தலைப்பு

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | கிருபானந்த வாரியார் சுவாமிகள்


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்:

எல்லாம் வல்ல வயலூர் எம்பெருமானின் எம்பெருமான் சத்ய சாயி சர்வேஷ்வரனின் தனிப்பெருங்கருணையினாலே ஆட்கொள்ளப்பட்ட மகானான அடியார் யார்?

அறத்தை வாரி.. அருந்தமிழை வாரி.. யார் தருவார்?

வாரி யார் தருவார்?
வாரியார் தருவார்!

முத்தமிழால் முக்கி எடுத்த வெளி நாக்கு..
வேத புராண இதிகாசங்களால் தோய்ந்த உள் நாக்கு...
விபூதி மலர்ந்த குங்கும இதழ்.. குழந்தை வடிவ ஞான சம்பந்தன் எழுந்து நடப்பதான குரல்...
மாணிக்க வாசக இதயம்.. அப்பரின் முதுமை.. சுந்தரரின் புன்னகை ...
இதுவே கிருபானந்த வாரியார் சுவாமிகள்...

குருவை உச்சரித்த இவரின் வாய் குருவாய் ஆனது பலருக்கு.

இறைவன் சத்ய சாயி காரணமின்றி யாரையும் படைப்பதில்லை...

ஒருவன் எப்படி உருவாக வேண்டியது சாயி சங்கல்பமோ அவனை அதன் படி அந்தந்த சூழலில்.. அந்தந்த குடும்பப் பின்னணியில் பிறக்க வைத்து வளர்த்து எடுப்பது சுவாமி திருச்செயல்...

வாரியார் சுவாமிக்கும் அடியேனுக்கும் ஆத்ம பந்தம் அதிகம்..
ஒருவயதுக் குழந்தையான அடியேனை இல்லம் வந்து ஆரத் தழுவி மடி அமர்த்தி முருகனின் குழந்தை என அடியேனை உச்சி முகர்ந்து  ஆசி வழங்கியது அடியேனுக்கான இப்பிறவிக்குக் கிடைத்த முதல் பிறந்த நாள் பரிசு..

காரணம் அடியேனின் தந்தை திரு.முத்துக்குமார் முருக பக்தர்.. வாரியார் சுவாமியின் தீவிர அபிமானி..

வாரியார் சுவாமியின் மடியில் அடியேன் வைரபாரதி | வாரியார் சுவாமி களுடன் என் தந்தையார் திரு. முத்துக்குமார்

பிற்காலத்தில் வாரியார் சுவாமி போல் இறைவன் சத்ய சாயியே தான் வணங்கும் முருகன் எனவும் உணர்ந்தவர்.

இப்படி உணர்ந்தவர்கள் பலர்.

நதிகள் கடலோடு சங்கமிக்கின்றன..
விதிகள் பிரபஞ்சத்தோடு சங்கமிக்கின்றன..
கதிகள் பாதங்களோடு சங்கமிக்கின்றன..

அந்தக் கடலையும்
இந்த பிரபஞ்சத்தையும்
அந்தப் பாதங்களையும்
தாங்கி இருப்பது தங்கு தடையற்ற தங்க இறைவனான சத்ய சாயி ஒருவரே...

தொண்டை வழி தொண்டைச் செய்வதற்கே தொண்டை மண்டலத்தில் உதிக்கப்பட்டவர் வாரியார் சுவாமிகள்.

காங்கேயநல்லூர் காளைகளுக்கே பிரபலம் என்ற வகையில் முதன் முறையாக அருந்தமிழை அள்ளித் தரப்போகும் கிருபானந்த காமதேனுப் பசு பிறந்தது...

அது பாலாற்றங்கரையில் தவழ்ந்தது.

வாரியின் தாத்தாவான சாமி அண்ணா சிவத் தொண்டர்...
ஒருமுறை குளக்கரையில் தொலைந்த தனது ஆத்ம லிங்கத்திற்காக பசியோடு அண்ணாமலை நோக்கி தன் குருவை நாடி நடந்தே சென்ற சிவப்பழம்..

அந்தப் பழம் பிழிந்த ரசம் வாரியின் தந்தையான திரு மல்லையா தாஸ் பாகவதர்..
தாயார் கனகவள்ளி அம்மையார்.

வாரியார் சுவாமியின் தாய்தந்தையர்

வாரியாருக்கு முதல் குரு அவரது தந்தையே.

பராபவ (1906) ஆண்டு பிறந்த தமிழ்ப் பிரபாவம் வாரியார்.
வெள்ளி அன்றே இந்த தொண்டை மங்களம் தவழ்ந்தது...

அதிகாலை எழுகை.
பாடம் .. படிப்பு.. உபன்யாசம் செய்வதற்கான தேர்ச்சி.. தந்தையின் கண்டிப்பு.. வாரியின் அர்ப்பணிப்பு என வாரியின் பால காண்டம் விளையாட்டுத் தனமின்றி .. சுட்டித்தனமற்ற சாதுவாய் கல்வியில் கனிந்து வந்தது..

கனிந்தால் தான் பழமாக முடியும்..
பழுத்தால் தான் இறைவன் சத்ய சாயி எனும் ரசத்தை அகத்தே பருக முடியும்..

11 பிள்ளைகளில் 4'வது பிள்ளையான கிருபானந்தப் பிள்ளை தனித்துவப் பிள்ளை..
கடவுட் கல்வி எனும் கடலில் ஆழம் போன தவப் பிள்ளை...

உபன்யாசத்தால் பிள்ளை பொருள் எய்திப் பிழைக்குமா என்ற தந்தையின் சந்தேகத்தில் திரு.வரதாச்சார்யாரிடம் வீணை பயிற்சியும் நடக்கிறது.

உள்ளே குடிகொண்ட சாயி சரஸ்வதி வாரியை தனது எழுத்தாணியால் குரலை  மீட்டியும்... கைப் பொருளால் விரலை மீட்டியும் அருள் விளையாடல் புரிகிறாள்.

19 வது வயதில் அமிர்த லட்சுமியோடு திருமண வைபோகம்‌...

நாத்திக துர்நாற்றம் வீச ஆரம்பித்த சமயத்தில் நமது சமயத்திற்காக சமயம் பார்த்து பிறப்பெடுத்தவர் வாரியார் சுவாமிகள்.


மணக்கின்ற தெய்வ முல்லைகளைப் பிறப்பிக்கும் தமிழ்க் கொடியாவதற்கே வந்த வாரி .. ஜனிக்கின்ற பிள்ளைகளுக்காக வரவில்லை என சாயி இறைவன் சங்கல்பித்தார்..

அவர் வழி வந்த பணத்தொகை தொண்டிற்கே செலவழிந்தன..
அவர் வழி வந்த ஜனத்தொகையான தமிழ்த்தொகை சமயத்தின் சார்பிலேயே  நின்று பொங்கின‌..

கசடைப் பெறுவதற்கும்... அசடைப் பெறுவதற்கும்.. பிள்ளையற்றிருப்பதே பிறவிக் கடலைக் கடப்பதற்கான பெரும் புண்ணியமாக சிலருக்கும்.. சில சமயங்களிலும் அமைந்துவிடுகின்றன..

பூஜையே செய்யா பிள்ளை..
பூஜையறை விட்டு வெளியே வரா தாய்.. இந்த முரண் சகிப்புகளைக் கடந்து சில இல்லாமைகளிலும் சாயி இறைவனே நீக்கமற நிறைந்திருக்கிறார்..

வீணை இசையை விட உபன்யாசம் எனும்  வாய்மொழி இசையே சுவாமிகளுக்குப் பெரிதும் உதவின..

பேச்சில் பொற்றாமரைக் குளிரும்.. எழுத்தில் சமுத்திர ஆழமும் நிரம்பி இருந்தது சுவாமிகளுக்கு..

சிறு வயதில் நொய்யல் அரிசியை அன்னையிடம் கேட்டு வாங்கி எறும்புகளுக்கு இடும் காருண்யமும் கிருபையும் அவரின் பெயர்ப் பொருத்தம் உயிர்ப் பொருத்தமானது...

இதுவே ஒருமுறை விலங்கை பூஜைக்கு பலியிடுவதைத் தடுக்கவும்.. அந்த கொடிய விஷயத்தை காந்தியடிகள் வரை கொண்டு சென்று

"இறைவனுக்காக உயிர்பலி இடுவது காட்டுமிராண்டித் தனத்தின் கையிருப்பு" என காந்தியடிகள் எழுதித் தந்ததை கலெக்டரிடம் காட்டி அந்த உயிர்வதையை நிறுத்தியதும் வள்ளலார் வழி வந்த ஜீவ காருண்ய ஜோதி வாரியார் சுவாமிகள் அவர்கள்.

வள்ளலாரோ தன் அண்ணன் வழியே உபன்யாசம் புரிந்தவர்..
வாரியாரோ தன் தந்தை வழியே உபன்யாசம் புரிந்தவர்..

மனிதனாய்ப் பிறப்பதை விட நல்ல மனிதனாய் வாழ்வதற்கு சுவாமி அருள் நிச்சயம் வேண்டும்.

தாயை விழுந்து வணங்காத நாளே இல்லை ...சுவாமிகள் தனது தாயினிடத்தில் அத்தனை பக்தி வைத்திருந்தார்கள்.

வாரியார் சுவாமியின் தாயார் 

"கருணையே திருமேனியாகக் கொண்டு அடியாரை எல்லாம் உய்விக்க வந்த  பிதா அவர்களின் பொற்பாத கமலங்களுக்கு சிறியேனின் பக்திபூர்வமான வணக்கங்கள்" என தன் தந்தைக்கு சுவாமிகள் எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும் இப்படியேக் குறிப்பிடுகிறார்.

முன்னறி தெய்வத்தை வணங்கியவர்க்கு முழுமுதலான சாயி தெய்வத்தின் கருணை கிடைக்காமல் போய்விடுமா?"

உலைப் பானை கொதித்தவுடன் கல்வி கற்பதையும் நிறுத்தி ஓடிப்போய் இறக்கி வைக்க தாய்க்கு உதவுவார்கள் சுவாமிகள்‌.

வயலூர் சென்று 50 பைசா காணிக்கை இட்டுத் திரும்புகிறார்கள். முருகன் கனவில் வெறும் 50பைசாவில் எப்படி கோபுரம் கட்ட முடியும் என குரல் உயர்த்திக் கேட்க...
50பைசா திருப்பி அனுப்பப்படுகிறது..

இந்தத் திருச்செய்தி அறிந்து வயலூர் கோபுரம் வாரியார் சுவாமியால் கட்டி முடிக்கப்படுகிறது.


பத்திரிகை இதனை வடலூர் என தவறாகக் குறிப்பிட..
தவறில்லை தெய்வ செயல் என உணர்ந்து ...

வடலூருக்கும் தனது உபன்யாச வருவாய் வழி அற ஊழியம் நிகழ்த்தியது இந்த அருட் கடல்..

நம் சுவாமியை தரிசனம் செய்ய சமயம் நெருங்குகிறது..

பக்தியில்... சேவையில் உயர்ந்து மகானாய் பரிமளித்த வாரியார் சுவாமிகளை புட்டபர்த்திக்கு வர அழைப்பு விடுகிறது சாயி பரம்பொருள்... 

வாரியார் ஸ்வாமிகளுக்குச் சத்திய சாயியை பார்க்கவே நேரமில்லாது இருந்தது. ஒருவழியாகத் தனது வயது முதிர்ந்த காலத்தில் சத்திய சாயியைச் சந்திக்க சிலரோடு பெங்களூரு ஒயிட் பீல்டு ஹவுஸுக்குப் புறப்பட்டுச் சென்றார் வாரியார். அங்கு அவர் சிறப்பாகக் கவனிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டார்.


ஐந்து நாள்கள் ஆகியும் வாரியாரைச் சந்திக்க சத்திய சாய்பாபா வரவே இல்லை. அங்கு வாரியாருக்கு என்று எந்த வேலையும் இல்லை. பூஜை செய்வதும், உணவு உண்பதும், தூங்குவதுமாக நாள்களைக் கழித்தார் வாரியார். இது அவருக்குப் பிடிக்காத செயல். எப்போதும் பரபரப்பாகச் செயல்பட்டு வரும் வாரியார் ஸ்வாமிக்கு ஒரு கட்டத்தில் வெறுப்பு வந்து விட்டது. உடனே தன்கூட வந்தவர்களிடம் 'நாம் வந்து ஐந்து நாள்கள் ஆகி விட்டன. இங்கே சும்மாவே இருக்க எனக்கு விருப்பமில்லை. என்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் முருகனின் பணிக்காகவே ஒப்படைத்தவன் நான். எனவே கிளம்பலாம்' என்றார். அவருடன் வந்தவர்கள், 'நாளை காலை வரை பார்ப்போம், இல்லாவிட்டால் சொல்லிவிட்டு கிளம்பலாம்' என்றார்கள். வாரியாரும் ஒப்புக்கொண்டார். மறுநாள் காலை வாரியார் அருகே நடந்து கொண்டிருந்த பஜனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அக்கூட்டத்திற்கு வந்த ஸ்ரீ சத்திய சாய்பாபா, மெள்ள நடந்து போய் வாரியார் ஸ்வாமியின் அருகே சென்றார்.


வாரியாரிடம் 'நான் உங்களைச் சந்திக்கவில்லை என்று கோவமா? முருகனின் அருளால் உங்களிடம் எல்லாம் உள்ளது. உங்களிடம் இல்லாதது ஓய்வு ஒன்றுதான். அதைத்தானே நான் தர முடியும்' என்றார். இதைக்கேட்டு வியந்து போனார் வாரியார்.

ஆதாரம்: ஆனந்தவிகடன் செய்தி மடல்


பின்னர் 1984ல் சென்னையில் டி‌.வி ஆனந்தனைத் தலைவராகக் கொண்ட சமூகக் கூடத்தில் இறைவன் சத்ய சாயி விஜயம். வாரியாருக்கு அழைப்பு... சுவாமி அருகில் வந்து சௌக்கியமா எனக் கேட்கிறார்..

பிரபஞ்ச சௌக்கியத்தையே பராமரிக்கும் சாயி கடவுளைக் கண்ணாறக் காண்கிறார் வாரியார் சுவாமிகள்.. விபூதி சிருஷ்டி செய்து நெற்றி எங்கும் பூசிவிட்டு அவரிடம் "இதுவரை நீங்கள் பர்த்தி வந்ததே இல்லை கட்டாயம் புட்டபர்த்தி வாருங்கள்" என்று அழைப்பு விடுகிறார் இறைவன் சாயி...



ஒருமுறை திருமண உதவி கேட்டு வரும் பெரியவருக்கு தனக்கு தெரிந்த செட்டியார் கடையில் அரைப் பவுன் தங்கம் வாங்க சீட்டெழுதித் தருகிறார்...

அந்தக் கடனை பணமின்றி அடைக்காது போக பரிதவிக்கிறார் சுவாமிகள்..

தான் பூஜை செய்த பின்பே உணவு உண்ணும் வழக்கம் சுவாமிகளுடையது.

பூஜை செய்யும் போது வள்ளி தெய்வானை உத்தரவாய் அவர்களின் கழுத்திலிருக்கும் தங்கக் காசையே அந்தச் செட்டியாருக்குத் தந்து கடன் அடைக்கிறார்.

அது தான் தொண்டு.. அது தான் தெய்வத்துவம்.. அது தான் சுயநலமின்மை..

சென்டிமென்ட் பூதம் பிடித்திருக்கும் யாருக்கும் இப்படி ஒரு மனம் வருமா?

அடுத்த நாளே அற்புதம் நிகழ்கிறது..

இவர் பூஜை தட்டில் வேண்டுதல் நிறைவேற இரு தங்கக் காசு ஒரு பக்தர் தருகிறார்..

வள்ளி தெய்வானைக்கு அதுவே மீண்டும் தாலியாகிறது..

உதவி கேட்டால் தெய்வத்தையே தரும் தெய்வம் சுவாமிகள். அப்படிப்பட்டவர்களுக்கே பரம தெய்வம் இறங்கிவரும்...

இவரின் கோவில் திருப்பணிகள் சொல்லி அடங்காது..
சமூகத் திருப்பணியோ சொல்லில் அடங்காது..

எத்தனையோ மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணம் மாதாமாதம் செலுத்தி இருக்கிறார்.

அதில் பயனடைந்த ஒரு நபரை அடியேன் சந்திக்க நேர்ந்தது..

அடியேன் இயற்றிய வாரியார் காவடிச்சிந்து.. வாரியார் கிளிக்கண்ணி கேட்டு கண்கலங்கினார்..



இடது கை கொடுப்பதை வலது கைக்கு தெரியாது வழங்க வேண்டும் என்பார்கள்..

வாரியார் சுவாமிகளோ வலது கை கொடுத்ததை வலது கைக்கே தெரியாதவாறு கவனமாக இருந்தார்..

மலர்க் கிரீடம் ஏறியிருக்கிறது.. வழுக்கை ஏறியிருக்கிறது.. ஆனால் சுவாமிகளுக்கு தலைக்கனம் எனும் கொம்புகளும்... புகழெனும் முள்கிரீடங்களும் சுவாமிகளின்  தலையில் ஏறியதே இல்லை..

சுவாமி சங்கல்பம் அது.
சுவாமி கருணை அது.
சுவாமி திருச்செயல் அது.

சுவாமி எனும் வார்ப்பில் ஊற்றப்பட்ட தமிழ்ப் பொன் வாரியார்.

தெய்வங்கள் நிகழ்த்தும் லீலைகள் எல்லாம் பரம்பொருள் சத்ய சாயியின் அனுமதியோடே நிகழ்கிறது என்பதை வாசிப்பவர்கள் புரிந்துணர வேண்டும்..

மந்திரி ஒன்று செய்வதற்கு முன் முதலமைச்சரிடம் உத்தரவு வாங்கியே நடத்துவது போல்.. தெய்வங்களின் லீலை பிரபஞ்சக் கடவுள் சத்ய சாயியின் கட்டளையே !

மீண்டும்  பர்த்தி விஜயம்.
சுவாமிகள் தங்கிய இடத்தின் அறையில் சுவாமி படத்திலிருந்து விபூதி பொழிகிறது..
ஊருக்குக் கிளம்பலாம் என உத்தேசித்த சுவாமிகளின் முன்
அந்த விபூதிப் படத்திலிருந்து சுவாமி இறங்கி வந்து திருமுருகனாய்க் காட்சி அளிக்கிறார்...



முருகனின் அலங்காரம்.. சுவாமியின் திருமுகம் என திவ்ய தரிசனம் காணக் காண..

முருகா என விழுந்து வணங்குகிறார்..

ஏன் இத்தனை தாமதம் என அழுகிறார்...

அதற்கு சுவாமியோ "உன் தொண்டு இன்னும் மீதம் இருந்ததால் என் பதம் அடைய உனக்கு இன்னும் காலம் இருந்ததால் காத்திருந்தேன்".

காலம் கனிந்துவிட்டது வாரி .. என் பதம் அடைவாய் சீக்கிரம்...என சுவாமி திருவாக்கு மொழிய .. அந்த நிறைதலில் வாரியார் சுவாமிகள் உறைய.. அவர் போட்டக் கூப்பாட்டில் வாரியார் அறையில் பக்தர் யாவரும் நிறைய அந்நாளே திருநாளாகிப் போயிருந்தது பிரசாந்தி நிலையத்தில்..

இதன் வழி வாரியார் சுவாமி அடைந்த முருக அனுபவங்கள் எல்லாம் பரம்பொருள் சாயி அனுபவங்களே என உணர முடிகிறது..

ஒரே எனர்ஜி .. பல்வேறு ரூபங்களில் மக்களுக்கு பயனளிப்பது போல் ஒரே சத்ய சாயி பரம்பொருள் தன்னிலை இறக்கி பல தெய்வப் பிரவாகங்களில் அருள் பாலிக்கிறது..

சுவாமி வாரியாருக்கு முருகனாய்க் காட்சி கொடுத்ததை நாங்கள் எப்படி நம்புவது ? அவரின் தம்பி குடும்பத்தினர் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்..என வாசிப்பவர்கள் நினைக்கலாம்..

சுவாமி சாட்சியின்றி எந்த லீலையும் புரிவதில்லை என்பதும் ஒரு சுவாமி லீலையே..

வாரியார் பர்த்தியிலிருந்து புறப்பட்ட நாள் ஒரு சுவாமி பக்தை அங்கே நுழைகிறார்.. பக்தர் எங்கிலும் இதே பேச்சாய் இருக்கிறது..
விவரம் அறிந்து வியந்து பின்னாளில் டாக்டர் மிருணாளினி உதவியோடு வாரியார் சுவாமிகளை சந்தித்து அந்த அரிய லீலையை உறுதிப்படுத்துகிறார்.

அதை தனது "ஞானியர் கண்ட ஞானக் கண்ணன்" புத்தகத்திலும் பதிவு செய்கிறார். (பக்கம்: 97) 
அந்த பரம பக்தையின் பெயர் ஆர்.சரோஜினி சாய்ராம்...

டாக்டர் மு.வ அவர்களின் குருவான மௌன சுவாமிகளே வள்ளிமலைக்கு சாலையிட்டவர். அவரின் தொண்டுக்கு கொடுத்த வாக்கிற்கு இணங்க நடந்தே சென்று வாரியார் சுவாமிகள் உதவி அளித்திருக்கிறார்.


அப்பேர்ப்பட்டவருக்கான முக்தி நடந்தா வரும்?
இல்லை
வாரியார் சுவாமிகளுக்கு நம் சுவாமி முக்தியை பறந்து வரச் செய்து வழங்கினார்.

உயர்ந்தவர்களுக்கான உய்வு நிலை உயர்ந்த இடத்திலேயே வருகிறது..

அதை உயிர்களின் ஊடுறவலான உன்னத சுவாமியே அன்று முருகக் காட்சி தந்த போது அருளியது..


சுவாமி அருளியது என்று நிகழாமல் போயிருக்கிறது?

ஆரம்பத்திலேயே சுவாமியை முருகனாய் உணர்ந்திருந்தால் சுவாமியோடே  ஐக்கியம் ஆக சுவாமிகளின் அகம் தவித்திருக்கும்.. அந்தப் பெருந்தவிப்பில் தங்குதடையற்ற உபன்யாசப் பணியும்.. கோவில் திருத்தொண்டும் தவித்திருக்கும் எனவே சுவாமிகளின் கடைசி காலத்தில் தன்னை உணர்த்தி தடுத்தாட்கொண்டது சாயி பரம்பொருள்...

நம் சுவாமியையே தனது முருகனாகவும்.. தனது குருவான
பாம்பன் சுவாமியையும் கண்ட அந்தக் கண்கள்...
பக்திக்கும் சமயத்திற்கும் பாலமிட்ட அந்தக் கைகள்..
பனி இமயத்தைத் தாங்கிய அந்த நெற்றி ... அசரீரியாய்ப் பேசிய அந்த உதடு... பௌர்ணமியைப் பற்களிலில்லாமலும் பிரகாசித்த அந்தப் புன்னகை..

விமானத்தில் அமர்ந்த நிலையிலேயே அமரத்துவம் அடைந்தது.

அமரும் நிலையிலேயே  அமர நிலை கிடைத்தது....


அருணகிரிநாதருக்கும்.. துக்காராமுக்கும் அமைந்த புஷ்பக விமானம் போலவே
வாரியார் சுவாமிகளுக்கு இயந்திர விமானம் இறுதி யாத்திரையை சாயி இறைவன் யாத்திரைக்காக அழைத்துப் போனது..

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என முடிக்கும் அவரது ஒவ்வொரு உபன்யாசமும்
குருவாய் வருவாய் அருள்வாய் என வேண்டுதலின் பேரில்

குருவாய் வந்து அருளிய சத்ய சாயி குகனின் சாயுஜ்யத்தில் நிறைந்தது..

வாரியார் சுவாமியின் ஒரு தாரக மந்திரம் அடியேன் ஆத்மாவில் ஊடுறுவி இருக்கிறது

"வருவது தானே வரும்
வருவதுதானே வரும்"

எத்தனை சத்தியம்..
எத்தனை உணர்தல்..
எத்தனை தெளிவு
பகவான் ரமணரின் முதல் உபதேசத்தின் சூத்திரம் இது..

வேலை வணங்குவதே தன் வேலை என்றிருந்தார் சுவாமிகள்..

அவருக்கும் லீலை புரிவதே தன் வேலை என்றிருந்தார் சத்ய சாயி பரம்பொருள்...

"கீழே வந்து வாரி ஆனார்
மேலே சென்று மாரி ஆனார்
அய்யாமாரே அம்மாமாரே
வாரி அவர் நாயன்மாரே"
(வாரியார் கிளிக் கண்ணியிலிருந்து)

இரவு தோறும் சுவாமிகளின் உபன்யாசமே அடியேனுக்கான திருத்தாலாட்டு...

அத்தாலாட்டு ஆத்மா வரைக்கும் தூளியாட்டுகிறது.

சுவாமிகளின் சமாதிக் கோவில் காங்கேய நல்லூரிலேயே காட்சி அளித்து அருள்பாலிக்கிறது.

இரவு முழுதும் அவர் எழுதிய புத்தகங்கள்.. பகல் முழுதும் அவர் ஆற்றிய உபன்யாசங்கள் கடலாய்க் குவிந்திருக்கிறது..

வாரி எனும் தமிழ்க் கடல் வழங்கிய ஞானக் கடல் அவை...

சத்ய சாயி எனும் பரம்பொருளின் ரூபங்களான தெய்வங்களுக்குத் திருத்தொண்டு செய்து 64'வது நாயன்மாராய் நிலைத்த எனது வாரியை உளமாறப் போற்றியபடி

பக்தியுடன்
வைரபாரதி

1 கருத்து:

  1. குஞ்சிதபாதம்25 ஆகஸ்ட், 2020 அன்று 4:46 PM

    அருவியென கொட்டிடும் அழகு நடை.தங்கு தடங்கலில்லா ( வைர) பாரதி நடை.

    பதிலளிநீக்கு