தலைப்பு

புதன், 15 ஜனவரி, 2020

சாதகனுக்கு சாத்வீக உணவு மிகச் சிறந்தது!


ஒரு சாதகன் விலங்குணவு உண்ணலாகாது. அவ்வாறுண்பதால், விலங்குணர்வுகளைப் பெறுகிறான். ஆடுகள், கோழிக்குஞ்சுகள், பன்றிகள் போன்ற பிராணிகள் குரல் வளை அறுத்துக் கொல்லப்படுகின்றன. இது பாவமான காரியம். கொல்லப்பட்ட விலங்குகளின் மாமிசத்தை ரசித்து உண்பவர், அதைக் கொன்ற பாவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

குரல் வளையை அறுக்கும்போது விலங்குகள் கதறுகின்றன. தன் சாவுக்குக் காரணமாக இருப்பவர்களை அவை சபிக்கின்றன. இந்த சாபம், அதன் மாமிசத்தை ரசித்து உண்பவர்களையும் பீடிக்கிறது. எந்த ஜீவராசிக்கும் அழுவதும், இயற்கைக்கு விரோதமான சாவுக்குக் காரணமாக இருப்பவரைச் சபிப்பதும், பொதுவான இயற்கை சுபாவம். இறந்த உடலை அனுபவிக்க, மக்கள் அவைகளை சாகக் கட்டாயப்படுத்துகிறார்கள். பெரிய விலங்கு, சிறிய பிராணியை அடித்துக்கொல்வது மிருகத்தின் பிறவிச்சுபாவம். இது விலங்கு உலகத்தில் அனுமதிக்கப்படுகிறது.


உதாரணமாக, ஒரு புலியோ, சிங்கமோ, மற்றொரு விலங்கை பசி காரணமாக அடித்துக் கொல்கிறது. இது அவற்றின் சுபாவம். இந்த சுபாவம் மனிதனுக்குப் பொருத்தமானதல்ல. சில மிருகங்கள் பிறவியிலேயே சாக பட்சணிகள். யானை, விலங்குகளில் மிகவும் வலிமை வாய்ந்த காண்டாமிருகம் போன்றவை சாக பட்சணிகள். அனாதி காலந்தொட்டு அவை சாக பட்சணிகள். அவ்வாறே இன்றும் இருக்கின்றன. சில சமயங்களில் அவைகளுக்கு உணவு கிடைக்காது. அப்போது அவை பட்டினி கிடக்கத் தயாராக இருக்கின்றன. ஆனால் தம்மை மாமிச பட்சணிகளாக மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் மனிதனோ, ஜீவராசிகள் அனைத்திலும் மிகுந்த சுயநலம் உள்ளவன். சௌகரியத்திற்கு தகுந்தாற்போல் தன் பழக்கங்களை மாற்றிக் கொள்கிறான். சுபாவத்தில் அவன் சாகபட்சணியேயாவான். குரங்குகள் எல்லாம் சுபாவத்தில் சாகபட்சணிகளே. ஆனால் மனிதன், மனவுறுதி இல்லாததாலும், பட்டினி கிடக்க விரும்பாததாலும் உணவுக்காக விலங்குகளை கொல்லத் தொடங்கினான். இறைவன் கொடுத்த அறிவை மனிதன் துஷ்பிரயோகம் செய்கிறான். அவனது அறிவு குதர்க்கமான செயல்களைச் செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இத்தகைய விபரீத செயல்களின் விளைவை அவன் நேரில் சமாளித்தே ஆக வேண்டும்.

சாதகனுக்கு சாத்வீக உணவு மிகச் சிறந்தது. வேரிலிருந்து கிடைக்கும் உணவை விலக்குவது நல்லது. பசும் இலைகளை, அவற்றில் கனிமச்சத்து(minerals) இருப்பதால், அதிகம் உட்கொள்ள வேண்டும்.

ஆதாரம்: சாயி அருளமுதம் கொடை - 1994
(தொகுக்கப்பட்ட அருளுரைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக