தலைப்பு

வியாழன், 16 ஜனவரி, 2020

பகவான் ஶ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் நமஸ்கார புகைப்படங்களின் பின்னணியில் உள்ளடங்கிய மாபெரும் திட்டம்!


ப்ரசாந்தி நிலையத்தில் ரேடியோ சாயி அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர் திரு அரவிந்த் அவர்களது அருமையான குறிப்புகள். அவர் ப்ரசாந்தி நிலையத்தில் சுவாமி அவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்களை (வீடியோ) பதிவு செய்து வந்தவர். மேலும் அவர்தான் சுவாமி அவர்களின் நமஸ்காரம் செய்யும் திருக்கரங்களை, ஆம் நம் உள்ளங்களை உருக்கும் புகைப்படங்களை படம்பிடித்தவரும் ஆவார்.

இறைவனின் மாபெரும் திட்டம் ( Masterplan ):

2011-ம் வருடம் ஏப்ரல் மாதம்27-ம் தேதி கண்டுணர்ந்த உள்ளத்தை உருக்கும் புகைப்படங்கள் - அந்த நிகழ்வுகளை கண்டு ஆனந்தித்த உணர்வுகள் போன்று வேறெந்த நிகழ்வும் இந்த பூமியில் நிகழவில்லை.

அவதாரத்தின் மஹாசமாதி கண்டு இந்த மனித சமுதாயத்தில் கணக்கிலடங்காத கண்கள் மனித வரலாற்றில் காணாதவண்ணம் கரைமீறிய கண்ணீர்த்துளிகளை சிந்தின. இந்த சத்யசாயி அவதார காலத்தில் இந்த அவதாரம் நமஸ்காரம் செய்யும் காலப்பொழுதில் அதைக்கண்ட அனுபவம்  அனைவரின் உள்ளங்களை சுத்திகரிக்கும் அனுபவமாகவும், சுற்றியிருந்த அனைவரது கண்களிலும் தூய்மையான, சுயநலமற்ற, அன்பு சொரிந்த மற்றும் நன்றிப் பெருக்குடனான உணர்வுகளுடன் கூடிய கண்ணீர்த்துளிகள் வழிந்தோடி அச்சூழலலானது அமையப்பெற்றது.

திரு. அரவிந்த் பாலசுப்பிரமணியா எடுத்த நமஸ்கார புகைப்படங்கள் 

அக்காட்சியைக் கண்டு பேறுபெற்ற மனிதர்கள் முன்னர் செய்திருந்த அத்தனை பாவங்களும் அந்த நிகழ்வினால் துடைத்தெறியப்பட்டன. பகவான் ஶ்ரீ சத்யசாயி பாபா அவர்களது மஹாசமாதி பற்றி நிறைய எழுதப்பட்டிருந்தாலும் அவற்றிற்கெல்லாம் மேலாக அவரது வரலாறு எழுதப்பட வேண்டியுள்ளது. இருப்பினும் அதுபற்றி சிறிதளவில் பகிர்ந்து கொள்வதற்கு நான் சிந்தித்தவை சில துளிகள் மட்டுமே.

ப்ரார்த்தனைகளின் பலன்கள்/வலிமை இவ்வுலகில் ஆச்சரியம் அளிக்கும் பலன்களை வழங்கியுள்ளன. 'சாயி' எனும் பெயரானது கோடானுகோடி இதயங்களை முழுமையாக ஆக்கிரமித்து குடிகொண்டுள்ளது. பஜனைகள், சேவை நடவடிக்கைகள் மற்றும் ஆன்மீக சாதனைகள் ஆகியவை இது வரை இந்த பூமியில் நிகழ்ந்திராத விகிதத்தில் துடிப்புடனும் சுறுப்புடனும் நடைபெற்று வருகின்றன.

வெளிப்படையாகக் கண்டுணரக்கூடிய அனைத்து சிறந்த மனிதர்களும் சிறப்பான இயந்திரங்களும் அவரது குணப்படுத்தும் ஆலயத்தில் இரவும் பகலும் தொய்வின்றி பணியாற்றினார்கள். அவரது பேரன்பிற்குரிய அவரது மாணவர்கள் அவரது மூச்சுக்காற்றின் ஒவ்வொரு அசைவின் அர்த்தத்தையும் உணர்ந்து அதன்படி அவரது வழியில் செயல்பட்டனர். சுவாமி அவர்களின் ஒவ்வொரு பக்தருடைய சீரிய, பெரிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கூட்டுமுயற்சியிலான வாழ்க்கை கண்டு நம்மை செயலற்றவர்களாக மாற்றும் அளவிற்கு அதிசயப்பட வைத்தது. அதன்பின்னர் சுவாமி அவர்கள் மஹாசமாதி அடைந்தார்.

இந்த எண்ணம் எப்போது உதித்தது எனில் ப்ரார்த்தனை என்பது நாம் கடவுளிடம் எதையேனும் கேட்டுச் செயல்படும் செயல் அல்ல என்றும் அமைதியாக கடவுளுடன் இணைப்பை/தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதுதான் என்பதை உணர்ந்துகொண்ட அந்த தருணம்தான். நாம் எப்போது கடவுளிடம் எதையேனும் கேட்கவோ அல்லது கூறவோ செய்கிறோமோ, அப்போது அவரைவிட நமக்குத்தான் அதிகம் தெரியும் என்று முற்றிலும் முட்டாள்தனமாக முடிவுசெய்து கொள்கிறோம்.

சுவாமி அவர்கள் நம்மிடம் அடிக்கடி கூறுவது இரண்டு விவசாயிகள் பற்றிய கதை - ஒரு விவசாயி தமது பயிர்கள் செழிப்பதற்கு மழைவேண்டி ப்ரார்த்திக்கும் அதே தருணத்தில் மற்றொரு விவசாயி தனது மகளின் திருமணம் மழைபெய்து தடைபட்டுவிடும் என்பதால் மழை பெய்யக்கூடாது என ப்ரார்த்திக்கிறார். இவர்களின் எந்த ப்ரார்த்தனைக்கு இறைவன் செவிசாய்ப்பது?

யார் அதிகம் கண்ணீர் சிந்துகிறாரோ அவர்கள் அவர்கள் பக்கம் செவிமடுப்பதா? அல்லது யார் அதிக ஏக்கத்துடன் ஆவல் கொள்கிறாரோ அவர்கள் பக்கமா? கடவுள் வயதுக்கு முன்னுரிமை/முக்கியத்துவம் அளிப்பாரா? அல்லது தகுதி மற்றும் செல்வாக்கு இவற்றிற்கா?

ஆமாம், யார் தன்னை முழுமையாக நேசிக்கிறாரோ அவர்கள் பக்கம் இறைவன் செவிசாய்ப்பார். அத்தகைய நபர் யார்? இயற்கையாகவே எவரொருவர் தன்னை இறைவனின் விருப்பத்திற்கு ஒப்படைத்து விட்டாரோ அவரே அந்த நபர். எப்பொழுது ஒருவர் தன்னை கடவுளின் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறாரோ, அதுதான் உச்சபட்ச அளவிலான ப்ரார்த்தனையாக அமைந்துவிடுமே! ப்ரார்த்தனை என்பதன் அர்த்தத்தை, இறைவனுடன் எப்போதும் தொடர்பில் உள்ள ஒருவரது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதாக எண்ணி தவறாகப் புரிந்துகொள்கிறோம். உண்மையில் அத்தகைய நபர் தனது இறைவன் ஏற்கெனவே நிச்சயம் செய்துள்ள விசயங்களுக்காகவே ப்ரார்த்தனை செய்து கொள்கிறார்.

பகவானுடன் சாயி மாணவர் திரு. அரவிந்த் பாலசுப்பிரமணியா

இது நிச்சயமாக, முற்றிலும் வித்தியாசமான சிந்தனை. எனது ப்ரார்த்தனை நிறைவேற்றப்பட்டால் அதற்கு காரணம், நான் இறைவனுடன் தொடர்புகொண்டு இணைப்பில் இருந்ததுதான். எனது ப்ரார்த்தனை நிறைவேறாவிடில், நான் இறைவனுடன் இணைப்பில் இல்லை; ஆகவே நான் அவருடன் இணைப்பில் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

நாம் நமது சில உள்ளக்கிளர்ச்சியினால் கற்பனையாக முடிவு செய்வது நமது அனைவரது அனுபவமாகவும் உள்ளது.இத்தகைய அவசரகதி தெளிவாகப் புரிந்து கொள்ளச் செய்கின்றன. நாம் எப்போது இறைவனுடன் தொடர்புகொள்கிறோமோ அந்த சமயங்களில் இவை ஏற்படுவதை அறிந்துகொள்ள வேண்டும்.

எப்போது எனக்கு இத்தகைய உள்ளக்கிளர்ச்சியான உணர்வுகள் என்னுள் தெளிவாகப் புரிந்துகொள்ளச்செய்ததோ அப்போது நான் இறைவனை அனுபவிக்கும் அதிசயத்தை உணர்ந்துள்ளேன். நான் அவரை காண்கிறேன், அவரது குரலைக் கேட்கிறேன், அவரது ஸ்பர்சத்தை உணர்கிறேன்; மேலும் அவர் என்னுடன் பேசுகிறார். நான் இந்த ஆச்சர்யத்தை உணர முடிகிறது, ஏனெனில் நான் அவரது திட்டத்தை அறிவேன். அந்த விலைமதிக்கமுடியாத நிகழ்வுகளுக்காக நான் இறைவனுடனான இணைப்பில் என்னை இருத்திக்கொள்ள இயலும் என்பதால் அவரது திட்டத்தினை நான் அறிவேன்.

அதன் காரணமாகவே சுவாமி அவர்கள் தனது மஹாசமாதி பற்றி குறிப்பளித்த சில நிகழ்வுகள் கண்டு என் வாழ்வில் நான் அமைதியை உணர்ந்தேன். இவையனைத்தும் அவரது மாபெரும் திட்டத்தின் ( Master plan ) ஒரு பகுதி என்பதை அறிந்துகொள்ளும்போது மிக்க ஆச்சர்யத்தை உணர்ந்தேன். எனது நாட்குறிப்பில் ( டைரியில் ) சில மாதங்களுக்கு முன்னர் நான் கண்ட கனவினை பதிவு செய்துள்ளதன் வாயிலாக சுவாமி அவர்கள் விரைவில் விடைபெறவுள்ளார் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதைக் கண்டுணர்ந்தேன்.

ஒருவர் தனது நரைமுடிக்கு வர்ணம் பூசிக்கொள்வது போல அல்லது தனது ஒரு பல்லை இழந்த ஒருவர் செயற்கைப்பல் மூலம் சரிசெய்து கொள்வது போல நானும் கனவு குறித்த எனது அறிவின் வாயிலாக எனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். அதன்பின்னர், சுவாமி அவர்கள் இந்த அதிமுக்கியமான, உள்ளத்தை உருக்கும் வகையிலான குறிப்பினை அளித்தார்.

பகவானின் கடைசி தரிசன வீடியோ

அந்த நிகழ்வு மார்ச் மாதம்20-ம் நாள் நிகழ்ந்தது. சுவாமி  அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றே சொல்லவேண்டும். சுவாமி அவர்களது தரிசனம் வழக்கமான வழிகளில் இருந்து விடுபட்டு விரைவாக நிறைவுபெற்றது. மேலும் அன்றைய தினம் சுவாமி அவர்கள் தரிசனத்திற்காக இரண்டு முறை சுற்றி வந்தார். ஆசீர்வாதம் பெறுவதற்காக அமர்ந்திருந்த அனைத்து மாணவர்களையும் அழைத்து, அவர்களது தலையில் அட்சதை தூவி வாழ்த்தினார். ( அன்றைய தினம் சுமார் 40 மாணவர்கள் சுவாமி அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டனர் ).

சுவாமி இனிப்புகளை விநியோகம் செய்து அங்கிருந்த அனைவரிடமும் கருணையுடன் தன் புன்சிரிப்பை வீசினார். மேலும் அங்கிருந்த தொடக்கப்பள்ளி மாணவச்சிறுவர்களையும் அழைத்து ஆசீர்வதித்தார். மூத்த பாடகர் ஒருவர், "சுவாமி இன்று அதிக உற்சாகமாகக் காணப்படுகிறார்" என்று கூறினார். அந்த தரிசனம் பெருமகிழ்ச்சி அளித்தது. நாங்கள் ஆரத்தி எடுத்துக்கொண்ட சமயம் சுவாமியின் கைகள் ராகத்தடன் தாளம் தட்டியது கண்டு அனைவரும் ஆனந்தித்தோம். அப்போதுதான் அது நிகழ்ந்தது.....

"சமஸ்த லோகா" ஸ்லோகம் காற்றை நிரப்பிய அத்தருணத்தில் சுவாமி அவர்கள் தமது திருக்கரங்களை உயர்த்தினார். ஆனால் அது ப்ரசித்தி பெற்ற அபயஹஸ்தமாக இல்லை. சுவாமி அவர்கள் தமது உள்ளங்கைகளை வணக்கம் தெரிவித்து கைகுவித்திருந்தார். "இறைவன் அனைவருள்ளும் இருக்கிறார் என்பதால் அனைவருக்கும் வணக்கம்" என்னும் அழகிய செய்தியை அளிப்பதாக அது காணப்பட்டது. "சகஸ்ர ஸீர்ஸ புருஷ" என்னும் வேத மந்திரம் என் இதயத்துள் ஒலித்தது. (மேற்கண்ட ஸ்லோகம் இறைவன் ஆயிரம் கைகளை உடையவர் என்றும் ஆயிரம் தலைகள் மற்றும் உறுப்புகளை உடையவர் என்றும் கூறுவது இறைவன் அனைத்திலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைத்தான் கூறுகிறது).ஒருவர் தமது பயணம் முடிந்தபின் விடைபெறுவது இந்த பாரதீய கலாச்சாரத்தில் மட்டுமே உள்ளது.

சுவாமி அவர்கள் தமது மஹாசமாதியை உணர்த்திய விதம் கண்டு நான் புல்லரித்து எனது உடல் முழுதும் குலுங்கியது. ஆனால் நான் அதைக் கண்டுகொள்ளவில்லை. சுவாமி அவர்கள் க "பாஸ்யான் அபி ந பாஸ்யதி மூடோ" ( ஏய் முட்டாளே! நீ பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி ) என்று கூறியுள்ளார். அதுதான் நியதி. ஆனால் நான் அன்றைய தினத்தில் புகைப்படங்களை மட்டுமே படம்பிடித்தேன்.

இன்று அந்த படங்களை கண்ணுறும் பொழுதில் சுவாமி அவர்கள் தமது திட்டங்களைப்பற்றி அறிந்துள்ளதாகத் தெளிந்து மனச்சுமை/மனக்குழப்பம் நீங்கி ஆனந்தமாக உணர்கிறேன். மேலும் சுவாமி ஆரோக்கியமாக இருந்த சமயங்களிலும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு ஒருவாரம் முன்பு வரையிலும் சுவாமி அவர்கள் தமது தீர்மானம்/சங்கல்பம் பற்றி நமக்குத் தெரிவித்திருந்தார்.

சுவாமி அவர்கள் நமக்கு இந்த தீர்மானம்/சங்கல்பத்தைப் பற்றி தெரிவித்துள்ளதன் மூலம் நம்மீது அவருக்குள்ள எதிர்பார்ப்புகளையும் அவர் தெரிவித்துள்ளார். நமது வாழ்க்கையே அவரது செய்தியாக அமையவேண்டும் என சுவாமி அவர்கள் ஆவல் கொண்டுள்ளார். சுவாமி அவர்கள் எவ்வாறு அனைத்திலும் தம்மைக் கண்டாரோ அதேபோன்று நாமும் நம் அன்புக்குரிய சுவாமியை அனைத்திலும் காணவேண்டும் என்பதுதான் அவரது ஆசீர்வாதங்களின் முத்தாய்ப்பான நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. சுவாமி அவர்கள் அனைத்திலும் கீழ்படிதலைக் கடைப்பிடித்தது போல, நாமும் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நமது சுவாமியிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ள வேண்டும். சுவாமியைப் போலவே நாமும் அனைவரையும் நேசித்து அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும்.

மேலும் அன்றைய தினத்தில் சுவாமி அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆசிகள், உள்நோக்கம் மற்றும் அனுபவம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதற்காக வேண்டி, நான் பின்வரும் ஐந்து புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நாம் நமது வாழ்வில் அனைத்திலும் தூய அன்பு செலுத்த வேண்டும் என்ற சுவாமியின் செய்தியினை மனதில் இருத்தி பிரதிபலிக்கச் செய்வோம் என்று சுவாமியிடம் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். கண்ணீர்த்துளிகள் என் கன்னங்களின்வழியே வழிந்தோடும்போது, ஒரு உறுதியான தீர்மானம்/முடிவு என் குருதியினுள் ஊடுருவிப் பரவிச் செல்கிறது - 'அனைத்திலும் நிறைந்துள்ள சுவாமியைக் கண்டுணர்ந்து, அனைத்திலும் உள்ள சுவாமியை நேசித்துக்கொண்டேயிருப்பது'

ஆதாரம்: https://aravindb1982.blogspot.com/
தமிழாக்கம்: M.சொக்குசாமி பாலசுப்பிரமணியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக