தலைப்பு

வெள்ளி, 17 ஜனவரி, 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 6 | வைத்தியர்க்கு வைத்தியன் வைத்தீஸ்வர சாயி! - டாக்டர் நளாயினி

🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் பிரபல டாக்டர் நளாயினி அவர்களின் சாயி அனுபவங்கள். 

மறைபகட்டு ஏதுமில்லா மகேஸ்வரன் தான் ஸ்வாமி
 கறையுண்ட கண்டன் தானே கடவுளாம் சத்ய சாயி
 மறைகொண்ட நாயகன்தன் மலரடி தொழுதிருந்தால்
 சிறைவீடு கட்டும் நல்ல சிறகுகள் முளைக்கும் அம்மா!

மருத்துவர்க்கு மருந்து:

சாயி பக்தர்கள் சாயி வட்டத்திற்கு வந்து சேர்ந்ததற்கு எத்தனை விதமான காரணங்கள் அதற்கு முன் ஸ்வாமியை உணரமுடியாமல் இருந்த திரை என்ன என்று தெரிவதில்லை புரிவதுமில்லை. ஸ்வாமி பக்தரை நேரம் பார்த்து தன்னிடம் இழுத்துக்கொண்டு விட்டால் அதன்பிறகு ஸ்வாமி தான் எல்லாம்...
டாக்டர். நளாயினி க்வின்ஸ்லாந்தில் உள்ள பெண் மருத்துவர். பாரம்பரியமான பக்தியும் இயல்பான சேவை உணர்வும் கூடிய அன்பும் மென்மையும் கொண்ட அடக்கமான பெண்மணி. இன்னார்க்கு இன்ன வழியென்று இறைவன் பக்தரை ஈர்த்துக்கொள்ள இனிய வழியொன்றை ஒவ்வொருவருக்கும் தனியாக உருவாக்குகிறான். அவரவர் கர்மவினைக்கேற்ப பக்திக்கேற்ப ஜீவனை அவன் கருணை கொண்டு ஏற்று அருள்பாலிக்கிறான். நளாயினி டாக்டரல்லவா_ டாக்டர்களின் டாக்டர் சாயிநாதன் அவரை ஆகர்ஷித்தது அவர் நோயாளிகளின் மூலம்.

 தன் கணவருடன் டாக்டர் நளாயினி

சாயிபக்தர்களான ஆஸ்திரேலியா 'ஸ்வாரா' சென்ட்டரைச் சேர்ந்த நோயாளிகள் மூலமே இந்த பக்தைக்கு சாயி வைத்தீஸ்வரன் மன மாற்றம் செய்திருக்கிறார். சத்யசாயியின் மகிமையை அவர்கள் நளாயினியிடம் சொல்லி ஸ்வாமியின் படங்களைக் கொடுப்பதும் விபூதி கொடுப்பதுமாகத் தொடங்கியிருக்கிறது சாயி வாசம். அது மெல்ல மெல்ல மந்தமாருதமாய் வளர்ந்து பெருகி நித்ய தென்றலாய் இந்த பக்தையின் வாழ்வை புனிதப்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் வாழும் டாக்டர் நளாயினி ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர். கணவன் மனைவி இரண்டு பிள்ளைகள் அனைவருமே டாக்டர்கள். வைத்தியக் குடும்பத்திற்கு வைத்தீஸ்வரன் கருணை அற்புதமான தெய்வசக்தியூட்டியிருக்கிறது. நளாயினியின் குடும்பம் தெய்வபக்தி நிறைந்த குடும்பம். அப்பா சிவக்கொழுந்து ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். முருகன் வழிபாடுதான் வீட்டு வழிபாடாக இருந்தது. 1952ல் நளாயினிக்குத் திருமணமானது. 1982 லிருந்து லண்டனில் ஒன்பது வருடங்கள் தங்கியிருந்தனர். 1991ல் ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தனர். தன்னுடன் வந்து தங்கியிருந்த தன் அம்மா நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தது நளாயினிக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இவர் துன்பத்தைத் துடைக்க ஸ்வாமியின் கரம் நீண்டது. தன் தாயின் பிரிவைத் தாங்க முடியாமல் வேதனைப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான நளாயினிக்கு, இந்தியாவிற்கு வந்து ஸ்வாமியை தரிசனம் செய்துவிட்டு வந்த இவருடைய நோயாளிகள் இருவர் ஸ்வாமியின் படங்களையும் 'லாக்கெட்டையும் விபூதிப் பிரசாதத்தையும் இவரிடம் தந்து ஸ்வாமியின் அருளாற்றலை தெய்வசக்தியைப் பற்றித் தீவிரமாகப் பேசத் தொடங்கினர். அது இவருடைய மனதிற்கு இனம்புரியாத அமைதியையும் ஆறுதலையும் தந்தது. இதேபோல் இன்னொரு நாளும் அம்மாவின் நினைவில் மிகுந்த கவலையோடு இருந்த நளாயினி மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு இவர் மேஜையில் ஷீரடி விபூதியும், ஸ்வாமி விபூதியும் இருந்ததைக் கண்டு திகைத்தார். இவரைப் பார்க்க வந்த நோயாளிகள் தங்கள் டாக்டருக்கு வைத்துவிட்டுப் போன மாமருந்தாயிருந்த விபூதிப் பிரசாதங்களை நெகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டேன்.மனம் அன்று வெகுவாய் அடங்கி சாந்தப்பட்டது என்கிறார் என்கிறார் நளாயினி.

வெளியில் மருத்துவம் வீட்டில் சமையல். ஓய்வு கிடைப்பதே அரிது. நேரம் கிடைக்கும்போது கரண்டேலில் சாயி பக்தர் உமேஷ் வீட்டில் நடக்கும் சாயி பஜனுக்கு போய்வரத் தொடங்கினேன். மனதின் அலைக்கழிப்பும் உளைச்சலும் அடங்கின. மூன்று மாதங்கள் தொடர்ந்து பஜனுக்குச் சென்றுகொண்டிருந்தேன். மெல்ல மெல்ல எனக்குள் அமைதி கிட்டத் தொடங்கியது. ஸ்வாமியின் சரிதம் ஸ்வாமியின் மகிமைகள் லீலைகளைக் கேட்க கேட்க மனம் ஒரு தெய்வீக உணர்வில் ததும்பத் தொடங்கியது. ஸ்வாமியின் பழம் பக்தையான சாயிலீலா உமேஷ் வீட்டு பஜனில் அறிமுகமானார். அவர் நளாயினியின் வீட்டிற்கு வந்து தங்கியதால் ஸ்வாமியின் மகத்துவத்தையும் அற்புதங்களையும் நன்றாக உணரத் தொடங்கினார். ஷீரடிக்கும் பர்த்திக்கும் அவரோடு சென்ற போதெல்லாம் வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டன. நளாயினி சொல்கிறார்.

சாயி தரிசனம் சர்வ நிவாரணம்:

1998ல் டிசம்பர் மாதத்தில் ஸ்வாமியைப் பார்க்க  புட்டபர்த்திக்குப் போய் சேர்ந்தேன். கிறிஸ்துமஸுக்கு முன் சாயிலீலாவுடன் சென்றேன். ஸ்வாமி நேருக்கு நேராக என்னை உற்றுப் பார்த்ததும் அழுகை வந்து விட்டது. அந்த தெய்வத் திருப்பார்வைக்காக எத்தனை பேர், எத்தனை காலம் தவமிருக்கிறார்கள். வந்த முதல் தரிசனத்திலேயே அப்படி ஒரு நேத்ர தரிசனம் கிடைத்தது என் பாக்கியம். அடுத்த நாள் சோளிங்கபுரம் சென்றோம். மலையிலிருந்து ஏறி இறங்கும்போது கால் சுளுக்கிக் கொண்டு வீங்கிக் கொண்டு விட்டது. கால்வலி தாள முடியவில்லை. ஓரிரு நாட்களில் ஆஸ்திரேலியாவிற்குப் போய்ச் சேர்ந்தேன்.கால்வலி தாள முடியாமல் அதிகரித்தபடி இருந்தது.சாயிபாபா படத்தின் முன் நின்று மனமுருகப் பிரார்த்தித்தேன். அன்று கனவில் ஸ்வாமி வெண்ணிற அங்கியில் வந்து காலருகே நின்றார். அன்று காலை எழுந்ததிலிருந்து வலியே இல்லை. ஸ்வாமி கனவில் வந்து ஷணத்தில் குணப்படுத்தி விட்டார்.


திருமணத்திற்கு முன் நண்பர்களோடு ஸ்வாமியைப் பார்த்திருக்கிறார் இவர் கணவர். நீ என்னவாகணும் என்று ஸ்வாமி கேட்க 'சர்ஜனாகணும் என்றாராம். சுவாமி yes of course என்றாராம். ஸ்வாமி இவரைப் பார்த்துச் சொன்னாராம்.
'மனதில் பக்தி இருக்கு குறும்பும் இருக்கு' ஸ்வாமி இவர் கணவரை அன்போடு ஆசீர்வதித்திருக்கிறார். eye to eye சுவாமி அவரைப் பார்த்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட போது எனக்கு மட்டும் அப்படி நேத்ர தரிசனம் கிடைக்கவில்லை என்று ஏங்கிய போது கனவில் தரிசனம் தந்தார். முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கிறேன். ஸ்வாமி வந்து சற்றே குனிந்து  eye to eye என்னைப் பார்க்கிறார். அதன்பிறகு அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

ஷீரடி பயணம் புண்ணிய தரிசனம்:

புட்டபர்த்திக்குப் போய் ஸ்வாமி தரிசனம் ஆனதும் சீரடிக்கு போக வேண்டும் என்ற ஆசை வந்தது. எப்படிப் போவது இடம் தெரியாது.சாயிலீலாவோடு ஷீரடிக்குப் போய்வர வீட்டில் அனுமதி வாங்கினேன். ரயிலில் பயணமானோம். எங்களுக்கு அடுத்த கம்பார்ட்மெண்டில் சாயி பஜன் பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷீரடிமந்திருக்கு அழைத்துப் போகவும் தங்குவதற்குமாக உதவினார்கள். வழி முழுவதும் சரியாகச் சாப்பிடாமலும் அறவே தண்ணீர் குடிக்காமலும் இருந்ததால் மைக்ரேன் தலைவலி தாளவில்லை.மந்திருக்குப் போய் ஷீரடி பாபாவின் பாதங்களில் விழுந்து வணங்கும்போது முதலில் இந்தத் தலைவலியைப் போக்கிவிடு என்று பிரார்த்தித்தேன். தலைவலி பொட்டென்று போனது. அன்றிலிருந்து தலைவலி வருவதேயில்லை.சமாதி மந்திரில் ஷீரடி பாபாவை வழிபட்டு வழிபாடு நடந்து தங்கியிருந்த அறைக்கு திரும்பியபோது 'ஷீரடி லட்டு வேணுமே' என்று கேட்டுக் கொண்டே வந்தார் சாயிலீலா.என்னம்மா இங்கிருந்து திரும்பிப் போனாலும் லட்டு கிடைக்கணுமே என்றோம். 


ஷீரடி லட்டுப் பிரசாதம் வேணுமே என்றபடி என்னோடு அறைக்கு வந்தார். சற்று நேரத்தில் ஒரு கிராமத்து மனிதர் வந்து கூப்பிட்டார். சாயிலீலா வெளியில் வந்ததும் 'ஷீரடி லட்டுப் பிரசாதம்' என்று சொல்லிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார். இரண்டு பெரிய லட்டு! அயர்ந்து போனோம்!ஷீரடி சுவாமியின் நேரடியான அருட்பிரசாதம்! ஆனந்தமும் ஆச்சரியமும் என்னைத் திணறடித்தன. அடுத்தநாள் சாவடியில் போய் ஷீரடி பாபாவை வழிபட்டோம். சாவடியிலிருந்த ஷீரடி பாபாவிற்கு அழகியதொரு ரோஜா மாலை போடப்பட்டிருந்தது. அந்த ரோஜா மாலை எனக்கு வேண்டுமே என்று கேட்டார் அம்மா. எனக்கு 'திக்'கென்றது. இதென்ன ஸ்வாமிக்குப் போட்டிருக்கும் ஒரே மாலையை இந்தம்மா கேட்கிறார்களே என்று நினைத்தேன். அனேகமாக அப்போதுதான் போடப்பட்டிருக்கும் அழகிய ரோஜா மாலையைக் கழற்றிக் கொண்டுவந்து சாயிலீலாவிடம் தந்துவிட்டார் அங்கிருந்த பூசாரி. பேச்சடங்கிப் போனது எனக்கு..இதென்ன லீலை.. இதென்ன அருள்..இதென்ன பாக்கியம்..ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு விசித்திரமான அனுபவங்கள்!

சச்சரவு தீர்க்கும் சக்தி தெய்வம்:

ஆஸ்திரேலியாவில் க்வின்ஸ்லாந்திலிருக்கும் எங்கள் மருத்துவமனையில் வெண்ணிற உடையிலிருக்கும் சத்ய சாய்பாபாவின் பெரிய படமும் சீரடி பாபாவின் பெரிய படமும் வைத்திருக்கிறேன். ஒருமுறை வீட்டில் என் கணவரோடு எனக்கு(argument) வாக்குவாதம் வந்தபடியிருந்தது. வீட்டில் வேலை,மருத்துவமனையிலும் வேலை, ஏதோ ஒரு விஷயத்திற்காக... கணவர் பேசுவதும், எதிர்த்து நான் வாக்குவாதம் செய்வதும் தொடர்ந்தபடி இருந்தது.வியாழக்கிழமை யன்று சத்ய சாயிபாபா படம் ஒன்று தரட்டுமா என்று ஒரு நோயாளி கேட்டார். இவர் வீட்டில் நிறைய படங்களை வைத்துக் கொள்ளாதே என்று சொன்னாலும் இந்தப் பெரிய படத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பூஜையறையில் வாங்கி வைத்தேன். அந்தப்படத்தில் ஸ்வாமி எப்படி இருந்தார் என்கிறீர்கள். வாயின் மேல் கைவைத்து பேசாதே என்ற முக பாவத்தோடு இருந்தார். அன்றிலிருந்து எதிர்த்து வாக்குவாதம் செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டேன். பேசினால் மௌனமாக இருந்து விடுவேன். நிலைமை சரியாய்ப் போனது. ஒரே பக்கம் எழுந்து கொண்டிருந்த சத்தம் அடங்கிப் போனது.

என்னை நம்பினால் உன்னைக் காப்பாற்றுவேன்:

எட்டு வருடங்களுக்கு முன் ஒரு பேஷன்ட் என்னிடம் வந்தார். 35 வயதுப் பெண்மணி. இரண்டு பெண்கள் வருமானம் அதிகமில்லை. ஆதரவிற்கு வேறு ஆளில்லை.அவளுடைய இரண்டு கிட்னியும் வேலை செய்யவில்லை. ஒவ்வொரு வாரமும் மூன்று டயாலிஸிஸ் செய்ய வேண்டியிருக்கிறது. மிகவும் சிரமப்பட்டார்.  அவளுக்கு ஆபரேஷனுக்கான கிட்னி கிடைத்தபாடில்லை. இவள் பிழைப்பது சிரமம்.கிட்னி கிடைத்தாலும் இவளுக்குப் பொருந்த வேண்டும் என்றார் டாக்டரான கணவர்.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு மருத்துவமனையிலிருந்து அந்தப் பெண் பேசினார். அன்றைக்கு உங்களிடம் பேசிவிட்டுத் திரும்பிய போது நீங்கள் மாட்டியிருந்த Old man படம் அது யார் என்று தெரியவில்லை."If you trust me I will help you"  என் மீது நீ நம்பிக்கை கொண்டால் உன்னை நான் காப்பாற்றுவேன் உதவி புரிவேன் என்று கீழே எழுதியிருந்தது. நான் அந்த வயதானவரிடம் எனக்கு உதவி செய் என்று தீவிரமாகக் கேட்டுவிட்டுப் போனேன். வீட்டிற்குப் போன அரை மணி நேரத்தில் மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, 'கிட்னி' கிடைத்திருப்பதாக. ஆரோக்கியமான உயிருள்ள மனிதர் மூலம் வந்த தனக்குப் பொருந்துவதுமான 'கிட்னி' கிடைத்து ஆபரேஷன் நடந்து வெற்றிகரமாக 'கிட்னி' பொருந்தி விட்டது என்றார். என் கணவர் இதை நம்பவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணை நல்ல உடல்நிலையில் பார்த்தபோது அதிசயித்தேன். அந்த 'Old man'க்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.ஷீரடி பாபாவைத்தான் முதியவராகக் குறிப்பிட்டு நன்றி சொல்லிக் கொண்டிருந்தாள்.

பாடம் சொல்லும் பாபா:
 
ஒருமுறை ஸ்வாமியிடம் நின்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். இதென்ன ஓய்வு ஒழிவில்லாமல்? நாள் முழுவதும் வேலை, வீட்டிலும் வேலை.. பேசாமல் வேலையைக் குறைப்பது அல்லது வேலையை விட்டுவிடுவது என்று மனதிற்குள் எரிச்சலோடு பொருமிக் கொண்டிருந்தேன். அப்போது தோழி சுசீலாவின் வீட்டில் பழுத்த சாயிபக்தரான மோயா வந்து தங்கியிருப்பதாகக் கேட்டு அங்கே போனேன்.அநேகம் பேர் அங்கு அவரைச் சூழ்ந்திருந்தார்கள்.'ஸ்வாரா சென்ட்டரு'க்கு இந்த 80 வயதிற்கு மேலும் சென்று அவர் வேலை செய்து விட்டு வருகிறார் என்று கேட்டதும் வீட்டில் பொருமிக்கொண்டிருந்த பொருமல் எல்லாம் மூட்டை கட்டிப் போட்டேன். அமைதியாகவும் ஆனந்தமாகவும் மருத்துவமனைப் பணிகளைத் தொடர்ந்தேன்.இது ஸ்வாமி மோயா மூலம் எனக்குச் சொன்ன பாடம். அரசாங்கம் இத்தனை நோயாளிகளுக்கு இத்தனை டாலர்கள் என்று தருவது போக, நோயாளிகளிடம் தனியாகப் பணம் வாங்குவதில்லை. ஸ்வாமி எனக்கு வருமானத்திற்குக் குறை வைக்கவில்லை. பிள்ளைகளும் டாக்டர்கள். அவர்களும் ஸ்வாமியிடம் பக்தி கொண்டவர்கள். கணவர் விஞ்ஞானியாக இருந்தார். பிரசாந்தி நிலையம் கட்டிக்கொண்டிருந்த போது தானும் கட்டிடத்திற்கான கல்லை வைத்ததாகச் சொல்வார். இவருடைய அக்கா ஸ்வாமியின் பரமபக்தை. ஸ்வாமிக்கு காலை மாலை (அ) இரவு என்று இரண்டு நேரமும் வழிபாடு செய்வேன். பால் கல்கண்டு என்று அந்த நேரத்திற்கு முடிந்தது நைவேத்தியம். ஸ்வாமியை உணர்ந்துகொண்டது என் பெரிய பாக்கியம்.சாயி இலக்கியங்களை நிறைய வாசிப்பேன். ஒவ்வொரு முறை தரிசனத்தின்போதும் ஸ்வாமியை மிகவும் கிட்டத்திலே பார்த்திருக்கிறேன்.

சந்தேகம் போக்கி ஆட்கொள்ளும் நாதன்:

ஒருமுறை அதே பாபாதானா இவர் என்ற சந்தேகம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அப்போது 'Brisbane Sai Book stall"ல் ஒரு பெரிய புத்தகம் பார்த்தேன்.பர்த்தி பாபாவின் பெரிய படம் உள்ளே ஓரிடத்தில் Shiridi Sai Parthi Sai are the same'  என்று எழுதியிருந்தது. அதற்கு அடுத்த நாள் ஒரு நோயாளி ஒரு பென்டன்ட் தந்தார் எனக்கு. அது ஒருபுறம் ஷீரடி பாபா மறுபுறம் பர்த்தி பாபா போட்ட டாலர். அதைச் சங்கிலியில் கோத்து உடனே அணிந்துகொண்டேன். என் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைத்திருக்கிறார் ஸ்வாமி.
ஸ்வாமி ஹாஸ்பிடலில் சென்று சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஸ்வாமி சங்கல்பமிருந்தால் தானே அந்த எண்ணம் வரும். எண்ணம் வந்தாலே இறைவனின் அழைப்பும் வரும்.ஸ்வாமி இவருக்குள் எத்தனையோ மென்மையான மாறுதல்களைச் செய்திருக்கிறார்.இவர் மனையிலும் மருத்துவமனையிலும் வாழும் சாயிநாதனின் கருணை வளர்ந்துகொண்டேயிருக்கிறது.

ஜெய் சாயிராம்!

(முற்றும்)
ஆதாரம்: சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை 

(ஆஸ்திரேலிய சாயி பக்தர்களின் அனுபவங்கள்

தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி (கவிஞர் பொன்மணி)

வெளியீடு:
ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக