தலைப்பு

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

சன்யாசிகள் உணர்ந்து கொண்ட ஸ்ரீ சத்ய சாயி இறைவன்!


கலியுகத் தன்மை கண்டு கீழிறங்கிடும் இறை அவதாரம் எளியவருக்கு எளியவராய் தன் தனிப்பெரும் கருணையால் நடமாடுகிறது... ஆகச் சிறந்த எதார்த்தத்தையும்... பரிபக்குவத்தையும்... சராசரிகளுக்கான சமத்துவத்தையும் தானே வாழ்ந்து காட்டியபடி பேரிறை அவதாரமாகிய சுவாமி போதிக்கிறார்... அப்படி இருக்கையில் எவ்வாறு சுவாமி தூயத்துறவுக்கு மரியாதை கொடுத்து...‌தன் இறைப்பெருந்தன்மையை உணரச் செய்தார் என்பது பரவச அனுபவமாய் இதோ...!

1957ல் வேங்கட கிரியில் நிகழ்ந்த மிக கோலாகலமான ஒன்பதாவது அகில இந்திய தெய்வீக வாழ்வு சங்கத்தின் மாநாடு நடை பெற்றது...

ரிஷிகேஷ் சிவானந்தா சுவாமிகளின் முதன்மை சீடர்களான சதானந்தா... சச்சிதானந்தா.. ஸ்ரீநிவாசானந்தா... ஆத்ம ஸ்வரூபானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.. பல திசைகளிலிருந்தும் சாதுக்கள் .. சந்நியாசிகள் வந்திருந்தனர்..
தனக்கு பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட வரவேற்பு பல்லக்கையும் மறுத்து சாதுக்களோடு நடந்தே மாநாட்டிற்குள் நுழைந்தார் சாது ஜன போஷகரான இறைவன் சத்ய சாயி.



மாநாடு நிறைவுற்ற பிறகு சுவாமி புட்டபர்த்திக்கு திரும்புகையில்... சச்சிதானந்தரும்.. சதானந்தரும் உடன் சென்றனர்...
இறைவனோடு பயணித்து இறைவனோடே தங்கித் தவமுறும் பரம பாக்கியம் அது.


1957 ஜுன் 29 அன்று புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் தியான சாதகர்களுக்கான வட விருக்ஷம் (தியான ஆலமரம்)  பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அத் திருக்கூட்டத்தில் கலந்து கொண்டு சச்சிதானந்த சுவாமிகள் உரையாற்றினார்...


பகவான் சத்ய சாயியை தனிப்பட்ட வகையில் உள் அனுபவம் பெற்றதை "இறைமை எனும் பிரபஞ்ச விழிப்புணர்வே இங்கே ரூபம் எடுத்து வந்திருக்கிறது" எனவும்... "சகல ஜீவன்களின் உள்ளார்ந்த ஆற்றலும்.. எங்கும் நிறைந்த தன்மையும் ... எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்த பரம்பொருளும் இவரே" என சச்சிதானந்த சுவாமிகள் உரையாற்றினார்.

உரையாற்றுவதோடு நின்றுவிடாமல்.. சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் சதானந்தரும் சேர்ந்து தங்களின் ரிஷிகேஷ் குருவான சிவானந்தருக்கு கடிதமும் வரைந்தனர்.

சகல மதமும் ஒன்றெனும் சத்திய தத்துவத்தை சுவாமி ஒரு வெளிநாட்டு கிறிஸ்துவருக்கு சிலுவை மற்றும் அவர்கள் வழிபாட்டு ஜபமாலையை சிருஷ்டி செய்து விவரித்ததைக் கண்டு வியந்து  உணர்ந்தனர்.

மேலும் கன்னியாகுமரி கடற்கரையில் இறைவன் சத்ய சாயி அழகு காவி அன்னமாய் நடந்ததில் கூட நடந்த பாக்கிய ஆத்மாக்களாக இரு துறவியரும் மாறினர்.


சுவாமி பாதங்களில் 84 முத்துமணிகள் அந்த இந்து மகா சமுத்திரம் தனது  அலை உடம்பால் சரணாகதி அடைந்து அளித்தது..

சுவாமி மீண்டும் எண்ணச் சொல்ல .. அவை 108 ஜப மணிகளாய் மாறிப் போயிருந்தன...
அதை உள்ளங்கையில் தாங்கிய பரம்பொருளான சத்ய சாயி அதை ஜப மாலையாக்கினார்.


அந்த மாலை.. அந்த மாலை ... சதானந்த சுவாமிகளுக்கு நம் சுவாமி அருளுவந்து வழங்கினார்.

ரிஷிகேஷ் சிவானந்த சீடர்களின் தவப் பயன் அவர்கள் அடைந்த பாக்கியமும்... பெரும் வரமும்...
அவர்கள் அமைப்பான தெய்வீக வாழ்வு சங்கம் ஸ்ரீ சத்ய சாயி தெய்வத்தை அடைந்து பெயருக்குத் தகுந்தாற் போலவே மிக அர்த்தமாய் மாறியது.

தமிழில் தொகுத்தளித்தவர் : வைரபாரதி

1 கருத்து: