தலைப்பு

ஞாயிறு, 4 ஜூலை, 2021

காரை நிறுத்தி கீழே இறங்கி காத்திருந்த சாயி கருணை!


பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவை காண முக்கிய பிரமுகர்கள், முதல்-மந்திரிகள், பிரதம மந்திரிகள், ஜனாதிபதி, போன்ற பெரும் தலைவர்கள் வந்து காத்திருப்பது உண்டு!

சுவாமியே, ஒருவருக்காக வெயிலில் கால்கடுக்க காத்திருந்தார்... யாருக்காக ?

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா ஒருமுறை, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சுவாமியுடன், திரு.ரமண ராவ், திரு.சத்யமூர்த்தி, திரு.டிவி ராமராவ் போன்ற பக்தர்களும் காரில் உடன் சென்று கொண்டிருந்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோத்த பட்டு என்ற நகரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையின் இருமருங்கிலும் நின்றுகொண்டு, "சத்யசாய்பாபாஜிக்கு ஜே!" என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். பல்வேறு மலர் வளைவுகள் சுவாமியை வரவேற்று அமைக்கப்பட்டிருந்தன.


 சுவாமி திரளாகக் கூடியிருந்த பக்தர்களை ஆசீர்வதிக்க பல இடங்களில் இறங்க வேண்டியிருந்தது. சுவாமியின் குழுவினர் 9:30 மணிக்கு கோத்த பட்டுவை சென்றடைந்தனர். சுவாமி அங்குள்ள ஒரு கல்லூரியின் கால்பந்து மைதானத்தில், பல பகுதியிலிருந்து வந்து குவிந்து இருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே அருளுரையாற்றி, பஜன் செய்து, அவர்களை ஆசீர்வதித்தார். மதியம் 12 மணியளவில், நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. சுவாமியும், அவரது குழுவினரும், அம்பாஜி பட்டு மற்றும் அமலாபுரம் செல்ல புறப்பட்டனர். அம்பாஜி பட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியின் வருகைக்காக வந்து குழுமி இருந்தனர். அம்பாஜி பட்டை நெருங்கும் சமயத்தில், ஒரு வயல் வெளி அருகில், கார் சென்று கொண்டிருந்தபோது, சுவாமி திடீரென காரை நிறுத்த கூறினார்.


வண்டி நின்றதும், சுவாமி கீழே இறங்கி விட்டார். மேலும், யாரையோ எதிர்பார்ப்பது போல வயல்வெளியை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார். சுவாமி, ஏன் வண்டியை நிறுத்தினார் ?, யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ? என்று உடனிருந்த யாவருக்கும் புரியவில்லை. மதிய வெயில் கொடுமையாக இருந்தது நேரமோ ஓடிக்கொண்டிருந்தது. அப்போது வயல்களுக்கு இடையில், ஒரு வயதான பெண்மணியுடன், ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, தனது இரண்டு குழந்தைகளுடன் வேகமாக வந்து கொண்டிருந்தாள். சுவாமி அவர்களை அழைத்து வரச் சொன்னார். திரு.ரமண ராவ், அவர்களிடம் சென்று, "அம்மா! நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்? இங்கே வாருங்கள்.", என்றார். "நாங்கள் சாய்பாபாவை பார்க்க, அம்பாஜி பட்டு போய்க்கொண்டிருக்கிறோம். லேட் ஆகிவிட்டது." என்றார்கள். 

திரு.ரமண ராவ், "சாய்பாபா இங்கே தான் இருக்கிறார். அவர்தான் உங்களை அழைத்து வரச் சொன்னார். இங்கே பாருங்கள்.", என்றார். அந்த நடுத்தர வயதுப் பெண்மணி சுவாமியைப் பார்த்து, "அத்தை! இவர் சாய்பாபா கடவுள் தான்! போட்டோவில் இருப்பது போலவே இருக்கிறார்.", என்றாள். அந்த ஏழைப் பெண்களுக்கு, சுவாமியை வணங்கவேண்டும் என்பது கூட தெரியவில்லை. கருணை மிகுந்த பகவான், அவர்களை அன்புடன் நோக்கி, "அம்மா! உனது கணவன் சொத்துக்காக கொலை செய்யப்பட்டான். கவலைப்படாதே! நீதிமன்றத்தில் தீர்ப்பு வர இருக்கிறது. உனக்கு சாதகமாக வரும். நான் உனது தாயாக இருந்து, உன்னையும், உன் குழந்தைகளையும் காப்பாற்றுவேன். இதை கூறுவதற்காகவே நான் உனக்காக காத்திருந்தேன்.", என்றார்.


சுவாமி, அவர்களுக்கு, ஆப்பிள் பழங்களையும், கரன்சி நோட்டுகள் உடன் கூடிய ஒரு கவரையும், கொடுத்து அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி, அங்கிருந்து புறப்பட்டார். தமது வாழ்க்கை கதையை, அப்படியே கூட இருந்து பார்த்தது போல சுவாமி கூறுகிறாரே, என்ற அதிர்ச்சியில், அந்தப் பெண்களுக்கு, சுவாமிக்கு நன்றி தெரிவிக்கக் கூட தெரியாமல், அவர்கள் திகைத்து நின்றனர். அம்பாஜி பட்டில், 
சுவாமியைக் காண, ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தை பார்த்த போது தான், சுவாமியுடன் வந்தவர்களுக்கு, சுவாமியின் கருணை புரிந்தது. சுவாமி காரை நிறுத்தி, அவர்களுக்கு ஆசி வழங்காவிட்டால், இந்த பெரிய கூட்டத்தில் அவர்கள் சுவாமியை பார்ப்பதே மிகுந்த சிரமமான ஒன்றாக ஆகியிருக்கும்.

 தாய்க்கு சேவை செய்த புண்டரீகனுக்கு, கருணை செய்ய, கால்கடுக்க, செங்கல் மேல் நின்றிருந்தான், பாண்டுரங்கன்!

 அபலை சேய்க்கு கருணை செய்ய, பாதையிலே கால்கடுக்க நின்றிருந்தான், பர்த்தி ரங்கன்!

ஜெய் சாய்ராம்!

ஆதாரம்: Love is My Form by திரு. ரமணா ராவ் 

தொகுத்தளித்தவர்:
S. Ramesh, Ex-Convenor, Salem Samithi,
Salem.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக