கடவுளை வெளியில் தேட வேண்டாம். உள்ளத்தில் உறையும் இறைவனை நம் உள்ளே தேடினால் உவகையுடன் அவனது அனுக்கிரஹம் கிட்டும். இதற்கு பகவான் பாபாவின் வழிகாட்டுதல்கள் என்ன. நாம் எந்த நெறிமுறைகளைப் பற்றி நடந்தால், நம் இல்லமே பிரசாந்தி நிலையமாக மாறும் என, சில எளிய வழிமுறைகளை பாபா நமக்கு அன்புடன் விளக்குகிறார். வாருங்கள் பாபாவின் அமுத மொழிகளைக் கேட்போம்...
பாபா அன்புடன் உபதேசிக்கும் ஐம்பெருங் கோட்பாடுகள்:
1. அமைதி:
அமைதியை முதலாவதும் தலையாயதும் ஆன சாதனையாக பின்பற்றவேண்டும். அதுவே மற்ற சாதனைகளுக்கான முதல்படி. அது மனக் கட்டுப்பாட்டை உறுதி செய்து, ஐம்புலக் கள்வர்களாகிய, கோபம், வெறுப்பு, தீங்கு, பேராசை, தற்பெருமை முதலியவற்றின் தாக்கத்தைக் குறைக்கிறது. மேலும் ஆண்டவனின் காலடி ஓசையை அமைதியான மனதில்தான் கேட்கலாம்.
2. தூய்மை:
தூய்மை இறைவனின் சந்நிதான கதவுகளை அடைய இரண்டாவது வழி ஆகும். அகத்தூய்மையுடன் , புறத்தூய்மையும் அனுஷ்டித்தால் இறைவன் இதயத்தில் குடி கொள்வான்.
3. சேவை:
பிறர் வாட்டத்தை தன்னலமற்ற சேவையின் மூலம் தணிக்கலாம். சேவை உங்கள் பார்வையை விசாலமாக்கி, விழிப்புணர்வை மேம் படுத்தி, ஆழ்ந்த காருண்யத்தை உங்களுக்குள் வளர்க்கிறது.அலைகள் எழுவதும், விழுவதும், அகண்ட சமுத்திரத்திற்கு உள்ளே தானே. அதுபோலசேவை செய்பவரும், சேவையைப் பெறுபவரும் இந்த அகண்ட மனிதகுலத்திற்குள் அடக்கம் என்ற உண்மையை சேவை உங்களுக்கு போதிக்கிறது.
4. அன்பு:
அன்புக்கு பிரதிபலனை எதிர்பாராதீர். அன்பின் விளைவு அன்புதான். அன்பு அழைக்கிறது. அன்பே எதிரொலிக்கிறது. அன்பில் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
5. வெறுப்பை தவிருங்கள்:
படைப்பில் எந்த ஜீவராசிகளும் இரண்டாம்த ரமானவையல்ல. கீழான, முக்கியமற்ற, ஒதுக்கித் தள்ளத் தக்க படைப்புகள் என்று ஏதும் இல்லை. ஒவ்வொன்றும் அவைகளுக்கு பரமனால் ஒதுக்கப்பட்ட வேடங்களை அணிந்து அதன்படி இயங்குகின்றன.ஆகவே யாரையும் குறைவாக மதிப்பிடவோ புண்படுத்தவோ, காயப்படுத்தவோ வேண்டாம். ஆண்டவன் அனைத்திலும் வியாபித்திருப்பதால், பிறரை இழிவு படுத்துதல் புனிதமற்ற செயலாகும்.
- Sri Sathya Sai, July 19, 1970, PrasanthiNilayam
தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்
🌻 சாய்ராம்... பகவானின் இந்த நல் ஒழுக்க கோட்பாடுகளை, நம் மனதில் நாற்றாக நட்டு, செயல் என்னும் நீர் ஊற்றினால் நம் இல்லங்களும் , இருப்பிடங்களும் பிரசாந்தி நிலையமாக மாறிவிடும்.பிறகு பகவான் பாபா அதில் குடிபுக விரைந்து வந்திடுவார் அன்றோ... 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக