தலைப்பு

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

நவவித பக்தி- இறைவனுடன் நட்பும் ஒரு பக்தியே!

ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்மநிவேதனம். இவையே இறைவனை அடைய  நவவித பக்திகளாக கீதையில் கண்ணன் எடுத்துரைக்கும் மார்க்கங்களாகும். சநாதன சாரதியாக அவதரித்து கலியுகத்தை கடைதேற்ற வந்த பாபா அவர்கள்,  நாம் இறைவனிடம் கொள்ளும் நட்புதான் சிறந்த நட்பு என்பதை வலியுறுத்திக் கூறுகிறார். நட்பு பற்றி பாபா கூறும் பொன்னுரையின் சாரம் இதோ.... 


அன்பின் வடிவங்களே. ஒருமுறை அமெரிக்கர் ஒருவர், பாபாதான் எனது மிகப் பெரிய நண்பர் என்றார். இதன் பொருள் என்ன. இறைவனிடம்  பரிபூரண சரணாகதி அடையும் நிலைக்கு அவர் வந்துவிட்டார் என்பதே.

இதன் விளக்கம் என்ன.?

இறைவனை அடைய ஒன்பது வழிமுறைகளை கீதை கூறுகிறது. பகவன் நாமாவை கேட்பது முதற்படியாகும். அவரின் கல்யாண குணங்களைப் பாடுவது அதற்கு அடுத்த நிலையாகும். அவரையே சதா நினைப்பது மூன்றாம் நிலையாகும். இறைவனின்  பாத சேவை அதற்கு அடுத்ததாகும். நாமங்ளை மனதில் ஊன்றி கூறுவது அர்ச்சனமாகவும், இறைவனை நமஸ்கரிப்பது வந்தனமாகவும் ஆகிறது.பகவானுக்கே அடிமையாவது தாஸ்யமாக இருந்தால், நட்புடன் இறைவனை அணுகுவது சக்யம் ஆகும். இந்த நட்புவுறக்கு அடுத்தபடிதான் ஆத்ம நிவேதனம் என்கிற பரிபூரண சரணாகதி. 

ஆகவே இறைவனுடன் நட்பு என்பது ,அவனையே சரணைடந்து அவனுள் கலந்துவிடும், உன்னத பக்தி மார்க்கத்திற்கு முந்தைய படியாகும். நட்பு என்பது புதியதாகவும் இருக்கலாம். பழைய நட்பாகவும் இருக்கலாம். பழைய நண்பர்களைக் கண்டால் , மனம் மகிழ்ந்து உளம் உவந்து ஊரையாடுகிறோம். இந்த வகையில் இறைவன்தான் நமது நெடுநாளைய நண்பர். பழைய நண்பரிடம் நாம் மனம்விட்டு பேசி, நம் வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் அவரிடம் கூறலாம். நமது தவறுகளையும் அவரிடம் கூறி, அதிலிருந்து விடுபட சில ஆலோசனைகளையும் பெறலாம். 

உதாரணமாக உங்களிடம் அழுக்கடைந்த கசங்கிய, ஓரம் கிழிந்த ஒரு 100 ருபாய் நோட்டு  உள்ளது. அதை எங்கும் கொடுக்கவோ, பொருள் வாங்கவோ இயலவில்லை. ஆனால் அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து புதிய நோட்டைப் பெற்றுக் கொள்ளலாம். அதுபோல உங்கள் வாழ்க்கை என்னும் சீரற்ற நோட்டை இறைவனிடம் சமர்ப்பித்து , செல்லாத வாழ்க்கையை செல்லுபடி ஆக்கிக் கொள்ளலாம். ஆகவே உங்களிடம் உள்ள தீய குணங்களை இறைவன் திருவடியில் மனம் வருந்தி சமர்ப்பித்தால், அவர் உங்களுக்கு தூயகுண வாழ்வை அருளுவார்.

ஆதாரம் - ஸ்ரீ சத்யசாயி அருளுரை, குரு பூர்ணிமா 1995, பிரசாந்தி நிலையம்.

தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


🌻ஆகவே அன்பர்களே, பவித்ரமான நட்பை இறைவனிடத்தில் வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்ளை பரிபூரண சரணாகதி என்ற பக்தியின் உச்ச கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக