தலைப்பு

வெள்ளி, 9 ஜூலை, 2021

மணக்க மணக்க சாயி அனுபவம் பகிர்கிறார் டி.எம்.எஸ் மல்லிகா!


இறைவன் சத்யசாயியின் ஆச்சர்யகரமான அனுபவங்கள் .. சர்வ சகஜமான அதுவும் மிக நூதனமான தரிசனங்கள் .. மிக மிக பிரியமான சம்பாஷனைகள் ... தலை தொட்டு ஆசிர்வதிக்கும் நிமிடங்கள்.. டாட்டா காட்டும் உரிமையான உணர்வுப் பரிமாற்றங்கள் இவை எல்லாம் முன் ஜென்ம பிராராப்தம் .. அந்தக் கொடுப்பினை இருந்தாலே கிடைக்கும்.. அப்படிப்பட்ட அனுபவங்கள் பகிர்கிறார் டி.எம்.எஸ் மல்லிகா அம்மா...

அய்யன் டி.எம்.எஸ் இறைவன் சத்ய சாயி பக்தர் என அனைவரும் அறிந்ததே..
அந்த பழம்பெரும் முருக பக்தரை சாயி பக்தராக்கியதெல்லாம் சத்ய சாயி சங்கல்பமே!
தானே முருகன் என உணர வைத்து அவரின் வைராக்கிய முருக பக்தியில் சத்ய சாயி பக்தியும் சங்கமித்தது பூர்வ புண்ணியமே ..


நிறைய அனுபவங்கள்.. எல்லாம் ஒரே பகுதியில் இணைத்தால் மகாபாரதத்தின் கிளைச் சம்பவங்களாக நீளும்.
ஆகவே தனித்தனியான தொகுப்பு அந்தந்த அனுபவத்தை உணர்த்தும்..

டி.எம்.எஸ் மல்லிகா அம்மாவின் சத்ய சாயி அனுபவங்கள் அலாதியானவை.
அவர்கள் சின்னஞ்சிறு வயது முதலே இறைவன் சத்யசாயியை தரிசித்து வளர்ந்தவர்கள்.
நான்கு வயது முதலே சுவாமியை அவர்களுக்கு தெரியும்.

அவர்களது அண்ணனான பாலசுப்ரமண்யன் காலமான நொடிகள் இவை எல்லாம் நம் சத்ய சாயி யுகத்தில் பதிந்திருக்கிறோம்.

மிகவும் உடைந்து போன அய்யன் டி.எம்.எஸ் உள்ளத்தில் இறைவன் சத்யசாயியே பேரருள் ஊற்றியது.
நீ பேசினது கேட்டுச்சு.. கர்ம வினை சௌந்தரம் அதனால தான் நான் பேசினது உனக்கு கேக்கல... என்று அவன் தெய்வமாகிவிட்டான் என்பவை எல்லாம் ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்டு நாம் வாசித்த பதிவுகள் தான்..

அதைக் கடந்து அய்யன் டி.எம்.எஸ் புதிதாக இல்லம் கட்டி இருக்கிறேன் சுவாமி நீங்கள் வரவேண்டும் என அழைக்கிறார்..
உடனே சுவாமி சம்மதமும் தெரிவிக்கிறார்.
சுவாமி வரப்போகிறார் என வீடே அல்லோலகல்லோலப் படுகிறது.
பிரத்யேக இறைவன் விஜயம் என்பதாலும்.. அக்கம்பக்கத்தினர் யாரையும் அழைக்க வேண்டாம் என சுவாமி சொன்னதாலும் அய்யன் யாரையும் அழைக்கவில்லை‌..

அன்று புனிதமான வெள்ளிக்கிழமை ..
சுவாமி வருகிறார்..
இதோ மகாலட்சுமியே வந்திருக்கிறாள் .. ஆரத்தி எடுங்கோ என சுவாமியே முன்மொழிய .. பரவசப்படுகிறார் அய்யன் டி.எம்.எஸ் .. அம்மையார் சுமித்ரா டி.எம்.எஸ் ஆரத்தி எடுக்கிறார்.


உள்ளே நுழைகிறார் உற்சவ இறைவன்.
எவ்வளவு கொடுப்பினை
எவ்வளவு பாக்கியம்.
எவ்வளவு பெரும்பேறு..

சூப்பர் ஸ்டார் அந்தஸ்து நட்சத்திரம் அழைத்த போதும் பார்க்கலாம் என்று சொல்லி அங்கே வராத இறைவன்.. அய்யன் இல்லத்திற்கு பிரவேசித்தது..

வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார்.
மாடிக்குச் செல்கிறார்.
அங்கேயும் பார்க்கிறார்.

"எப்பா.. சினிமா போல வீடு கட்டிருக்கியே!" எனக் குழந்தை போல் கடவுள் பேசுகிறார்.

பிறகே மாடியில் அய்யன் பூஜை செய்யும் அறையில் அவரின் மூத்த புதல்வர் பாலசுப்ரமணியத்தின் புகைப்படம் .. அதையே உற்றுப் பார்க்கிறார்..
உயிர் பிரியும் நொடிகளில் "பாபா முருகா .. பாபா முருகா" எனச் சொன்னதை நினைவு கூறும் வகையில்..
நீயும் உன் மகனைப் போல் இன்றிலிருந்து இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இரு என்கிறார்..

இறைவனே நாமம் உச்சரி என்று சொல்வதல்லவா. 
இறைவனே பக்தர்க்கு வழங்கும் மந்திர உபதேசம்.. தீட்சை ஆகிறது..

பிறகு கீழே இறங்கி வர சுவாமிக்காக வகை வகையாக பரிமாறப்படுகிற உணவு வகைகளை .. சாப்பிடுங்க சுவாமி என சுமித்ரா அம்மையார் தெரிவிக்க..
சுவாமி அந்தந்த பதார்த்தத்தின் மீது கை வைத்து..
சாப்பிட்டுவிட்டேன் .. ருசியாக இருக்கிறது எனச் சொல்கிறார்.



சுவாமி முன் படைக்கபடுகிற உணவு வகைகள் முதல் பழரசம்.. தண்ணீர் வரை சுவாமியால் ஒவ்வொரு பக்தர் வீட்டிலும் ருசி பார்க்கப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வும் ஓர் உதாரணம்.

சுவாமி பாலாவது பருகுங்கள் என்று சுமித்ரா அம்மையார் சொல்லிய போது.. கொஞ்சம் பருகி தந்துவிடுகிறார்..

பிறகு அய்யன் டி.எம்.எஸ் அவர்களோடு வெகு நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்..
பங்காரு பங்காரு என அரவணைக்கிறார்..

பிறகு சுவாமி எழுந்து வர்றேன் என்று சொல்லி அனைவரிடமும் சொல்லி.. மல்லிகா அம்மா உட்பட அவரின் சகோதர சகோதரிகளின் தலையைத் தொட்டு ஆசிர்வதித்து கிளம்புகிறார்..

அவர் கிளம்பிய பிறகு.. சுவாமி குடித்து மிச்சம் வைத்த பால் டம்ப்ளரில் சுவாமியின் கேசம் கூடிய முகம் தெரிகிறது.. அவருக்கு படைக்கப்பட்டிருந்த உணவுப் பதார்தத்திலும் சுவாமி முகம் தெரிகிறது.
அய்யன் டி.எம்.எஸ் இது நிழலாக இருக்கும் எனச் சொல்கிறார்..
பக்கத்து வீட்டு பாத்திரம் வாங்கி சோதித்த போது சுவாமி முகம் தெரியவில்லை..
சிலிர்த்துப் போயிருக்கின்றனர்..



பிறகு சுவாமியின் உச்சிஷ்டப் பாலை அனைவருக்கும் பிரசாதமாகப் பகிர்ந்தார் சுமித்ரா அம்மையார்...

எப்பேர்ப்பட்டப் பிறவிப் பயன் இது..

வேங்கட முனி பங்களாவிற்கு இறைவன் சத்ய சாயி விஜயம் செய்யும் போதெல்லாம்..
ஏழு மணிக்கே சென்றுவிடுவார்கள் மல்லிகா அம்மாவும் அவர்களது சகோதர சகோதரிகளும்..
குழந்தைக்கால நினைவுகளை அடியேனோடு பகிர்ந்து கொள்கையில் அம்மாவும் குழந்தையாகிவிடுகிறார்.


டவல் கட்டிக் கொண்டு சுவாமி குளிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் சுவாமியை நோக்கி சுவாமி சுவாமி என சத்தம் போடுவார்கள்.
சுவாமியும் பேரன்பாய் சிரிப்பார்..
டாட்டா காட்டுவார்..
எங்கேர்ந்து வந்திருக்கு எனக் கேட்பார்..
தலையை தடவிக் கொடுத்து கொஞ்சுவார்..

எத்தனை பாக்கியம் இவர்கள் அடைந்திருப்பது..

எல்லாமே கண்ணுக்குள்ளியே நிக்குதுப்பா எனப் புல்லரித்துச் சொல்கிறார்.

ஒருமுறை பெரும்பாடகி சுசிலா அம்மையாரின் மகனுக்கு பெயர் வைத்திடும் போது சுவாமி என் குழந்தைக்கும் வையுங்கள் என மல்லிகா அம்மா தெரிவிக்க‌.

ஓ பெயரா எனக் குழந்தையை தூக்குகிறார்..
அதான் ஏற்கனவே நீங்க பேரு வெச்சாச்சே எனச் சொல்லி அதையே கூப்பிடுங்க எனச் சொல்கிறார்.

டி.எம்.எஸ் மல்லிகா அவர்களின் மகள்.. 

அய்யன் டி.எம்.எஸ் தன் பேத்திக்கு வைத்த பெயர் பானுரேகா..

மூன்றாவது குழந்தை பிறக்கையில் சுவாமியின் சென்னை விஜயம் .. சுந்தரத்திற்கு விரைகிறார்கள்.
சுவாமி எங்கோ கிளம்பிட..
வண்டி எடுத்து கணவனும் மனைவியும் காரைப் பின் தொடர்ந்து சொல்கிறாராகள்
சுவாமி மல்லிகா அம்மாவைப் பார்த்து புன்னகை பூக்கிறார்..
அவர்கள் தன் குழந்தையைக் காட்ட ஆசீர்வதித்து டாட்டா காட்டுகிறார்..

ஒருமுறை வைட் ஃபீல்டில் அய்யன் டி.எம்.எஸ் அவர்களோடு சென்றிருந்த அவரது குடும்பத்தினருக்கு தன் கையாலேயே அமிர்தம் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் இறைவன் சத்ய சாயி..

என்ன ருசிப்பா எனச் சொல்லி தித்திப்பு நினைவை திகட்ட திகட்ட பகிர்ந்து கொண்டார்..
லட்டுக்களையும் சிருஷ்டி செய்து எங்களுக்கு தந்தார்ப்பா சுவாமி என்றார்..

எவ்வளவு கொடுத்து வைத்த ஆத்மா .. மல்லிகாம்மா

அமுதமயமான பாடகருக்கு இறைவன் அமுதம் வழங்கியது எவ்வளவு பொருத்தம்..
இல்லை என்றால் அமுதப் பேரருவியை குரல் குற்றாலமாய் கொட்டிக் கொண்டிருக்குமா!

டி.எம்.எஸ் மல்லிகா தன் குடும்பத்துடன்.. 

இவரின் திருமண வாழ்வின் ஆரம்பத்தில் இவரின் மாமனார் மாமியாருக்கு சுவாமி மேல் நம்பிக்கை இல்லை.. பாபா படத்தை எல்லாம் ஏன் மாட்டி இருக்கிறாய் எனக் கேட்பார்கள்.
மல்லிகா அம்மாவின் கணவரின் அண்ணனுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் சுவாமியின் சென்னை விஜயத்தின் போது மாமனாரே நீ போய் அதைப் பற்றி கேட்டுவிட்டு வா என ஆச்சர்யமாய் சொல்லி இருக்கிறார்.
அந்த தரிசனம்..
சுவாமி ஏதோ அவரிடம் பேச..
அந்த பேரன்பு .. அந்த ஆலிங்கனம்
அன்றிலிருந்து மல்லிகா அம்மாவின் புகுந்த இடமே பாபா இடமாக மாறி இருக்கிறது.

நீ கொண்டு வந்த சுவாமி படத்தை மாட்டு எனச் சொல்லி இருக்கிறார்..
கர்ம வினையால் குழந்தை பிறக்கவும் இல்லை.. பிறகு தத்தெடுக்கின்றனர்..
அதைக் கடந்து இறைவன் சத்ய சாயி மேல் அவர்களுக்கு ஏற்பட்ட பக்தி..
அதுதானே தூய்மையான பக்தி..
எந்தவிதமான எதிர்ப்பார்ப்பின்றி முகிழ்த்து வருவதே உண்மையான பக்தி..

மேலும் வியாழன் தோறும் அய்யன் டி.எம்.எஸ் பஜனை செய்யும் போது இறைவன் சத்ய சாயி திருவுருவப் படத்திலிருந்து விபூதி மழை பொழியுமாம்.. பொழிந்து முருக சிலையின் மீது அபிஷேகமாக அந்த பரவசக் கோலம் திகழுமாம்..

மல்லிகா அம்மாவின் திருமணத்திற்கு வருகிறேன் எனச் சொன்ன இறைவன் சத்ய சாயி .. மணப்பெண் கோலத்தில் புது மாப்பிள்ளையோடு இறைவன் சத்ய சாயி திருவுருவப் படத்தின் முன் நமஸ்காரம் செய்ய கொத்தாக மலர் அவர்களின் தலை மேல் விழுந்திருக்கிறது..
பரவசம் அடைந்திருக்கிறார்கள் இந்த பாக்கியசாலிகள் ..

பரிபூர்ண நிர்மல பக்தியால் பரமன் சாயி உருகிப் போவார் எப்போதும் ....
அது தான் பக்தியின் மகிமை...


பக்தி என்பது பேரமில்லை..
பக்தி என்பது ஆன்மாவின் சாரம்.
பக்தி என்பது கொடுக்கல் வாங்கல் இல்லை
பக்தி என்பது சரணாகதி அடைதல்..
பக்தி என்பது அரை குறை சந்தேகமில்லை
பக்தி என்பது தன்னை முழுதாக ஒப்படைத்தல்..
பக்தி என்பது சொர்க்கத்தில் போய் குடியிருப்பதில்லை..
பக்தி என்பது நரக வாழ்க்கையே வாய்த்தாலும் அது இறைவன் சத்ய சாயி சங்கல்பம் என ஏற்றுக் கொள்ளுதல்..
பயமற்று இருத்தல் ...இறைவனுக்கே ஆணையிடாமல் .. இறைவன் சொல்வதை தலைமேல் ஏற்று செயல்படுதல்..
பக்தி என்பது குழந்தையாக மாறுவது..
குழந்தைத்தனமாக மாறுவதல்ல..
பக்தி என்பது அடுத்த வீட்டு ஜன்னலை எட்டிப்பார்ப்பதில்லை..
தன் இதயத்தைத் திறந்து வைத்தலே சத்யமான பக்தி..

மனிதனோ மனிதனின் ஆணவமோ இறைவனின் கால்தூசிக்குக் கூட சமானமில்லை என உணர்ந்து இறைவன் சத்ய சாயி காலடியில் கரைந்து அடையாளங்கள் துறந்து காணாமல் போய் அத்வைதம் அடைய சலனமில்லாத தூய பக்தியே பாலமாகிறது ‌.

  பக்தியுடன்
வைரபாரதி

1 கருத்து: