தலைப்பு

வெள்ளி, 23 ஜூலை, 2021

ஒரு வீர சைவர் வழிபாடு செய்துவந்த ஸ்படிக லிங்கத்தில் காட்சி தந்த சதாசிவ சாயி!


சைவ மரபினர் சிவனை தவிர எந்த தெய்வ ரூபங்களையும் வணங்காதவர்கள். அதில் ஒருவருக்கு எவ்வாறு சுவாமியே ஆதிசிவன் என்பதையும் அனைத்து தெய்வ ரூபங்களும் தானே என்பதை உணர்த்தினார் என எடுத்துரைக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ..

வெகு காலத்திற்கு முன் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம் இது. ஆதிகாலம் முதல் இந்த காலம் தொடர்ந்து அனாதி காலம் வரை சுவாமி எங்கும் நிறைந்த பரம் பொருள். ஒவ்வொரு தனிநபர் மற்றும் பக்தர்களின் சிறு சிறு குறைகளை... குறுகிய மனங்களை தனக்கே உரிய தெய்வீக பாணியில் களையச் செய்வது தான் சுவாமியின் கல்யாண குணங்களில் ஒன்று. இவர் ஒரு வீர சைவர். சுவாமியை கேள்விப்பட்டு புட்டபர்த்தி வருகிறார். யார் எதற்காக வருகிறார்கள்? யார் என்ன நினைத்துக் கொண்டு வருகிறார்கள்? யார் எதை பிரார்த்தனையாக முன்னெடுத்துச் கொண்டு வருகிறார்கள் என சுவாமி நன்கு அறிகிறார். இன்னார்க்கு இன்ன குறை என இறைவனுக்கு தெரியாமல் வேறு யாருக்கு தெரியும்!? மன பேதங்களை களைவதற்கே இறைவன் சாயியாய் மூன்று முறை அவதாரம் எடுத்து வருகிறார். பேதங்கள் நீங்கினால் தான் அன்பு தழைக்கும்.. தர்மம் நிலைக்கும் என்றவகையில் இவருக்கு சிவரூபத்தை தவிற மற்ற தெய்வ ரூபங்களை வெறுக்கும் போக்கு இருந்தது.. அப்படிப்பட்ட இந்த வீர சைவர் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்திற்குள் தனது வலது காலை எடுத்து வைக்கிறார் ஒரு அதிகாலை... சுவாமி மதங்களையே கடந்தவர் என அப்போது இவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் மிகப் புதியவர். 

தரிசனத்தில் அமர்ந்து கொண்டிருந்த போது.. பக்தர்கள் பரவசப்படும் வகையில் சுவாமி தனக்கே உரிய வகையில் பூமாதேவிக்கும் வலிக்காமல் மிருதுவான நடையில் மிதந்து வருகிறார். இந்த வீர சைவர் சுவாமியை முதன்முதலில் தரிசிக்கிறார். இவருக்கு தூக்கி வாறிப் போடுகிறது. கண்களை கசக்கி மீண்டும் தரிசிக்கிறார்.. மீண்டும் அதே காட்சி.. என்னடா ஒரே வம்பா போய்விட்டது என அதிர்ச்சியடைகிறார்.. இங்கே போய் வந்தோமே என அலுத்துக் கொண்டு மீண்டும் தரிசிக்கிறார்.. அதே காட்சி.. கோபம் அடைந்துவிடுகிறார்.


ஆம்.. இந்த வீர சைவரின் கண்களுக்கு சுவாமி மயிற்பீலி கிரீடமுடன் பீதாம்பர உடை அணிந்து கிருஷ்ணராக நடந்து வருவது தெரிகிறது. சிசுபாலன் போல் கோபமாகிறார் சிவரூபத்தை தவிற எதையும் ஏற்காத இந்த வீரதீர சைவர். விடுக்கென எழுந்து ஆத்திரத்துடன் சுவாமியின் தரிசனத்தை விட்டு வெளியேறுகிறார்.. வழக்கமான தன்னுடைய சிவலிங்க வழிபாட்டினை நிகழ்த்த தக்கதொரு இடத்தை தேடுகையில் சித்ராவதியின் நீரலைகள் கைநீட்டி இவரை வரவேற்கின்றன‌... நதிக்கரையில் சிவலிங்க வழிபாடு செய்வது விசேஷமென்பதை அறிந்த இவர் .. அங்கேயே அமர்ந்து தான் நித்தியமாய் செய்து வந்த ஸ்படிக லிங்க பூஜையை செய்ய ஆரம்பிக்கிறார்...

'ஓம் சிவாய நமஹ' என உத்தரணி ஜலம் விடுகிறார்.. அது ஸ்படிக லிங்கத்தில் விழுகையில்... இவர் கண்களின் காட்சியை இவராலேயே நம்பமுடியவில்லை... மீண்டும் கண்களை ஓரிரு முறை சிமிட்டி மீண்டும் அபிஷேகம் செய்கிறார் ... ஒரே ஆச்சர்யம் கலந்த புதிர்.. இவர் எங்கேயடா இங்கே என முழிக்கிறார்... ஒருவேளை நம் பின்னால் நின்று கொண்டிருக்க.. அந்த பிரதிபலிப்பு தான் தெரிகிறதோ எனப் பின்னால் திரும்பிப் பார்க்கிறார்.. பின்னால் ஒருவரும் இல்லை.. மீண்டும் லிங்கத்தைப் பார்க்க சுவாமி அந்த ஸ்படிக லிங்கத்தில் மிக மிகத் தெளிவாக தெரிந்து கொண்டிருக்கிறார்... பயம் ஒரு புறம்.. பிரம்மிப்பு மறு புறம்... பூஜையை பாதியில் முடித்து கோபமாய் சென்றவர் வேர்க்க விறுவிறுக்க மீண்டும் பிரசாந்தி நிலையத்திற்குள் நுழைந்து.. சுவாமி தரிசனம் தரும் இடத்திற்கு விரைகிறார்.. சுவாமியை தரிசித்தபடி அங்கேயே இவர் நிற்க.. சுவாமி இவர் அருகில் வந்து கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்துப் போய்விடுகிறார்... 


 "தொடர்ந்து நதிக்கரையில் சிவபூஜையில் ஈடுபட்டிருக்கலாமே... ஏன் எழுந்து வந்து விட்டீர்கள்?" என்று சுவாமி கேட்ட அந்த கேள்வி தான்.. தட்சன் வேள்வியாய் இதயத்தில் இவருக்குள்ளும் மாற்றம் நிகழ... சத்தியம் புரிந்து... நெடுஞ்சாண்கிடையாய் சுவாமியின் கால்களில் விழுந்து வணங்குகிறார்.. எழுந்திருக்கையில் இவர் பழைய மனநிலையில் இல்லை... அனைத்து தெய்வ ரூபங்களும் சுவாமியே என்பதை தெள்ளத் தெளிவாய் உணர்ந்தவராய் அவரின் எழுகை இருந்தது. அந்த எழுகை இவரின் தொழுகையையும் அன்று முதல் சுத்தீகரித்தது.

(ஆதாரம் : பகவான் பாபா -- பக்கம் : 42 -- ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமணியம்) 


பேதம் நீங்குவதற்காகவே சுவாமி போதம்.. பேதம் நீங்கச் செய்யும் சுவாமி பாதம். எல்லாம் ஒன்றே என்பதை வார்த்தையால் உணர்த்தாமல் இந்த வீர சைவருக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். அதுதான் சுவாமி. ஒரே நேரத்தில் அவருக்கு துவாரகையிலும் கைலாயத்திலும் இருக்கின்ற பேருணர்வை சுவாமி வழங்கி இவரின் வெறுப்பை களைய வைத்தார். பயணம் செல்லத் தான் துவாரகையும் கைலாயமும் வெவ்வேறு இடத்தில் இருப்பது போல் தோன்றுகிறது... ஆனால் உண்மையில் இரண்டுமே சுவாமியின் பாதத்தில் தான் இருக்கிறது!!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக