தலைப்பு

வியாழன், 22 ஜூலை, 2021

தேசத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் சத்யசாயி அனுபவங்கள்!


இப்படி ஒரு தலைவர் இப்போது இல்லையே எனும் ஏக்கத்தையும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிட்டுப் போனவர். லோக் நாயக்(மக்கள் தலைவன்) என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மகாத்மா ஜெய்பிரகாஷ் நாராயணின் சுவாமி அனுபவத்தை மெய் சிலிர்க்கும் படி வாசிக்கப் போகிறோம் இதோ...

தேசத் தலைவர் ஜே.பியின் நேரடியான சுவாமி அனுபவத்திற்கு வந்துவிடலாம்.. ஆயினும் இன்றைய இளைய தலைமுறையினர் அவரைப் பற்றி சிறிதாயினும் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே சற்று இவரின் தியாகச் சுவடுகளை பின்னோக்கிய பிறகு யோகச் சுவடுகளை வாசிப்போம்! 

பாரதத் தாய் தனது தியாக மகனை பிஹாரில் ஈன்றாள். நேரு போல் மகான் அரவிந்தர் போல் வெளிநாட்டில் கல்வி கற்றவர் இவர். அமெரிக்கா அந்தப் பெருமையை சுமக்கிறது. கார்ல் மார்க்ஸ் ஸின் பொருளாதார தத்துவத்தால் ஈர்க்கப்பட்டவர் ஜே.பி. இவரை முதலில் பொருளாதார பொதுவுடைமை ஈர்த்தது.. பிறகு சாயி எனும் அருளாதார பொதுவுடைமை ஈர்த்தது.



சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியோடு பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கம் ..‌. வெள்ளையனே வெளியேறு போன்ற அறப்போராட்டங்களில் கலந்து கொண்ட தியாகி இவர். வெகுண்ட வெள்ளையன் சிறையில் அடைத்தான். சிறையிலிருந்து தப்பியது இந்த சுதந்திரப் புறா . அப்போதே 10,000 ரூபாய் விலை வைத்திருந்தான் இவரை பிடித்துக் கொடுப்பவர்க்கு.. மீண்டும் சிறைப்பட்டு சித்திரவதை அனுபவித்தார். நமது இந்திய சுதந்திரம் எனும் அமர சித்திரம் சிரமங்களாலும் சித்திரவதையாலும் உருவாக்கப்பட்டது. 

இருவர் தான் தேசிய அளவில் தேர்தல் அரசியலில் பங்கேற்கவில்லை. ஒருவர் மகாத்மா காந்தி.. இன்னொருவர் மகாத்மா ஜெயபிரகாஷ் நாராயண். காந்தி அழைக்கிறார் பதவி ஏற்க .. மறுக்கிறார் ஜே.பி. தனக்கு பிறகு ஜே.பி தான் ஆள வேண்டும் என்கிறார் நேரு.. அதற்கும் மறுக்கிறார் ஜே.பி. 

ஜே.பி - ஜவஹர்லால் நேருவுடன்.... 

புண்ணியாத்மாக்களே பதவி ஆசை இல்லாமல் இருப்பார்கள். பொதுமக்களோடு கலந்து இருப்பது தான் ஜனநாயகம்.. அப்படியே இருக்க விரும்புகிறேன் என்கிறார் ஜே.பி. இந்த வார்த்தையை இப்போது நடைமுறைபடுத்த அல்ல சொல்வதற்குக் கூட ஒரு தலைவரும் இல்லை. இந்திராவின் எமர்ஜென்ஸியில் பாதுகாப்பு சட்டத்தில் முதன்முதலில் கைது செய்யப்பட்டவர் ஜே.பி தான். சோறு தான் முக்கியம் என்கிறார் இந்திரா. சுதந்திரம் தான் முக்கியம் என்று கர்ஜிக்கிறது தேசிய சிங்கம் ஜே.பி. எமர்ஜென்ஸியின் போது அரசாங்கத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் தேசிய வீரர் ஜே.பி. எமர்ஜென்ஸியை கொண்டாடி வந்த அரசை தேர்தலில் இவரே தோற்கடித்தார். 

               
எப்படி இந்த அரசியல் புயல் ஆன்மீகக் கடலில் சங்கமித்தது?  காரணம் ஜே.பியின் சேவை மனம். ஆகவே தான் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி தனது பக்தராக்கிக் கொள்கிறார்.
  "பாபா.. நான் அதிக நாட்கள் இருக்கமாட்டேன்.. அதற்காக நான் ஆசைப்படவில்லை. ஆனால் இருக்கும் வரை சிரமப்படாமல் இருக்க வேண்டும்" என சுவாமியிடம் கேட்கிறார். பக்தரின் எந்த நேர்மையான கோரிக்கையை சுவாமி நிறைவேற்றாமல் போயிருக்கிறார்! 
               இந்தப் பிரார்த்தனை வார்த்தைகளில் தான் அதிக நாட்கள் வாழ ஆசைப்பட வில்லை என்று சொன்னார் பாருங்கள் அது தான் ஜே.பி டச். 

70களில் தான் சுவாமியை ஜே.பி முதல்முறையாக தரிசிக்கிறார். அந்த சமயத்தில் தான் அவர் ஜஸ்லோக் மருத்துவமனையிலிருந்து திரும்பியிருக்கிறார். அப்போது தான் இந்த தரிசன சந்திப்பு. அதை ஜே.பியின் மனைவி பிரபாவதி தேவி அம்மையாரே விளக்குகிறார்.... 

               "நாங்கள் இருவரும் ராய் பகதூர் ஸோனால்ஜியை பார்க்கப் போகிறோம். அங்கு பகவான் பாபாவை தரிசித்தோம். அவருடைய திருமுகத்தில் ஒரு தெய்வீகப் பிரகாசம் இருந்தது.. கண்கள் அபூர்வமான ஒளியைச் சிந்தின... அந்த தரிசனம் மன ஆறுதல் தந்தது... "


ஜே.பி தன் துணைவியார்  பிரபாவதி தேவியுடன்... ( ஆரம்பகால புகைப்படம்) 

கடவுள் சுவாமி ஜே.பியை ஆசீர்வதித்து "அன்பு.. சேவை.. உண்மை இந்த மூன்றும் தான் கடவுளின் வடிவங்கள்" என்கிறார். அதைக்கேட்ட இந்த பூபாளப் புயல் புல்லரித்துப் போகிறது. நாட்கள் கடந்து போகிறது. ஜே.பியால் சுவாமியை நடந்து சென்று தரிசிக்க முடியாத வயோதிக தள்ளாமை. ஏழை மக்களுக்காகவே பேசிய உதடு உலர்ந்திருந்தது... ஏழ்மையை உழுத கால்கள் தளர்ந்திருந்தது... புரட்சி விதைகளை நட்ட கைகள் சிறிது வலுவிழந்திருந்தது. இந்த தள்ளாமை சூழலில் சுவாமியே ஜே.பியை சந்திக்க வருகிறார்... துவாபர யுகத்தில் குசேலர் தான் சுவாமியை தேடிப் போகிறார். ஆனால் கலியில் சுவாமியே பக்தரை தேடிப் போகிறார்..

"தாங்கள் ஏன் சிரமப்பட்டீர்கள் சுவாமி... நானே தங்களிடம் வந்து ஆசி பெற விரும்பினேன்.. ஆனால் முடியவில்லை" என இந்த சிங்கம் சாதுவாகி சுவாமியிடம் பேசுகிறது. 
               அதற்கு சுவாமியோ... "உங்கள் ஆர்வம் புரிந்தது... அதனால் தான் நானே வந்துவிட்டேன்... என்னை பார்க்க முடியவில்லையே என்ற வேதனை உங்களுக்கு இருக்க வேண்டாம்... உங்களிடம் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி... ஏனென்றால் நீங்கள் எளிய மக்களிடம் அன்பு காட்டுகிறீர்கள்" என்கிறார் மிகுந்த காருண்யத்தோடு...
              
சுவாமி பக்தரான ஜே.பி எழுந்து நிற்க முயல்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. கால்களோ வீங்கி இருக்கின்றன.. தேசத்திற்காக எத்தனை தூரம் நடந்த கால்கள் அவை. சுவாமி கையை உயர்த்தி ஆசீர்வதிக்கிறார். கையிலிருந்து விபூதி மழை பொழிகிறது. அதை சுவாமி தனது திருக்கரங்களாலேயே ஜே.பி யின் கால்களில் தடவி விடுகிறார். குசேலருக்கு சுவாமி துவாபர யுகத்தில் புரிந்தது இப்போதும் சுவாமி தனது பக்தரின் பாதங்களில் தேய்த்துவிடுகிறார். துடித்துப் போகிறார் ஜே.பி. "எல்லாம் சரியாகிவிடும்.. கவலைப்படாதீர்கள்" என்று ஆசீர்வதிக்கிறார் சுவாமி. 


ஜே.பியால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.. தனது கால்களை பகவான் தொட்டுவிட்டாரே என்று இதயம் பிசைகிறது அவருக்கு...
 ஜே‌.பி மிகவும் வெளிப்படையானவர்.. தைரியமானவரும் கூட...ஆனால் சுவாமி புரிந்த இந்தப் பெருங்கருணைக்கு தான் தகுதியே இல்லை என்ற மன ஓட்டத்தில்.. கண் கலங்கியபடியே சுவாமியின் கைகளைப் பிடித்து "சுவாமி! தாங்கள் இப்படி செய்துவிட்டீர்களே... தயவு செய்து என்னை இப்படி ஒரு அபச்சாரத்திற்கு ஆளாக்காதீர்கள்!" என்று மனம் உருகிப் போகிறார். சுவாமி தன் உண்மையான பக்தர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் இறங்குகிறார். பக்திக்கு அசையும் பரமன் எனும் புராணச் சொல்லை நேரடியாக அனுபவிக்கிறார் ஜே.பி.


சுவாமியே ஜே.பியை நல்ல மனிதர்.. நேர்மையான அரசியல்வாதி என்கிறார். 
ஜே.பி தன்னுடைய பெட்டியில் சுவாமி சிருஷ்டித்து தந்த பதக்கத்தோடு (பம்பாயில் சுவாமி இவருக்கு கொடுத்தது) கூடிய சங்கிலியும், மோதிரமும் எப்போதும் வைத்திருப்பார். தங்கம் என்பதால் அதை அவர் அணிவதில்லை. தங்கத்தையும் வென்ற சிங்கம் ஜே‌.பி. ஆயினும் தினமும் படுக்கை அறையில் தூங்குவதற்கு முன் சுவாமி சிருஷ்டித்துத் தந்த கருணையை கண்களில் ஒற்றி தலையணைக்கு அடியில் வைத்தே உறங்குவார்.
      பாட்னாவில் ஜே.பியின் வீட்டில் புத்தரின் சிலை ஒன்று இருக்கிறது. மதச்சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவரான ஜே.பி இரண்டே இரண்டு படங்களைத்தான் தனது இல்லத்தில் மாட்டி வைத்திருந்தார்.. ஒன்று மா ஆனந்தமயி புகைப்படம். இவர்கள் தான் சுவாமியை சாட்சாத் கிருஷ்ணாவதாரம் என உணர்ந்து பேசியது.. அபூர்வமான அளப்பெரிய அவதாரம் என்றார் சுவாமியை... 


இன்னொரு புகைப்படம் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி உடையது. ஜே.பி தனது படுக்கை அறையின் தலைமாட்டில் அதை மாட்டி வைத்திருந்தார். 


சுவாமியின் புகைப்படத்தை கண்களால் தரிசித்துவிட்டுத்தான் உறங்கவே ஆரம்பிப்பார். 
ஒருமுறை அவரின் வீட்டில் வெள்ளையடிக்கும் பணி நடந்து கொண்டிருந்ததால் விஸ்வநாத் என்கிற அவரது வீட்டுப் பணியாளர் சுவாமி படத்தை பாதுகாப்பாக பரண் மேல் வைத்திருக்கிறார்.  வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் ஜே.பி சுவாமி படம் அந்த இடத்தில் இல்லாது போக பதைபதைத்துப் போய் வீடெல்லாம் தேடி.. சுவாமியை கையோடு எடுத்து கையெடுத்து வணங்கி அதே இடத்தில் மாட்டிய பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார். சாதாரண மூச்சா ஜே.பியின் மூச்சு. அந்த மூச்சு தான் சுதந்திரப் பட்டறையில் நெருப்பை எழுப்பிவிடும் துருத்தியாக பயன்பட்டிருக்கிறது.

"உலகத்தில் உள்ள மக்களின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று அவர்களை ஆட்டிவைக்கிறது. அந்த சக்தியை நாம் பார்க்க முடியாது. ஆனால் அது இருப்பதை உணரலாம். இந்த சக்தியை மக்களிடையே நடமாடி அருள் பொழியும் மனித உருவத்திலும் நான் கண்டிருக்கிறேன்" என்கிறார் சுவாமியை பற்றி ஜே.பி.
எத்தனை சத்தியமான அனுபவ வாசகம்.
ஜே.பி நேர்மையானவர். மிக உண்மையானவர். ஆகவே தான் அனுபவித்ததை மட்டும் மேலே உள்ள வாசகமாக முன் மொழிகிறார். இறைவனே பக்தரின் கால்களை பிடித்து சேவை செய்தார் என்றால் ஒன்று குசேலருக்கு நிகழ்ந்தது.. இன்னொன்று லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணுக்கு நேர்ந்தது. எப்பேர்ப்பட்ட கொடுப்பினை ஜே.பிக்கு! 

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 29 / ஆசிரியர்: எஸ்.லட்சுமி சுப்ரமணியம்)


🔥தேசத் தலைவர் ஜெய பிரகாஷ் நாராயண் அவர்களின் நினைவாக இந்திய அரசு  செய்தவை:



>இப்போது பிஹார் தலைநகர் பாட்னாவில் இயங்கிவரும் சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெயபிரகாஷ் நாராயண் பெயரையே அரசு சூட்டி கௌரவித்திருக்கிறது.

>நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா" உட்பட பல விருதுகளை கொடுத்து  கௌரவம் செய்திருக்கிறது.

>சப்ரா டெல்லி வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஜே.பியின் பெயரிலேயே இயக்கப்படுகிறது.

>பிஹார் கங்கை நதியோடு கூடிய ரயில் இணைப்புப் பாலமாகிய டிக்ஹா -- சோன்புர் பாலம் ஜே.பியின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

>பெங்களூர் மற்றும் மைசூரில் ஒரு குடியிருப்பு பகுதி JP நகர் (ஜெயபிரகாஷ் நாராயண் நகர்) என்று அழைப்படுகின்றது... 

>அஞ்சல் தலை  மற்றும்  இரண்டு ரூபாய் காயின்களில் ஜே.பி யின் உருவம் பதித்து அச்சிடப்பட்டுள்ளது..

> ஜே.பியை "லோக் நாயக்" என்றே மக்கள் அன்போடு அழைப்பார்கள்.. அதைக் கொண்டாடும் விதமாக புதுடெல்லியில் லோக் நாயக் மருத்துவமனை இயங்கி வருகிறது.

இப்படி சரித்திரத்திலும் சுவாமியின் இதயம் எனும் இதிகாசத்திலும் இடம் பிடித்தவர் இரண்டெழுத்து இமயமான ஜே.பி.

அடிமைத்தனம் எனும் முடக்குவாதம் ஏற்பட்டபோது ஜே.பியும் அதற்கு புரட்சிக் களிம்பால் மருந்திட்டிருக்கிறார்.. சிலரின் இதய முடக்குவாதத்திற்கு பக்தி எனும் களிம்பையும் சேர்த்தே வழங்கிவிட்டுப் போயிருக்கிறார் அமர தலைவர் "லோக் நாயக்" ஜெய பிரகாஷ் நாராயண். அவரின் சேவைப் பிரகாசத்தை பக்திச் சுடரோடு ஏந்தி நாமும் பாரத தேசத்தின் நல்ல பிரஜையாக...ஸ்ரீ சத்ய சாயி தெய்வத்தின் நல்ல பக்தராக விளங்குவோம்! ஜெய் ஹிந்த்!

   பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக