இதில் ஒரு விதச் சந்தேகமும் இல்லை. யோகசாதனை, பிரணாயாமம், தவம் ஆகிய வழிகளில் பலவிதத் தடங்கல்கள் இருக்கின்றன. ஆனால் ஜபம், தியானம், நாமஸ்மரணம் ஆகியவற்றில் எவ்வித தடங்கலும் இல்லை. முன்பு கூறிய சாதனைப் பயிற்சியில், மதம், சாதிக்குத் தக்கவாறு பயிற்சிகள் மாறுபடுகின்றன. நாம சாதனையில் அத்தகைய வேறுபாட்டின் சுவடு சிறிதும் இல்லை. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு பல விஷயங்களில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆண்டவனின் பெயரைப் புகழ்வதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. ஒவ்வொரு மொழியிலும் ஆண்டவனின் பெயர் வேறு வேறாக இருந்தாலும், கடவுளின் பெயரையே ஒவ்வொருவரும் உச்சரிக்கிறார்கள்.அவரவர் மத ஆசாரத்தின்படி அவரவர் ஜபமாலையை உருட்டுகிறார்கள். ஆனால் எல்லா மதங்களிலும், அவரவர் வழியில் பயிலும் ஜபம், தியானம், நாமஸ்மரணம் போன்ற சிறந்த மார்க்கம் வேறெதுவுமில்லை.
ஆண்டவனின் பெயரும் உருவமும் ஒன்றே. என்றாலும் பெயரில் உள்ள இனிமை உருவத்தில் இல்லை.'ரோஜா' என்ற பெயரை நினைக்கும் போது அதன் நறுமணம், மென்மையான இதழ்கள், அதன் ஆழ்ந்த நிறம் இவைகள் நினைவுக்கு வருகின்றன. அப்போது அதைப்பறிக்கும்போது உள்ள துன்பமும், lஅதன் முட்களும் நினைவுக்கு வருவதில்லை. இதற்கு மாறாக அதன் மூலம் பழைய நிலை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, செடி, இலைகள், கிளைகள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் ரோஜாவின் மிக முக்கியமான அழகிய, வசீகரமான மலர் மறக்கப்பட்டு, தாவரத்தை பற்றிய விவாதமே நடைபெறும். அதேபோல மாம்பழத்தைப் பற்றிக் கூறும் போது, அதன் இனிய சுவை மனக்கண்ணில் தோன்றுகிறது. ஆனால் அதே மாம்பழம் கையில் இருக்கும் போது முதலில் அது இனிக்குமா துவர்க்குமா என்ற சந்தேகம் வருகிறது. அதன் தோல்,நார், கொட்டை, சாறு, விதை இவற்றை ஆராய்ச்சி செய்யத் துவங்குகிறோம். பேரை மட்டும் கூறும் போது, மற்ற எண்ணங்கள் மனதுக்கு வருவதில்லை. இதுவே ஆண்டவனுக்கும் ஆண்டவனின் பெயருக்கும் உள்ள வித்தியாசம்.பெயரில் தேவாமிர்தச் சுவை இருக்கிறது. உருவத்தில் நமக்கு உயரிய மரியாதை இருந்தாலும், ஒருவித பயமும் இருக்கிறது. சில சமயங்களில் பயத்தைத் தரும் சில அம்சங்கள் வெளிப்படவும் வாய்ப்பு உண்டு. வேறொரு கண்ணோட்டத்தில், உருவத்தை விடப் பெயரையே அதிகம் நாட வேண்டும் என்பதற்கு இன்னொரு காரணம் உண்டு.பெயர் என்னும் செல்வத்தாலேயே உருவம் என்னும் பொருள் அடையப்படுகிறது. உலகில் எப்பொருளையும் வாங்க செல்வம் தேவைப்படுகிறது. ஆகவே கிடைக்கும் பொருளை விட,பணம் உயர்ந்ததல்லவா? பணத்தைக் கொண்டு எந்தப் பொருளையும் எந்நேரத்திலும் வாங்கலாம்.ஆகவே பெயர் என்ற செல்வத்தை விடாமல் சேர்த்துக் கொண்டே இருந்தால், கடவுளை தியான வழியில் சுலபமாகவும், கஷ்டமில்லாமலும் அடையலாம்.
நாமஸ்மரணையைப் பற்றி மற்றொரு முக்கிய அம்சம் உள்ளது. யோகம், தபஸ் மூலமாக சித்திகளை அடையக்கூடும். அப்போது, கடவுளை மறப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம். இவை கிடைத்த கர்வத்தால் மனம் குருடாகி, ஒருவன் சாதனைகளால் கிடைத்த அடிப்படை வெற்றியையும் விட்டு விடக் கூடும்.நாமஸ்மரணை,ஜபம்,தியானம் இவற்றால் இந்த ஆபத்து இல்லை.ஜபம், தியானம், நாமஸ்மரணம் இவை மூன்றும் மனிதனிடம் பிரேமையை வளர்க்கின்றன.பிரேமை மூலம், சாந்தி (அமைதி) கிட்டுகிறது. சாந்தி கிடைத்ததும், மற்ற எல்லாம் தன்னால் வந்தடைகின்றன. யோகத்தின் மூலமாக, தபஸின் மூலமாகக் கிடைப்பது மிக்க அதிக ஆற்றல்; நாமஸ்மரணம், ஜபம், தியானம் மூலமாகக் கிடைப்பது மிக்க அதிகமான பிரேமை. இதுவே வேறுபாடு.
கண்டவர்களிடம் இவற்றைப் பற்றி விவாதிக்காமல், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரவர் பாதை தான் சிறந்தது என்ற எண்ணம் உண்டு. வேறு வழியைப் பின்பற்றும் ஒருவரை நாம் கலந்து ஆலோசித்தால், அவர்கள் இந்தப் பாதைகளைக் கண்டித்து, இவற்றை மரியாதைக் குறைவாக நடத்துவார். அதுமட்டுமல்ல, இவற்றைக் கடைப்பிடிப்பவர் ஆரம்ப நிலையில் இருப்பதாக மற்றவர் கருதலாம். அதனால் சாதகர்களுக்கு இவைப் பற்றி சந்தேகங்கள் வரத்தொடங்கும். அதன் பயனாக முன்பு ஆனந்தம் அளித்த சாதனைகள் இப்போது கவலையைக் கொடுக்கும்;முன்பு அன்பை அதிகரித்த சாதனை இப்போது அருவருப்பைக் கொடுக்கும். ஆகவே இவற்றுக்குள் எது அதிக இனிமை தருவது என்பதை நீயே உனக்குள் சோதனை செய்து பார். அல்லது நாமத்தின் இனிமையை அனுபவித்தவர்களை அணுகி, அனுபவங்களின் விவரங்களைக் கேட்டறிந்து கொள். கண்டவர்களிடம் இதுபற்றி விவாதிக்க வேண்டாம். அந்த நேரத்தை நாம ஜபம் செய்வதிலும் ரூபத்தியானம் செய்வதிலும் செலவிட்டு அதன்மூலம் ஆனந்தத்தை அனுபவி. இவற்றில் எது சிறந்தது என்பதைக் கணக்குப் போட்டுக் கொண்டே இருந்தால், இதுவரையிலும் கிடைத்த பயனையும் இழந்து விடுவாய். சாதனையில் தேர்ச்சி பெறும் வரையில், நாமத்தை இடைவிடாமல் மனதிற்குக் கொண்டுவந்து, தனியாகவோ பக்தர்களின் கூட்டத்திலோ மனம் சிதறாமல் உறுதியுடன் கூறிக் கொண்டே இரு. பிறகு எதுவும் உன்னைத் தடுத்து நிறுத்த முடியாது. உதாரணமாக மீன், முட்டை பொரித்ததும் தன் குஞ்சுகளை சிறிது காலம் குட்டையில் நீந்தச் செய்து, பிறகு அலைபாயும் கடலில் பெரிய பிராணிகளுக்கு இடையில் நீந்தும்படி தள்ளி விடுகிறது. அங்கே அவைகள் தைரியத்துடன் பிழைத்து,பயமில்லாமல் வளர்கின்றன. ஆனால் இந்த சிறிய மீன்கள் பிறந்த உடனேயே கடலில் சென்றால், அங்கிருக்கும் பெரிய மீன்களுக்கு இரையாக நேரிடும். அதைப்போல நாமஸ்மரணம், ஜபம், தியானம் இவற்றைக் குறித்த காலத்தில் தினமும் பயிற்சி செய்ய வேண்டும். மற்றவரிடம் விவாதிக்க வேண்டாம்.
இப்போதெல்லாம், பலர் நாமஸ்மரணையை விட்டுவிட்டு, யோகத்திலும், பிரணாயாமத்திலும் கவனம் செலுத்துகிறார்கள். இவற்றைச் செய்வதில் பல அபாயங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி கற்பதிலும் பல இடையூறுகள் உள்ளன.அப்படி கற்றாலும், அவைகளின் பலன்களைக் காப்பதில் இன்னும் அதிகமான இடையூறுகள் உள்ளன. உதாரணமாக ஒருவன் மீன்வலையைத் தரையில் விரித்துவிட்டு தண்ணீரில் தேடினால், வலையில் மீன் விழுமா?நாமஸ்மரணம் செய்யும் பயிற்சியில் ஈடுபடாமல் யோகத்திலும் தபஸிலும் நேரத்தைச் செலவழிப்பது, மீன் வலை தரையில் இருக்க, மீனைப் பிடிக்க முயற்சி செய்வது போலாகும். நாம ஜபத்தை ஒருவரது துணையாகவும் புகலிடமாகவும் கொண்டால்,ஆண்டவனை இன்றில்லாவிடில் நாளையாவது அறிந்துணரலாம். ஒரு பொருளின் பெயர் தெரிந்தால், அப்பொருளை அடைவது சுலபம். ஆனால் பொருளின் பெயர் தெரியவில்லை என்றால், அப்பொருள் ஒருவரின் முன் இருந்தாலும் அதை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. ஆகையால் நாமத்தை இடைவிடாது,தயக்கமில்லாது கடைபிடியுங்கள்.நாமஜபத்தின் மூலம், பிரேமை வளர்கிறது.பிரேமை மூலம், கடவுட் தியானத்தைப் பயிற்சி செய்ய முடியும். பிரேமை உனக்குள் ஆழமாக வேர்மூலங் கொண்டால், பிரேமையினால் ஆக்கப்பட்ட இறைவன் உன்னுடையவர் ஆகிறார். ஆண்டவனை அடையும் வழிகள் பலவாக இருந்தாலும்,இதைப் போன்ற சுலபமான வழி வேறொன்றுமில்லை.
ஆதாரம்: தியான வாஹினிl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக