்துடன் மறுபடியும் தூங்கப் போனார்.


காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு பாபா தரிசனத்திற்காக ஒரு வரிசையில் தன் நண்பருடன் உட்கார்ந்தார். சற்று நேரத்தில் பாபா அங்கே வந்தார். என்ன நன்றாக தூங்கினாயாதலைவலி எப்படி இருந்ததுஎன்று கேட்டார் பாபா. நடு இரவில் நடந்தது இவர் பாபாவிடம் பிராதித்தது எல்லாம் எப்படி தெரியும் என்று ஆச்சரியப்பட்டார் ரமணாராவ். தன்னுடைய நண்பர் தீட்சித்திடம் எல்லாவற்றையும் சொன்னார். இருந்தாலும் கூட இந்த சம்பவம் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போல் நேர்ததோ என்னவோஎன்று நினைத்து குழம்பினார். அவர் அங்கு பார்த்தவர்கள் எல்லாம் பழவிதமான பிரச்சனைகளால் கஷ்டப்படுபவர்களாக தோன்றினார்கள். ஆனால் பாபாவை பார்த்துவிட்டு வந்தபின் முகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. இதை கவனித்துக் கொண்டே வந்தார் ரமணாராவ் அப்போது ஒரு ஏழை விவசாயி இவருக்கு பக்கதத்தில் அமர்ந்திருந்தார். அவர் முகம் மிகுந்த வருத்தத்தில் தோய்ந்து இருந்தது. அவருடைய மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம் நகை துணி எல்லாவற்றையும் அவருடைய ஊரில் இருக்கும் பொழுது திருடிக் கொண்டு போய்விட்டார்களாம். என்ன செய்வது என்று தெரியாமல் அவர் கண்ணீர் விட்டுகொண்டிருந்தார். அப்போது அவரை பாபா அழைப்பதாக ஒருவர் சொல்லிவிட்டுப் போனார் அப்படி போனபோது கண்ணீர் வடிந்த அவர் முகம் திரும்பி வந்த போது ஒரே சந்தோசத்தால் மலர்ந்து இருந்தது. ரமணாராவ் என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது அந்த கிராமத்து ஆள் பாபா சாதாரண மனிதர் அல்ல தெய்வம் தான் என்றார். சொல்லிவிட்டு அவர் வைத்திருந்த ஒரு துணி மூட்டையை அவிழ்த்து காண்பித்தார். அதிலே திருமணத்திற்கு வேண்டிய ஆடைகளும் நகைகளும் பணமும் இருந்தன. இதையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் உன்னுடைய மகளின் திருமணத்தை நன்றாக நடத்து என்று சொல்லியிருக்கிறார் பாபா. அந்த நல்ல வாக்கை கேட்டு பிரச்சனையெல்லாம் தீர்ந்ததால் சந்தோசமாக ஊருக்கு கிளம்பி சென்றார் அந்த கிராமத்து ஆள்.

எவ்வளவு பெரிய உதவி! எவ்வளவு எளிதாக பிரச்சனையை தீர்த்துவிட்டார்!. எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்றெல்லாம் ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருந்தார் ரமணாராவ். அவருக்கு பாபாவின் மேல் பக்தி அதிகரித்துக் கொண்டே போயிற்று. தன்னுடைய அனுபவத்தை எல்லாம் அவருடைய தந்தையாருக்கு எழுதிக் கொண்டே வந்தார். அதன் விளைவு அவருடைய தந்தையாரிடமிருந்து அவரை திட்டி திட்டி பதில் வந்தது. நம்முடைய குல தெய்வம் வெங்கட ரமண சுவாமி ஆனால் நீயோ ஒரு சாதாரண மனிதனை கடவுள் போல் மதித்து பக்தி பூண்டிருக்கிறாய். இது பாவம் இதை செய்யாதே”. சற்றும் அசராமல் ரமணாராவ் பகவானைப் பற்றி மேலும் மேலும் பாராட்டி எழுதிக் கொண்டே இருந்தார். அவருடைய தந்தைக்கு கோபம் கோபமாய் வந்தது. தன் மகனை அவரும் திட்டி திட்டி பதில் எழுதுவார். இப்படி தந்தையும் மகனும் சண்டை போடுவதை பார்த்த ரமணாவின் தாய் ஒரு நாள் கணவரைப் பார்த்து நீங்கள் சண்டையிட்டது போதும் நான் எவ்வளவு நாட்களாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். உங்களுக்கு தெரியாதாநீங்கள் வராவிட்டால் போகிறது என்னை புட்டப்பர்த்திக்கு அழைத்துக் கொண்டு போங்கள் என்னுடைய கஷ்டம் பாபாவின் அருளால் தீருகிறதா பார்க்கலாம் என்று முறையிட்டார். அவருடைய தாயாரின் தீராத கஷ்டம் என்னவென்றால் சுமார் ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழித்தே ஆகவேண்டும். எனவே ஒரு வெளியூருக்கோ திருமணம் போன்ற வைபவங்களுக்கோ போக முடியாத நிலை இதை உணர்ந்த ரமணாவின் தந்தை சரி உனக்காக அழைத்துக் கொண்டு போகிறேன் என்று கூறினார். ஆக ரமணாராவ் வழிகாட்ட அவருடைய தந்தையும் தாயும் புட்டபர்த்திக்கு வந்தார்கள். ரமணாவும் அவருடைய தாயும் ஆசிரமத்திற்கு உள்ளே சென்று அமர்ந்திருந்தார்கள். தந்தை மட்டும் நான் உள்ளே வரமாட்டேன் என்று கேட் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.குறும்புகாரரான பாபா ஆசிரமத்திற்கு உள்ளே அமர்ந்திருந்தவர்களை முதலில் கண்டுகொள்ளமல் ரமணாவின் தந்தை இருக்குமிடத்திற்கு நேராக சென்றார். அவருடன் அன்புடன் சில வார்த்தைகள் பேசிவிட்டு பிறகு பார்க்கிறேன் என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டார். ரமணாவின் தந்தைக்கு ஒரே ஆச்சரியம் எப்படி அவருக்கு என்னைப் பற்றி தெரியும் என்று மகனிடம் பின்பு கேட்டார். அதற்கு ரமணா பொறுங்கள் பொறுங்கள் இன்னும் எத்தனையோ அற்புதங்களை அவர் செய்வார் பார்த்துக் கொண்டே இருங்கள் என்றார். அதற்கு தக்கவாறு பகவான் நிறைய அற்புதங்களை செய்து ரமணாவின் தந்தையையும் ஆட்கொண்டுவிட்டார். 

பாகம் - 2:
பக்தி வளர வளர ரமணாராவ் பாபாவின் தீவிர பக்தராகிவிட்டார். அதன் விளைவாக சேவாதள அமைப்பாளருமாகி எந்த ஒரு விசேஷமானாலும் புட்டபர்த்திக்கு வந்துவிடுவார். அப்படி இருக்கும்பொழுது ஒரு முறை பாபா அவரை அழைத்து தன்னுடைய 60ம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்கு அவசியம் வந்து தேவையான சேவைகளை செய்ய வேண்டும் என்று பாபா ரமணாவிற்கு கட்டளையிட்டார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு ரமணாராவ் தன்னுடைய அலுவலகம் இருந்த ஹைதராபாத்திற்கு சென்றார். பின்பு பகவான் தன்னுடைய 60ம் ஆண்டு விழாவிற்கு செல்வதற்காக விடுப்பு விண்ணப்பத்தை எழுதிவிட்டு புட்டபர்த்திக்கு போக ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய டைரக்டரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. இவருடைய உயர் அதிகாரி ஒரு கடுமையான கட்டளையிட்டிருந்தார். டெல்லியிலிருந்து அனைத்திந்திய Drug Controller விஜயம் செய்ய இருப்பதாகவும் அவருக்கு வேண்டிய புள்ளி விபரங்கள் முதலானவற்றை கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறியிருந்தது. மீறி விடுப்பு எடுத்துப் போய்விட்டால் தக்க தண்டனை கிடைக்கும் என்றிருந்தது.ரமணாராவிற்கு மனம் இருதலை கொள்ளி எறும்பு போல் ஆகிவிட்டது. ஏனென்றால் கன்ட்ரோலர் குறிப்பிட்ட தேதி பகவான் அழைத்த தேதியும் ஒன்றாக இருந்தது! புட்டபர்த்திக்கு செல்வதா! ஹைதராபாத்திலிருந்து உயர் அதிகாரியின் கட்டளைக்கு பணிவதா? என்று குழம்பினார். எல்லா உயர் அதிகாரிகளையும் விட பகவான்தான் பெரிய அதிகாரி என்று தீர்மானித்து விடுப்பு விண்ணப்பத்தை மேஜையில் வைத்துவிட்டு புட்டபர்த்திக்கு போவதாக தன்னுடைய நண்பரிடம் மட்டும் சொல்லிவிட்டு கிழம்பிவிட்டார். வீட்டிற்கு சென்றவுடன் இவருடைய திட்டத்தை தெரிந்து கொண்ட மனைவி தானும் வருகிறேன் புட்டபர்த்திக்கு என்று பிடிவாதம் பிடித்தாள். குழந்தைகளை என்ன செய்வது என்று கேள்விக்கும் எதிர் வீட்டம்மாள் ஒரு கவலையும் படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் உங்கள் குழந்தைகளை என்று அபயம் கொடுத்தாள். எனவே மனைவியையும் அழைத்துக் கொண்டு புட்டபர்த்திக்கு கிளம்பிவிட்டார் ரமணாராவ். 

அங்கே எதிபார்த்தபடி இரண்டு நாட்கள் வேலை சரியாக இருந்தது. திருப்தியுடன் ஊருக்கு திரும்ப பகவானுடைய அனுமதியை பெறக் காத்திருந்தார். ஆனால் பகவான் இவரை திரும்பி பார்க்ககூட இல்லை. அந்த காலத்தில் பகவானுடைய அனுமதி இல்லாமல் யாரும் ஆசிரமத்தை விட்டு போகக் கூடாது. ஆகவே காத்திருந்தார் காத்திருந்தார். நாட்கள் வேகமாக சென்றன. மனைவிக்கு ஒரே கோபம். இரண்டு நாட்கள் தானே இருக்கப் போகிறோம் என்று ஆடைகளை போதுமான அளவு எடுத்துக் கொண்டுவரவில்லை அதுமட்டுமா, குழந்தைகளை வேறு இரண்டு நாட்கள் பார்த்துக் கொண்டால் போதும் என்றல்லவா விட்டுவிட்டு வந்தோம் என்ற கவலை. பாபா எப்போது அனுமதி கொடுப்பது எப்போது நாம் ஹைதராபாத்திற்கு செல்வது எனவே இப்போதே போகலாம். நீங்கள் செய்ய வேண்டிய பணி முடிந்துவிட்டது அல்லவா? என்று நச்சரித்தாள். ஆனால் ரமணாராவ் அசைந்து கொடுக்கவில்லை. பின்னால் ஒரு நாள் பாபா அவரை பார்த்து ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய் ஊருக்கு போகவில்லை என்று கேட்டார். சுவாமி உங்களுடைய அனுமதி இல்லாமல் எப்படி போவது என்றார். பாபா சிரித்துக் கொண்டே விழாதான் முடிந்துவிட்டதே போகவேண்டியது தானே. சந்தோசமாக போய்விட்டு வா என்றார் பாபா.

ஹைதராபாத்திற்கு புறப்பட்டார் ரமணாராவ். ஒரே கவலை ஆந்திர உயர் அதிகாரி கட்டளையை மீறி விடுப்புக்கான விண்ணப்பத்தையும் கொடுக்காமல் புட்டபர்த்திக்கு வந்தது தவறா? என்ன தண்டனை கிடைக்குமோ என்றெல்லாம் கவலை. குழந்தைகள் என்ன ஆனார்களோ என்று மனைவிக்கு கவலை எப்படியோ ஹைதராபாத்திற்கு வந்து சேர்ந்தார்கள். மறுநாள் காலையில் அலுவலகம் புறப்பட்டார் ரமணாராவ், நண்பர் சொன்னார். பாபா நிஜமாகவே தெய்வீக சக்தி உள்ளவர்தான். உன்னை டெல்லி உயர் அதிகாரியுடன் போகச் சொன்னார் அல்லவா அந்த பயணம் ஒத்தி போடபட்டது! மற்ற புள்ளி விபரங்களை கேட்பதற்கும் சொல்வதற்கும் தேவை இல்லை என்று விட்டுவிட்டார்கள். நடுவில் ஹிந்தி பரீட்சை வந்தது அல்லவா அதுவும் மாஜி முதல் மந்திரி இறந்துவிட்டதால் தள்ளிப் போட்டுவிட்டார்கள் எனவே ஒரு கவலையும் உனக்கு வேண்டியதில்லை. விடுப்புக்கு விண்ணப்பிக்காமல் சென்றதுதான் தவறு அதையும் பகவானுடைய அருளாள் சமாளித்துவிடலாம் என்று தைரியத்துடன் ஆந்திர உயர் அதிகாரியின் அறைக்கு சென்றார் ரமணா. 

அப்பொழுது அந்த அதிகாரி செய்தி தாளை விரித்து பலரிடமும் ஏதோ ஒன்றை குறித்து மிகுந்த சந்தோசத்துடன் கூறி கொண்டிருந்தார்.மைய அரசின் Health Minister ஆந்திராவில் தான் மிக நன்றாக பணிபுரிகிறார்கள் என்று பாராட்டி சொன்னதாக செய்தி வந்திருந்தது. அதை படித்து குஷியாகிவிட்ட ஆந்திர அதிகாரி எல்லோரிடமும் அந்த செய்தியை காட்டி காட்டி மகிழ்ச்சியாய் துள்ளிக் கொண்டிருந்தார். அப்போது நம்முடைய ரமணாராவ் விடுப்பு விண்ணப்பத்தை எதிரில் வைத்தார். அதை சரியாக பார்க்காமலே கையெழுத்து போட்டுவிட்டார். அதற்கு முந்தின நாள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு அம்மாள் உன்னுடைய குழந்தைகளை ரொம்ப நன்றாக வளர்த்திருக்கிறாய். இங்கு இருந்தவரையில் எங்களுக்கு சந்தோசம் என்று பாராட்டினாள்.

ஆக மலைபோல் வரும் என்று எதிர்பார்த்த கஷ்டங்கள் எல்லாம் பனிபோல் மறைந்துவிட்டன!


(முற்றும்)

ஆதாரம்: NECTAR OF LOVE BY B. V. RAMANA RAO

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக