ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் சேர்மனாக இருந்த பி.கே சாவந்த் சீரடி ட்ரஸ்ட் ஆரம்பித்த பிறகு இவர்தான் முதல் சேர்மன் என்பது குறிப்பிடத்தக்கது... ஸ்ரீ சத்யசாயி ஷிர்டி சாயியின் மறு அவதாரம்.. இந்த சத்தியப் பேருண்மையை எவ்வாறு அவர் உணர்ந்து கொண்டார் என்பதும்... அப்பேர்ப்பட்ட பரிபூரண அவதாரமான சுவாமி எங்கும் நிறைந்தவர் என்பதற்கான மகிமை உதாரணமும்... பதிவு ஒன்று அனுபவம் இரண்டாய் அலங்கரிக்கிறது இதோ...
ஷிர்டி சுவாமி மகானல்ல.. பலர் அவ்வாறு நினைக்கின்றனர்.. அவர் இறைவன். சாட்சாத் ராமரே கிருஷ்ணராக அவதரித்து கலியில் ஷிர்டி சுவாமியாக அவதரித்தார். கலியுகம் மாய இருள் நிறைந்தது என்பதால் தனது அவதாரத்தை மூன்றாக்குகிறார் சுவாமி.. கால்களில் புண் என்றால் பதினைந்து நிமிடத்தில் மருந்து வைத்து கட்டிவிடலாம்... ஆனால் இதய அறுவை சிகிச்சை அப்படி அல்ல.. அதிக நேரம் எடுக்கும்... அவ்வாறே கலியுகம் என்பதால் இறைவன் ஒரு முறை வந்தால் போதாது என மூன்று முறை அவதரித்திருக்கிறார். குழாயடி சண்டை என்றால் சில மணி நேரத்தில் தீர்த்து விடலாம் ஆனால் யுத்தம் அப்படி அல்ல... அதர்மங்களின் அளவீடுகளை பொருத்தே அவதாரமும் தனது வரவை அதிகரிக்கிறது.
பி.கே சாவந்த் தீவிரமான ஷிர்டி சாயி பக்தர். ஸ்ரீ எம்.எஸ் தீக்ஷித் மூலமாக ஸ்ரீ சத்ய சாயியே ஷிர்டி சாயி எனும் சத்தியத்தை முதன்முதலில் கேள்விப்படுகிறார். அந்த பரம தெய்வீக செய்தியின் பால் ஈர்க்கப்பட்டாலும் அவரால் இரு சாயியும் ஒருவரே என்பதனை உடனே ஏற்க முடியவில்லை... அது பம்பாய்... (அப்போது பம்பாய் தான்.. மும்பை அல்ல) .. இவர் ஒரு நண்பரின் வீட்டிற்கு செல்கிறார். அவர் வீட்டில் சுவாமி 1960'ல் மூன்று நாட்களுக்கு தங்கி இருக்கிறார். அங்கே பி.கே சாவந்த் பஜனையில் கலந்து கொள்கிறார்.. சுவாமி பற்றிய புகைப்பட ஆல்பங்களை நோட்டமிடுகிறார். சுவாமியின் பத்ரி யாத்திரை.. பிரசாந்தி நிலைய யக்ஞ வைபவம் போன்றவற்றை வீடியோ காணொளியில் காண்கிறார்.. பிறகு சுவாமி தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அந்த சுவாமி அறையில் அப்போது இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் புகைப்படம் தரிசனம் தந்த வண்ணம் இருக்கிறது. அப்போதும் சுவாமி தான் ஷிர்டி சாயியின் அவதாரம் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. அதில் சிறிய மனக்குழப்பமும்... தடுமாற்றமும்... மனம் இறுகி இருக்கிறது.. மனம் எப்போதும் தான் நினைத்ததே சரி எனச் சொல்லும்.. அப்படியே இருக்கிறது அந்த நேரத்திலும் அவர் மனம்.. கண்கள் மூடி மூடித் திறக்கிறார்..
சுவாமியிடமிருந்து பிரசாதமாக கொண்டு வரப்பட்டிருக்கும் விபூதியை அவர் முன் நீட்டுகிறார் டாக்டர் காடியா. ஆனால் அவர் அதை ஏற்க மறுக்கிறார். அவர் மறுக்கும் அதே சமயத்தில் சுவாமியின் புகைப்படத்திலிருந்து மின்னல் வேகத்தில் ஒரு ஒளி தோன்றுகிறது.. அதை அவர் ஆச்சர்யமுடன் அகலக் கண்களால் காண்கிறார். சட்டென உள்ளுணர்வு இரு சாயியும் ஒருவரே எனும் பரம சத்தியத்தை ஏற்றுக் கொள்கிறது. பிறகு டாக்டர் காடியா கொடுத்த விபூதியை ஏற்றுக்கொண்டு நெற்றியிலும் இட்டு...அதை அவர் மெதுவாக கண்கள் மூடி உண்கிறார்.. தோன்றிய மின்னல் மறைகிறது... பெருமூச்சு விடுகிறார்.. இமை ஓரத்து கண்ணீர் துளி இரண்டு சாயியும் ஒருவரே என்பதை உணர்ந்த அனுபவத்தால் "ஆம் ஷிர்டி சாயியே சத்ய சாயி" எனும் திரவ மொழி பேசுகிறது.. யார் அவரில்லை என மனதில் ஒதுக்கினாரோ.. அவர் ஒதுக்கிய அந்த நொடியிலும் சுவாமி நொடிப் பொழுதும் தாமதிக்காமல் விபூதி தந்தமையால் அவருக்கிருந்த சந்தேக நோய் அந்த நொடியே குணமாகிறது.
பிறகு பிரசாந்தி நிலையம் வருகையில் இவரிடம் சுவாமி "அவனுக்கு அந்த உடல் மேல் இருந்த பக்தி பெரியதாக இருந்தது.. அந்த உடம்பில் இருந்த அதே சாயி தான் .. இதே சாயி .. அதை அன்று உணர்ந்து கொண்டான்.. அந்த சூட்சும அனுபவம் எனக்கும் அவனுக்கும் மட்டுமே புரியக் கூடியது" என்று சொல்லி.. "மகாராஷ்டிரா என் பூர்வ அவதாரத்தை சுமந்து புண்ணியம் கட்டிக் கொண்டதால் இன்று தர்ம ஷேத்ரமாக விரிந்திருக்கிறது" எனவும் சொல்லி பி.கே சாவந்த்'துக்கு ஆசி கூறுகிறார்.
இந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு சுவாமியின் கிருபையால் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.. பிறகு இவரே ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானின் முதல் சேர்மனாக 16 -ஆகஸ்ட் --1984 லில் இருந்து பொறுப்பை ஏற்று.. நான்கு வருடங்கள் தொடர்கிறார்!
இவ்வாறே ஸ்ரீ ஷிர்டி சாயியே -- ஸ்ரீ சத்ய சாயி! ஸ்ரீ சத்ய சாயியே -- ஸ்ரீ பிரேம சாயி. சுவாமி சொல்வது போல் இறைவனின் உடல் அடையாளங்களின் மேல் பற்று வைக்காமல் அவனின் பேராற்றலின் பிரவாகங்கள் மீதே பக்தி வைக்க வேண்டும்!
தன்னை வெறுப்பவரையும் ... மறுப்பவரையும் தானே ஷிர்டி சாயி என உணர வைக்கும் சுவாமி எங்கும் நிறைந்தவர். ஒரு முறை மஞ்சேரி எனும் இடத்தில் ஒரு ஏழையின் வீடு.. அந்த ஏழையின் வீட்டில் சுவாமி சிரித்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். பள்ளம் நோக்கியே வெள்ளம் பாய்வது போல் சுவாமி தீனர்களை தேடியே கருணையாய்ப் பாய்கிறார். அந்த ஏழை வீட்டின் பூஜையில் கலந்து கொள்கிறார். இங்கே இவ்வாறு நிகழ.. அதே நேரத்தில் அவர் வெங்கடகிரியில் நிகழும் பஜனையிலும் பாடிக் கொண்டிருக்கிறார்... அதே நேரத்தில் பெங்களூர் ஒயிட் ஃபீல்ட் மைதானத்தில் பக்தர் முன்னிலையில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இதை அறிந்தவர்கள் சுவாமியிடமே கேட்டுவிட்டார்கள்...
"இது எப்படி? இது என்ன அபூர்வமான சாதனை?" எனும் கேள்வி தான் அது.
இறைவனை நோக்கி தான் மனிதனின் சாதனையே.. இறைவன் எதற்காக சாதனை புரிய வேண்டும்? எனும் ஆன்மப் புரிதல் அப்போது கேட்டவர்களுக்கு புரிந்திருக்க நியாயமில்லை.
அதற்கு சுவாமியோ... " உங்களுக்கு அது பிரம்மிப்பாக இருக்கலாம்... ஆனால் அது எனக்கு இயற்கையே... அதுவே என்னுடைய வழி... நான் எங்கெல்லாம் இருக்க விரும்புகிறேனோ அங்கெல்லாம் போகிறேன்... எங்கெல்லாம் பக்தர்கள் என்னை நாடுகிறார்களோ... அங்கெல்லாம் நான் செல்லுகிறேன்" என்றிருக்கிறார். கேட்டவர்கள் சுவாமியுடைய பேராற்றலில் பேச்சு மூச்சற்று கண்ணீர் வடித்திருக்கிறார்கள்.
அந்த சேர்மன் வடித்த கண்ணீர் இரு சாயியும் ஒன்றே எனும் ஆனந்தக் கண்ணீர்.. இவர்கள் வடித்த கண்ணீர் சுவாமி சாட்சாத் இறைவனே எனும் ஆன்மீகக் கண்ணீர்!
(ஆதாரம் : Shirdi Sai and Sathya Sai are One and the Same By Arjan D. Bharwani & பகவான் பாபா / பக்கம் : 56 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)
சுவாமி எல்லாம் வல்ல இறைவன். அவருக்கு நாம் பார்ப்பது போல் ஒரே ஒரு உடம்பல்ல.. நமது உடம்பும் / இந்த உலகமுமே நமக்காக அவரளித்த வாடகை இருப்பிடமே.. சுவாமிக்கே அனைத்தும் சொந்தம்... இந்த சத்தியம் உணர உணர நாம் பக்தி கலந்த சரணாகதியையே அந்த வாடகைக்கான நன்றியாக சுவாமியிடம் நம்மையும் சேர்த்து ஒப்படைக்கிறோம்!
பக்தியுடன்
வைரபாரதி
Sai Ram This is an excellent revelation to both Shirdi Sai and Sathya Sai devotees confirming His words on Sai Avatara mahima! Loved it! Mohan Manikkam
பதிலளிநீக்கு